Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரஜாவுரிமை மறுத்தல் அடிப்படை மனிதவுரிமை மீறலாகும்

மற்றொரு நாட்டின் பிரஜாவுரிமையைக் காரணம் காட்டி, இலங்கையில் பிறந்த ஒருவரின் பிரஜாவுரிமையை மறுக்கின்றதான மனிதவுரிமை மீறலில் அரசு ஈடுபடுகின்றது. பிறந்த மண்ணின் மீதான பிரஜாவுரிமையை மறுப்பது, அடிப்படை மனிதவுரிமை மீதான மீறலாகும். இதற்கு எதிரான போராட்டமே தோழர் குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதற்கு எதிரான போராட்டமாகும். இது புலம்பெயர்ந்ததனால் இலங்கை பிரஜாவுரிமை மறுக்கப்படும் அனைவருக்குமான போராட்டமும் கூட. இலங்கை அரசின் தொடர்ச்சியான பல்வேறு மனிதவுரிமை மீறல்களில் இதுவுமொன்று. 1948 இல் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்து, இலட்சக்கணக்கில் நாட்டை விட்டு துரத்திய வரலாற்றில் மற்றொரு அத்தியாயம். இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டம் காலத்துக்குக் காலம் திருத்தப்பட்ட போது, பிறந்த மண்ணின் மீதான பிறப்புரிமையை மறுப்பதாக நீடிக்கின்றது. சர்வதேச மனிதவுரிமை கொள்கைகளுக்கும், அதன் பொதுநடைமுறைக்கும் விரோதமானதே இலங்கையின் பிரஜாவுரிமைச் சட்டம்.

பிறந்த மண்ணின் மீதான உரிமையே, உலகில் பல நாடுகளின் பிரஜாவுரிமையாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றது. அதேபோல் சர்வதேச விமானப் பயணத்தின் போது பிறப்பவர்களுக்கு சர்வதேச பிரஜாவுரிமை என்று, உலகின் மனிதவுரிமைக் கோட்பாடுகள் இருக்கின்றது. இதற்கு முரணாக பிறப்புரிமையை மறுத்ததன் மூலம் இலட்சக்கணக்கில் மலையக மக்கள் பிரஜாவுரிமை இழந்தது போல், இன்று புலம்பெயர்ந்த மக்கள் பிரஜாவுரிமையை இழந்து நிற்கின்றனர்.

தோழர் குமாரை நாடுகடத்துவதற்கு எதிரான போராட்டம், அடிப்படையான பிறப்பு உரிமையைக் கோரி நிற்கின்றது. முக மாற்றம் மூலம் ஆட்சிக்கு வந்துள்ள அரசினை நோக்கி, சட்டரீதியாகவும், மக்களை அணிதிரட்டும் வீதிப் போராட்டங்கள் மூலமும் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.

பிறந்த மண்ணில் வாழ முடியாமல் நாட்டை விட்டு வெளியேறுவது ஏன்?

1. நாட்டின் ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளும், உயிர் வாழ முடியாத சட்டவிரோதமான ஜனநாயக விரோதமான அரசியல் சூழலே நாட்டை விட்டு தப்பிச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கின்றது

2. சொந்த மண்ணில் உழைத்து வாழ முடியாதளவுக்கு நவதாராள பொருளாதாரம் உழைப்பில் இருந்து அகற்றுகின்ற சூழலில், மக்கள் பிழைப்பு தேடி நாட்டை விட்டுச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கின்றது.

இந்த இரண்டு பிரதானமான காரணங்களுமே பிறந்த மண்ணில் இருந்து மனிதர்களை அகற்றுகின்றது. இலங்கையில் இருந்து அண்ணளவாக 40 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இலங்கைக்கு வெளியில் வாழ்கின்றனர். நாட்டை ஆளும் வர்க்கங்களும், அதைப் பாதுகாக்கின்ற அரசுகளும் மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படை மனிதவுரிமைகளை மறுக்கின்றதன் காரணமாகவே, மக்கள் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

பிறந்த மண்ணில் வாழும் உரிமையை மறுப்பது எது?

நாட்டை விட்டு வெளியேறிவர்களை, மீண்டும் பிறந்த மண்ணுக்கு திருப்பி வருவதை தடுப்பது நாட்டின் ஜனநாயக விரோத சூழலும், மக்கள் விரோத சட்டங்களுமே. சட்டங்கள் அடிப்படை மனிதவுரிமையை மறுதலிக்கின்ற அதேநேரம், அது ஜனநாயக விரோதமானதாகவும் இருக்கின்றது.

மனிதர்கள் வாழ்வதற்கான வாழ்வியல் போராட்டங்கள் மீது, அவர்கள் விரும்பாத தெரிவுகளை மக்கள் விரோத அமைப்புத் திணித்து விடுகின்றது. அதையே தமது சட்டங்களாக வரையறுத்து, சட்டத்தை புனிதமானதாகக் காட்டி விடுகின்றது. இந்த சட்டங்களை ஒழுகுவதற்கும், அதை மீறும் போது ஒடுக்குவதுமாக, சட்டங்கள் மாறிவிடுகின்றது. பிறந்த மண்ணின் மீதான உரிமையை மறுப்பது, அதற்கு சட்டங்களைக் கொண்டு தடுப்பதானது, அடிப்படை மனிதவுரிமை மீறலாக இருப்பதை சட்டத்தின் ஆட்சியாக முன்தள்ளுகின்றனர்.

இந்தச் சட்டங்களுக்கு அடிப்படையாக இருப்பது, மனிதனை மனிதன் ஒடுக்குவதாகும். சட்டங்கள் சாதி, பால், இனம், நிறம்..., சார்ந்ததாகவும், வர்க்கம் சார்ந்ததாகவும் இருக்கின்றது. சட்டம் மனிதனை முதன்மைப்படுத்துவதற்கு பதில், குறுகிய அடையாளத்தையும், செல்வத்தையும் அடிப்படையாகக கொண்டு மக்களை ஒடுக்குகின்றது.

மனிதனை வர்க்கரீதியாகப் பிரிக்கும் சட்டம், வர்க்க வேறுபாட்டை பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆட்சிக்கு ஆட்சி, நாட்டுக்கு நாடு தொடங்கி எங்கும் முரண்பட்ட சட்டங்கள் அனைத்தும் மனிதனை மனிதனாக வரையறுக்கும் பொது சட்டங்களானதல்ல. மாறாக மனிதனை மனிதன் மிதிக்கும் சட்டங்களாகும்.

இந்த வகையில் மனிதனை மனிதனாக மதிக்காத ஒழுக்கங்கள், அறங்கள் தொடங்கி நீதி வரை, அனைத்தும் மனித வாழ்வையும், மனித உரிமைகளையும் மறுக்கின்றதாக இருக்கும் அதேநேரம் அதுவே சட்டங்களாகவும் இருக்கின்றது.

குமாரின் நாடுகடத்தல் அடிப்படை மனிதவுரிமைக்கு எதிரானது

குமார் குணரத்தினம் நாடுகடத்தல் என்பது வெறும் குமார் சார்ந்த விவகாரமல்ல. இலங்கையில் பிறந்து, ஏதோ ஒரு காரணத்தினால் நாடு கடந்து வாழும் அனைவரதும் அடிப்படை உரிமை சார்ந்த விவகாரம். பிறந்த மண்ணின் மீதான உரிமையை மறுப்பது, அதை பிரஜாவுரிமை விவகாரமாக குறுக்குவது அடிப்படை மனிதவுரிமைக்கே எதிரானது.

ஒரு மண்ணில் பிறந்த ஒருவனுக்கு அந்த மண்ணில் வாழும் உரிமையை கேள்விக்கு உள்ளாக்கி, இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரமாக குறுக்க முடியாது. ஒரு மனிதன் தான் பிறந்த மண்ணின் மீதான பிரஜாவுரிமையை கொண்டிருப்பதை மறுக்கும் போது, அந்த நாட்டு அரசு சட்டவிரோமானதாகவும், ஜனநாயக விரோதமானதாகவும மாறி விடுகின்றது.

இரட்டைப் பிரஜாவுரிமை என்பது மோசடி

இலங்கையில் பிறந்த ஒருவரின் அடிப்படை பிரஜாவுரிமையை மறுத்தபடி, அதைப் பெறுவதற்கு இரட்டைப் பிரஜாவுரிமை சட்டம் என்பது மோசடி. இலங்கையில் பிறந்தவரிடம் இரட்டைப் பிரஜாவுரிமை மூலம் அதைக் கோரக்கோருவதும், அதைப் பணத்தைக் கொண்டு வரையறுப்பதும் அப்பட்டமான மனிதவுரிமை மீறலாகும்.

1. இலங்கையில் பிறந்த ஒருவரிடம், இரண்டாவது பிரஜைவுரிமையாக இலங்கை பிரஜாவுரிமையை முன்வைப்பது அப்பட்டமான மோசடியும், மனிதவுரிமை மீறலுமாகும்.

2. அரசு மறுக்கும் பிரஜாவுரிமையைப் பெற பெருந்தொகை பணத்தைக் கோருவதானது, வர்க்க ரீதியான சிலருக்கான பிரஜாவுரிமைச் சட்டமாகும்.

3. பணத்தைக் கொடுத்து பிரஜாவுரிமையை வாங்கும் போது, அதை விசாரணைக்கு உள்ளாக்குவது, ஜனநாயக விரோதத் தன்மையை முதன்மையாக்கி அதை அமுல் செய்வதாகும்.

இந்த வகையில் ஜனநாயக விரோதத் தன்மை கொண்டதும், அடிப்படை மனிதவுரிமை மீறலை அடிப்படையாகக் கொண்டதுமே, இரட்டைப் பிரஜாவுரிமைச் சட்டம்.

ஒரு குறித்த நாட்டில் பிறக்காதவருக்கு அந்த நாட்டில் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவது என்பது, உலகின் பொது நடைமுறை. அதை தலைகீழாக்கி இருக்கின்றது இலங்கை அரசு. இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்கே பிரஜாவுரிமையினை மறுக்கும் இலங்கை அரசிடம், அவர்களின் குழந்தைகளின் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்வது என்பது பாரிய மக்கள் போராட்டமின்றி சாத்தியமில்லை.

குறிப்பாக இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளையும் மற்றும் அவர்களின் குழந்தைகளையும் நாடற்றவராகி இருக்கின்றனர். மேற்குநாடுகளில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்தால் அந்த நாட்டின் பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ள முடியும். இந்த வகையில் பலர் அந்த நாட்டு பிரஜாவுரிமையை பெற்றனர். இந்த அடிப்படை மனிதவுரிமையானது, ஜனநாயகத்தின் செயல்பூர்வமான வெளிப்பாடாகும்.

இப்படி இருக்க இந்தியா சென்ற அகதிகள் நாடற்றவர்களாகவும், இலங்கைக்கு மீள திரும்ப முடியாதவர்களாகவும், அவர்கள் குழந்தைகளை அடிப்படைவுரிமைகள் அற்றவர்களாகவும் மாற்றி இருக்கின்றது.

இந்த வகையில் இலங்கையின் பிரஜாவுரிமைச் சட்டத்தை, குமாரை நாடுகடத்துவற்கு எதிரான போராட்டம் அரசியல் ரீதியாக முதன் முதலாக கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது.

போராட்டமும் அதன் வீச்சும்

தொடர்ச்சியாக இலங்கையின் பல பாகங்களிலும், பிரிட்டன் பிரான்ஸ், இத்தாலி நாடுகளிலுள்ள இலங்கை தூதராலயங்கள் முன்பாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே நேரம் சட்ட ரீதியான போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனநாயகத்தின் பெயரில் முகமாற்றம் நடந்த போதும் எந்த மாற்றமின்றியும், அதேநேரம் தனது சொந்த 100 நாள் திட்டத்தை நடைமுறையாக்குவதையும் கேள்விகுள்ளாகி வருகின்றது மைத்திரி அரசு. முகமாற்றத்துக்கு வாக்களித்த மக்கள், மீண்டுமொரு முறை ஏமாற்றப்பட்டு இருக்கின்றனர்.

தேர்தலும், தேர்தலுக்கு பின்னான புதிய ஆட்சியும், கடந்தகாலம் போல் மக்களுக்கு எதிரானதாக மாறிவிடுவதே எதார்த்தமாகி இருக்கின்றது. தேர்தலுக்கு முன்பாக இந்த உண்மையைச் சொன்ன இடதுசாரிய முன்னணி, தேர்தலுக்கு பின் முகமாற்றம் மூலம் முன்வைத்த ஜனநாயகக் கோரிக்கையை அமுல்படுத்தக் கோரி மாற்றத்தை விரும்பும் மக்களுடன் இணைந்து; போராட்டத்தை தொடங்கி இருக்கின்றது. அத்துடன் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றது.

இந்த வகையில் கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிராகவும், மருத்துவத்தை பன்நாட்டு மருந்து கொம்பனிகளிடம் தாரை வார்ப்பதற்கு எதிராகவும், மக்களை கண்காணிக்கும் புதிய அடையாள அட்டை முறைக்கு எதிராகவும், பிறந்த மண்ணில் வாழும் அடிப்படையான பிறப்புரிமை.... என பல்வேறு தளத்தில் போராட்டங்களை தொடங்கி இருக்கின்றது.

இந்த அடிப்படையில் குமாரை நாடுகடத்துவற்கு எதிரான போராட்டமும் அரசியல் ரீதியாக இதற்குள் அடங்கி விடுகின்றது. மனிதவுரிமைக்கானதும், ஜனநாயகத்துக்குமானதுமான மக்கள் போராட்டம் மூலம், மக்கள் தங்கள் உரிமைகளை வெல்ல முடியும் என்பது தேர்தலுக்கு பின்பான அரசியல் எதார்த்தமாகி இருக்கின்றது.