Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

பூச்சி கொல்லியும் இரசாயன ஊக்கியும் தொலைபேசியும்

இயற்கையை அழித்து உணவை நஞ்சாக்கி விடுவதே, சந்தைச் செயற்பாடாகி இருக்கின்றது. பணத்தை குவிப்பதையே உற்பத்திக் கொள்கையாக்கிய உலகமயமாக்கம், விவசாயத்தை உயிருடன் கொன்று வருகின்றது. இதை பொருளாதார வளர்ச்சியாக, மக்கள் நலனாக அரசுகள் முன்வைக்கின்றது.       

இன்று இரசாயன பூச்சிக்கொல்லியும் உரமுமின்றி, விவசாயம் என்பது, பொதுப்புத்தியில் கற்பனையாக்கப்பட்டு இருக்கின்றது. நிலத்தையும் சுற்றுச்சூழலையும் நஞ்சாக்கி ஒரு தனிமக் கூறை வீரியமடையச் செய்யும் முறைமையே, இன்றைய விவசாயமாக மாறியுள்ளது. அதேநேரம் விவசாயத்தை பெரும்பான்மை மக்களின் வாழ்வில் இருந்தும் தனிமைப்படுத்தி அன்னியமாக்கப்பட்டு இருக்கின்றது. 

இரண்டாம் உலக யுத்தத்திற்கு முந்தைய இயற்கை சார்ந்த விவசாய முறையை யுத்தத்தில் மனிதனைக் கொல்ல பயன்பட்ட இரசாயனப் பொருட்களைக் கொண்டு அழித்ததையே விவசாய வளர்ச்சியாக காட்டுகின்றனர். பாரம்பாரியமாக விவசாயிகள் விதைகளைச் சேகரிக்கும் முறைமையை அழித்தும், மலட்டு விதைகளைக் கொண்ட உணவு உற்பத்தியை திணித்தும், மரபுரீதியான மாற்றங்களைச் செய்த பயிர்களைக் கொண்ட உணவு உற்பத்தி முறைமைகளை, உலகமயமாக்கம் பன்நாட்டு கம்பனிகளின் சொத்தாக்கி இருக்கின்றது.    

இன்று உணவு நஞ்சாகியதுடன், சுற்றுச்சூழலையும் நஞ்சாக மாற்றியுள்ளது. இது மனிதனை மட்டும் பாதிக்கவில்லை, இயற்கையிலான உயிரினத் தொகுதியையும் அழித்து வருகின்றது. உணவு உற்பத்தியின் இயற்கைக் கூறுகளை அழிப்பதன் மூலம், உணவு உற்பத்தி ஊக்கிகளை அழித்துவிடும் புதிய அபாயம் தோன்றி இருக்கின்றது.                    

உணவு இன்றி மனிதன் முதல் பிற உயிர்கள் வரை, உயிர் வாழ்தல் சாத்தியமில்லை.  தாவரங்கள் உயிர்வாழ்தலுக்கான இனப்பெருக்க ஊக்கி இன்றி அழிகின்ற புதிய சூழல் உருவாகி வருகின்றது. புவி வெப்பமடைதல் மூலமான சூழல் அழிவுக்கு மேலாக, விவசாயத்தில் இரசாயனப் பயன்பாடும் கைத்தொலைப்பேசியும் இந்த அழிவை வேகமாக்கி வருகின்றது. 

இலங்கையில் அனைவரும் அறிந்து உணரும் அளவுக்கு, விவசயத்தில் இரசாயன பண்பாடு (உரம் - பூச்சிக்கொல்லி), மனித உடலில் பாரிய விளைவுகளை உருவாக்கி வருகின்றது.  சிறுநீரக நோய்கள், புற்றுநோய்கள் என்று தொடராக பலநோய்கள் முழுச் சமூகத்தையும் நிலைகுலைய வைத்திருக்கின்றது. மறுபக்கம் மருத்துவம் தனியார் துறையாகிவிட்டதால் போதிய மருத்துவம் இன்றி மரணங்கள் தீர்வாகி வருகின்றது. 

மறுபக்கத்தில் வடமாகாணத்தில் புதிதாக திருமணம் செய்பவர்களில் 5 பேரில் 4 பேருக்கும், தெற்கில் மூன்று பேரில் 2 பேருக்கும் குழந்தை பெறமுடியாத அளவுக்கு இரசாயன தாக்கமானது அவர்களை மலடாக்கியுள்ளதாக மருத்துவச் செய்திகள் தெரிவிக்கின்றது. இதை விட வருடாந்தம் 5000 பேர் புதிதாக புற்றுநோய்க்கு உள்ளாகின்றனர்.  

இவை இலங்கை மக்கள் நேரடியாகவும் உடனடியாக சந்திக்கின்ற பிரச்சனைகளாக உள்ளதுடன், மறுபக்கத்தில் இதன் விளைவு பன்முகத்தன்மை கொண்டவை. 

இந்த வகையில் விவசாயத்தில் இரசாயனப் பயன்பாடு மனிதனுக்கு ஏற்படுத்தும் நேரடி விளைவுகளைக் கடந்து மற்றொரு அழிவாக உணவு உற்பத்திக்கு உதவும் தேனீக்கள்  அழிந்து வருகின்ற அபாயம்;.  

இரசாயனப் பயன்பாடும் தேனீக்களின் அழிவும் 

577 பில்லியன் (57700 கோடி) டொலர் பெறுமதியான உலக உணவு உற்பத்தியானது,  தேனீக்களின் அழிவுடன் தொடங்கி இருக்கின்றது.  

தேனீக்கள் உள்ளிட்ட பூச்சியினங்களின் உணவுச் செயற்பாடு தான், தாவரங்களின் இன விருத்திக்கான (ஊக்கி) ஆதாரமாகும். அதாவது மகரந்த சேர்க்கைக்கு இவை தான் உதவுகின்றன. உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் “தேனீக்கள் முற்றிலுமாக அழிந்து போனால், அதிலிருந்து ஐந்து ஆண்டுகளில் மனித இனமும் அழிந்து போகும்” என்றார். அந்தளவுக்கு உணவு உற்பத்தியில் தேனீ முக்கியமானது.  

குறிப்பாக உணவு உற்பத்தில் இரசாயனப் பயன்பாடானது பயிரை அழிக்கும் உயிரினங்களை மட்டும் கொல்வதில்லை மாறாக நன்மை தரும் தேனீ, மண்புழு உள்ளிட்ட உயரினங்களையும் கொன்று விடுகின்றது.  

இந்தப் பின்னணியில் இன்று உலகம் முழுவதும் தாவரங்களில் நிகழும் மகரந்தச் சேர்க்கையில் 80 சதவீதம் தேனீக்களால் நடத்தப்படுகின்றது. ஒரு நாளில் 30 கோடி பூக்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ உதவுவது கண்டறியப்பட்டுள்ளது. தேனீ அதிகரிக்கும் போது உணவு உற்பத்தி அதிகரிக்கும். மனிதர்களுக்கு இன்று உணவு தரும் பயிர்களில் நூற்றுக்கு 70 பயிர்களில் தேனீக்களால் தான் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. இந்தப் பயிர்கள்தான் உலகின் மனிதனின் ஊட்டச்சத்துத் தேவையில் 90 சதவீதத்தைப் பூர்த்தி செய்கின்றன. இதை விட பிற உயிரினங்கள் வாழ்வும் இதில் தான் அடங்கி இருக்கின்றது. 

இரசாயனப் பயன்பாடு பொதுவாக உயிரினங்களைக்  கொல்லுவதைக் கடந்து, தேனீக்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருப்பது நியோநிக்கோடினாய்டுகள் என்னும் பூச்சிக்கொல்லியாகும்;. மனிதனை புகைத்தலுக்கு அடிமையாக்கும் நிக்கோடினுக்கும் இவற்றுக்கும் தொடர்பு உண்டு. நியோநிக்கோடினாய்டுகள் சுருக்கமாக நியோனிக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வேதிப்பொருட்கள் திட்டமிட்டாற்போல் செயல்படக்கூடியவை. 

இது ஒரு தாவரத்தை முழுவதுமாக ஒரு படலம்போல் சூழ்ந்துகொள்கின்றன. பூக்கள், இலைகள் என்று எதையும் இவை விட்டுவைப்பதில்லை. இந்த இரசாயனப்; பொருட்கள் தாவரங்களை மட்டுமல்லாமல், தாவரங்களில் உள்ள பூக்களை நாடிவரும் தேனீக்களின் மூளைவரை ஊடுருவி அங்கேயும் சூழ்ந்துவிடுகின்றது. இதனால் தேனீக்களுக்கு மூளைக் குழப்பம் ஏற்பட்டு - தன் கூட்டுக்கு திரும்ப முடியாமல் தேனீக்கள் மரணித்து வருகின்றன. 

தேனீக்களைக் கொல்லும் கைத்தொலை பேசி 

இராசயன பூச்சிக்கொல்லி போன்றே கைத்தொலைபேசி பாவனை தேனீக்களை அழித்து வருகின்றது. தேனீக்கள் தமது தேன் கூட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவு வரை பறந்து சென்று பூக்களில் தேனைச் சேகரித்த பின் கூட்டிற்கு திரும்புகின்றன. இந்த இயற்கையான அதன் செயற்பாட்டுக்கு பூமியின் இயற்கையான மின்காந்த அலைகளைத்தான் உதவி புரிகின்றன. 

தேனீக்களின் இந்த இயற்கை வழிகாட்டல் முறைக்கு செல்பேசிக் கோபுரங்கள் வேட்டு வைத்து இருக்கின்றது. இதனால் கூட்டை விட்டு தேனெடுக்க சென்ற தேனீக்கள் திரும்புவதற்கு வழிதெரியாமல் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன. 

அண்மைய ஆய்வுகள் இதை உறுதி செய்கின்றன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தேனீக்கள் எண்ணிக்கையானது 2010 ஆம் ஆண்டில் திடீரென 30 சதவீதம் குறைந்தது போனது. அமெரிக்காவின் சில பகுதிகளில் 80 சதவீதம் தேனீக்கள் காணாமல் போனது. இதற்கு செல் போன் உதவும் மின்காந்த கோபுரங்கள் காரணமாகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த வகையில் ஒரு ஆண்டில் மட்டும் தேன் உற்பத்தி செய்யும் தேனீக்கூட்டங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான தேனீக்களை தாங்கள் இழந்துவிட்டதாக அமெரிக்க தேனீ வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். லாபத்தை மட்டும் தங்கள் நோக்கமாகக் கொண்ட இயற்கையின் அழிபாடும் செயற்கையான செயற்பாடும், உயிர்வாழும் ஆற்றலை அரித்து  அழிக்கத் தொடங்கி இருக்கின்றது.  

தேனீகளின் வாழ்விட அழிப்பு 

தேனீ அழிவில் மற்றொரு காரணம், அதன் வாழ்விட அழிப்புகள். தேனீ இடம்பெயரும் வழிகளில் ஆங்காங்கே தேவையான அளவு தாவரங்கள் இருக்க வேண்டும். தேனீக்கள் தேனைத் தேடி பயணிக்கும் பாதையில் அது தங்கி செல்ல முடியாத வண்ணம் கொங்கிரிட் பாளங்களாகவும், பெரும் பண்ணைகளாகவும் மாற்றி இயற்கையை அழித்து விட்டதால், தேனீக்கள் தங்கள் பயண வழியில் மரணித்து விடுகின்றது.

தேனீக்களுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளும் நுண்ணூட்டச்சத்துகளும் ஒரே தாவரத்திலான தேனிலிருந்து கிடைத்துவிடுவதில்லை. வெவ்வேறு வகையான தாவரங்களிலிருந்து திரட்டப்படும் தேனால்தான், தேனீக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிகின்றது. அதாவது தேன் ஆதாரங்கள், ஒரே இடத்தில் பலவகைப்பட்டதாக இருக்க வேண்டும். கண்ணுக்கு எட்டிய பரப்பெங்கும் நெல் வயல்கள், கோதுமை வயல்கள் மட்டுமே இருந்தால் தேனீக்களுக்குரிய ஊட்டச்சத்து கிடைக்காது.

இந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் தேனீக்களுக்கு இயற்கையாகவே இருக்கும் எதிர்ப்பு சக்தி குறைந்துபோய்விடுகிறது. நோய்களும், ஒட்டுண்ணிகளாலும் கூட்டம் கூட்டமாக தேனீக்கள் அழிந்துபோகின்றன. ஆக, ஊட்டச்சத்து பிரச்சினைக்கு ஓரின உற்பத்தி முறைமை காரணமாக மாறி இருக்கின்றது. 

முடிவாக 

1. தேனீகளுக்கு தரிப்பிடமற்ற நீண்ட பறப்பு காரணமாக, ஒற்றை பயிர்ச் செய்கை காரணமாகவும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு அழிகின்றது.

2. காற்று மாசுபாடு, புவி வெப்பமாதல் போன்றவை தேனீகளிள் இயற்கையான சூழலை அழித்து அழிவைக் கொண்டு வருகின்றது.

3. இரசாயனப் பயன்பாடு தேனீயைக் கொல்வதுடன், பயிர் காப்பாக பயன்படுத்தப் நியோநிக்கோடினாய்டுகள் என்ற இரசாயனம் தேனீயில் உட்புகுந்து மூளையை குழப்பி கொன்று விடுகின்றது. 

4. தேனீயின் பறப்புக்கு உதவும் இயற்கையான மின்காந்த அலைகளைக் குழப்பும், தொலை(செல்)பேசிக் கோபுரங்கள், தேனீக்களை கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்ய வைக்கின்றது.  

இயற்கை அழிப்பு மூலம் இன்றைக்கு எதிர்கொண்டிருக்கும் பொது அபாயங்கள் அத்தனையும், தேனீக்கள் தொடங்கி மனிதன் வரை விட்டு வைக்கவில்லை. நமக்கு ஒரு உண்மை, மேலும் மேலும் துலக்கமாகிறது. இயற்கையில் எதுவும் தனித்தில்லை. இயற்கையில் ஏற்படும் பாதிப்பு, எல்லாப் பகுதிகளிலும் பிரதிபலிக்கின்றது. இவை அனைத்தும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட உற்பத்தி முறையினதும், அதன் நுகர்வுக் கொள்கையினதும் பொது  விளைவுகளாகும். 

உயிர் வாழ்வுக்காக இயற்கையைப் பாதுகாக்கும் போராட்டமானது, இலாபத்தை குறிக்கோளாகக் கொண்ட தனிவுடமை உற்பத்தி முறைமைக்கு எதிரானதாக இருக்கின்றது என்ற உண்மையையே,  தேனீக்களின் அழிவு எமக்கு துலக்கமாகவும் துல்லிமாகவும் எடுத்துக் காட்டுகின்றது.