Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆறு வருடங்களாக மறுக்கப்படும்- மறைக்கப்படும் குகன் - லலித் தோழர்களின் கடத்தலும் நீதியும் !

2009 போர் முடிவுக்கு வந்த பின்பு, போரின் முடிவில் அரசபடைகளால் கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை தோழர். குகன் மற்றும் லலித் வன்னியிலும் மற்றும் பிரதேசங்களிலும் திரட்டினார்கள். தெற்கில் போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

இவர்களாலேயே ஆரம்பத்தில் வடக்குக்கு வெளியில் அரசியற்கைதிகள் பற்றிய தகவல்கள் தெற்கில் ஊடகங்களுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும்  வழங்கப்பட்டது. 

மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் முன்னிலை சோசலிசக்  கட்சியில் இயங்கிய இருவரும், 2011 ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் நாள், யாழில் அரசபடைகளாலும் - அவர்களுடன் சேர்ந்து இயங்கிய தமிழ் ஆயுதக்குழுவினாலும் கடத்தப்பட்டார்கள்.

வவுனியாவைக் கடந்து வன்னிக்குள்  எவரும் அரசியல் நோக்கில் அல்லது மனித உரிமை சார்ந்த செயற்பாட்டு  நோக்கில் வரத்  தடை செய்யப்பட்டிருந்த மஹிந்த அரசின் ஆட்சியில், இவ்விருவரும் சர்வதேச மனிதவுரிமை நாளான மார்கழி 10 அன்று,  தெற்கிலிருந்து மக்களை வரவழைத்து அரசியற்கைதிகளை விடுவிக்கக்கோரும்  போராட்டமொன்றை யாழில் ஏற்பாடுசெய்திருந்த்னர்.

 

வவுனியாவில் வைத்து 10 பஸ்  வண்டிகளில்  தெற்கிலிருந்து வந்த மக்களை ராணுவம் சுற்றிவளைத்து தடுத்து நிறுத்திய அதேவேளை- யாழில் லலித் வீரராசாவும்  குகன் முருகானந்தனும் கடத்தப்பட்டார்கள்.

குகன் ஆரம்பக்காலத்தில் புலிகளுடன் சேர்ந்திருந்த போராளியாவர். யாழில் மணல்  வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு அரச சார்பான ஆயுதக்குழுவுக்கும் குகனுக்கும் ஏற்கனவே இயற்கை வள அழிவு ஏற்படுத்தும்  மணல் கொள்ளை பற்றிய முரண்பாடு  இருந்து வந்தது.

குகன் மணற்கொள்ளையர்களின் செயற்பாடுகளை ஊடகங்களில் அம்பலப்படுத்தி வந்தார். அத்துடன், அரச ராணுவப்புலனாய்வு வடக்கிலிருந்து போரின் இறுதியில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவலை தெற்கிற்கு சேகரித்து வழங்கியவர்கள் யாரென விசாரணையில் ஈடுபட்டது.

இந்நிலையிலில் லலித்தும் -குகனும் முதலில் தமிழ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.  அன்று அரச பேச்சாளராக இருந்த கேகேலியா  ரம்புக்வெல இத்தகவலை உறுதிசெய்தார்.

கேகேலியா  ரம்புக்வல, அன்றிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி  ஆணையின் கீழேயே இருவரும்  தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கடந்த வருடம் யாழ். நீதி மன்றத்தில் சாட்சி சொன்னார்.  ஆனாலும்   யாழ். நீதிமன்றத்தில் 6 வருடத்துக்கு மேலாக நடந்து வரும்- இவர்கள் இருவரும் கடத்தப்பட்ட வழக்கு இன்றுவரை   இழுத்தடிக்கப்படுகிறது. 

இன்று 04.08.2017 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வழக்கு மறுபடியும் மார்கழி 08.12.2017 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்விரு தமிழ் போராளிகள் பற்றி இன்றுவரை எந்த தமிழ் தேசிய தலைவர்களோ அல்லது தொண்டர்களோ வாய்திறந்தது கிடையாது.

ஆனால், ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் வரலாற்றில் இந்த இருவரின் தியாகமும்  மறுக்கப்படவோ  அல்லது மறைக்கப்படவோ  முடியாத படிக்கு அவர்களின் தோழர்களான நாம் தொடர்ந்தும் போராடுவோம்.