Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மூத்த மகனை போன்று இரண்டாவது மகனையும் இழக்க விரும்பவில்லை: ராஜமணி குணரட்ணம் (காணெளி)

மூத்த மகனை போன்று இரண்டாவது மகனான குமார் குணரட்ணத்தையும் தாம் இழக்க விரும்பவில்லை என அவரின் தாயார் ராஜமணி குணரட்ணம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேகாலையில் பிறந்து அங்கு கல்வி கற்ற பின்னர் பேராதனை பல்கலைகழகத்தில் கல்விகற்ற தனது மகனிற்கு ஏன் பிரஜாவுரிமையை வழங்க முடியாது எனவும் அவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் தனது மூத்த மகன் ரஞ்சிதனும் பல்கலைகழக மாணவ அமைப்பில் உறுப்பினராக இருந்த போது கைது செய்யப்பட்டு காணமற்போனார்.

இதனால் தாம் தனது மூத்த மகனை இழந்ததாகவும் தெரிவித்த அவர், அதனைப் போன்று தனது இரண்டாவது மகனான குமார் குணரட்ணத்தையும் இழக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.

மேலும் கேகாலை சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு குமார் குணரட்னத்தை மாற்றியதற்கான காரணத்தை அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை.

நாட்டில் வேறு பல சிறைச்சாலைகள் காணப்படுகின்ற நிலையில் அவரை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேகாலையில் குமார் குணரட்ணம் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தாங்கள் அவரிற்கு மருந்துகளை கொண்டு சென்றதாகவும் தற்போது அவரை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றியமையினால் தங்களால் அங்கு தற்போது செல்ல முடியாத நிலைய ஏற்பட்டுள்ளதாகவும் ராஜமணி குணரட்ணம் தெரிவித்தார்.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் தனது மகனுக்கு பிரஜாவுரிமையை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்