Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

எங்கள் பிரச்சினைகளைத் தேர்தல் பேசுகின்றதா?

தேர்தலையே அரசியலாகக் கொண்ட அரசியல் கட்சிகள், மற்றைய இன மக்களையே எமது பிரச்சனையாகக் காட்டுகின்றன. அதாவது எமது எதிரியாக காட்டுகின்றனர். இதன் மூலம் தமது இன - மத - சாதிய பிரதிநித்துவமான அரசியலை முன்வைக்கின்றனர். ஆனால் மக்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கையில், பிற இன மக்கள் எதிராக, எதிரியாகவோ இருப்பதில்லை.

இப்படி உண்மைகள் இருக்க, நாங்கள் வாழ்கின்ற எமது வாழ்க்கையைச் சுற்றி வாழ்க்கைப் பிரச்சனைகளை யாரும் பேசுவதில்லை. எமது வாழ்க்கையையும், எம்மைச் சுற்றிய வாழ்க்கைப் பிரச்சனைகளையும் பேசுவதே உண்மையான அரசியலாக இருக்க முடியும். அதை தீர்வு காணும் வழிமுறைகளே, அரசியல் இயக்கமாக இருக்க முடியும்.

அனைவருக்குமான அடிப்படை மனிதவுரிமைகள் கிடையாது, வாழ்க்கை உத்தரவாதம் கிடையாது. மனிதனை மனிதன் மதிக்காததும், அடிமையாக, ஏற்றத் தாழ்வான முறையில் நடத்துவதுமான வாழ்க்கை முறை தான் எங்கும் நடந்தேறுகின்றது. "ஐயா", "சேர்" போட்டும், கழுத்துபட்டியை அணிந்து தான், நம் உரிமைகளைக் கூட பெற வேண்டியளவுக்கு, அடிமையான வாழ்க்கை முறை அரங்கேறுகின்றது.

அதிகாரத்தனத்தைக் வெளிப்படுத்தும் கழுத்து பட்டியும் - சூட்டும் கோட்டும் - சப்பாத்துமாக... சமூகம் மேலும் கீழுமாக பிரிந்து கிடக்கின்றது.

கல்வி, மருத்துவம், குடியிருப்பு, உழைப்பு, போக்குவரத்து, குடிநீர்... என்று அனைத்தையும் சமூகத்துக்கு மறுப்பதும், அதை சிலர் அனுபவிப்பதாகவும், இவை விலைக்கு வாங்கும் சந்தைப் பொருளாகி இருக்கின்றது.

உதாரணமாக இலங்கையின் "ஆச்சரியமான அகன்ற வீதிகள்" யாருக்காக? அந்த வீதியில் நடக்க, நடைபாதை கிடையாது. வெயில் கொடூமையில் இருந்து பாதுக்காக, நிழல் கிடையாது. வீதியை அகட்ட இருந்த மரத்தையும் வெட்டி சாய்த்தவர்கள், அதை மீள நடுவது கிடையாது. வாகன தரிப்பிடம் கிடையாது. இளைப்பாற மரம் இல்லை, வெயில் கொடூமையைப் போக்க குடிக்கக் குடிநீர் கிடையாது. தண்ணிர் கூட கேட்டு குடிக்க முடியாத அளவுக்கு, ஒரு வாய் தண்ணிர் கூட 20 ரூபா. இப்படியிருக்க, அகன்ற வீதிகளை காட்டி நாட்டின் அபிவிருத்தி என்கிறார்கள்..

குளிரூட்டப்பட்ட வாகனத்தில் வந்து இறங்கி, கையில் போத்தல் தண்ணீரைக் குடித்த படி, அபிவிருத்திப் பற்றியும், இனபிரதிநித்துவம் பற்றியும் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்கின்றார்கள். பைரோ ஜீப்பில் கிராமங்களுக்கு சென்று தாங்கள் சைக்கிள் வழங்கியது பற்றி, தாங்கள் கொடுத்தவற்றைக் கூறி வாக்கு கேட்கின்றார்கள். அகன்ற வீதி முதல், சைக்கிள் வரையான, மக்கள் பணத்தில் கொடுத்ததையே மக்களின் பிரச்சனையாகவும் தீர்வாகவும் காட்டி இன-மத-சாதி ரீதியான வாக்குகளைக் கேட்கின்றனர்.

அரசாங்க மருத்துவமனைக்கு சென்றால் மருந்து கிடையாது. ஒவ்வொரு மருத்துவமனைக்கு முன்னாலும், தனியார் மருந்து விற்பனை நிலையங்கள். மக்கள் மருந்தை வாங்க பணத்துடன் தான், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இது அரசியல் பிரச்சனையே கிடையாதா? இலவச மருத்துவமனை என்பது, பெயரளவிலானதாக மாறி வருகின்றது. மருத்துவமனைக்கு மருந்தைக் கொடு என்று, அதைக் கொண்டு வருவேன் என்று கூறி எந்த அரசியல்வாதியும் மக்களிடம் வாக்கு கேட்பது கிடையாது. மருத்துவமனைக்கு சென்றால், நாள் கணக்கில் மக்கள் தூங்கி வழிய வேண்டும். மருத்துவமனைகள் நாயைப்போல் மக்களை கேவலப்படுத்தும் அளவுக்கு, மருத்துவமனை என்பது அதிகார நிறுவனங்களாக காட்சியளிக்கின்றது.

காவல்துறையை எடுங்கள், வாகன போக்குவரத்தைக் கண்காணிக்கும் பிரிவு என்பது, லஞ்சம் வாங்கும் துறையாக மாறி இருக்கின்றது. பொலிஸ் நிலையம் சென்றால், பல மணி நேரம் தூங்கி வழிய வேண்யடிளவுக்கு, மக்களை இழிவாக, அடிமைகளாக நடத்துகின்றளவுக்கு அதிகார துஸ்பிரயோகம். இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன? இதை அரசியலாக எடுத்து, எந்த அரசியல்வாதிகளாவது பேசுகின்றனரா?

தொழிலுக்கு சென்றால் நேர காலமின்றி வேலை வாங்குவதும், தொழிலுக்கு பதில் "ஐயா - சேர்" என்ற அடிமைகள் போல் தாளம் போட்டு வேலை செய்ய வேண்டிய நிலை. நியாயமான கூலி இன்றியும், அடிப்படை உரிமைகள் இன்றியும் வாழ்கின்ற நிலை. இதைப் பற்றி யார் அக்கறைப்படுகின்றர்கள். எந்த அரசியல், எந்த அரசியல்வாதிகள் பேசுகின்றனர்.

கல்வியை எடுத்தால் இலவசக் கல்வி என்பது தரமற்றதாக சீரழிந்து, அதை தனியார் கல்விக் கூடங்களாக மாற்றுகின்றது. கல்வி என்பது தனியாரிடம் பணம் கொடுத்த வாங்கும் கல்வி முறையாகி, சமூகத்தை காய்யடிகும் கல்வி கொள்கையை எந்த அரசியல் தடுத்து நிறுத்த முனைகின்றது?

இப்படி அனைத்துத்துறையும், சமூகத்தில் சாதி ரீதியான பாகுபாடும், மதரீதியான பிளவுகளும் முதன்மை பெற்று காணப்படுகின்றது. புலம்பெயர் பணத்தில் கொழுக்கும் மதச் செயற்பாடுகள் தொடங்கி யுத்தத்துக்கு பிந்தைய மீள் கட்டைமைப்பு வரை ஊழல்கள்... இப்படி சமூகத்தில் ஆயிரம் பிரச்சனைகள்.

இப்படி சமூகத்தின் வாழ்வு சார்ந்த பிரச்சனைகள் என்பது புரையோடிக் கிடக்கின்றது. இதை எந்த அரசியல்வாதியும் பேசுவது கிடையாது. இதை அரசியல் பிரச்சனையாகக் கூட கருதுவது கிடையாது. ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் இதைச் செய்தியாகக் கூட கொண்டு வருவது கிடையாது.

இவை இன்று அன்றாட சமூகத்தின் நடைமுறை பிரச்சனைகள் மட்டுமல்ல, இது தான் உண்மையான அரசியல் பிரச்சனைகளும் கூட. இதை கையில் எடுத்து போராடும் அரசியலையும், கட்சிகளையும் இனம் கண்டு அணிதிரள்வது இன்றைய தேவையாகும்.