Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அவர்களின் வருமானமும் எமது செலவீனமும்

தற்போதைய கூட்டரசாங்கத்தின் மூன்றாவது வரவு-செலவு அறிக்கை நவம்பர் 09ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போதைய முதலமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் வரவு- செலவு திட்டம்தான் அது. சம்பிரதாயபூர்வமாக வரவு- செலவு திட்ட உரையை நிகழ்த்திய நிதியமைச்சர் இதனை "நீலப்பசுமை வரவு-செலவு" அறிக்கையாகுமென வர்ணித்தார். நீலம் என்பதின் கருத்தானது சமுத்திரத்திலுள்ள சகல சாத்தியங்களையும் அபிவிருத்திக்காக பயன்படுத்துவதாகுமெனவும், பசுமை என்பதன் கருத்தானது சுற்றாடல் சார்பான பொருளாதார முறையொன்றை முன்னெடுப்பதுமாகுமெனவும் குறிப்பிட்டார். அதேபோன்று அவர் தனது பொருளாதார அபிலாஷைகளை நுவெநசிசளைந ளுசi டுயமெய அல்லது தொழில் நிறுவனங்களை விருத்தி செய்யும் கொள்கை என்ற வகையில் பெயரிட்டார். நாம் முதலில் இந்த வார்த்தைகள் மற்றும் யதார்த்தத்திற்கிடையேயான வித்தியாசத்தை ஆராய்ந்து பார்ப்போம்.

நீல- பசுமை

அரசாங்கம் தனது பொருளாதார கொள்கையில் கடலுக்கு சொந்தமான மொத்த சாத்தியங்கள் சம்பந்தமாக அக்கறையுடன் சிந்திப்பதாகக் கூறினாலும் நவதாராளமய முதலாளித்துவ கொள்கை என்பது அதற்கு முற்றாக எதிரானது. நவதாராள முதலாளித்துவ கொள்கையில் உற்பத்தி மற்றும் உற்பத்தியோடு பிணைந்த சேவைகள் போன்ற உண்மையான மதிப்பை பெற்றுத்தரும் பொருளாதாரத்துறைகளுக்குப் பதிலாக நிதித்துறைகளுக்கு முதன்மையளிக்கப்படுகின்றது. இந்நிலையில் கடலின் பொருளாதார சாத்தியங்கள் குறித்து கூறப்படுபவை வெறுமனே வெற்று வார்த்தைகள்தான். உதாரணமாக, துறைமுக நகர திட்டத்தைப் பார்ப்போம். அத்திட்டம் காரணமாக கடலின் சாத்தியங்களை பயன்படுத்தும் இலங்கையின் பிரதான தொழிற்துறையான மீன்பிடித் தொழில் அழிகின்றது. ஆனால், அரசாங்கம் சீனாவின் வணிக மூலதனம் மற்றும் நிதி மூலதனத்திற்காக மீன்பிடித் தொழில்துறையை தியாகம் செய்ய தயாராக உள்ளது. துறைமுகம் என்பது கடல்வளம் ஆகக் கூடுதலாக பயன்படுத்தப்படும் துறையாகும். அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மற்றும் திருகோணமலை துறைமுகத்தின் அடிப்படை வசதிகளையும் கொழும்பு துறைமுகத்தின் இறங்குதுறை உட்பட துறைமுக வளங்களையும் வெளிநாட்டு கம்பனிகளிடம் ஒப்படைக்கின்றது. இதனால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரிப்பணத்தையும் இழக்கின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை விலைக்கு வாங்கும் சீன கம்பனிக்கு 25 வருட வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இம்முறை வரவு-செலவு அறிக்கையில் 97வது முன்மொழிவின் கீழ், துறைமுகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் வெளிநாட்டவர்கள் தலையிட ஏதுவாக வர்த்தக மற்றும் கடல்சார் சட்டமூலத்தை திருத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. துறைமுகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளை வெளிநாட்டு பல்தேசியக் கம்பனிகளிடம் ஒப்படைக்கத் தயாராவது சிறு பிள்ளைக்குக் கூட புரியும்.

 

பொருளாதாரத்தில் உண்மையான மதிப்பை பெற்றுத்தரும் துறைகளை விருத்தி செய்ய அரசாங்கம் முயற்சிக்கவில்லை. வெளிநாட்டு முதலீடுகள் வரும் வரை வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. நவதாராள பொருளாதார கொள்கையின் ஒரே மீட்பாளராக இருப்பது உலக மூலதனத்தின் வருகை அல்லது வெளிநாட்டு முதலீடுகள்தான். வெளிநாட்டு முதலீடுகளை 5000 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமென அமைச்சர் கூறினார். 2015ல் 970 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டு முதலீடுகள் 2016ல் 445 மில்லியன் டொலர்களாக சரிந்த நிலையில்தான் அமைச்சர் இவ்வாறு கூறுகிறார். வெளிநாட்டு முதலீடுகள் முக்கிய பொருளாதார உபாயமாக இருந்த கடந்த 40 வருடத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் 0.1 வீத வரம்பை கடக்க முடியாத நாட்டிற்குத்தான் அவர் இப்படிக் கூறுகிறார். வெளிநாட்டு முதலீடுகளை வரவழைப்பதாயின் தற்போது பங்களாதேசத்திற்கு, நேபாளத்திற்கு, பாகிஸ்தானுக்கு செல்லும் முதலீடுகளை இலங்கைக்கு வரவழைக்க வேண்டும். இலாப உழைப்பு, கொள்ளையடிக்கும் தொழிலாளர் சேவை நிபந்தனைகள் மற்றும் மிகவும் பலவீனமான சுற்றாடல் சட்டங்களை தேடித்தான் அவர்கள் அந்த நாடுகளுக்குச் செல்கிறார்கள். அவர்களை கவர்வதற்கு உழைப்பின் விலையை குறைத்து, தொழிற் சட்டங்களை வெட்டி, நினைத்தவாறு சுற்றாடலை அழிக்க இடமளிக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறித்து அரசாங்கம் தேவதை கதைகளைக் கூறிக் கொண்டு "பசுமை" என்று கூறுவது அது ஒரு வெற்று வார்த்தைதான். மற்றது நவதாராளமய முதலாளித்துவ அபிவிருத்தியானது சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. அன்று 1980களின் தொடக்கத்தில் நவதாராளமய உபாயம் தொடங்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில் ஜே.ஆர். ஜயவர்தன கூறினார், தான் சுற்றாடல் அடிப்படைவாதத்திற்கு அடிபணியாது அபிவிருத்தியைப் பற்றி மாத்திரமே நினைப்பதாக. விக்டோரியா அணை, சமநல வாவி போன்ற திட்டங்கள் செயற்படும்போது, சுற்றாடல் ரீதியில் வரும் விமர்சனங்களுக்கு அவர் அளித்த பதில் உங்களுக்கு நினைவிருக்கலாம். அவ்வாறான திட்டமொன்றின் தற்போதைய வாரிசான மங்கள சமரவீர, சுற்றாடல் பாதிப்பு அழிவு தரக்கூடியது எனவும், கடந்த வருடம் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பு காரணமாக மொத்த தேசிய உற்பத்தியில் 1 வீதம் இழக்கப்பட்டிருக்கின்றது எனவும் 40 வருடங்களுக்குப் பின்பு இன்று சொல்கிறார். அப்படி சொல்லிக் கொண்டு அதே கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகத்தான் இந்த வரவு செலவு திட்டம். ஆகவே பசுமை என்ற சொல் பழைய அழிவை மறைக்கும் ஐசிங் மாத்திரம்தான். தொழில்துறை வளர்ச்சி தொழில்துறை வளர்ச்சியை முதன்மையாகக் கொண்ட பொருளாதாரம் என்பதில் ஆட்சியாளர்கள் கருதுவது இலங்கைக்குள் பல்வேறு கைத்தொழில்கள், விவசாய உற்பத்திகள் மற்றும் சேவைகளை விருத்தி செய்வதல்ல. நவதாராளமய முதலாளித்துவ கொள்கையின் கீழ் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கு ஊக்கமளிக்கப்பட மாட்டாது, அதற்குப் பதிலாக சகல துறைகளுக்காகவும் மூலதனத்தை வரவழைத்து அவற்றை பாரிய கம்பனிகளின் ஏகபோகத்திற்கு விடுவதுதான் அதன் கொள்கை. அமைச்சரின் வரவு செலவு உரையிலிருந்து இந்த கொள்கையை புரிந்துகொள்ள முடியும். இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதற்குத் தடையாக இருப்பதாக தான் காண்பது வர்த்தகத் தடைகளாகும். வர்த்தகத் தடை என்பது ஒரு நாடு தனது நாட்டின் சிறு மற்றும் நடுத்தர உற்பத்திகளை பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த உற்பத்தியாளர்களை வெளிநாட்டிலிருந்து வரவழைக்கும் பட்சத்தில் அவற்றிற்கு வரி விதிக்கப்படும். அவ்வாறு வரி விதிப்பதன் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தியின் விலை உள்நாட்டு உற்பத்தியின் விலையை விட அதிகரிப்பதினால், சிறு கைத்தொழில்களை பாதுகாத்துக் கொள்வதற்கான அடிப்படையொன்று உருவாகின்றது. வர்த்தகத் தடைகளை அகற்ற வேண்டுமெனவும் பல்வேறு நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் ஒப்பமிட வேண்டுமெனவும் இம்முறை வரவு செலவு அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது. வரவு செலவு அறிக்கையின் மீதான உரையின் 85வது உறுப்புரையை வாசிக்கும்போது ஆளும் வர்க்கத்தின் தந்திரோபாயம் வெளிச்சத்திற்கு வருகின்றது. இவை மாத்திரமல்ல, 1200 பொருட்களுக்காக சுங்கம் அல்லாத வரி விலக்களிப்பதற்கு இம்முறை வரவு செலவு அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது. கடந்த வரவு செலவு திட்டத்தில் 100 பொருட்களுக்கு வரிவிலக்களிப்பட்டது. அதன்படி நடுத்தர உற்பத்தியாளனை அழித்துக் கொண்டு தேசிய மட்டத்திலும், உலக மட்டத்திலும் ஏகபோகத்தை உறுதி செய்யும் திசைக்கு இந்த நவதாராளமயத்திற்கான பாதை அமைக்கப்பட்டிருப்பது தெரிகின்றது. ஆகவே, இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள தொழில்துறை என்ற கதை ஒரு மோசடி. இந்த தொழில்துறை என்பது பாரிய கம்பனிகளுக்கு மாத்திரமே.

பிரச்சினைகளும் தீர்வும்

நிதியமைச்சர் தனது உரையின் ஆரம்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள மூன்று பாரிய நெருக்கடிகளைப் பற்றி குறிப்பிட்டார். அதாவது அதிக கடன் சுமை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெளிநாட்டு கொடுப்பனவுகளின் நிலுவை மற்றும் சுற்றாடல் நெருக்கடி, இந்த மூன்று பிரச்சினைகளும் நவதாராளமய முதலாளித்துவத்தினால் கூர்மையாக்கப்பட்ட நெருக்கடிகள். உதாரணமாக கடன் சுமையை எடுத்துக் கொள்வோம். அரசாங்கம் கடன் எடுக்க வேண்டியிருப்பது அரசாங்க வருமானங்களுக்கும் செலவீனங்களுக்கும் இடையேயான இடைவெளியை நிரப்புவதற்காகவே முக்கியமாக. கடந்தகாலம் பூராவும் வருமானம் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக கடன் எடுக்க வேண்டிய நிலை உருவானது. அரச வருமானத்தில் இரு வகைகள் உள்ளன. ஒன்று வரி வருமானம். மற்றது அரசாங்கம் பொருளாதார நடவடிக்கைகளில் வேறு முறைகளில் பெறும் வரியல்லாத வருமானம். அரசாங்கம் பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து விலகுவதும் அரச தொழிற்துறைகளை தனியார்மயப்படுத்துவதுமே நவதாராளமய தந்திரோபாயமாக உள்ளது. ஆகவே, சில காலங்களாக அரசாங்கத்தின் வரியல்லாத வருமானத்தில் வீழ்ச்சியேற்பட்டு அரசாங்கம் முற்றிலும் வரி வருமானத்தின் மீது தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக 2018 வருடத்திற்கு எதிர்பார்த்த அரச வருமானமான 2316 பில்லியன் ரூபா வரியல்லாத வருமானம் 184 பில்லியன் ரூபாவாக குறைந்தது. அரச வருமானத்தில் 88வீதம் வரி வருமானமாக இருப்பதுடன் வரியல்லாத வருமானம் 12வீதம் மாத்திரமே. இந்த வரி வருமானத்திலும் இரு வகைகள் உள்ளன. அது செல்வந்தர்களின் வருமானம், இலாபம் மற்றும் மூலதனம் மீது அறவிடப்படும் நேரடி வரி மற்றும் மக்களிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக அறவிடப்படும் மறைமுக வரியாகும். 2018ல் வரி வருமானத்தில் 85 வீதம், அதாவது, 1659 பில்லியன் ரூபா மக்களுக்கு வரி விதிப்பதன் மூலம் பெறப்படவிருக்கின்றது. செல்வந்தர்களுக்கு, கம்பனிகளுக்கு, வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரிச் சலுகை, மக்களுக்கு வரிச் சுமை. பொருளாதாரத்தின் இன்றைய நெருக்கடியானது இந்த கொள்ளைக்கார கொள்கையோடு சம்பந்தப்பட்டதாகும்.

ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிப்பதால்தான் கொடுப்பனவு நிலுவை அதிகரிக்கின்றது. அதாவது, நாட்டின் உற்பத்தி சரிந்து, பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நேரிடும்போது. தற்போது இலங்கையின் வருடாந்த கொடுப்பனவு நிலுவை பற்றாக்குறை 10 பில்லியன் டொலராகும். அவ்வளவு பெரிய இடைவெளி உருவானமைக்குக் காரணம் கைத் தொழில்துறை, விவசாய தொழில்துறை போன்றவற்றில் ஏற்பட்ட சரிவுதான். இது நவதாராளமய முதலாளித்துவ கொள்கையின் பிரதிபலனாகும். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்படும் விதத்தில் சிறு உற்பத்திகளுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டதன் பின்பு இந்த நிலை மேலும் உக்கிரமடையும். சுற்றாடல் பிரச்சினையை எடுத்தாலும் அப்படித்தான். நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று சுற்றாடல் மாசடைதல் இந்த பொருளாதாரக் கொள்கையின் இன்றியமையாத பண்பாகும்.

மூன்று நெருக்கடிகள் குறித்து கூறும் நிதியமைச்சர் அந்த நெருக்கடிகளுக்கு தீர்வாக நெருக்கடிக்கு காரணமான கொள்கையின் பாதையில் வேகமாக ஓட வேண்டும் என்கிறார். இந்த நெருக்கடியானது ஒரு பொறியென்றால், பொறியிலிருந்து விடுபடுவதற்குப் பதிலாக பொறிக்குள் நுழைவோமென அரசாங்கம் கூறுகின்றது. 40 வருடங்களாக கேட்டு கேட்டு புளித்துப்போன போன கதைகளை மீண்டும் மீண்டும் சொல்லும் மங்களவின் வரவு செலவு உரையை கேட்கும்போது அரசாங்கத்திற்கு வேறு மாற்று வழிகள் கிடையாதென்பது தெரிகின்றது. அழிவைத் தரும் இந்த பயணத்திற்கு எதிரான மாற்றீடு பாட்டாளி வர்க்க அரசியலுக்குள் மாத்திரமே உள்ளது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது