Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

தேர்தல் சாதிக்கப்போவது என்ன?

தேர்தல் முறையானது மக்களை அடக்கியாளும் ஆளும் வர்க்கத்தை தெரிவு செய்கின்றது. இலங்கையில் மக்களை இன-மத-சாதி ரீதியாக பிரிக்கின்றது. மக்கள் விரோதமே தேர்தல் முறையாகவும், ஜனநாயகமாகவும் இருக்கின்றது. இதற்கு மாறாக மக்கள் திரள் போராட்டம் மூலம் அரசை தூக்கியெறியும் அரசியல் நடைமுறை மூலமே, உண்மையான மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

அதேநேரம் தேர்தல் என்பது கூர்மையான அரசியல் செயற்பாட்டுக்குரிய காலமாகவும், அரசியலை மக்கள் கூர்ந்து அவதானிக்கும் காலமாகவும், ஜனநாயகச் செயற்பாட்டுக்குரிய காலமாகவும் இருக்கின்றது. மக்கள் திரள் பாதை மூலம் மாற்றத்தைக் கொண்டு வர முனைகின்ற சக்திகள், தேர்தல் காலத்தை எப்படி எதிர்கொள்வது என்பது மிக முக்கியமானது.

நிலவும் மக்கள் விரோத தேர்தலையும், தேர்தல் முறையையும் பகிஸ்கரிப்பதா? அல்லது தேர்தலில் பங்கு கொண்டு இந்த முறையை அம்பலப்படுத்தி அரசியல் மயப்படுத்துவதா?

மக்கள் விரோத தேர்தலும், தேர்தல் முறையும், இலங்கைக்கு மட்டுமான சிறப்பான ஒன்றல்ல. மாறாக உலகளாவியது. இந்த முறையையே ஐனநாயகமாக நம்புகின்ற மக்களையும், மக்களின் செற்பாடுகளையும், வரட்டுத்தனமாக நிராகரிக்க முடியாது.

தேர்தல் ஜனநாயக வடிவிலான செயல் என்ற வகையில், அதில் பங்குகொள்வது அவசியமாகின்றது. ஜனநாயகமற்ற நிலப்பிரபுத்துவ நாடுகளில் தேர்தலை எதிர்கொள்ளாமல் பகிஸ்கரித்தலில் இருந்தும், இலங்கை பொருளாதார கட்டமைப்பு வேறுபட்டது.

இலங்கையில் தேர்தல் என்பது இன பிரதிநிதித்துவத்தைக் கோருவதாக இனவாதமாகி இருக்கின்றது. அதே நேரம் இனவாதமானது இயல்பில், வலதுசாரிய தன்மை பெற்ற ஒன்றாக மாறி இருக்கின்றது.

இனவாதத்துக்கு எதிரானதும், வலதுசாரிய போக்கிற்கு எதிரான மக்கள், தேர்தல் பகிஸ்கரிப்பதன் மூலம் அரசியல் அணிதிரள்வதற்கான முன்நகர்த்தும் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது. மாறாக இனவாதத்துக்கும், வலதுசாரியத்திற்கும் எதிரான இடதுசாரிய வாக்களிப்பு மூலமே, தங்கள் அரசியல் செயற்பாட்டை நடைமுறை பூர்வமானதாக மாற்ற முடியும். இனவாதத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் வடிவங்களில் ஒன்றாக தேர்தலில் பங்கு கொள்வதும், இனவாதத்துக்கு எதிராக வாக்களிப்பதும் முதன்மை பெற்ற இடதுசாரிய அரசியல் செற்பாடாக தேர்தல் காலம் அமைகின்றது. இடதுசாரிகள் இனவாதத்துக்கும், வலதுசாரியத்திற்கும் எதிராக மக்களை வாக்களிக்குமாறு கோரி, தங்கள் அரசியல் செயற்பாட்டை முன்னெடுப்பதே வரலாற்றின் ஒரேயொரு அரசியல் தெரிவாகும்.