Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

“காணாமல் போனோர் காரியாலய(ம்)ச் சட்டம்” ஒரு அரசியல் கண்துடைப்புத் திட்டம்

காணாமற் போன மக்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கென பிரதம அமைச்சரினால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட "காணாமல் போனோர் காரியாலயச் சட்டம"’ கூட்டு எதிர்க் கட்சியினரின் ஆட்சேபனைகளையும் (இனவாத ரீதியான) - ஒரு சில அமைச்சர்களின் ஆலோசனைகளையும் (விவாதம் நடாத்த வேண்டும் என்ற) பொருட்படுத்தாமல் ஐ.தே. கட்சி,  சி.ல.சு.கட்சி, த.தே.கூட்டணி, ம.வி.முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் கடந்த ஆவணி 23ம் திகதி (23/08/2016) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட இந்தச் சட்ட மூலம் இலங்கைக் குடிமக்கள் மத்தியில் பரவலான நாடு தழுவிய கலந்துரையாடல்களை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போதல் இலங்கையின் ஒட்டு மொத்த சமூகத்தின் முக்கிய பிரச்சனை மட்டுமல்ல அது இலங்கைக் குடிமக்களின் சனநாயக உரிமைகள் சம்பந்தப்பட்டதும் ஆகும். ஆனால் நாட்டில் இடம் பெறுகின்ற கலந்துரையாடல்களில் இவைகள் குறித்துப் பேசுவது மிகவும் அரிதாகவே உள்ளது.

கடந்த காலங்களில் அரசையும் அரசாங்கத்தையும் எதிர்த்துப் பேசியவர்களும், எழுதியவர்களும், செயற்பட்டவர்களுமே காணாமல் போயுள்ளனர். வலுக்கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை 2வது இடத்தில் உள்ளதாக கடந்த 35 வருடங்களாக இலங்கையில் முழுமூச்சுடன் செயற்பட்டு வரும் “வலுக்கட்டாயமாக காணாமல் போனோருக்கான ஐ.நா. நடவடிக்கைக் குழு” தெரிவித்துள்ளது. 

அது தொடர்பில் இக்குழு இலங்கை அரசாங்கத்திடம் 12,341 வழக்குகளை சமர்ப்பித்துள்ளது. இலங்கை அரசாங்கம் 6,551 வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது. 2013ல் கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட "மக்ஸ்வெல் பரணகமக ஆணைக்குழு" காணாமல் போனோர் தொடர்பாக 18,476 புகார்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் யுத்தத்தின் போது ஏறக்குறைய 40,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. வட கிழக்கில் காணாமல் போனோர் தொகை 16,000 என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் கூற்றுப்படி இத்தொகை 20,000 ஆகும். மேலும் இக் கணக்குகளில் தென்னிலங்கைக் கிளர்ச்சிகளின் போது 1971லும் 87-89லும் முறையே காணாமல் போனோரின் தொகையான 20,000மும் 60,000மும் சேர்க்கப்படவில்லை என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெரும்பானோர் கடத்தப்பட்டவர்களேயாகும். 

1. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவுகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும். 

2. முதன் முதலில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியப்படுத்தப்படல் வேண்டும். 

3. அதற்கான பகிரங்க விசாரணை நடாத்தப்படல் வேண்டும். 

ஆனால் இவை மட்டும் பாதிக்கப்பட்டவருக்கான நீதியை வழங்கிவிட முடியாது. அதனை ஆராய முன்னர் இந்த விசாரணை பற்றிய விடயத்துக்கு இப்போது நாம் வருவோம்.

இந்தத் மசோதாக்களும் சட்டங்களும் நீதியை வழங்கும் என நாம் நம்பலாமா?  காணாமல் ஆக்கப்பட்டமைக்கு பொறுப்பானவர்களை கூண்டில் ஏற்றித் தண்டிப்பதுதான் இந்த சட்டங்களின் நோக்கமா? அல்லது நடப்பதெல்லாம் அரசியல் ஆதிக்கத்திற்கான போட்டியா? இக் கேள்விகளுக்கான விடைகளை ஆராயாமல் நாட்டில் வழிந்தோடும் கலந்துரையாடல்களில் பங்குபற்றுவதில் எதுவித அர்த்தமும் இல்லை.

கூட்டு எதிர்க்கட்சியின் ஆசான் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் "யுத்த நாயகர்களை வேட்டையாடும் சட்டம்" என்கிற வாதம் அவர்களின் இனவாத நிகழ்ச்சிரலை நோக்கமாகக் கொண்டது. அரசாங்கமோ சனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டும் பாதையில் வெற்றிகரமான ஒரு மைல் கல் ஆக   இச்சட்டத்தை காட்ட முயற்சிக்கிறது. இவற்றை நாம் நுணுக்கமாக ஆராய்ந்தோமானால் இரு பகுதியும் அரசியல் அதிகாரத்திற்கான போட்டியில் ஈடுபட்டிருப்பது நன்கு புரியும்.

கூட்டு எதிர்க்கட்சி "யுத்த நாயகர்களை வேட்டையாடுதல் என்பதனை அடிப்படையாகக் கொண்ட ஒரு பலவீனமான வாதத்துடன் இந்த அதிகாரப் போட்டியில் இறங்கியுள்ளது. இதன் மூலம் தங்களை அறியாமலேயே பொதுமக்களின் கொலைகள்,  கடத்தல்கள்,  காணாமல் ஆக்கப்பட்டமை அனைத்தினதும் பின்னணியில் ஆயுதப்படைகள் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதனை ஏற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் எந்தவொரு விசாரணையின் முடிவிலும் ஆயுதப்படை அதிகாரிகள் குற்றவாளிகளாகக் காணப்படுவார்கள் என்பதனையும் ஏற்றுக் கொள்கின்றது. இது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். பெரும்பான்மையான கடத்தல்கள் இடம்பெற்ற காலத்தில் அதிகாரத்தில் இருந்த இக் கட்சியினரின் இன்றைய இப்படிப்பட்ட கூச்சல்கள் பல வருடங்களாக சட்ட ஒழுங்கின்மை நிலவிய கடந்த ஆட்சியிலிருந்து மீண்டெழுந்து இன்று நாட்டை மீளக் கட்டியெழுப்பு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் - இலங்கையின் சனநாயகத்திற்கும் எதிராக விடுக்கப்படும் பெரும் அச்சுறுத்தலாகும். 

இந்த விடயத்தில் கடந்த அரசாங்கத் தலைமைகள் நடந்து கொள்கிற முறையைக் கவனித்தால் இந்த கடத்தல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் கரங்கள் சம்பந்தப்படிருப்பது தெளிவாகப் புரியும். இந்தக் கடத்தல்களும், கொலைகளும் அரச அதிகாரிகளின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப இல்லாமல் அரசாங்கத்தின் கட்டளைப்படி நடந்ததாக வைத்துக் கொண்டால் இந்த மகிந்தர்களின் எதிர்ப்பு யாவும் தங்கள் தலைகளைக் காப்பாற்றுவதற்கே அல்லாது ஆயுதப்படையினரின் கௌரவத்தை பாதுகாப்பதற்காக அல்ல என்றெல்லவா ஆகிறது?  கட்டளைகளை நிறைவேற்றிய படையினரைக் காட்டிலும் வர்ணிக்க முடியாத கொடுமைகளை நிறைவேற்ற ஆணையிட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள் இல்லையா?

சீருடை தரித்திருந்தாலென்ன – காவியுடை அணிந்திருந்தாலென்ன அடுத்தவருக்கு எதிரான குற்றம் என்று வரும் போது அதில் என்ன வேறுபாடு உள்ளது. கடத்தல்கள்,  குற்றச் செயல்கள்,  கொலைகள் என்பதில் இராணுவத்தினர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் - அவர்கள் இஷ்டப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம். சட்டத்தின் கரங்கள் அவர்கள் மீது கை வைக்கமுடியாது என்ற கூட்டு எதிர்க் கட்சியினரின் வாதம் மிகவும் பலவீனமானது – நகைப்புக்குரியது – சனநாயக விரோதமானது. இதனை நாகரீகமான ஒரு சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சட்ட விரோதிகள் மாத்திரமே இதனை ஏற்றுக் கொள்வார்கள். இந்த வகையில் பார்க்கும் போது நாட்டில் இனவாதக் கொந்தளிப்பை உருவாக்கி அந்த இனவாத அலையின் ஊடாக தங்களின் ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதே கூட்டு எதிர்க் கட்சியின் நோக்கம் என்பதனை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை தடுக்கும் வகையில் நாட்டில் இன நெருக்கடியைத் தோற்றுவிக்க முயற்சிக்கும் இந்தக் கீழ்த்தர அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடிப்பதற்காக அனைத்து முற்போக்கு சக்திகளும் கையோடு கை கோர்த்து அணி திரள வேண்டும்.

எதிர்க் கட்சியின் நிலைப்பாட்டை ஒருபுறம் வைத்து விட்டு அடுத்ததாக மேற் குறிப்பிட்ட சட்ட மசோதா பற்றி சற்றுப் பார்ப்போம். இந்த சட்ட வரையறைகளைப் படிக்கும் போது அரசாங்கம் இதனைப் பாதிக்கப்ட்டவர்களுக்கு நியாயத்தையும் நிவாரணத்தையும் வழங்க கொண்டு வந்ததா? அல்லது அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு கண்ணாமூச்சுக் காட்ட ஏற்படுத்தியதா? என்ற கேள்விகளே ஏற்படுகிறது.

காணாமல் போனோர் காரியாலம் 7 உத்தியோகத்தர்களை கொண்டிருக்கும். அந்த 7 பேரையும் சனாதிபதியே தேர்ந்தெடுப்பார். இவர்கள் காணாமல் போனோர் பற்றிய தகவல்களை திரட்டுவதற்கும் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கும் ஏற்புடையதான நிர்வாகக் கட்டமைப்புகளை நிறுவுவார்கள். இந்த மசோதா பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்வதனை உறுதிப்படுத்துகிறது.

-காணாமல் போனோரை அடையாளம் காணுதல்

-அவர்களின் உறவுகளின் உரிமைகளைப் பாதுகாத்தல்

-அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளுக்குரிய வழிவகைகளை பெற்றுக் கொடுத்தல்.

-மேற்குறிப்பிட்ட பணிகள் சரிவர இடம்பெறுவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல்.

இந்தச் சட்டத்தின் பிரகாரம் காரியாலயம் திரட்டும் காணாமல் போனோர் தொடர்பான  தகவல்கள் நடைமுறையில் உள்ள நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இன்று நாட்டிலுள்ள நீதி நிர்வாக நடைமுறையை அவதானிக்கும் போது அரசாங்கம் தனது வசதிகளுக்கேற்ப சில வழக்குகளை முன்னெடுக்கும். பல வழக்குகளை கிடப்பில் போடும்.

இச்சட்டத்தில் 10(2) பந்தியில் எந்தக் காலத்திலும் இடம் பெற்ற காணாமல் போனோர் தொடர்பாக புலனாய்வு செய்வதற்கான அதிகாரம் இக்காரியாலயத்திற்கு உண்டு எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் 12வது பந்தியின்படி அண்மையில் இடம்பெற்ற அல்லது  முக்கிய சாட்சியங்கள் உள்ள அல்லது பொது மக்கள் நலனையொட்டி மிக முக்கியமென 'காரியாலயம்' கருதும்  காணாமல் போனோர் சம்பவங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இது அரசியல் சார்பு நிலையுடன் நின்று அத்தியாவசியமான விசாரணைகளை தவிர்ப்பதற்கே வழி வகுக்கும்.

இன்னும் “காணாமல் போனவர்” என்பதன் வரைவிலக்கணம் கூட கேள்விக்குரியதாகவே உள்ளது. 

1.எங்கிருக்கிறார்? எங்கே போனார்? என்பதை அறிய முடியாமல் காணாமல் போனவர் என கணிசமாக நம்புவதற்கான தரவுகள் அடங்கிய ஒருவர்.

2.யுத்தத்தின் போது காணாமல் போனதாக அடையாளம் காணப்படுபவர்

3.வட கிழக்கு ஆயுத மோதலில் காணாமல் போன ஆயுதப் படை அல்லது பொலிஸ் படை உறுப்பினர்

4.வுலுக்கட்டாயமாக காணாமல் போனோர் தொடர்பாக இலங்கை கைச் சாத்திட்ட சர்வதேச ஒப்பந்தத்தின் வரையறைவின் கீழ் குறிப்பிடப்படும் ஒருவர்

மேற் கூறப்பட்டுள்ள விளக்கங்களை ஆராய்ந்தால் கடந்த சமீப காலங்களில் கொழும்பு நகரைச் சுற்றி இடம் பெற்ற காணாமல் போனோர் சம்பவங்கள்,  நாடு பூரா இடம் பெற்ற பாதாளக் கோஷ்டி தலைவர்கள், போதை வஸ்து கடத்தல்காரர்,  சட்ட விரோதிகள் ஆகியோரது கடத்தல்கள்,  கொலைகள் இந்த சட்ட வரையறைவுக்குள் அடங்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுப்ப வேண்டி வருகிறது.

இக் காரியாலயம் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடைகளை நிபந்தனையின்றி பெற்றுக் கொள்ளும் அதிகாரத்தையும் கொண்டுள்ளது. இது பணக்காரர்களும் சர்வதேச நிறுவனங்களும் தமது நன்கொடை ஊடாக காரியாலயத்தின் மீதும் அதன் விசாரணைகளின் மீதும் தமது நலன்களுக்கேற்ற விதத்தில் செல்வாக்கைப் பயன்படுத்தும் வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.

காணாமற் போனோர் மற்றும் அவர்களின் உறவினருக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் நடைமுறை பற்றி ஒருவர் கலந்தரையாடுவதற்கு முன்னர் இந்த இடத்தில் இவ் விடயம் தொடர்பாக எழுப்பப்பட வேண்டிய நியாயமான கேள்வி எது? என்பது குறித்து உரையாட வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால் அது கொலைகள்,  சித்திரவதை,  காணாமல் போனோர் சம்பந்தப்பட்டதாக தெரியும். ஆனால் உண்மையான பிரச்சனை சிக்கலானதும் கேள்விக்குரியதுமாகும். எமது இலங்கைச் சமூகத்தில் இதற்கான ஆதாரங்கள் நிறையவே உண்டு. 

1980 களில் "காணாமல் போனோர் மட்டுமல்ல" அவர்களுக்காக நீதிமன்றங்களில் வழக்கு மனுப்போட்ட சட்டத்தரணிகளான விஜயதாச லியனராச்சி,  காஞ்சனா அபேபால, சனத் கரிலியாட ஆகியோரும் காணாமலே ஆக்கப்பட்டதற்கு நாமே சாட்சிகளாக இருக்கிறோம்.

2000 களில் வட கிழக்கில் காணாமல் போனோர் பற்றிய விபரங்கள்,  தகவல்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சம உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித்தும் குகனும் கடத்தப்பட்டு அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டதை நேரில் பார்த்திருக்கிறோம். இவற்றையெல்லாம் நாம் கவனமாக ஆராய்ந்தோமானால் இவர்களில் பெரும்பாலானவாகள் அப்போது பதவியிலிருந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தவர்கள் என்பதும் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதும் நன்கு புலப்படும். 

அரசாங்கங்களின் அடக்குமுறை பொறிமுறையே இந்தக் கடத்தப்பட்டதுக்கும் காணாமல் ஆக்கப்பட்டதற்குமான பின்னணி என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. எனவே தங்கள் மீதே சட்டத்தின் கரங்கள் பாயக் கூடிய ஒரு நடைமுறையை ஏற்படுத்துவதற்கு எந்த அரசாங்கம் விரும்பும்? விடுக்கப்படும் போலி அறிக்கைகளை விட இந்த சட்ட மசோதா தாங்கள் சனநாயகப் பாதையில் செல்கிறோம் என்ற மாயையை தோற்றுவித்து மக்களை திசைதிருப்ப அதிகம் பயன்படும். அத்துடன் அந்நிய முதலீடுகளை நாட்டுக்குள் வரவழைப்பதற்காக,  தங்களது விரல் நுனியில் கடன்களையும் உதவிகளையும் வைத்தபடி காத்திருக்கும் ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றையும் சர்வதேச சமூகத்தையும் திருப்திப்படுத்துவதனை மட்டும் நோக்கமாகக் கொண்டு திட்டமிடப்பட்டு வரையப்பட்டதே இந்தச் சட்ட மசோதா ஆகும்.

காணாமல் போனோருக்காக அவர்களுடைய உறவுகளுக்கான நீதி நிலை நாட்டப்படுவதற்கு முதற் படியாக அவை தொடர்பான விபரங்களடங்கிய பொதுமக்களுடைய பங்களிப்பு முன் வைக்கப்படல் வேண்டும். அதற்கான தகவல்களைத் திரட்டும் புலனாய்வு நடாத்தப்படல் வேண்டும். இந்த விடயத்தில் நடப்பில் உள்ள அரசாங்கத்தை நம்பமுடியாது. இதில் பொதுமக்களினதும் முற்போக்கு சக்திகளினதும் பரந்துபட்ட ஈடுபாடுகள் இருக்க வேண்டும். விசாரணை நடைமுறைகள் முற்றிலும் வெளிப்படையாக காணப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான பரிகாரம் கிடைக்க வேண்டுமானால் அரசாங்கத்தின் இந்த சட்ட மசோதாக்களின் நடைமுறைப்படுத்தலில் மட்டும் நம்பியிராமல் பாதிக்கப்பட்டவர்களுடன் நாம் அனைவரும் இணைந்து காணாமல் போனோர் சம்பந்தமாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அரசாங்கத்தை அழுத்தும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

காணாமல் போனோருக்கான நீதிக்கான கோரிக்கை கடந்த 30 வருட யுத்தத்தினால் சிதறுண்டு போயிருக்கும் இலங்கை சமூகத்தின் மீள் இணக்க முயற்களுடன் இணைக்கப்படல் வேண்டும். இதேவேளை அனைவரதும் சம உரிமைகளுக்காக,  சந்தர்ப்பவாத அரசியலையும் பிளவுபடுத்தும் இனவாத நிகழ்ச்சி நிரல்கள் அடங்கிய அரசியல் கட்சிகளையும் ஒழித்துக் கட்டும்,  பொதுப் போராட்ட முன்னரங்கில் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களை ஒன்றாக இணைத்து அணி திரள வேண்டும்.

கடந்த பல வருடங்களாக "முன்னிலை சோசலிசக் கட்சி" சகல மக்களையும் நாட்டின் இனவாத நிகழ்ச்சி நிரல்களுக்கும் இன முரண்பாடுகளுக்கும் அரசாங்கத்தின் புதிய தாராளப் பொருளாதாரப் பொறிகளுக்குள்ளும் இடையே சிக்கவிடாமல் இவற்றுக்கு எதிரான ஒரு பொதுத் தளத்தில் இன-மத-சாதி-பால்-வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் ஒன்றிணைப்பதற்கு சம உரிமை இயக்கத்தின் ஊடாக கடுமையாக உழைத்து வருகிறது. 

இதற்காக நாம் சனநாயகமும்-சமத்துவமும் என்பவைகளின் அடிப்படையில் பொதுமக்களின் பரந்துபட்ட ஈடுபாட்டை வேண்டி நிற்கிறோம்.

காணாமற் போனோரின் விடயத்திற்கு இது ஒன்றே இறுதியான தீர்வைத் தரும்.