Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

"சீபா" இல்லை "இட்கா" - யானைகள் போதாதென்று மாடுகள்

கடுமையான எதிர்ப்பிற்கும் குழப்பத்திற்கும் காரணமான சீபா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட மாட்டாதெனவும், அதற்குப் பதிலாக இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையில் ‘இட்கா’ (ETCA) என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய - இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் அரசாங்கம் உத்தியோக ரீதியில் அறிவித்திருக்கின்றது.

2015 செப்டம்பர் 14ம் திகதியிலிருந்து 16ம் திகதி வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின்போது இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. இந்தப் பயணத்தின் போது சீபா ஒப்பந்தத்தை வேறு பெயரில் ஒப்பமிட இந்தியாவுடன் இணங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இலங்கைக்கு வந்த பின்னர் செப்டம்பர் 23ம் திகதி நாடாளுமன்றத்தில் விஷேட அறிக்கையொன்றை வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய - இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்.

பின்னர் டிசம்பர் 21ம் திகதி சில உயர்மட்ட அதிகாரிகள் அதற்கான அடிப்படை கொள்கைகளை தயாரிப்பதற்காக இந்தியாவிற்கு சென்றனர். அதன்படி 2016 பெப்ரவரியில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும், இவ்வருடம் மே அல்லது ஜுன் மாதமளவில் முதற்கட்ட கொள்கைகள் தயாரிக்கப்பட்டுவிடுமெனவும் தெரிய வருகின்றது. உண்மையிலேயே இந்த ‘இட்கா’ ஒப்பந்தம் என்பது என்ன, அதனை எல்லோரும் எதிர்ப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து பேசுவதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.

பொதுவாக இரு நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும்போது பொருட்கள் விற்பனை சார்ந்த உடன்பாடுகள் அவற்றில் உள்ளடக்கப்படும். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு அனுப்பும் பொருட்களுக்கு சுங்கவரி நிவாரணம் வழங்கல் போன்ற நிபந்தனைகள் உள்ளடக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு 1998ல் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை எடுத்துக் கொள்ள முடியும். அந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கு அனுப்பும் பொருட்களுக்கும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கும் சுங்க வரியிலிருந்து விலக்களிக்கப்படும். அந்த ஒப்பந்தத்தினால் இலங்கைக்குத்தான் நட்டம்.

ஒப்பந்தத்திற்கு முன்பு இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பும் பொருட்களின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரும் பொருட்களிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்குமிடையில் இடைவெளி அல்லது வர்த்தக நிலுவை 460 மில்லியன் டொலராக இருந்தது. அது ஒப்பந்தத்திற்குப் பின்பு 4675 மில்லியன் டொலர் வரை பத்து மடங்காக அதிகரித்தது.

அதாவது, இலங்கையிலிருந்து இந்தியா இழுத்துக் கொள்ளும் அளவு பத்து மடங்காக அதிகரித்தது. தவிரவும் இந்தியாவிலிருந்து குறைந்த சுங்கவரியின் கீழ் இலாபம் தரும் பொருட்கள் இறக்குமதியினால் இலங்கையின் ஊதுபத்திகள், மெழுகுவர்த்திகள் போன்ற கைத்தொழில்கள் சரிந்தன. இந்த நிலையில்தான் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் இட்கா ஒப்பந்தத்தில் ஒப்பமிடவிருக்கின்றது.

இட்கா ஒப்பந்தம் சாதாரண வர்த்தக ஒப்பந்தத்தை விட மாறுபட்டது. அதற்குள் பொருட்கள் வியாபாரம் மாத்திரமல்ல, உழைப்பாளர்களும் பரிமாற்றம் செய்யப்படுகின்றார்கள். உதாரணமாக இலங்கையிலிருந்து செல்பவர்களுக்கு நீண்டகால விசா பெற்றுக்கொடுக்க இந்தியா கட்டுப்பட்டிருப்பதுடன், இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்கு நீண்டகால விசா வழங்க இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தின் மூலம் கட்டுப்பட்டுள்ளது. இந்தியா எமது வேலைவாய்ப்பு சந்தையை ஆக்கிரமித்துவிடும், எமது வேலை பறிபோய்விடும் என எதிர்ப்புகள் தலைதூக்குவதும், ஆர்ப்பாட்டங்கள் நடப்பதும் அதனால்தான். இந்த இட்கா ஒப்பந்தத்தில் இது சம்பந்தமான அடங்கியுள்ள ஒதுக்கீடுகள் குறித்து ஆராய்ந்து பார்ப்போம்.

2015 செப்டம்பர் 23ம் திகதி நாடாளுமன்றத்தில் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறினார்.

"இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், இந்திய - இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடுவது சம்பந்தமாகவும் நாங்கள் பேசினோம்.

2016 மே அல்லது ஜுன் மாதமளவில் அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது சம்பந்தமாக இரு நாடுகளும்
அத்தியாவசியமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு இந்தியப் பிரதமர் இணங்கினார்.

இந்தியாவிற்கும், இலங்கைக்குமிடையில் நிலவும் பொருளாதார ஒத்துழைப்பு எமது இரு நாடுகளுக்கும் புதிதல்ல என்பதை நாம் அறிவோம். 2500 வருடங்களாக இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் வர்த்தக நடவடிக்கைகள் நடக்காதிருந்தால் புத்த பெருமானின் தலைமுடியை எடுத்துக் கொண்டு தபஸ்ஸீ பல்லுக என்ற வியாபாரிகளின் வருகை இலங்கையில நடந்திருக்காது.”

இவ்விடத்தில் ரணில் வேண்டுமென்றே விடயங்களை குழப்புகின்றார்.

தபஸ்ஸீ பல்லுக செய்த வியாபார நடவடிக்கைகளுடன் இட்கா ஒப்பந்தத்தை சமப்படுத்த முடியாது. இந்த ஒப்பந்தத்தின்படி 16 முதல்தர துறைகளைச் சேர்ந்த பலவிதமான தொழில் நிபுணர்களும், தொழிலாளர்களும் இலங்கைக்கு வரவிருக்கின்றார்கள். அவர்களில் மருத்துவ சேவை, வழக்குரைஞர் சேவை, பொறியியல் சேவை, பற்சிகிச்சை சேவை, மிருகவைத்திய சேவை, மருத்துவ சிகிச்சை சேவை, தாதியர் சேவை, மகப்பேற்று மருத்துவச்சி சேவை, மசாஜ் கிளினிக் சேவை, கணனி சார்ந்த தொழில்கள், கணக்காளர் மற்றும் கணக்கெழுதுதல், கட்டடக்கலை நிபுணர் சேவை, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சேவை, சொத்து விற்பனை, கூலி மற்றும் குத்தகை சேவை, முகாமைத்துவ ஆலோசனை சேவை, தொழில்நுட்ப சோதனை மற்றும் பகுப்பாய்வு சேவை, இயந்திராதிகள் பழுதுபார்த்தல் சேவை, மீன்பிடி நடவடிக்கைகள், பொதி செய்யும் பிரிவு, விழா ஏற்பாட்டு சேவை, பிரச்சாரச் சேவை, தொலைக்காட்சி மற்றும் வானொலிச் சேவை, கட்டிட ஒப்பந்தங்கள் மற்றும் அவை சார்ந்த சேவைகள், தரகுப்பண (கொமிஸன்) பிரதிநிதித்துவ சேவை, மொத்த வியாபார சேவை, கல்விச் சேவைகள் (தனியார் பாடசாலை, பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட) சுற்றாடல் நடவடிக்கைகள் சம்பந்தமான சேவைகள் (சுத்திகரிப்பு தொழிலாளர்கள் உட்பட), சுகாதார மற்றும் சமூக சேவை (அழகியல் மற்றும் முடிதிருத்தும் நிலையங்கள், சுற்றுலா மற்றும் சுற்றுலா போக்குவரத்து சேவை, (பீச் போய், சேவை உட்பட), பொழுதுபோக்கு – கலாச்சார மற்றும் விளையாட்டுச் சேவை ( முச்சக்கர வண்டி, பேருந்து, இரயில் ஊழியர்கள், கப்பல், படகு உட்பட) போன்ற பல்வேறு தொழில்துறைகள் உள்ளன. பொதுவாக இந்தியாவின் சம்பள மட்டம் இலங்கை சம்பள மட்டத்தை விடவும் குறைவாக உள்ளதனால், இந்தியாவிலுள்ள வேலையில்லாத பாரிய படையணி குறைந்த ஊதியத்தில் வேலைசெய்ய விரும்புவதினால், ஆகக்குறைந்த சம்பளத்திற்கு இலங்கையில் வேலை செய்வார்கள். அதனால் இலங்கையர்கள் வேலை இழக்க நேரிடும் அல்லது குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய இணங்க வேண்டும். இந்த ஒப்பந்தம் தபஸ்ஸீ பால்லுகவிக்கு சமப்படுத்த முடியாது.

இதற்குத் தோன்றிய எதிர்ப்பின் காரணமாக அவற்றில் பல அம்சங்கள் நீக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பமும், கப்பல் கட்டும் பொறியியல் துறையும் மாத்திரம் இதில் அடங்கியுள்ளதாக அரசாங்கத்திற்கு கூற நேர்ந்தது. சமீபத்தில் நடந்த ஊடக சந்திப்பின்போது மலிக் சமரவிக்ரம இதனை உறுதி செய்தார். ஆகவே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சேவைகளை சார்ந்தவர்கள் இப்போது களத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையில் விமல் வீரவன்சவின் வழிகாட்டலுடன் இந்திய எதிர்ப்பு திட்டமொன்று (உண்மையை சொல்வதாயிருந்தால், இந்தியர்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டும்) உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எமது நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்வதற்கு நடக்கும் விடயங்களைப் பற்றிய விளக்கமொன்றை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த இட்கா போன்ற ஒப்பந்தங்களின் ஊடாக அரசாங்கம் எதிர்பார்ப்பது என்ன? இந்த அரசாங்கத்தினதும், எதிர்க்கட்சிகளினதும் பிரதான பொருளாதார தந்திரோபாயம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வதுதான். தற்போது இந்தியாவிற்கும், பங்களாதேசத்திற்கும், நேபாளத்திற்கும் செல்லும் முதலீட்டாளர்களை இலங்கையின் பக்கம் கவர்ந்திழுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகிய கட்சிகளின் கொள்கை விளக்கங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ் தேசிய கூட்டணியின் கொள்கை விளக்கத்தில் அதைப்பற்றி விஷேடமாக குறிப்பிடப்படாவிட்டாலும், அவர்கள் அந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக கூறினார்கள். ஆகவே, இந்த அனைவரினதும் பொருளாதார உபாயமானது இந்தியாவிற்கும், பங்களாதேசத்திற்கும், தாய்லாந்திற்கும் செல்லும் முதலீட்டாளர்களை இலங்கையின் பக்கம் கவர்ந்து கொள்வதுதான்.

அது குறித்து பேசுவதற்கு முன்பு இந்த முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வராமல் அந்த நாடுகளுக்கு செல்லும் காரணத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நாடுகளின் தொழிற்சட்டங்கள் மிக பலவீனமாக உள்ளன. ஆதலால், கடுமையான நிபந்தனைகளை விதித்து ஒரு நாளில் அதிக நேரம் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்ட முடியும். தொழிலாளர்கள் விடயத்தில் யாருக்கும் பொறுப்பு கிடையாது. இன்னொரு விடயம் என்னவென்றால், அந்த நாடுகளில் உழைப்பின் விலை இலங்கையை விட குறைவு. சம்பளம் மிகமிகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளது.

தொழிலாளர்களின் உழைப்பை குறைந்த கூலிக்கு சுரண்டவே முதலீட்டாளர்கள் அந்த நாடுகளுக்குச் செல்கின்றார்கள். அந்த நாடுகளில் சூழல் சட்டங்கள் பலவீனமாக உள்ளதினால் தமது இலாபத்திற்காக சூழலுக்கு முடிந்தளவு பாதிப்பை உண்டாக்கவும் முதலீட்டாளர்களுக்கு தடையில்லை. இனி, இந்த வியாபாரிகளை இலங்கை கவர்ந்து கொள்ள வேண்டுமாயின் தொழில் சட்டங்களை திருத்தி, தொழில் உரிமைகளை ஒழித்துக் கட்டவேண்டும். உழைப்பின் கூலியை குறைக்க வேண்டும். சூழல் சட்டங்களை வெட்ட வேண்டும்.

இது குறித்து இடதுசாரிகள் தேர்தல் காலங்களில் கூறினார்கள். குறிப்பாக முன்னிலை சோஷலிஸக் கட்சி போன்ற கட்சிகள் இது குறித்து எச்சரித்தனர். இப்போது அந்த தந்திரோபாயம்தான் செயற்படுத்தப்படுகின்றது. தொழில் உரிமைகளை பறிப்பதற்கு 17 சட்டங்களை திருத்த அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து விட்டது. இட்கா போன்ற ஒப்பந்தங்களினூடு உழைப்பின் கூலியை குறைக்கும் திட்டம் நடைமுறைக்கு வருகின்றது. எனவே, இந்த ஒப்பந்தம் தவறுதலாகவோ, அரசாங்கம் அறியாமலோ அல்லது இந்திய வற்புறுத்தலுக்கு அடிபணிந்தோ செய்யப்படும் ஒப்பந்தமல்ல.

இதுதான் அரசாங்கத்தின் தந்திரோபாயம். பொய் கூச்சல் போட்டாலும் எதிர்க்கட்சியும் இணங்கியுள்ள தந்திரோபாயம். இந்தியாவிற்கு எதிராக இனவாத கோஷங்களை தூக்கிப்பிடித்து உண்மையான பிரச்சினையை மூடி மறைக்கவே முயற்சிக்கப்படுகின்றது. மக்கள் எதிர்ப்பு அரசாங்க தந்திரோபாயத்தின் பக்கம் திரும்புவதை தடுத்து அந்த எதிர்ப்பு இந்திய தொழிலாளரின் பக்கம் திருப்பி விடப்படுகின்றது. ஒப்பந்தத்தையும் பிற்போக்கு திட்டத்தையும் ஒருசேர தோற்கடிக்க வேண்டும். தமது நாட்டில் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலிருந்து விலகி, தனது பொருளாதார அரசியல் ஆதிக்கத்தை பயன்படுத்தி அந்தப் பிரச்சினையை இலங்கையின் தலையில் சுமத்துவதே இந்திய அரசின் நோக்கம்.

அதேபோன்று, இதனூடு இந்திய மூலதனத்தை வியாபிக்கச் செய்வதும் நோக்கமாக உள்ளது. எதிர்ப்பை காட்ட வேண்டியது இந்திய ஆளும் வர்க்கத்தின் மீதும், அந்த தந்திரோபயத்தை பின்பற்றும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் மீதேயல்லாது, இந்திய ஒடுக்கப்பட்டவர்களின் மீதல்ல. ஆகவே, இந்த தந்திரோபாயத்தை பற்றிய புரிதலுடனேயே இட்கா ஒப்பந்தம் குறித்து பேச வேண்டும்.