Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மனித உழைப்புக்கு என்ன நடக்கின்றது என்ற அறிவே மார்க்சியத்தின் சாரம் (மார்க்சியம் 08)

உழைப்புக்கு என்ன நடக்கின்றது என்று தெரியாது மனிதன் வாழ்கின்ற போது, தனிவுடமை வீரியம் பெற்று மனித இனத்தை நுட்பமாக அடிமை கொள்வதே நவீன சமூகமாகின்றது. மனிதன் இந்த சமூக அமைப்பில் தன்னிலை அறியாது வாழ்தல் முறையே, தனிவுடமை அமைப்பின் சாரமாகும்.

மனித அறியாமை எந்தளவுக்கு வீரியமாகின்றதோ, அது தனியுடமையின் ஆற்றலாக மாறுகின்றது. தன் உழைப்பை நுகராது உழைப்பில் இருந்து அன்னியமாகிவிடும் மனிதன், இது ஏன் எப்படி நடக்கின்றது என்ற அறிவை இதன்பால் கொண்டு இருப்பதில்லை. மனித உழைப்புக்கு என்ன நடக்கின்றது என்ற அடிப்படை அறிவை தருவது தான் மார்க்சிய தத்துவம்;. வேறு எந்த தத்துவமும் இதைச் செய்வதில்லை.

அனைவரும் தத்தம் உழைப்பைக் கொண்டு வாழ்கின்ற அமைப்பாக மனித சமூகம் நீடித்து இருந்திருந்தால், மார்க்சியம் தோன்றி இருக்காது. தன் உழைப்பைக் கொண்டு வாழும் சமூகம் என்பது, உழைப்பைப் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தும் அவசியத்தை உருவாக்கி இருக்காது. மாறாக உழைப்பே மனிதனாக இருப்பதற்கான உயரிய செயலாக, சமூக நடத்தையாக, மனிதனின் இயல்பாக இருந்திருக்கும். இதற்கு மாறானதே இன்றைய சமூக அமைப்பு. இதன் அர்த்தம் அனைவரும் உழைத்து வாழக் கூடிய பொதுவுடமை சமூகத்துக்கு மார்க்சியம் ஒளியூட்டுகின்றது. உழைப்புச் சாதனங்கள் அனைவருக்கும் பொதுவானதாகவும், உழைக்கும் அனைவரும் சுதந்திரமாக உழைப்பில் ஈடுபட கூடியதாக இருக்குமானால், யாரும் யாரையும் சுரண்ட முடியாது. யாரும் யாரையும் அடிமைப்படுத்தவும் முடியாது. இதன் அர்த்தம் தனிவுடமைக்கு இடமில்லை. இதனால் தனியுடமைக்கேயுரிய சமூக அமைப்பின் முரண்பாடுகளும், யுத்தங்களும் தோன்றுவதற்கு கூட இடமில்லாமல் போய்விடும்.

இந்த அடிப்படை உண்மை உழைப்பவனிடம் இருந்து பறித்த உழைப்பின் சாதனங்களை மீள பொதுவுடமையாக்கக் கோருகின்றது. இதன் மூலம் அனைவரையும் உழைத்து வாழுமாறு வேண்டுகின்றது. மார்க்சிய அறிவியல் என்பது இதன் பாலானது.

மனிதன் தோன்றியது முதல் இன்றைய வாழ்வியல் எதார்த்தம் வரை, உழைப்பு சார்ந்த மிக சிக்கலான வாழ்வின் முழுத் தோற்றத்தையும், ஒருங்கிணைந்த வகையில் முரணற்ற வகையில் ஆராய்கின்றது மார்க்சியம். இதைப் பற்றிய தெளிவும், அதன் பாலான செயற்பாடும் மார்க்சிய அறிவாகவும், மனித சாரமாகவும் இருக்கின்றது.

இந்த அறிவியல் உள்ளடக்கத்தை விரித்துப் பரப்பினால் மனித உழைப்பு பற்றியும், உழைப்பிலான பயனை நுகருகின்ற முறை பற்றியும், நுகர்வால் உருவாகும் சமூக அமைப்பு பற்றியுமான ஒருங்கிணைந்த முழு அறிவே மார்க்சிய அறிவாகின்றது. மனிதனின் வாழ்வைப் பற்றிய அறிவு தான், மார்க்சிய அறிவாகின்றது. எது மனிதனின் உண்மையான வாழ்வோ, அதை முரணற்ற வகையில் விளக்குவது தான் மார்க்சியம்;. மற்றைய எந்த அறிவும் குரங்கில் இருந்து மனிதனை உருவாக்கிய உழைப்பில் இருந்து, உழைப்பை அதற்குரிய உண்மையான இடத்தில் நிறுத்தி பிறப்பதில்லை. மாறாக உழைப்பை இடமாற்றி, அதை நுகர்கின்ற முறையை முன்னிறுத்தியே பிறக்கின்றது.

உழைப்பு என்னும் மனிதச் செயற்பாடு தான் மனிதனை உருவாக்கியது. உழைப்புக்கு வெளியிலான வாழ்வு என்பது, இயற்கை மீதான மிருகத் தன்மையைக் குறிக்கும்;. உற்பத்தி செய்யும் திறன் தான் மனித குணம். ஆனால் இன்று அவனுக்கு சொந்தமில்லை. அவன் அதை மிருகங்களிடம் பகிர்ந்து கொள்கின்றான். மிருகத்துக்கு என்றுள்ளது மனிதனைச் சார்கின்றது. இது இந்த தனிவுடமை சமூக அமைப்பின் ஆன்மாவாக இருக்கின்றது.

"மானிடக் குரங்கிலிருந்து மனிதனாக மாறும் இடைக் காலத்தில் உழைப்பின் பங்கு" பற்றி ஏங்கெல்ஸ் கூறும் போது" விலங்கு இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி, தன்னுடைய இருப்பின் மூலமாக அதில் சில மாற்றங்களைக் கொண்டுவருகின்றது. மனிதன் தன் நடவடிக்கையின் மூலமாக இயற்கையைத் தனது விருப்பத்திற்கு ஏற்றாற் போன்று சேவை புரிய வைத்து, அதனுடைய எஜமானன் ஆகிறான்" என்றார். மனிதனை மிருகத்தில் இருந்து பிரித்த செயல் உழைப்பு. ஆனால் உழைப்பு இன்று அவனுக்கு சொந்தமில்லை. மிருகத்துக்குரிய நிலைக்கு உழைக்கும் மனிதன் தாழ்த்தப்பட்டு, உழைப்பு மிருகத்துக்குரிய தன்மையுடன் அபகரிக்கப்படுகின்றது. வேட்டையாடும் உணவை பறிக்கும் மிருகத்தின் நிலையில் தனியுடமை அமைப்பு இயங்குகின்றது.

மிருகத்தில் இருந்து மனிதனின் உழைப்புத் தான் மனிதனை பிரித்தது. உழைப்பில் இருந்து விலகிய மனிதனின் தன்மை, மிருகத்தனத்துக்குரியதாகின்றது. இப்படி மனிதத் தன்மையை அழித்த சமூக அமைப்புத் தான் இன்று வாழும் சமூக அமைப்பு. மனிதனின் சமூகத் தன்மையையொட்டி "பொருளாதாரம் - தத்துவம் குறிப்புரைகளில்" மார்க்ஸ் கூறகின்றார் "விலங்கு தன் வாழ்வுச் செயற்பாடுகளை உடனடியாக தன்னோடு சேர்த்து எண்ணிக் கொள்கின்றது, அதனின்று தன்னைப் பிரித்துக்கொள்வது கிடையாது. மனிதன் தன் வாழ்வுச் செயற்பாடுகளை தன் விருப்பம், உணர்வு ஆகியவை வினைபுரியும் பொருளாக ஆக்கிக் கொள்கின்றான்! அவன் உணர்வு பூர்வமான வாழ்வுச் செயற்பாடுகள் கொண்டுள்ளான்" என்றார். "கூலி உழைப்பும் மூலதன"த்தில் இது பற்றி "உற்பத்தியில், மனிதர்கள் இயற்கையின் மீது மட்டும் வினையாற்றுவதில்லை, தங்களுக்கிடையிலும் வினை புரிந்து கொள்கின்றார்கள்" என்றார்.

உயரிய சமூக கூட்டுச் செயல் மனிதனை உருவாக்கிய இடத்தில் இருந்து தனி மனித செயலாக்கிய போது மனிதனுக்கு எதிரான தனியுடமையானது. தனியுடமை என்பது மனிதனுக்கு மனிதன் எதிரான சாரத்தைக் கொண்டது.

மனித உழைப்பு, உழைப்புக்கு இடையில் உள்ள சமூகத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட மனித சாரத்தை மறுக்கின்ற இன்றைய தனியுடமை சமூக அமைப்பு, மனிதனின் வாழ்வதற்கான உரிமைகளையே இல்லாதாக்கி மறுக்கின்றது. மனிதன் உழைத்து வாழ்வதற்கு ஏற்ற இயற்கையை மறுத்து, அதை தனியுடமையாக்கி இருக்கின்றது. இயற்கை தனியுடமையாவதால் மனிதன் மட்டுமல்ல, இயற்கையின் பிற உயிர்கள் கூட வாழமுடியாது அழிகின்றது. இயற்கையை தனியுடமையாக்குதல் மூலம், உழைப்பில் இருந்து அன்னியமாகின்றான்;. மனிதனும் பிற உயிர் இனங்களும், இயற்கை இன்மையால் உயிர் வாழ முடியாது என்ற எதார்த்தம் உருவாகின்றது. மனிதன் உழைத்து வாழவும், உயிரினங்கள் பூமியில் வாழவேண்டுமென்றால், இயற்கை பொதுவுடமையாவது மட்டும் தான் வாழ்வதற்கான இடத்தை வழங்குகின்றது. இந்த உண்மையே மார்க்சியத்தின் சாரமாக, இதை அறிவுபூர்வமாக விளக்கி மனித செயல் மூலம் மாற்றக் கோருகின்றது.

இயற்கை என்னும் பொதுவுடமை மீதான உழைப்பைச் சுரண்டியதன் மூலம், இயற்கை தனியுடமையாக்கப்பட்டது. இந்த உண்மையை காணமுடியாத தனியுடமை பற்றிய பிரமை மற்றும் அச்சத்தை மார்க்சியம் போட்டு உடைத்தது. கடவுள் சொத்துடமையைக் கொடுத்தான் என்ற பொய்யையும், உழைத்துக் கிடைத்ததே சொத்து என்ற புரட்டையும் மார்க்சியம் தகர்த்து இருக்கின்றது. உழைப்பை சுரண்டியும் களவாடியும் சேர்த்ததே சொத்து தான், இன்றைய பாரிய சொத்துடமை என்பதை மார்க்சிய அறிவு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

மனிதனை உருவாக்கியது தனியுடமையல்ல, உழைப்புத்தான் என்ற உண்மையை பிரகடனம் செய்தது. மனிதனுக்குரிய சமூக உணர்வாக்கத்தை உழைப்பு தான் வழங்குகின்றது என்ற எதார்த்தத்தை எடுத்துக் காட்டியது. மனிதாபிமானம், இரக்கம், அன்பு என எதுவாக இருந்தாலும், தனியுடமை அமைப்பின் பொது வெளிப்பாடே ஒழிய, உழைப்புச் சார்ந்த சமூக உருவாக்கத்தின் வெளிபாடல்ல என்பதை உழைப்பு பற்றிய அடிப்படை உண்மை எடுத்துக் காட்டுகின்றது.

மனிதன் உழைப்பு சார்ந்த சமூக உணர்வாக்கத்தை மாற்றி வந்த தீர்மானகரமான அனைத்து மாற்றங்களிலும், உழைப்பில் இருந்து அன்னியமாதலே அடிப்படையாக இருக்கின்றது. இயற்கை தனியுடமையாதல் மூலம் உழைப்பில் இருந்து அன்னியமாதல் மனிதனின் வாழ்வாகி வந்திருக்கின்றது. சமூகத்துக்கான பொது உழைப்பில் இருந்து அன்னியமாதல், சமூக உணர்வாக்கம் கொண்ட மனிதத் தன்மையை அகற்றி வந்துள்ளது. உழைப்பே மனிதனுக்குரிய சமூக தன்மையின் மிகத் தீர்மானகரமான அடிப்படையாக இருந்த இடத்திலிருந்து, பொது உழைப்பும், தனிமனித உழைப்பும் மனிதனுக்கு அன்னியமாகி இருக்கின்றது. உழைப்பு என்னும் மனிதனுக்கே உரிய உயரிய உயிரியலின் செயற்பாட்டுத் தன்மையில் இருந்து விலகி, மற்றவன் உழைப்பை நுகர்வது என்னும் செயற்பாடு மனிதத் தன்மையின் உயரிய சமூகத் தன்மையை அழித்தது. உழையாது மற்றவன் உழைப்பை நுகர்ந்து வாழும் மிருகத் தன்மையும், அதை அடையும் வழிமுறைகளும் மனிதனுக்கு எதிரான பொது செயற்பாடாகியது. இதுவே சட்டம், நீதி, பண்பாடு.., என அனைத்துமானது. இதன் விரிவான பொதுமைப்படுத்திய செயற்பாடுகள் தான், வர்க்க முரண்பாடுகளினதும், சமூக முரண்பாடுகளினதும் அடிப்படையாக இருக்கின்றது. மனித உழைப்பு உழைப்பவனுக்கு சொந்தமில்லை என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதே, இந்த தனியுடமைச் சமூகக் கட்டமைப்பு. இதற்கு மாறாக உழைப்பு உழைப்பவனுக்கே சொந்தமானது என்ற அடிப்படையில் இருந்து, மார்க்சியம் பிறக்கின்றது. உழைப்பு யாருக்கு சொந்தம் என்பதே, அடிப்படையான கேள்வியாகின்றது.

இன்று உழைப்பு உழைப்பவனுக்கு சொந்தமாக இருப்பதில்லை. உழைப்பை உழைப்பவன் இழப்பதால், இரு வேறுபட்ட சமூக அன்னியமாதல் உருவாகின்றது. உழைப்பு மனிதனை உருவாக்கிய மனிதனின் வரலாற்றில், உழைப்பை இழப்பதும் உழைப்பை அபகரிப்பதும் என இருவேறு செயற்பாடுகள் நடக்கின்றது. இதனால் மனிதத் தன்மையில் இருந்து, மனிதன் அன்னியமாகின்றான். ஆக உழைப்பு மீது இரு நேர் எதிரான செயல்முறை, உழைப்பில் இருந்து உருவான மனிதசாரத்தையே இன்று இல்லாதாக்கியுள்ளது. இதுவே தனியுடமை சமூகத்தின் சாரமாகின்றது. இப்படி மனித உழைப்பை உழைப்பவனிடம் பிடுங்கி, அன்னியமாக்கிய அமைப்பு முறைதான், இந்த தனியுடமைச் சமூக முறைமை.

மனிதனை உருவாக்கிய உழைப்பில் தொடர்ந்து ஈடுபடுபவன் கூட, உழைப்பை இழக்கின்றான். இதனால் மனிதனுக்குரிய சமூக சாரத்தை இழப்பதன் மூலம், அவனும் அன்னியமாக்கப்படுகின்றான். உழைப்பில் இருந்து அன்னியமான சூழலில், மனித சாரம் திரிக்கப்பட்டு விடுகின்றது. உழைப்பவனின் உழைப்பை பிடுங்கும் இந்த அமைப்புக்கு ஏற்றனவே, மனித அறங்களாக்கப்படுகின்றது. இன்றைய மனித அறங்கள் அனைத்தும், இந்த உழைப்பை பிடுங்கி வாழும் சமூக அமைப்புக்கு உட்பட்டவை. உழைப்பவனுக்கே உழைப்பு சொந்தமான அமைப்பில், இன்றைய மனித அறங்கள் தானாகவே அர்த்தமற்றுப் போய்விடும்.

இன்று உழைப்பில் ஈடுபடுபவன் தன் உழைப்பை நுகர முடியாத வண்ணமும், உழைப்பில் ஈடுபடாதவன் உழைப்பை நுகரும் வண்ணமும், இந்தத் தனியுடமைச் சமூக அமைப்பு உள்ளது. உழைப்பு உழைப்பின் தேவையில் இருந்து அன்னியமாகி இருக்கின்றது. இதன் பொது வெளிப்பாடே தனியுடமையின் சாரமாகி இருக்கின்றது. இதைப் பேணுகின்ற வடிவம் தான் ஜனநாயகம், சுதந்திரம் என்று அனைத்தும். இந்தச் சமூக அமைப்பில் உழைப்பை சுரண்டி நுகரும் முறையையே, சுரண்டல் என்று கூறுகின்றோம்;. அதாவது உழைப்பவன் தன் உழைப்பின் பயனை அடைய முடியாத வண்ணம், உழைப்பு சுரண்டப்படுகின்றது.

உழைப்பவன் தன் உழைபபை, தனது நுகர்வாக கொள்ள முடியாத வண்ணம் தனியுடமை காணப்படுகின்றது. அதாவது இயற்கையிலான உழைப்புச் சாதனங்களை உழைப்பவனுக்கு இல்லாதாக்குவதன் மூலம், உழைப்பின் மீதான நுகர்வை உழைப்பவனுக்கு மறுத்துவிடுகின்ற சமூக அமைப்பாக இருக்கின்றது. நிலம், நீர் தொடங்கி இயற்கையின் மூலங்கள் அனைத்தையும் தனிச் சொத்துடமையாக்கி வருகின்றது. இதன் மேல் உழைப்பை செலுத்த முடியாத வண்ணம், உழைப்பவனுக்கு உழைப்பின் சாதனைகளை மறுப்பதன் மூலம், உழைப்பை கட்டாயமாக விற்குமாறு மனிதனை நிர்பந்திக்கின்றது. உழைத்து வாழ இயற்கை இல்லாததால், உயிர் வாழ்வதற்காக உழைப்பை விற்க வேண்டிய நிலைக்கு மனித இனம் தாழ்த்தப்பட்டு இருக்கின்றது.

இயற்கையை தனிச் சொத்தாக்குகின்றதும், அதை தனித் சொத்துடமையாக்கி குவிக்கின்ற செயற்பாடுகளின் ஏற்பட்ட பாய்ச்சல்களே, வௌ;வேறு சமூக அமைப்பு முறைகளாகியது. தொடரும் தனிச் சொத்துடமையாக்கமும், சொத்துடமைக் குவிப்பின் பொதுச் சாரமும், உழைப்புச் சாதனங்களை உழைக்கும் மனிதனுக்கு கிடைக்காத வண்ணம் செய்கின்றது. இதன் மூலம் மனித உழைப்பும் விற்பனைப் பொருளாகி, தனியுடமையாக்கிவிடுகின்றது. பாலியல் ரீதியாக உடலை விற்பது போல், உழைப்பை விற்குமாறு மனித இனத்தை தனியுடமை கோருகின்றது. இதன் மூலம் மனிதன் தன் தேவைக்காக உழைப்பில் ஈடுபடுவதை அன்னியமாக்கி, உழைப்பை தனியுடமையாக்கிவிடுகின்றனர். உழைப்பு உழைப்பவனுக்கு சொந்தமல்ல, மாறாக இயற்கை சார்ந்த உழைப்பு சாதனங்களை கொண்டுள்ளவனுக்கு உழைப்பு சொந்தமாகி விடுகின்றது. அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, நவீன சாதனங்கள் ... என மனித வாழ்க்கையைச் சுற்றிய எந்த முகமூடிக்கும் பின்னும் நடந்தேறுவது, உழைப்பதற்கான இயற்கை சாதனங்களை உழைப்பவனிடம் இருந்து தனியுடமையாக்குவது தான். தொடர்ந்து தனித் சொத்துடமையாக்குகின்ற செயற்பாடுகள் மூலம், உழைப்பில் இருந்து மனிதனை அன்னியமாக்கி அவனது உழைப்பை வாங்குவது தான் தனிவுடமை அமைப்பு முறையின் சாரம். மனித உழைப்பை உறிஞ்சிக் கொழுப்பதன் மூலம், உழைப்பின் சாதனங்களை உழைப்பவனுக்கு கிடைக்காத வண்ணம், உழைப்பில் இருந்து மனிதனை அன்னியமாக்குவது தான் தனிவுடமை அமைப்பு முறை.

உழைப்பில் ஈடுபடும் மனிதனில் இருந்து உழைப்பு பிரிக்கப்பட, மனித உடல் கழிவுகளாக்கப்படுகின்றது. கழிவாகும் தன் உடல் மீதான உரிமையைக் கொண்டு வாழ்தலே, தனியுடமைச் சமூக அமைப்பு முறைமையின் உள்ளடக்கமாகும். பாலியல் ரீதியாக உடலை விற்;கும் போது எப்படி உடலை பிறர் நுகருகின்றனரோ, அப்படித்தான் உழைப்பை விற்பவன் தன் உழைப்பை நுகர்வதில்லை. இங்கு இரு செயற்பாட்டிலும் விருப்பார்ந்த தன் சுய செயற்பாடாகவோ, தன் நுகர்வாகவோ இருப்பதில்லை. சந்தைப் பொருளாக, உயிர் வாழ்வதற்கான நிர்ப்பந்தமே இந்தச் செயலைத் தூண்டுகின்றது.

மறுதலையாக உழைப்புச் சாதனம் உழைத்து வாழும் மக்களுக்கு கிடைத்தால் என்ன நடக்கும். உழைப்பை யாரும் சுரண்ட முடியாது. ஆக இங்கு தனியுடமைக்கு இடமில்லை. அதாவது உழைப்புச் சாதனங்கள் பொதுவாக இருக்கும் போது, எவரும் உழைப்பைச் சுரண்ட முடியாது. அனைவரும் உழைத்து வாழவேண்டும்;. இதற்கு மாறாக உழைப்பு சாதனங்களை வைத்திருப்பவனிடம் உழைப்பை விற்கவேண்டிய நிர்ப்பந்தம் என்பது தனியுடமையின் விளைவாகும். இதுவே மனிதனை மனிதனின் எதிரியாக மாற்றியிருக்கின்றது.

ஆக தனியுடமை அமைப்பில் உழைப்பைச் சுரண்டும் செயற்பாடு தான், மனிதனை மனிதனின் எதிரியாக்குகின்றது. இதனால் உழைப்பு சார்ந்த மனிதனின் சமூக உணர்வு, உழைப்பை சுரண்டி வாழும் மனிதனிடம் இருப்பதில்லை. இருவேறு சமூக உணர்வு உருவாகின்றது. உழைப்பில் இருந்து உருவான மனிதனின் சமூக உணர்வாக்கத்தை பயன்படுத்திச் சுரண்டும் அதேநேரம், உழைப்பு உருவாக்கும் உணர்வை இல்லாதாக்கி விடுகின்றது. இதனால் வர்க்கம் சார்ந்த, வர்க்க உணர்வாக்கமாக இடமாறுகின்றது. அதாவது உழைக்கும் வர்க்கம், உழைப்பை சுரண்டும் வர்க்கம் என மனித குலம் இரண்டாகப் பிரிகின்றது. உழைப்பு சார்ந்த மனித உணர்வாக்கத்தை உழைப்பிலிருந்து மனிதனை பிரித்ததன் மூலம் அன்னியமாக்கிவிட, அது வர்க்க உணர்வாக மாறிவிடுகின்றது.

உழைப்பு செயற்பாடு சார்ந்த இருவேறு செயற்பாடுகளில், மனிதகுலம் முழுவதும் பிரிந்து காணப்படுகின்றது. இதை உணருதல் உணராமையில் இருந்து இதை விளங்கிக் கொள்வதற்கு அப்பால், வாழ்க்கை நடத்தும் முறைமை எங்கும் இதுவாகவே காணப்படுகின்றது. இதை தவிர்த்து யாரும் இந்த தனியுடமை சமூக அமைப்பில் வாழ முடியாது. அப்படி இருப்பதாக நம்புவது தனியுடமை சார்ந்த அறியாமையே. இதற்கு அறிவு ரீதியாக ஒளி ஊட்டுவது பொதுவுடமை சார்ந்த மார்க்சியம்.

தொடரும்

மாற்றத்துக்கு வழி திறக்கிறது - மாக்சியம் 01

இயற்கை பற்றிய மனித அறிவு, சமூகம் பற்றிய அறிவாகியது எப்படி? - மாக்சியம் 02

வாழ்வதற்க்காக உண்மையைத் தேடும் மனிதன்- மாக்சியம்-03

மார்க்சியம் சமூக விஞ்ஞானமானது எதனால்? - மார்க்சியம் - 04

விஞ்ஞானம் என்றால் என்ன?, எங்கிருந்து தோன்றுகிறது?: மார்க்சிய கல்வி -05

அறிவு என்பது என்ன? -மார்க்சிய கல்வி -06

மனித உழைப்புத்தான் அறிவின் சாரம்: மார்க்சிய கல்வி -07