Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நெத்தலி மீனை பிடிக்கும் - சுறாக்களை காப்பாற்றும் சட்டம் - மற்றும் சைட்டம்

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் சமயத்தில் இரு வசனங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. ஒன்று ‘அநீதிக்கு எதிராதல்’. மற்றது ‘சட்டத்தின் ஆதிக்கம்’ என்பது உங்களுக்கு நினைவிருக்கும். அதாவது நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது. என்றாலும் இந்த சட்டத்தின் ஆதிக்கம் மாலம்பே சைட்டம் திருட்டு பட்டக் கடை தொடர்பில் செயற்படுகின்றதா? இந்த வியாபார நிறுவனத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால், ஆரம்பத்திலிருந்தே இது நடைமுறை சட்டத்தை மீறி அமைக்கப்பட்டிருப்பதும், தொடர்ந்து சட்டவிரோத வேலைகளை செய்வதாலும் இதுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் இது விடயத்தில் சட்டத்தை செயற்படுத்தவில்லை என்பது தெரிகின்றது. இது தொடர்பிலான நூற்றுக்கணக்கான உதாரணங்களில் சிலவற்றை அலசிப் பார்ப்போம்.

1. முதலீட்டுச் சபையின் அனுமதியுடன் சைட்டம் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 2010 ஆகஸ்ட 09ம் திகதி முதலீட்டுச் சபையின் தலைவருடைய ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை மருத்துவ சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய 2008 மார்ச் 31ம் திகதி சைட்டம் நிறுவனம் தகவல் தொழில்நுட்பம், முகாமைத்துவம் மற்றும் நிதியியல், பொறியியல், தொழிற்பயிற்சி, தாதியர், மொழிகற்கை மற்றும் சுகாதார விஞ்ஞான பாடங்களை கற்பிற்பதற்காக அனுமதி பெற்றுள்ளது. அந்நிறுவனம் மருத்துவ விஞ்ஞானத்தை கற்பிற்க அனுமதி பெற்றிருக்கவில்லை. அதன் பெயர் South Asian Institute of Technology and Management அல்லது தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவத்திற்கான தெற்காசிய நிறுவனம் என ஆரம்ப அனுமதியில் குறிக்கப்பட்டது.

 

2. மேற்படி முதலீட்டு நிறுவனத்தின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு 2009 ஜனவரி 26ம் திகதி சைட்டம் நிறுவனம் தனக்கு மருத்துவ விஞ்ஞானம் கற்பிப்பதற்கு சுகாதார அமைச்சரிடமிருந்தும், இலங்கை மருத்துவ சபையிடமிரும் அனுமதி கிடைத்திருப்பதாக கடிதங்களை காட்டி மருத்துவக் கல்லூரியொன்றிற்காக முதலீட்டு சபையின் அனுமதியை பெற்றுக் கொண்டது. இவ்விரு கடிதங்களும் போலியானவை எனவும், சுகாதார அமைச்சோ அல்லது மருத்துவ சபையோ அவ்வாறான அனுமதி வழங்கவில்லை என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. இவ்வாறு போலி ஆவணங்கள் தயாரித்தமை மற்றும் அரச நிறுவனத்தை வஞ்சித்தமை தொடர்பில் சட்டம் இதுவரை செயற்படவில்லை.

3.அதன் பின்பு 2009 லிருந்து சைட்டம் நிறுவனமானது மருத்துவ விஞ்ஞானம் கற்பதற்காக மாணவர்களை உள்ளீர்த்துக் கொண்டது. அதற்காக அவர்கள் வெளியிட்ட பத்திரிகை விளம்பரங்களில் சைட்டம் நிறுவனம் ரஸ்யாவின் நிஸ்னி நொவ்கொரோத் பல்கலைக்கழகத்தின் இணை நிறுவனம் எனவும் அதன் பட்டத்திற்கு இலங்கை மருத்துவ சபையினதும், ஐக்கிய ராச்சிய மருத்துவ சபையினதும் அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

4. ஆனால் 2012 டிசம்பர் 19ம் திகதிய கடிதத்தின் வாயிலாக ரஸ்யாவின் நிஸ்னி நொவ்கொரோத் பல்கலைக்கழகமும், 2012 நவம்பர் 07ம் திகதிய கடிதத்தின் வாயிலாக ரஸ்யாவிற்கான இலங்கை தூதரும் சைட்டம் நிறுவனத்திற்கும் ரஸ்யாவின் அந்த பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாதென உறுதி செய்தார். சைட்டம் நிறுவனம் பத்திரிகையில் விளம்பரம் செய்த ஒரு வாரத்திற்குப் பின்பு இலங்கை மருத்துவ சபை பத்திரிகை விளம்பரமொன்றை வெளியிட்டு தான் இப்படியான பல்கலைக்கழகமொன்றிற்கு அனுமதி வழங்கவில்லையாதலால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டாமென மாணவர்களை அறிவுறுத்தியது. ஐக்கிய ராச்சியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பட்ட ஆவணத்தில் சைட்டம் பெயர் குறிப்பிடப்படவில்லை. அதற்கமைய சைட்டம் விளம்பரத்தில் உள்ள மூன்று விடயங்கள் பொய்யானவை என்பது வெளிப்படை. பொய்யான விடயங்களை பிரச்சாரம் செய்து மக்களிடமிருந்து பணம் அறவிடுவது குறித்து இந்த மோசடிப் பேர்வழிகள் மீது சட்டம் செயற்படவில்லை.

5. இலங்கையில் மருத்துவக் கல்வி தொடர்பிலான தீர்மானங்களை எடுப்பது இலங்கை மருத்துவ சபையாகும். அது பாராளுமன்ற சட்டமூலத்தினால் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம். அங்கு பதிவு செய்யப்படாமல் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க முடியாது. அதேபோன்று அதற்கு மக்களிடமிரும் பணம் சேகரிக்கவும் முடியாது. மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை நடாத்திச் சென்ற, மக்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்ட சக்விதி என்பவர் சிறைத் தண்டனை அநுபவிக்கும்போது மருத்துவ சபையின் அனுமதியின்றி மருத்துவக் கல்லூரியை தொடங்கி, வஞ்சகமாக மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்ட நெவில் பர்னாந்து சொகுசாக இருப்பதன் இரகசியம் என்ன?

6. இந்நிறுவனத்தால் அமைக்கப்பட்ட நெவில் பர்னாந்து மருத்துவமனை சுகாதார அமைச்சினால் போதனா வைத்தியசாலையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவ்வாறு அரச அங்கீகாரம் இல்லாத எவருக்கும் போதனா வைத்தியசாலை என்ற பெயரை பயன்படுத்த முடியாது. 2012 நவம்பர் 22ம் திகதி அன்றைய சுகாதார அமைச்சரும் இன்றைய ஜனாதிபதியுமான மைத்திரிபால சிரிசேன அவர்கள் நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறினார். ‘மாலம்பே மருத்துவக் கல்லூரியின் அந்த வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பதிவு செய்யவுமில்லை. வெளி நோயாளர்களின் மருத்துவ நிலையம் என்ற ரீதியில் தனியார் மருத்துவ மனைக்கு வழங்கும் பதிவை வழங்கியுள்ளோம். அதைத் தவிர போதனா வைத்தியசாலை என்ற வகையில் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மிகத் தெளிவாக சொல்ல வேண்டும்’ (ஹன்சாட் பக்கம் 708) அப்படியானால் போதனா வைத்தியசாலையின் பெயரை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் சட்டம் செயற்பட்டுள்ளதா?

7. சைட்டம் நிறுவனத்திற்கு இறந்த உடல்களை வைத்துக்கொள்ள சட்டத்தில் இடமில்லை. ஆனால், அந்நிறுவனம் இறந்த உடல்களை பெற்றுக் கொண்டமையும், வைத்துக் கொண்டமையும் 1987 இலக்கம் 48 மனித உடற்கூறுகள்’ மற்றும் மயான பூமி கட்டளைச் சட்டத்தினை மீறியுள்ளது. அது தொடர்பில் சட்டம் செயற்பட மாட்டாதா?

8. சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்த பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் மற்றும் மேலும் பல கொலை வழக்குகளில் சாட்சியாக நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் வைத்திருந்த உடற்பாகங்கள் மாயமாகின. பின்பு 2016 அக்டோபர் 03ம் திகதி மாலம்பே சைட்டம் நிறுவனத்திற்கு சென்ற குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் காணாமல்போன 26 உடற் பாகங்களை கண்டெடுத்தனர். நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தின் பொறுப்பிலிருந்த மனித உடற்பாகங்களை திருடி சைட்டம் நிறுவனத்திற்கு கொடுத்தது சம்பந்தமாக மருத்துவ சபை நடத்திய விசாரணையில் குற்றவாளியாக்கப்பட்ட சைட்டம் திருட்டு பட்டக் கடையின் உப வேந்தர் ஆனந்த சமரசேகரவிற்கு மருத்துவ சபை தொழில் செய்ய தடை விதித்துள்ளது. ஆனால் சட்டவிரோதமாக மனித உடற் பாகங்களை தன் வசம் வைத்திருந்தமை, கொலை வழக்குகளின் சாட்சிகளை மறைத்தமை, அரச சொத்துக்களை திருடியமை ஆகிய குற்றங்களுக்கு சைட்டம் பிரதானிகளுக்கு எதிராக இது வரை சட்டம் செயற்படவில்லை.

9. அனுதாபத்தை பெற்றுக் கொள்வதற்கும், சைட்டம் எதிர்ப்பாளர்களுக்கும் ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சுமத்துவதற்காக சைட்டம் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சமீர சேனாரத்ன தனது வாகனத்திற்கு தானே வெடி வைத்துக் கொண்டார். இந்த சூட்டுச் சம்பவம் அவராலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்காக சட்டவிரோத ஆயுதமொன்றை பயன்படுத்தியிருப்பதாகவும் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களமும் பொலிஸ{ம் உறுதி செய்துள்ளன. சுடுகலன் சட்டத்தை மீறியமை தொடர்பில் சட்டத்தை செயற்படுத்தாதிருப்பது யாருடைய வற்புறுத்தலில்?

10. தான் சைட்டம் நிறுவனத்தில MBBS பட்டம் பெற்றதாகவும், தனக்கு அரச மருத்துவமனையில் பயிற்சி வழங்குமாறும் கேட்டு சைட்டம் மாணவியொருவர் சமீபத்தில் நீதிமன்றத்தை நாடினார். இலங்கை சட்டத்தின்படி மருத்துவ பயிற்சியின்றி ஆடீடீளு பட்டம் வழங்குவது சட்டவிரோதமாகும். அது தொடர்பில் சட்டத்தின் ஆதிக்கம் எங்கே?

இவற்றிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் சைட்டம் நிறுவனம் சட்டவிரோதமானது என்பதும், ஆட்சியாளர்கள் கூறும் சட்டத்தின் ஆதிக்கம் செல்வந்தர்களுக்கு ஒரு விதமாகவும் சாதாரண மக்களுக்கு ஒரு விதமாகவும் செயற்படும், சுறாக்களை விட்டுவிட்டு நெத்தலி மீன்களை பிடிக்கும் விசித்திரமான சட்டத்தின் ஆதிக்கமாக இருப்பதுதான்?

பகுத்தறிவை கொண்டு நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.