Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாத அரசியலின் பணயக்கைதிகள்

ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள் தமிழ் ஆளும் அதிகார மேலாதிக்கவாத சக்திகளை வைத்தே இலங்கையை-இலங்கைக் குடிமக்களை-இலங்கையரைக் கட்டி ஆண்டுவந்தனர். 1920 முதல் இந்திய சுதந்திரப் போராட்டம்--மகாத்மா காந்தியின் கருத்துக்கள் ஆகியவற்றின் தாக்கம் இலங்கையின் வடபகுதியில் உள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் முற்போக்கான சிந்தனை வளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனுடைய விளைவாக பின்னாட்களில் "யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" தோற்றம் பெற்றது.

இந்த இளைஞர்கள் 1924 முதல் 1940 வரை இதற்கு இடைப்பட்ட காலத்தில் சிங்கள-தமிழ்-இந்திய துறை சார்ந்த அறிஞர்களை யாழ்ப்பாணம் வரவழைத்து ஆண்டு தோறும் மாநாடுகளை நடாத்தினர். முன்கூட்டியே அவர்களுக்கு ஆங்கலேயர்கள் "சுதந்திரம்" என்ற பெயரில் மக்களை ஆளும் ஆட்சி அதிகாரத்தை இலங்கையின் சுதேச ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் கையளித்து விட்டுப் போகவிருக்கிறார்கள் என்பது தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் இனமுரண்பாடுகள் வளர்வதற்கான அரசியல் சூழல்களையும் உருவாக்கி வைத்துவிட்டுச் செல்வார்கள் என்பதும் நன்கு புரிந்திருந்தது.

எனவே இலங்கையின் "விடுதலை" இன-சாதி-சமய-பால் பாகுபாடற்ற "இலங்கையர்" என்ற தேசிய இனத்திற்குரிய பூரண சுதந்திரமாக அமைய வேண்டும் என்பதே அவர்களின் இலட்சியமாக இருந்தது. அதனை இலக்காக வைத்தே அவர்கள் கடுமையாக உழைத்தார்கள். 1928ல் இடம்பெற்ற மாநாட்டில் சுவாமி விபுலானந்தர் வழங்கிய தலைமையுரையில் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

"பொருளாதார முன்னேற்றம் இல்லாவிட்டால் பொறுப்பு வாய்ந்த அரசாங்கமானது சிலுசிலுப்பே தவிர பலகாரமாய் இருக்கமுடியாது. நாட்டின் வங்கி மற்றும் வணிகத்துறைகள் முற்று முழுதாக வெளியார் கைகளிலே உள்ளன. நாட்டின் செல்வத்தின் பெரும் பகுதியும் அவ்வாறாகவே உள்ளது. அவர்கட்கு நாட்டு நலனில் நிரந்தர அக்கறை கிடையாது. சுரண்டலில் ஈடுபடும் ஜரோப்பியர்கள் வருவார்கள். போவார்கள். அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புமென நம்பி நாம் கைகட்டி நிற்பதற்கான காரணம் அந்நியர் ஆட்சியின் கீழ் நமக்குள் படிந்துள்ள அடிமை மனப்பான்மையே. இந்த அடிமை மனப்பான்மையை மாற்றுவதன் ஊடாகவே நாட்டு மக்கள் தங்கள் விடுதலையை வென்றெடுக்க முடியும்."

அதே மாநாட்டில் இந்தியாவிலிருந்து வந்து மாநாட்டில் அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய சிறீ சத்தியமூர்த்தி ஆற்றிய உரையில் பின்வருமாறு கூறியிருந்தார்.

"இனவாதம் என்பது முற்றிலும் சுயநலம் கொண்ட குறுகிய சிந்தனையாகும். நஞ்சு போன்று ஆபத்து நிறைந்ததாகும். அதன் இயல்பே அதுதான். அது தேசியவாதத்திற்கு முற்றிலும் முரண்பாடானதாகும். இனவாதப் பாதையை நாடுபவர்கள் ஆட்சியாளாகளின் வெட்கமில்லாத கருவிகள் அல்லது அவர்கள் பெரிய பொறுப்புக்களில் உள்ளவர்களின் பரிவின் மூலம் பட்டம் பதவிகளை விரும்பி நிற்பவர்கள் ஆவர். அரசியலுக்கு நஞ்சூட்;டவல்ல இனவாதத்தை யாழ்ப்பாண இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும்"

மேற்கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் செயற்பட்ட இளைஞர்களின் இலட்சியங்கள் வெற்றிபெறாத வகையில் அன்று செயற்பட்ட சிங்கள-தமிழ் அரசியல் தலைமைகள் இன்றுவரை இனவாத தண்டவாளத்தில் தங்கள் சுயநல-சுரண்டல்-சுத்துமாத்து அரசியல் பயணத்தைத் தொடருகின்றன. இவர்களது பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் வழங்கும் பணயக் கைதிகளாக இலங்கைக் குடிமக்கள் கடந்த 67 ஆண்டுகளாக இவர்களால்சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

ஆங்கிலேயர்கள் இலங்கையை விட்டுச் செல்லும்போது திருகோணமலைக் கடற்படைத் தளத்தை தன் கையில் வைத்துக் கொண்டுதான் சுதந்திரத்தை வழங்கினார்கள். அந்த தைரியத்திலேதான் அன்றைய அரசு மலையக மக்களை நாடற்ற அகதிகளாக்கி அடிமைகளாக்கிக் கொண்டது. அந்த நடவடிக்கையும் அதன் தொடர்ச்சியும் இன்றுவரை இந்தியாவுக்கு இலங்கையில் மூக்கை நுழைக்கும் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இலங்கையின் இனப் பிரச்சனையில் இந்தியா "பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும்" தாயாக இன்று வரை செயற்பட்டுக் கொண்டு வருகிறது.

இலங்கை அரசு சிங்கள இளைஞர்களின் (இரு தடவைகள்) ஆயுதக் கிளர்ச்சிகளையும் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தையும் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் ஆதரவுடனும் அடக்கி மக்களைக் கொன்று குவித்தது. இன்று மனித உரிமைகள் என்ற மந்திரத்துடன் உலகமயமாக்கல் பொருளாதார பொறிமுறை புதிய தாராளவாத பொருளாதார திட்டங்களை நாட்டில் நடைமுறைப்படுத்துகிறது. இலங்கை ஆளும் வர்க்கம் மக்களைப் பிணை வைத்துப் பேரம் பேசுகிறது. சர்வதேச ஆளும் வர்க்கங்கள் மனித உரிமையைக் காட்டி ஒப்பந்தங்களை போடுகின்றனர். இந்த அரசியல் சதுரங்கத்தில் சிங்கள-தமிழ் தலைமைகள் சொகுசாக வாழ்கின்றனர். இலங்கைக் குடிமக்கள் வதைபட்டுச் சாகின்றனர்.

இன்றைய இலங்கை அரசு இந்தியாவை விரோதித்துக் கொள்ளாமலும் அதேவேளை அதற்குப் பணிந்து நடக்காமலும் செயற்படக் கூடியதான போக்கை தனது சர்வதேச நாடுகளுடனான நட்புறவின் மூலம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதற்கு "நல்லாட்சி" ஜனநாயகம் என்ற கதையாடல் பயன்படுத்தப்படுகிறது. இதன் பின்னால் புதிய தாராளவாதப் பொருளாதாரம் இலங்கையில் படுதீவிரமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்தப் பின்னூட்டத்துடன்தான் இன்றைய நாட்டு நடப்புக்களையும் எதிர்வரும் பொதுத் தேர்தலை நோக்கிய இலங்கையின் அரசியல் நீரோட்டங்களையும் கணிப்பீடு செய்வது அவசியமாகும்.

இலங்கையில் இதுவரை நான்கு (சிங்களவர்-தமிழர்-இஸ்லாமியர்-மலையகத்தவர்) பிரதான பிரிவுகளாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வந்துள்ளனர். இவற்றுக்கு மேலாக கொள்கை அடிப்படையில் மக்கள் இந்தப் பிரிவுகளுக்குள் இன்னும் பல்வேறு அணிகளாக முரண்பட்டுக்கொண்டு நிற்க வைக்கப்பட்டுள்ளனர். இம்முறை தேர்தலை எதிர்கொள்வதற்காக மேலும் பல புதிய அணிகட்டுதல்கள் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய இலங்கை அரசியல் மொழியில் தமிழர் என்பது வடமாகாண தமிழரின் யாழ் மேலாதிக்கவாத ஆளும் வர்க்க சிந்தனையாளர்களின் அடையாளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்குமாகாணத் தமிழர்கள் தமிழர் என்ற அடையாளத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். முஸ்லீம்கள் அதன் எல்லைக் கோட்டிலும் மலையகத்தவர் அதற்கு (தமிழருக்கு) வெளியேயும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சிங்கள இனவாத மேலாதிக்கவாத முதலாளித்துவ சக்திகள்; நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் அடிப்படையில் தங்களுக்குள் பல்வேறு அணிகளாகப் பிரிந்து சிங்கள மக்களை முட்டி மோத விட்டபடி வழமை போல் "தமிழர்" என்ற பூச்சாணடியைக் காட்டி ஆட்சியைக் கைப்பற்றும் தந்தரோபாயங்களில் ஈடுபட்டுள்ளனர்.

1951ல் ஜ.தே.கட்சியில் இருந்து வெளியேறி எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா சி.சு.கட்சியை ஆரம்பித்து சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் என்ற போதையை ஊட்டி வளர்த்தார். 1949ல் அ.இ.த.கா.கட்சியிலிருந்து வெளியேறிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் இ.த.அ.கட்சி அமைத்து தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் என்ற நஞ்சை ஊட்டினார்.

இந்த இரு பக்க இனவாதங்களும் அந்நிய ஆங்கிலேய ஆக்கிரமிப்பு சக்திகளுடைய ஆலோசனையுடனும் ஆசீர்வாதத்துடனும் சிங்கள-தமிழ் தலைமைகளினால் உருவாக்கப்பட்டு இன்றுவரை போஷித்து வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. சிங்கள-தமிழ் மக்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இலங்கையராக உணர்ந்து நின்று நாட்டின் அரசியல் போக்கை மாற்றவேண்டி உழைப்பவர்களை-அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பவர்களை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில்தான் இன்றைய அரசியல் தலைமைகள் செயற்படுகின்றன.

"சிலந்தி வலையைப் பின்னி வைத்து சிறுசிறு பூச்சியைப் பிடிக்குதையா பலரைச் சிலபேர் பணிய வைக்க பணம்தான் வலையாய் உதவுதையா"

வழமைபோல் இம்முறையும் கொள்கையின் பெயரால் மக்களைச் சுரண்டி நாட்டின் வளங்களினால் வரும் வருமானத்தைக் கொள்ளையடிக்கும் ஜனநாயக தேர்தல் சடங்கு அரங்கேறப்போகிறது. நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு 6 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற வெறும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சித்திரவதைக் உட்படுத்தப்பட்டு வழக்கு விசாரண இன்றி 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் கைதிகள் நூற்றுக் கணக்கில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய நல்லாட்சி ஜனநாயக அரசும் யோசிக்கவில்லை. அவர்களை விடுவிக்க அரசியல் தலைமைகளுக்கும் தேவை காணப்படவில்லை. அதேவேளை தடைச் சட்டம் அப்பாவி மக்களைத்தான் வேட்டையாடியதே ஒழிய பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்த-அதனைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடிய எந்த ஒரு தலைவர் மீதும் இதுவரை கை வைக்கவில்லை. மாறாக அவர்களுக்கு அரச பாதுகாப்பும் ராஜதந்திர கடவுச் சீட்டும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தமிழ் தலைமைகளுக்கு நீதிக்காக-நியாயத்திற்காக-சிறையிருப்போருக்காக-காணாமல் போனோருக்காக-கொல்லப்பட்டவர்களுக்காக-மக்களின் உரிமைகளுக்காக-பெண்களின் பாதுகாப்புக்காக பேசக்கூடத் தகுதி கிடையாது. அதற்கான பரிபூரண தகுதியும்-உரிமையும் அவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே உண்டு. இந்த தலைமைகளும் இவர்களுடைய வாரிசுகளும் வழங்கிய சுயநல-சுயலாப பின்னூட்டங்கள்தான் மக்களை நந்திக்கடல் வரை பயணிக்கச் செய்தது.

நாம் நீதி கேட்கவேண்டியது சிங்கள மக்களிடமே. காரணம் அவர்களால்-அவர்களுடைய வாக்குகளால் உருவான அரசாங்கமே அநியாங்களை இழைத்து வருகிறது. அதனை ஒருமுறை பரீடசித்துப் பார்ப்போம் என்று கூட சிந்திக்க மறுத்து மீண்டும் மீண்டும் அயலவரிடமும் அந்நியரிடமும் முறையிட்டபடியே தான் நாம் நமது பிழைப்பை நடாத்துவோம் என அடம் பிடிக்கிறார்கள்.

இதனை சுவாமி விபுலானந்தர் சுமார் 87 வருடங்களுக்கு முன்னர் தீர்க்கதரிசனமாக உணர்ந்து கொண்டதால்தான் என்னவோ 1928ல் கீரிமலையில் நின்று இவ்வாறு கூறியிருந்தார்.

"அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புமென நம்பி நாம் கைகட்டி நிற்பதற்கான காரணம் அந்நியர் ஆட்சியின் கீழ் நமக்குள் படிந்துள்ள அடிமை மனப்பான்மையே. இந்த அடிமை மனப்பான்மையை மாற்றுவதன் ஊடாகவே நாட்டு மக்கள் தங்கள் விடுதலையை வென்றெடுக்க முடியும்."

அதே கீரிமலையில் விபுலானந்தர் அடிகளாருடன் தோளோடு தோள் சேர்ந்து நின்று சிறீ சத்தியமூர்த்தி அவர்களும் தனது தூரநோக்குப் பார்வையில் எமது அரசியல்வாதிகளை பின்வருமாறு கணிப்பீடு செய்திருந்தார்.

"இனவாதப் பாதையை நாடுபவர்கள் ஆட்சியாளர்களின் வெட்கமில்லாத கருவிகள் அல்லது அவர்கள் பெரிய பொறுப்புக்களில் உள்ளவர்களின் பரிவின் மூலம் பட்டம் பதவிகளை விரும்பி நிற்பவர்கள் ஆவர். அரசியலுக்கு நஞ்சூட்டவல்ல இனவாதத்தை யாழ்ப்பாண இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும்"

கொழும்பில் அரசியல் கைதிகளை விடுதலை செய் என கட்சி-இன-மத-பால் வேறுபாடின்றி குடிமக்களினால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்ட மறுநாள் காலையில் "300 கைதிகளை விடுதலை செய்வதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்" என வடக்குத் தலைவர்கள் அறிக்கை விடுகிறார்கள். இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு கூட்டமைப்பு தேவை என தெற்கிலிருந்து வேண்டுகோள் விடப்பட்டு இறுதியில் வட-கிழக்குக்கு வெளியே வாழும் 15 லட்சம் தமிழ்ப் பேசும் மக்கள் சார்பாக முன்னணி அமைக்கப்பட்டதாக செய்திகள் வந்ததும் வடகிழக்குக்கு வெளியேயும் தங்கள் வேட்பாளர்களை களமிறக்கப் போவதாக யாழ் தலைமைகள் அறிவித்துள்ளன.

மக்களின் நலன் கருதி செயற்படும் 12 பலதரப்பட்ட வெகுஜன அமைப்புக்களும் 52 தனிப்பட்ட சமூக ஆர்வலர்களும் இணைந்து ஜனவரி 8ல் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து பொதுத் தேர்தலை உடன் நடாத்துமாறு கடந்த யூன் மாதம் 5ம் திகதி அன்று ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். "நல்லாட்சி ஜனநாயக" அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியும் உள்ளனர்.

இலங்கையையும் அதன் மக்களையும் பணயமாக வைத்து வெளிநாடுகள்-வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள்-இவர்களின் முகவர்களாக நாட்டுக்குள் செயற்படும் அரசியற் பிரமுகர்கள் ஆகியோர் சுயலாபம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டின் செல்வம் ஒரு சிறிய தொகையினர் கைகளில் குவிய வறுமை நாடு தழுவிய மக்கள் தலைகளில் சுமத்தப் பட்டபடியே ஜனநாயக ஆட்சிமுறை சென்றுகொண்டிருக்கிறது.

இனியாவது இலங்கைக் குடிமக்கள் இணைந்து நின்று தங்கள் வாழ்வை நிர்ணயம் செய்யும் அரசியல் அதிகாரத்தை தங்களது கையில் எடுப்பற்கான விழிப்புணர்ச்சியுடன் செயற்படவேண்டும். இல்லையேல் "மறுபடி மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது" போல் 67 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று ஒப்பந்தங்கள் கையொப்பம் இடும் படலம் ஆரம்பமாகும். இலங்கை குடிமக்களின் இன்னொரு தலைமுறை மீண்டும் ஒருதடவை அழித்தொழிக்கப்படும்.