Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மாட்டு இறைச்சித் தடையென்பது, நவதாராளவாதத் திட்டமாகும்

இந்தியாவில் மாட்டு இறைச்சிக்கு கொண்டு வந்திருக்கும் சட்டரீதியான தடையைப் போன்று, அண்மைக் காலமாக இலங்கையில் முன்மொழியப்பட்டு வருகின்றது. முகமாற்ற நல்லாட்சியின் ஜனாதிபதியாக மைத்திரி தெரிவான காலத்தில், மாட்டு இறைச்சியை தடை செய்வது பற்றிய கருத்துக்களை முன்வைத்திருந்தார். 

தொடர்ந்து பலராலும் மாட்டு இறைச்சி தடை கோரப்படுவது தொடருகின்றது. அண்மையில் இலங்கையில் உருவான சிவசேனா தொடங்கி வடமாகாண முதல் அமைச்சர் விக்கினேஸ்வரன் வரை, மாட்டு இறைச்சிக்கு எதிரான தொடர் பிரச்சாரத்தில் மாட்டு இறைச்சி உண்பது தீட்டாகவும், தீண்டாமையாகவும் கருதுமளவுக்கு, யாழ் இந்து வெள்ளாளிய சாதியம் மேலோங்கி இருக்கின்றது. இதே போன்று பௌத்த அடிப்படைவாதிகளும், மாட்டு இறைச்சிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

மதரீதியான புனிதம் - சாதியத் தீண்டாமையும் தீட்டும் - மிருகவதை என்று பல்வேறு முகமூடியை போட்டுக் கொண்ட போதும், மாட்டு இறைச்சி உண்ணத் தடைக்கான உண்மையான காரணம், நவதாராளவாத பொருளாதாரத் திட்டமாகும். 

 

மாட்டு இறைச்சி ஏன் தடை செய்யப்பட வேண்டும்? இவ்விடையத்தை சாதிய இந்துத்துவாவின் நிகழ்ச்சியாக புரிந்து கொள்வது தவறானது. மாறாக சாதிய இந்துத்துவா எப்படி நவதாராளவாதத்துடன் ஒன்று கலந்து இயங்குகின்றது என்பதை தெரிந்து கொள்வதன் மூலமே, இதை எதிர்த்துப் போராட முடியும். 

உலகமயமாக்கல் கோரும் நவதாராளவாதத்தின் விவசாயக் கொள்கைக்கும், கால்நடை வளர்ப்புக் கொள்கைக்கும் முரணாகவே, இந்தியா இலங்கை போன்ற நாடுகளின் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் காணப்படுகின்றது. சிறு நிலவுடமையை அடிப்படையாகக் கொண்ட கிராமிய விவசாயமும், கால்நடை வளர்ப்பும், இத்துறையில் நவதாராளவாத பன்னாட்டு மூதலீட்டுக்கு தடையாக இருக்கின்றது. சிறு உற்பத்தி முறைமையிலான, தனக்குள் இயங்கும் பெரிய சந்தை முறையை அழிக்க முடியவில்லை. 

அதாவது விவசாய, கால்நடை வளர்ப்பிலான சிறு உற்பத்தி முறைமையானது, உலகமயமாதல் சந்தைக்கு வெளியில் இயங்குகின்றது. இதை அழிக்கத்தான், அண்மையில் இந்திய பண நோட்டுகளை செல்லாது என்று கூறியதன் மூலம், தனிச் சுற்றில் இயங்கிய பணத்தை வங்கிமயமாக்கியதை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும். 

நவதாராளவாத விவசாயம் மற்றும் கால்நடை துறையிலான முதலீட்டுக்கு நிலத்தைக் கையகப்படுத்தும் கொள்கை தான், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் விவசாயம் பற்றிய கொள்கையாகும். இந்த அடிப்படையிலேயே விவசாயம் நலிவடைந்து அழிந்து போகுமாறு, அரசுகள் திட்டமிட்டு செயற்படுகின்றது. 

இந்த வகையில் விவசாயத்துக்கு கடனின்றியும், உற்பத்திக்கு உரிய விலையின்றியும், தேவைக்கு மிஞ்சிய உற்பத்தியை ஊக்குவித்து அதை அழிப்பது, விளைவைத் தராத விதைகளை வழங்கி அடிப்படை மூலதனத்தை அழிப்பது, நீர் கிடைக்காத சூழலை உருவாக்கி விவசாயத்தை கருக்குவது.. என்று பல நூறு வழிமுறைகளில், திட்டமிட்டு விவசாயத்தை அழிக்கின்ற, நவதாராளவாதக் கொள்கையே அரசின் கொள்கையாகும். 

திட்டமிட்டு விவசாயத்தை அழிக்கும் இந்தக் கொள்கை மூலம், சிறுவுடமை விவசாயிகளை நிலத்தை கைவிட்டுச் செல்ல வைப்பதில் வெற்றி பெறமுடியவில்லை. விவசாயிகள் தங்கள் விவசாயத்தை இழந்தாலும், நிலத்தை கைவிட்டு செல்லாத வண்ணம் மாடு (கால்நடை) வளர்ப்பு கைகொடுக்கின்றது. இதனால் தான், மாடு மீதான கவனம் திரும்பி இருக்கின்றது. 

மாட்டு உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கான தேவைகள் சமூகத்தில் நிலவுவதால், விவசாயிகள் தங்கள் நிலத்தில் தொடர்ந்து நிற்கவும் நீடிக்கவும் முடிகின்றது. நவதாராளவாதத்தை முன்னெடுக்கத் தடையாக இருக்கும் இந்த கால்நடை வளர்ப்பை, அழிக்க வேண்டும். இதுதான் மாட்டு இறைச்சி உணவுத் தடைக்கான அடிப்படைக் காணமாகும். 

மாட்டுப் பாலை குடிக்கக் கூடாது என்று சொல்ல முடியாது. சாணத்தை எரிபொருளாக பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல முடியாது. தோலால் ஆன செருப்பை அணியக் கூடாது என்று கூற முடியாது. மனிதப் பயன்பாடு சார்ந்து, எதையும் தடை செய்ய முடியாது. 

நவதாராளவாதம் என்ன செய்கின்றது? நிலப்பிரபுத்துவத்தின் சமூகக் கூறாக இருக்கக்கூடிய மதத்தையும், சாதியையும் பயன்படுத்துகின்றது. இந்துத்துவ சாதியவாதிகளின் நவதாராளவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப, நவதாராளவாதம் தகவமைத்துக் கொண்டு இயங்குகின்றது. 

இந்துத்துவம் முன்வைக்கும் புனிதம், சாதிய தீட்டு தீண்டாமை .. போன்ற ஒடுக்கும் சமூகக் கூறுகளைக் கொண்டு, விவசாயிகளை ஒடுக்கத் தொடங்கி இருக்கின்றது. முஸ்லிம்கள் தான் மாட்டு இறைச்சி உண்பவர்கள் என்ற புனைவை கட்டமைத்து, அதை ஆயுதமாக கையாளுகின்றனர். இதன் மூலம் விவசாயிகளின் கால்நடைகளை அழித்துவிட விரும்புகின்றது. நிலத்தில் விவசாயி தங்கி நிற்க, பொருளாதார தீதியாக ஏதுமில்லாத சூழலை உருவாக்க முனைகின்றனர். 

இதற்கு அமைவாக இறைச்சி உணவுத் தடை முதல் கெடுபிடியான கால்நடை பராமரிப்பு சட்டங்கள் கொண்டு வருவதன் மூலம், கால்நடை வளர்ப்பை நட்டமான நலிவடைந்த ஒன்றாக மாற்றி விட முனைகின்றனர். மாட்டு இறைச்சித் மாட்டு இறைச்சித் தடையென்பது, நவதாராளவாதத் திட்டமாகும் தடை என்ற இந்த நவதாராளவாதத் திட்டமானது, விவசாயத்துக்கு எதிரானதும், அவர்களின் நிலத்தை அபகரிக்கும் சதியாகும். 

இறைச்சியை இந்திய உணவில் அகற்றுவதன் மூலம், இறைச்சி உணவை இந்திய உணவுப் பழக்க வழக்கத்தில் இருந்து ஒழித்துக் கட்டுவதன் மூலம், உலக கந்து வட்டிக்கார நிதிமூலதனத்தின் வட்டிக்கான ஏற்றுமதித் துறையாக மாற்ற முனைகின்றது. கடன் கொடுப்பதும், அதற்கு வட்டி அறவிடுவதும் என்பது, சர்வதேச நிதிக் கொள்கையாகும். வட்டி கொடுக்கும் வண்ணம் வரவு செலவுத் திட்டங்கள், பொருளாதார மற்றும் ஏற்றுமதிக் கொள்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றது. 

இறைச்சி உணவை இந்தியாவில் தடைசெய்வதன் மூலம், அதை வட்டிக்காக பாரிய அளவில் ஏற்றுமதி செய்ய முடியும். இன்று உலகளவில் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவை, முதலாவது இடத்துக்கு இட்டுச் செல்லும் கூட்டுத் திட்டத்தை உள்ளடக்கியதாக, இந்த இறைச்சித் தடை முன்னெடுக்கப்படுகின்றது. 

மேற்கின் இயற்கை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யத் தடை 

உலகச் சந்தையின் இயற்கை உணவின் தேவை அதிகரித்து வருகின்ற பின்னணியில், இயற்கை உணவை உற்பத்தி செய்யும் மூன்றாம் உலக நாடுகளிடம், உணவை ஏற்றுமதி செய்யுமாறு உலகச் சந்தை கோருகின்றது. இந்தியாவில் மாடு வளர்ப்புமுறை இயற்கையிலானது. இந்த இறைச்சியை மேற்கின் சந்தை தனக்கானதாக உரிமை கோருகின்றது. இந்த நவதாராளவாத உலகச் சந்தை அடிப்படையிலும், இறைச்சி உணவுத் தடை முன்வைக்கப்படுகின்றது. அதேநேரம் எதிர்கால சந்தை கோரும் இயற்கை இறைச்சிக்கு, பரந்த நிலத்தையும் சந்தை கோருகின்றது. இதற்காக நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை உள்ளடக்கியதே இந்தத் தடை.