Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

ரத்துபஸ்வல - துன்னான - சுன்னாகம்

சுன்னாகம் என்றாலே நினைவுக்கு வருவது அதன் சுத்தமான உவர்ப்பு இன்றிய சுவையான நன்னீராகும். இந்த நன்னீரை வரட்சிக்காலத்தில் குடிநீர் விநியோகத்துக்காக ஏனைய பிரதேசங்களுக்கு நீர்த்தாங்கி வாகனங்கள் சுன்னாகக் கிணறுகளிலிருந்து நிரப்பி எடுத்துச் செல்வது வழமை.

அப்படியான நன்னீர் வளத்தைக் கொண்ட சுன்னாகம் மற்றும் அதனையண்டிய பிரதேசங்களானகிழக்கே கோப்பாய் வரையிலும் வடக்கே தெல்லிப்பளை பகுதி வரையிலானபெரும் நிலப்பரப்பின் நிலத்தடி நீர் படிப்படியாக நஞ்சாகி வருகிறது.

கடந்த 13.12.2014ஆம் திகதி தெல்லிப்பளை கிழக்கு சிற்றியம்புளியடி பகுதியில் 15 கிணறுகளில் எண்ணை கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தற்போது தங்கள் கிணறுகளில் சுரக்கும் நீரினை குடிக்கவோ குளிக்கவோ மற்றும் வேறு எந்தப் பாவனைக்கும் பயன்படுத்த முடியாது பாரியநீர் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.

விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்ட யாழப்பாணத்தில் இயற்கையைப் பற்றி சூழலைப் பற்றி அங்குவாழும் வாழும் மனிதர்களைப் பற்றி எள்ளளவும் அக்கறை கொள்ளாமல் மின் உற்பத்தி எரிபொருள் கழிவுகளை அப்புறப்படுத்த பாதுகாப்பான வழிமுறைகள் பல இருக்கின்றபோதும் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக் கொண்ட 'நோதன் பவர்ஸ்" முதலீட்டாளர்களால் ஆகக்குறைந்த செலவில் மேற்கொள்ளப்படும் கழிவு எண்ணெய் அகற்றல் முறைமையே இதற்குக் காரணமாகும்.

இந்தக் கழிவு எண்ணெயானது நிலத்தடி நீரோட்டத்துடன் கலந்து அதன் ஊடாக சுன்னாகம், கோப்பாய், தெல்லிப்பழை மற்றும் இவற்றையண்டிய பிரதேசமெங்கும் பரவி கிணறுகள் அனைத்தும் கழிவு எண்ணெய் கலந்த நச்சு நீராக மாறியதால் மாசடைந்து பாவனைக்கு உதவாததாகி விட்டது.

இந்நீரினை பாவிக்கக் கூடாது என சுகாதார இலாகாவினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தடை செய்யப்பட்டிருக்கின்றது. நன்னீர் வளம் கொண்டிருந்த சுன்னாகப் பிரதேச மக்களின் பாவனைக்கு வெளியிடங்களிலிருந்து நீர்த்தாங்கிகள் மூலம் நீர்வழங்கல் செய்ய வேண்டிய பரிதாபத்துக்கு உரியதாக நிலைமை இன்று மாறிவிட்டது.

"நீரின்றி அமையா யாக்கைகெல்லாம்" என பண்டைத் தமிழ் புறநானூறு, உயிர்களின் அனைத்தினதும் ஜீவாதாரம் நீர் என்று பாடி வைத்திருப்பதை நாம் அறிவோம். அந்த நீரேயின்றிய ஜீவாதாரப் பிரச்சனையால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு அல்லல்படுவார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் இந்த ஜீவாதாரப் பிரச்சனைக்கு உரிய வழியில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கழிவு எண்ணெய் கசிவுக்கு காரணமாக அனல் மின்னுற்பத்திக்கு பொறுப்பான தனியார் நிறுவனம் இதைப் பற்றி அலட்சியப்படுத்தியே நடந்து வருகிறது. மக்களின் குடிநீருக்குள் "விசத்தைக்" கலக்கும் பொறுப்புக்கு அவர்களே காரணமானவர்கள்.

இது தமிழ்மக்களுக்கு மட்டுமான தனியான பிரச்சனையாக மட்டும் காட்டுவது இதன் ஊற்றுவாயான நவதாராளமய அரசியல் பொருளாதார முறைமையினை (அந்தியப் பெருமூலதனங்களின் பொருளாதாரச் சுரண்டல்) காப்பாற்றும் நடவடிக்கையாகும்.

ஹம்பகா மாவட்டத்திலுள்ள வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்திலுள்ள இறப்பர் கையுறை தயாரிக்கும், ஹெலிஸ் பன்னாட்டு தொழில் நிறுவனத்தின் டி.பி.எல். என்ற தொழிற்சாலை ஒன்றில் இருந்து நச்சுக் கழிவு நிலத்தடி நீரில் கலந்ததினால் பாவனைக்குதவாத நச்சுநீராக மாறியது. இந்தக்குடிநீர்ப் பிரச்சனைக்காக பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையின் கீழ் இத் தொழிற்சாலையை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென கோரிப் போராடிய வெலிவேரிய மக்களுக்கு எதிராக நவதாராளமயப் பொருளாதாரத்தின் காவலனாக இருந்த இலங்கை அரசு துப்பாக்கிச் சூடு நடாத்தியது. தனது இராணுவத்தை மக்கள் மேல் ஏவி நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் போராடிய பொதுமகன் கொல்லப்பட்டதும் 20 பேர் வரையில் படுகாயத்துக்கு உள்ளானதும் வெலிவேரிய மக்களின் அனுபவமாகும்.

மக்களின் வளங்களை கொள்ளையடிக்கும் சுற்றுச்சூழல் அழிவது பற்றி அலட்டிக்கொள்ளாத உள்ளுர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் போராடும் மக்களை அரசு சிங்கள, தமிழ் மக்கள் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. போராடும் மக்கள் மேல் அவர்கள் அடக்குமுறையை ஏவுகின்றபோது அரசு காப்பாற்றிக் கொள்ள விழைவது இந்த நவதாராளமய முதலீட்டாளர்களையே. முதலீட்டாளர்களின் பொருளாதார இலாபங்களுக்காக இராணுவ நடவடிக்கைகளை எடுக்க அரசு எவரென்றும் பாராது போராட்டத்தினை நசுக்கியே தீரும் என்பதற்கு வெலிவேரியப் படுகொலை சான்று.

இதே போல் கொழும்பிலிருந்து 30 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பாதுக, துன்னான பிரதேசத்திலுள்ள இதே தொழில் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹன்வெல இறப்பர் கையுறைத் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவினால் அப்பிரதேச குடிநீரும், புகைக்காற்றினால் காற்றும் நச்சாவதை எதிர்த்து, தொழிற்சாலையை அப்புறப்படுத்தும்படி கோரிக்கை வைத்துப் போராடிய மக்களிடமிருந்து அத் தொழிற்சாலை நிர்வாகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைக்கென்ற போர்வையில் பொலீஸ்படை அனுப்பி போராடியவர்களைக் கைது செய்து சிரமமின்றி இயங்குவதற்கு தொழில் நிறுவனத்துக்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

எனவே மக்களுடைய குடிநீர்ப் பிரச்சனையாகவிருக்கட்டும் அல்லது எந்த வாழ்வாதாரப் பிரச்சனைகளாக இருக்கட்டும் எதுவாயிருந்த போதிலும் அங்கு இன மத வேறுபாடுகளின்றி அரசு தனது அடக்குமுறைகளைக் கையாண்டு நவதாராளவாத அரசியல் பொருளாதாரத்தினை பாதுகாக்கும்.

இப்பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மக்கள் தங்களுக்குள் கோடுபோட்டு, தங்களுக்குள் குறுக்கிப் போராடுவதை தவிர்த்து அடிப்படையான மக்கள் பிரச்சனைக்கு ஜக்கியப்பட்டுக் கைகோர்த்துப் போராடுவதும், ஜக்கியப்படுவதும் போராட்டங்களை பரஸ்பரம் பலப்படுத்துவதும் மக்கள் தங்களது பிரச்சனைகளுக்கான தீர்வினை அடைவதற்கான வழியாகும். இவ்வாறான போராட்டங்களுக்காக இன, மத வேறுபாடுகள் தாண்டி மக்கள் இணைந்து கொள்ள வேண்டுமென நாம் அறைகூவல் விடுப்பதோடு இந்தப் போராட்டத்துடன் நாம் எமதுகரங்களை இணைத்துக் கொள்கிறோம்.