Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வெளிநாடுகளிற்கு அடிமைத் தொழிலாளர்களை கடத்துவதை நிறுத்து!- சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பு

வெளிநாடுகளிற்கு இலங்கை பெண்களை அடிமைகளாக கடத்துவதற்கு எதிராக சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. வெளி நாடுகளிற்கு அடிமை வேலையாட்களாக சென்று பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்களது உறவினர்களை இணைத்து 21ம் நூற்றாண்டின் புதிய பெண்கள் அடிமை வியாபாரத்திற்கு எதிராக ஊடகவியலாளர் சந்திப்பினை இன்று 06-01-2017 கொழும்பில் நடாத்தியுள்ளது.

இலங்கை அரசிற்கு அந்நிய வருவாயை ஈட்டித்தருவதில் மத்திய கிழக்கு நாடுகளிற்கு வேலைக்கு செல்பவர்கள் இன்று முதலிடத்தில் உள்ளனர். பெரும் அளவில் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு வீட்டு வேலையாட்களாக தொழில் முகவர்களால் அழைத்து செல்லப்படுகின்றனர். இவ்வாறு போகும் பெண்கள் அங்கு அடிமைகளாக நடாத்தப்படுவதுடன் பாலியல் ரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர். அத்தோடு அவர்கள் உடல், உள ரீதியான கொடுமைகளும் ஆளாகின்றனர்.

இவ்வாறு பெண்களை வேலைக்கென அழைத்துச் சென்று அவர்களை அடிமைகளாகவும் பாலியல் தொழிலாளர்களாகவும் விற்கும் முகவர்கள் குறித்து இலங்கை அரசு எத்தகைய நடவடிக்கையினை எடுப்பதாகவோ அன்றி பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களிற்கு உதவுவதாகவோ இல்லை.

ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றிய சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினை சேர்ந்த ஹேமமாலி அபயரத்தன, மத்திய கிழக்கு நாடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் மீதான கொடுமைகள், பாலியல் ரீதியான கொடுமைகள் அண்மைக்காலத்தில் மிகவும் அதிகரித்து வருகின்றது. பல சந்தர்பங்களில் அடிமைத்தனம், பாலியல் ரீதியான கொடுமைகளிற்கு எதிராக போராடிய பெண்கள் அந்த நாட்டின் பொலிசாரால் போலிக்குற்றங்கள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். இவை குறித்து இலங்கை அரச வெளிநாட்டு வேலைத் திணைக்களம் போதிய அக்கறை எடுப்பதில்லை.

எனவே இந்த அடிமை வியாபரம் குறித்து எமது சமூகத்தில் ஒரு விழிப்புணர்வு தேவைப்படுகின்றது. அதற்காக தான் நாம் இன்று மத்திய கிழக்கு நாடுகளிற்கு போய் துன்பங்களிற்கு உள்ளான எமது சகோதரிகள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களுடன் உங்களை சந்தித்து இந்த அடிமை வியாபரத்தை தடுத்து நிறுத்தும் எமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.