Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசியல் கைதிகள் இல்லாத நாட்டில், காணாமல்போனவர்களை தேடுவது எவ்வாறு?

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஸ்தாபிக்கவிருக்கும் காரியாலயம் சம்பந்தமாக முன்னிலை சோஷலிச கட்சியினர் தமது கருத்தை தெரிவிப்பதற்காக ஊடக சந்திப்பு ஒன்றை கடந்த 17 ம் திகதி மாலை ராஜகிரிய எம் .டி.டி. ஆர் மண்டபத்தில் நடாத்தினர். இவ் ஊடக சந்திப்பில் முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் சேனாதீர குணதிலக மற்றும் அரசியல் குழு உறுப்பினர் சமீர கொஸ்வத்த ஆகியோர் பங்குபற்றினர்.

இங்கு சேனாதீர குணதிலக கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் போனவர்கள் தொடர்பில் தற்போது உருவாகி இருப்பது பிரச்சினையை விட்டு விலகி செல்லும் கருத்தாடலே. நாங்கள் நினைக்கிறோம் உண்மையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் கலந்துரையாடல் இந்த நாட்டு மக்களிடையே ஏற்பட வேண்டும்.

தற்போது இங்கு காணக்கிடைப்பது அதை தவிர்த்து செல்லும் நிலைமையே. பல்வேறு தொழில் நுட்ப பிரச்சினைகள், இனவாதம், சுய அரசியல் தேவைகள் இதன் போது வெளிக் காட்டப்படுகிறது. ஒன்றுக்கொன்று பரஸ்பர விரோத கதைகள் முன்வைக்கப்படுகிறது. இச் சட்ட மூலத்தை நிறைவேற்றி கொள்ள அரசு, ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு கதை சொல்கிறது. இச் சட்ட மூலத்தின் மூலம் ஒன்றும் நடவாது என்று ஒருவரும், இதனால் இராணுவத்தினர் குற்றவாளிகளாக்கப்படுகின்றனர் என்று இன்னுமொருவரும், இல்லை அரச படையினர் நிரபராதிகள் என்று நிரூபிக்க முடியும் என்று ஒருவரும் பரஸ்பர விரோத கதைகளை அழகாக கூறிவருகின்றனர்.

இப் பிரச்சினை எழும்போது நாங்கள் கேட்கவிருப்பது காணாமல் போனவர்கள் யார்? எதற்காக காணாமல் போனார்கள்? என்பதே. இதனோடு சேர்ந்து, எழுபதுகளில் இருந்து இந்த நாட்டின் அரசியல் எவ்வாறு இருந்தது என்பதையும் கதைக்காமல் இருக்க முடியாது. வடக்கோ, தெற்க்கோ எங்கிருந்தாலும் அதன் அடிப்படையில் இப்பிரச்சினை கலந்துரையாடப்பட வேண்டும். அதனால் இது தொடர்பான வாத விவாதங்கள் அவசியமற்ற தொன்றே.

எண்பதுகளில் அரசியல் செய்த மக்கள் விடுதலை முன்னணி இப்பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிட்டது. இது தொடர்பாக கதைத்த சட்டத்தரணிகளை கொன்று போட்டனர். சிறந்த உதாரணங்கள் தான் விஜேதாச லியனார்ச்ச, காஞ்சன அம்பேபால. இவர்களுக்கு என்ன நடந்தது?

2011 இல் எமது கட்சியை கட்டி எழுப்பும்போது, சகோதரர் லலித்குமார் வீரராஜ், சகோதரர் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்படுகின்றனர். இன்று வரை இப்பிரச்சினையை மூடிமறைத்து வருகின்றனர்.

லலித், இவர் யுத்தத்தின் பின் காணாமல் போனவர்களின் பிரச்சினையில் நேரடியாக முகம்கொடுத்தார். காணாமல்போனவர்களை தேடிச்சென்றார். முறைப்பாடு செய்தார். காணாமல் போனவர்களின் பெற்றோரை, சகோதர்களை கொழும்புக்கு அழைத்து வந்து முறைப்பாடு செய்வித்தார். இறுதியில் அவரும் காணாமல் போனார்.

இவர்கள் காணாமல் போனது, யுத்தத்தில் காணாமல் போனவர்கள் குறித்து அவர்களை இனங்காட்டக் கோரி போராட்டம் செய்தமையே. எண்பதுகளை எடுத்து கொண்டால், திரிமா விதான போன்றவர்கள் கதைத்தது கல்வியை விற்க வேண்டாமென்று, அவர்கள் மாற்று இடது சாரிய அரசியல் கொள்கைகளை கொண்டிருந்தனர். வடக்கிலும் எதிர்பார்ப்பு இவ்வாறே காணப்பட்டது. தமது சுதந்திரம் தொடர்பில், தமது மொழி தொடர்பில், தமது சம உரிமை தொடர்பாக போராட்டம் இருந்தது.

ஒருவருக்கு அவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்ல முடியும், ஆனால் அவர்களிடம் பிரச்சனை உள்ளது; அது குறித்து பேசுவதற்கு அவர்களிடம் ஒரு அரசியல் இருக்கின்றது. இன்று அரசு முன்வைக்கும் இந்த சட்ட வேலிக்குக்குள், ஒருபோதும் இந்த மக்களின் அரசியல் பிரச்சினைகள் பேசப்படுவது கிடையாது. மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து கதைக்காமல் என்ன செய்தாலும் ஒன்றும் நடக்கப் போவதும் இல்லை. ஏனெனில் மீண்டும் மீண்டும் இது மேல் எழும்பிக்கொண்டே இருக்கும். அதற்கு அரச பயக்கரவாதத்தால் பதில் அளிப்பார்கள். இது தான் இங்கு நடப்பது. அதனால் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக கதைக்க வேண்டும். அதனால் தான் ஏன் அவர்கள் காணாமல் போனார்கள் என்ற பிரச்சினை முக்கிய இடம் பிடிக்கிறது. இதற்கு ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் இருப்பது அரச பயங்கரவாதமும், ராணுவ பலமும்.

கடந்த காலங்களில் வெள்ளை வேன் கலாசாரம் புறையோடி போய் இருந்தது இதனால் தான். குறைந்த பட்சம் இந்த காணாமல் போதல் தொடர்பாக ஒரு அனுதாபத்தையாவது வளர்க்க வேண்டும். அப்படி நடந்தால் தான் இச் சட்டமூலத்தை தாண்டிய அரசியல் கலாசாரத்தை எம்மால் கட்டி எழுப்ப முடியும்.

சமீர கொஸ்வத்த கருத்து தெரிவிக்கையில்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் நீதி, நியாயத்தை கடைபிடிக்க தற்போதிருக்கும் மைத்திரிபால - ரணில் அரசாங்கத்திற்கு எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் உண்டா?. நாங்கள் மிகவும் பொறுப்புடன் கூறுகிறோம் அவ்வாறான எந்த எதிர்பார்ப்புகளோ, அபிலாஷைகளோ இல்லை என்று. அப்படி கூறுவதற்கு காரணம் இந்த அரசு தான் இலங்கையில் வருடக்கணக்கில் தடுத்து வைத்திருக்கும், நீதி கிடைக்காத அரசியல் கைதிகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளது. அதாவது ஜனாதிபதி, பிரதமர் இருவரும் இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை என்று கூறிவருகின்றனர். அவர்களே தான் இப்போது காணாமல் போனவர்களை தேடுவதற்கு காரியாலயம் ஒன்றை அமைக்க விருக்கிறார்கள் .

காணாமல் போனவர்கள் மட்டுமல்ல, 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த அரசு என்ன செய்திருக்கிறது? அவர்களின் உரிமையை பெற்று கொடுத்துள்ளதா? இராணுவத்தை முகாமுக்குள் கட்டுப்படுத்தி வைத்துள்ளதா? இராணுவம் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீள ஒப்படைத்துள்ளதா? இல்லை இந்த ஒன்றையும் செய்யாத நிலைமையின் கீழ் மிக தெளிவாக கூறமுடியும் இச்செயலை செய்வது உண்மைக்கு புறம்பாகவே. ஏனெனில் ராஜபக்ஷ அரசும் இதையே செய்தது.

இப்போது இந்த விசாரணையின் பின் என்ன செய்வதாக கூறுகிறார்கள்? உயிருடன் இருப்பின், இல்லை எனில் கடன் சலுகை வழங்கல், ஏதாவது நீதிமன்ற செயற்பாட்டின் பொது அவர்கள் தொடர்பில் தகவல்கள் வழங்கல்... என்ன இவர்கள் கூறுகிறார்கள்?

மீண்டும் படிவங்களை நிரப்பி, சர்வதேசத்துடன் இருக்கும் வேறு கொடுக்கல் வாங்கல்கள் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளவே.

அதே போல் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும், அபிலாஷைகளையும் கொள்ளை இடுகிறது. ஜே.வி.பி 88-89 களை பயன்படுத்தி இந்த அரசு செய்யும் பொய்களை காக்கிறது.

சேனாதீர சகோதரர் கூறியது போல், இவை நடப்பது அரச இயந்திரத்தின் உள்ளேயேயானால், இவர்களை தேடுவதற்கு அரச இயந்திரத்தை மீறிய செயற்பாட்டுத் தொடர் அவசியம் என்பதில் எவ்வித விவாதமும் இல்லை. ஆனால் தற்போது இவை செயற்படுவது எவ்வாறு? ராஜபக்ஷ ஜனாதிபதி ஜெனிவா கொமிசனுக்கு பல்வேறு உறுதி மொழிகளை அளித்தார். இவர்கள் செய்வதும் அதுவே. அதனால் இவ்விடயத்தில் உண்மையான தலையீடு இல்லை. அதேபோல் ராஜபக்ஷ தலைமையிலான கூட்டம் இனவாதத்தை விதைத்துக்கொண்டு செல்கின்றனர் நடக்காத ஒரு செயற்பாடு தொடர்பாக. அதன் அடிப்படியில் இனவாதத்தை வளர்க்கிறார்கள்.