Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமைகளுக்காக அணிதிரள்வோம்!

ஜனநாயகம் சம்பந்தமாக ஆயிரம் வாக்குறுதிகளை கொடுத்தே இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது. முந்தைய ராஜபக்ஷ ஆட்சியின் ஜனநாயகத்திற்கு முரணான செயல்களால் துன்பப்பட்ட அனைவருக்கும் நீதி பெற்றுத் தருவதாக இந்த அரசாங்கத்தின் தலைவர்கள் மேடைகள் தோறும் வாக்குறுதியளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதிகள் அனைத்தும் இன்று மீறப்பட்டுள்ளன. மக்கள் எதிர்பார்ப்புகள் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அரசியல் சிறைக்கைதிகள், காணாமல்போனவர்கள், அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளானவர்கள், அடக்குமுறைக்கு ஆளானவர்கள் போன்ற யாருக்குமே நீதி கிடைக்கவில்லை. தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது சம்பந்தமாக விசாரணை கேட்டு ரத்துபஸ்வல மக்கள் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். பிரகீத் எக்னலிகொட, லசந்த விக்ரமதுங்க போன்ற ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை சம்பந்தமாகவும் இந்த அரசாங்கம் ஊமையாகவே உள்ளது. லலித் மற்றும் குகன் காணாமல்போனது குறித்து எவ்வித விசாரணையுமில்லை. அதற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்படாமல் தவிர்க்கப்படுகின்றார்கள். இதற்கிடையில் தற்போதைய அரசாங்கம் தமது படுமோசமான கொள்கைகளுக்கு எதிராக குரலெழுப்பும் தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு என அனைவருக்கும் எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றது. தம்புள்ளயில், கொடகத்தனயில், யாழ்ப்பாணத்தில் மற்றும் பந்தகிரியாவிலும் சமீபத்தில் கொலன்னாவையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தோழர் குமார் குணரத்தினம் உட்பட அடக்குமுறை காரணமாக நாட்டை விட்டு வெளியேற நேர்ந்த அனைவர் சம்பந்தமாகவும் நிலைமை இதுதான். முந்தைய அரசாங்கத்தின் அடாவடித்தனம் காரணமாக நாட்டை விட்டு வெளியேற நேர்ந்த அனைவரையும் மீண்டும் இலங்கை திரும்புமாறு அரசாங்கம் பதவியேற்ற உடன் பகிரங்க அழைப்பு விடுத்தது. ஆனால், அழைப்பு அரசாங்க நண்பர்களுக்கு மாத்திரம்  செல்லுபடியாகியது. அர்ஜுன் மகேந்திரன் போன்ற வெளிநாட்டு பிரஜைகளை இலங்கைக்கு அழைத்துவந்து 24 மணித்தியாலயத்திற்குள் இலங்கைக் குடியுரிமை வழங்கி அவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்த அரசாங்கம், தோழர் குமார் குணரத்தினம் விடயத்தில் கடைப்பிடிக்கும் கொள்கை என்ன? இலங்கையில் பிறந்து இலங்கையிலேயே கல்வி கற்று, இலங்கை அரசியலில் ஈடுபட்டதன் காரணத்தால் உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி நாட்டிலிருந்து வெளியேற நேர்ந்தவர்தான் தோழர் குமார் குணரத்தினம். வெளிநாட்டு குடியுரிமையை இரத்துச் செய்து இலங்கைக் குடியுரிமையை தாருங்கள் என்றுதான் அவர் கேட்கின்றார். இலங்கையில் பிறந்த ஒருவர், மீண்டும் இலங்கையில் வாழவும் அரசியலில் ஈடுபடவும் அனுமதிக்குமாறு கேட்பது நியாயமானதே என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. என்றாலும், கருத்தியல் ரீதியில் தம்முடன் உடன்படுபவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அரசாங்கம், தோழர் குமார் குணரத்தினத்தின் விண்ணப்பத்தை தொடர்ந்து நிராகரித்து வருகின்றது. அதற்குக் காரணம், தோழர் குமார் குணரத்தினம் பிரதிநிதித்துவம் செய்யும் முன்னிலை சோஷலிஸக் கட்சி அரசாங்கத்தின் கருத்துக்கு மாற்றுக்கருத்தை கொண்டிருப்பதும் மற்றும் அரசாங்க அரசியலுக்கு எதிரான அரசியலை செய்வதனாலும் அரசாங்கத்திற்கு சவாலாக இருப்பதும் என்பது தெளிவு.

ஜனநாயகம் என்பது தமக்கு உடன்பாடானவற்றிற்கு உரிமைகளை வழங்குவதல்ல, தமக்கு உடன்பாடில்லாதவர்களுக்கும் உடன்படாதிருப்பதற்கான உரிமையை ஏற்றுக் கொள்வதுதான். ஆனால், அரசாங்கம் அந்த ஜனநாயகத்திற்கு முரணான பாதையிலேயே செல்கின்றது என்பதற்கு தோழர் குமார் குணரத்தினத்தின் உதாரணம் மாத்திரம் போதுமானதாகும். தோழர் குமார் குணரத்தினத்தின் உரிமைகளுக்காக கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக மேற்கொள்ளப்படும் தொடர் சத்தியாக்கிரகம் 50 நாட்களையும் கடந்து விட்டது. தோழர் குமார் குணரத்தினத்தை கைது செய்து சிறையிலடைத்து 2 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், அரசாங்கம் மௌன சூழ்ச்சிக்குள் இந்த நியாயமான போராட்டத்தை நீர்த்துப்போகச் முயற்சிக்கின்றது. குறைந்தபட்சம் கடந்த இரு மாத காலத்திற்குள் இது குறித்து அரசாங்க கொள்கையையாவது உத்தியோக ரீதியில் விளக்கவில்லை. இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுங்கள். ஜனநாயக உரிமைகளை வெள்ளித்தட்டில் வைத்து அரசாங்கம் எமக்கு பரிசளிக்காது. அதனை போராடித்தான் பெற வேண்டுமென்பதை வரலாறு நிரூபித்துள்ளது. எனவே, ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம். அந்த போராட்டத்துடன் உங்களது வலிமையையும் சேருங்கள். ஆட்சியாளர்களின் மௌன சூழ்ச்சிக்கெதிராக நாங்கள் அனைவரும் பின்வரும் கோரிக்கைகளை முழக்கமிடுகிறோம்.

தோழர் குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமைகளை உறுதி செய்!

அரசியல் பழிவாங்கல்களை நிறுத்து!

வாக்குறுதியளித்த ஜனநாயக உரிமைகளை சமூகத்திற்குப் பெற்றுக் கொடு!

2016 ஜனவரி

முன்னிலை சோஷலிஸக் கட்சி


41/32, கந்தவத்தை பாதை, தேபானம, பன்னிபிட்டிய.

0112837422 www.flsocialistparty.com,  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.