Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

வரவு – செலவு மரணப்பொறி

2016க்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஏற்கனவே பாரிய மக்கள் எதிர்ப்பு எழுந்து கொண்டிருக்கின்றது. கண்ட கனவுகளெல்லாம் கானல் நீராகி விட்டன. அரச ஊழியரின் அடிப்படை சம்பளத்துடன் ரூபா. 10000 சேர்ப்பதாக சொன்னார்கள். தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 1500 ரூபாவால் அதிகரிப்பதாகச் சொன்னார்கள். சட்டைப்பையை நிரப்புவதாகச் சொன்னார்கள். நடந்து செல்பவர்கள் வாகனத்தில் செல்ல முடியும் என்றார்கள். கடைசியாக, "பிச்சை எடுத்ததாம் பெருமாளு அதை பறித்து தின்னுதாம் அனுமாரு" என்ற கதையாகிவிட்டது. கூட்டரசாங்கம் பருப்பு, கருவாடு ஆகியவற்றின் விலைகளை குறைத்துவிட்டு, வரலாறு பூராகவும் இந்நாட்டு உழைக்கும் மக்கள் அநுபவித்த உரிமைகளை கொள்ளையடிக்க முயல்கின்றது. அரச ஊழியர்களின் ஓய்வூதியம், தனியார்துறை ஊழியர்களின் சேமலாப நிதி, விவசாயிகளின் உர மானியம், பாடசாலைச் சிறார்;களின் சீருடை உட்பட மேலும் பலவற்றிற்கு 'ஆழ்ந்த அநுதாபம்" என்று கூறுமளவிற்கு இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உள்ளன.

ஓய்வூதியத்திற்கு என்ன நடக்கின்றது...

"அரச சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்படும் ஊழியர்களுக்கு 2016லிருந்து ஓய்வூதியம் கிடையாது" அப்படித்தான் அரசாங்கம் கூறுகின்றது. செலவை குறைப்பதற்கே இப்படிச் செய்கின்றார்களாம். 2016ல் அரச சேவையில் சேரும் ஒருவர் 25 அல்லது 30 வருடங்கள் கழித்தே ஓய்வு பெறுகின்றார். இவர்கள் கூறுவது பொய் என்பது இதிலிருந்தே தெரிகின்றது. இவர்கள் ஒரு வெற்று மண் பானையை நுழைத்திருக்கின்றார்கள். இந்த பானைக்கு ஒரு அடி கொடுக்காவிட்டால், தற்போது அரச சேவையில் உள்ளவர்களின் ஓய்வூதியம் உட்பட மேலும் பலவற்றின் மீது கை வைப்பார்கள். அது நிச்சயம்.

EPF - ETF  ஒழிக்கப் பார்க்கிறார்கள்...

மஹிந்த ராஜபக்ஷாக்கள் EPF - ETF நிதியத்தை கொள்ளையடிக்கப் பார்த்தார்கள். ரொஷேன் சானக போன்றவர்கள் செய்த உயிர்த் தியாகம்தான் அவற்றைப் பாதுகாத்தது. அன்று, தனியார்துறை ஊழியர்கள் உயிரை துச்சமென மதித்து போராடியதால் தான் மஹிந்தவால் அவற்றை கொள்ளையிட முடியவில்லை. இப்போது, ரணில் - மைத்திரி கூட்டணியும் அதைத்தான் செய்யப் பார்க்கின்றது. இந்நாட்டு தனியார்துறை ஊழியர்களின் வியர்வையினாலும், கண்ணீரினாலுமே சேமலாப நிதியம் நிரப்பப்பட்டுள்ளது. அதைப் பார்த்துத்தான் ரணில் விக்கிரமசிங்காக்கள் எச்சில் வடிக்கின்றார்கள்.

தொழிலாளர் சட்டங்கள் தளர்த்தப்படுகின்றன...

தொழில் உரிமைகளை ஓரளவாவது பாதுகாப்பதற்கு இருந்த 14 சட்ட மூலங்களையும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது சுரண்டல் மேலும் மேலும் அதிகரிக்கும். தொழில் பாதுகாப்பு இல்லாமலாகும், MAN POWER கொத்தடிமை முறை மென்மேலும் உறுதி செய்யப்படும். 

உர மானியத்திற்கு ஆப்பு...

கடந்த காலம் பூராகவும் மக்களுக்கு கொடுத்த உர மானியத்தை இல்லாதொழிக்கவே 25,000 ரூபா கைக்கு கொடுப்பதாக சொல்கின்றார்கள். அதுவும் ஒரு ஹெக்டயார் பயிரிடும் விவசாயிகளுக்கு மாத்திரமாம். அதற்கு மேல் பயிரிடும் விவசாயிகள் அந்தரத்தில் விடப்பட்டுள்ளனர். அதைக்கூட ஒரு அல்லது இரு போகங்களுக்கு தருவார்கள். அதன் பின்பு மெதுவாக நீர்த்துப்போக விடுவார்கள்.

பாடசாலை சீருடைக்கும் அதே கதிதான்...

பாடசாலை சீருடைக்கும் அதைத்தான் செய்யப் போகின்றார்கள். ஓரிரு வருடங்கள் பின்னர் மெதுவாக அதனையும் நீர்த்துப்போகச் செய்வார்கள். கல்விக்கும், சுகாதாரத்திற்கும் 6% தருவதாகக் கூறுவது அப்பட்டமான பொய். அது மட்டுமல்ல, வாகனங்களுக்கு விதித்த அநியாய வரியை யாரால் தாங்க முடியும்? தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தருவதாக இந்த அரசாங்கம் கூறியது. 1000 ரூபாவாக சம்பளத்தை அதிகரிப்பதாகக் கூறப்பட்டது. அது குறித்து இந்த வரவு- செலவு திட்டத்தில் ஏதாவது குறிப்பிடப்பட்டிருக்கின்றதா?

இதனை வரவு செலவு திட்டமென்று கூறினாலும், அதனூடு அரசாங்கத்தின் எதிர்கால வேலைத் திட்டமே முன்வைக்கப்பட்டிருக்கின்றது. 1977ல் இருந்துதான் இந்த கொடுவினை நாட்டுக்குள் வந்தது. 2001லும் ரணில் விக்கிரமசிங்காக்கள் இதையே செய்யப் பார்த்தார்கள். மஹிந்த அதனை முன்னெடுத்துச் சென்றார். நவதாராளமய முதலாளித்துவம் என்ற கொடுவினையை செய்யப் போகிறார்கள். இந்நாட்டு இலட்சக்கணக்கான மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்பட இருக்கின்றது. இவர்கள் இப்போதுதான் தொடங்கியிருக்கின்றார்கள், போகப்போக மேலும் பலவற்றை வெளியில் விடுவார்கள். அவற்றை எதிர்க்கும் மக்களை அடிக்கத்தான் பட்டன், பொல்லுகள் இறக்குமதிக்கு வரவு செலவு திட்டத்தில் பணம் ஒதுக்கீடு செய்கிறார்கள்.

என்றாலும், உங்களது வாழ்வை பறிக்கப்போகும் இந்த படுமோசமான வரவு- செலவு திட்டத்திற்கு இடமளிக்க வேண்டாமென உங்களிடம் வேண்டிக் கொள்கின்றோம். இந்த அநியாயத்திற்கு, அநீதிக்கு எதிராக போராட முன்வாருங்கள். இந்த வரவு – செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆனால், மக்கள் போராட்டத்தைக் கொண்டுதான் இதனை தோற்கடிக்க முடியும். எந்த அதிகாரத்தையும் மக்கள் அதிகாரத்தினால் கட்டுப்படுத்த முடியும். நம்பிக்கையுடன் முன்வாருங்கள்.

முன்னிலை சோசலிசக் கட்சி
02/12/2015