Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையில் தமிழர்களும் பெண்களும்

ஆசியப் பிராந்தியத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட (1931ல்) முதலாவது நாடு இலங்கையாகும். 1960ல் உலகத்தின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையுடன் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டு 5 ஆண்டுகள் பதவியில் இருந்தார். பின்னர் 1970ல் தெரிவு செய்யப்பட்டு 7 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். அவரது மகள் திருமதி சந்திரிகா விஜயகுமாரணதுங்கா 1994ல் பிரதமராகவும் பின்பு இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதி என்ற சிறப்புடன் (1994 - 2005) ஆட்சிக்கு வந்த போது சிறிமா அவர்கள் பிரதமராக 14 நவம்பர் 1994 முதல் 9 ஆகஸ்ட் 2000 வரை செயலாற்றினார். இவர்களது ஆட்சியின் கீழ் பெண்களுக்கு எதிராக எத்தனையோ கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தும்; இலங்கையில் பெண்களுடைய உரிமைகளுக்காக இவர்களால் எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

இன்றைய இலங்கையின் 2 கோடி மக்கள் தொகையில் 52 சதவீதம் பெண்களேயாகும். இவர்களில் 90சதவீதமானவர்கள் படிப்பறிவு உள்ளவர்கள். நாட்டின் பட்டதாரிகளில் 60 சதவீதம் பெண்களாகும். இன்று 6 லட்சம் பெண்கள் வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் வருடத்தில் 600 கோடி அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வருமானமாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் 225 உறுப்பினர்களடங்கிய இன்றைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் (13பேர்) 5.8 சதவீதமாகும். மாகாணசபை உறுப்பினர்களில் 6 சதவீதமும் உள்ளாட்சி சபைகளில் 2 சதவீதத்திற்கும் குறைவானதும் ஆகும்.

இலங்கையில் தமிழர்களுடைய உரிமைகளுக்கும் உடைமைகளுக்குமான தனிநாட்டுக்கான அரசியல்-ஆயுதப் போராட்டத்திலும் பெண்களுக்கான உரிமைகள் தொடர்பாக ஆழமான கரிசனையோ அன்றி அறிவார்ந்த சிந்தனை-திட்டங்களோ எதுவும் இருக்கவில்லை. இதுவரை இலங்கையில் பெண்கள் சிங்கள-தமிழ் மேலாதிக்கவாத ஆளும் அதிகார வர்க்கத்தினரின் பாவனைக்குரிய பொருட்களாக-பிரச்சார விளம்பரங்களாகவே பாவிக்கப்பட்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக நாட்டின் குடிமக்கள் தங்களது இன-மத-சாதி-சமய-பால்-பிராந்திய எல்லைகளைத் தாண்டி பெண்கள் தொடர்பாக பேசியும் எழுதியும் போராட்டங்கள் நடாத்தியும் வருகின்றனர். இதில் பலர் தங்கள் தங்களது பார்வைக்கும்-அறிவுக்கும்-அனுபவத்திற்கும்-ஆசைக்கும்-இச்சைக்கும் ஏற்ற வகையில் பல வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தாலும் ஒரேயொரு கருத்தில் மட்டும் எல்லோரும் ஒரே புள்ளியில் ஒன்று சேர்ந்து நிற்கிறார்கள். "அரசு பெண்களைப் பாதுகாக்க வேண்டும்" என்பதுதான் அந்தப் புள்ளியாகும்.

ஆனால் தமிழர்களின் நல்லுலகத்தில் இந்தப் புள்ளிக்கு ஒரு மெருகூட்டல் செய்யப்படுகிறது. அதாவது "சிங்கள அரசு பெண்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது" என்பதாகும். அதேவேளை தமிழர்கள் சமூகத்தின் மத்தியில் வெளியிடப்பட்டுள்ள பெண்கள்-பெண் அமைப்புக்களின் கருத்துக்களில் அதிகமானவை தங்களின் பாதுகாப்பு அடுத்தவர் கையில்தான் தங்கியுள்ளது என்பதனை வலியுறுத்தியே முன்வைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் மனித சமூகம் பெண்ணை பலவீனமான-பாதுகாக்கப்பட வேண்டிய ஒருவர் என்றே பிறப்பிலிருந்து அவளை நம்பவைத்து உருவாக்கி வளர்த்து விட்டுள்ளது. ஆட்சிகளும் அவற்றின் சட்டவாக்கங்களும் அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்துவமும் பெண்ணை ஒரு மனிதனாகக் கருதாமல் அவள் ஆணுக்கு அடுத்த "கீழ்படி" என்பதாகத்தான் வரையறைவு செய்து வைத்துள்ளது.

இப்படியான மனிதக் கூட்டத்தினுள் தமிழர் சமூகம் பெண்களைச் சுற்றி மேலும் மேலும் அதிகமான அடிமை விலங்குகளை அவர்களின் மழலைப் பருவம் தொடங்கியே பூட்டி வைத்துக் கொண்டு வருகின்றனர்.. சாதி-சமய-சம்பிரதாய-பாரம்பரிய-பண்பாடு-கலை-இலக்கிய-குல-கோத்திரம் என்பவை போன்ற பல கதையாடல்களின் ஊடாக பெண்கள் இரண்டாந்தரப் பிரசைகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது சிந்தனையில் தாங்கள் சம உரிமைக்குத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படை விதைக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒன்றே ஒன்றாகத்தான் அமைந்துள்ளது. இது இயற்கையின் விதியும் நியதியுமாகும். இதனை ஏன்? எதற்காக? எப்படி? யார்? மாற்றினார்கள் என பெண் சமூகம் சிந்தித்துச் செயற்படுவதனால் மட்டுமே பெண்களும் மனிதர்களாக வாழமுடியும்.

பெற்ற குழந்தை பெண் என அறிந்த அந்தக் கணத்திலேயே தாய்-தந்தையர் முகபாவம் மாறி அவர்கள் அக்குழந்தையை சுற்றி ஒரு வரைவிலக்கணம் வைத்து சுற்றத்தாருக்கு சர்க்கரை கொடுப்பதிலிருந்து பெண்ணுக்குரிய மனித உரிமைகள் பறிக்கப்படும் படலம் ஆரம்பமாகிறது. பாட்டியின்(அரசகுமாரி) கதை-கோயில் வழிபாடு-பரம்பரைப் பழக்கவழக்கங்கள்-பாடசாலைக் கல்வி-விளையாட்டு-பட்டப்படிப்பு எல்லாவற்றிலும் பெண்கள் தரம் பிரிக்கப்பட்டு தாழ்ந்த மனிதராகவே வளர்த்தெடுக்கப் படுகிறார்கள். தனியே செல்லாதே-சத்தம் போட்டு சிரிக்காதே-தலை நிமிர்ந்து பார்க்காதே-தரை அதிர நடக்காதே என மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். குழந்தை இல்லையென்றால் மலடி-கணவன் இறந்தால் அறுதலி என்ற பட்டங்கள் சூட்டப்பட்டு அபசகுனச் சின்னமாக்கி ஒதுக்கப்படுகிறாள்.

இன்றைய உலகில் இன்னமும் இவைகளை நடைமுறையில் விடாப்பிடியாக கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்தில் வாழும்பெண்கள் "கல்லறைக்கு வெள்ளை பூசுவதுபோல்" கருத்துக்களை உதிர்ப்பதும்- அடுத்தவர்களை நோக்கி கோரிக்கை விடுவதும் பெண்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தாது. தனிப்பட்ட பெண்களாலும் பெண்கள் அமைப்புக்களினாலும் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்களில் பல யதார்த்தத்தையும் அவற்றின் பாரதூரத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆனால் எதிர்காலத்தில் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை முன்வைப்பதில் அறிவுபூர்வமான-விஞ்ஞான ரீதியான- நிரந்தரமான-உறுதியான பார்வைகள் அவற்றில் காணப்படவில்லை.

ஒரு நோயை சுகப்படுத்த வேண்டுமானால் அது உற்பத்தியானதற்கான மூல காரணத்தைக் கண்டுபிடித்தாலன்றி அதனைப் பூரணமாக சுகப்படுத்த முடியாது. பரம்பரை பரம்பரையாக ஆணாதிக்கவாத சுரண்டலை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு சமூகத்தில்-அந்த ஆணாதிக்கவாதிகளால் கட்டமைப்புச் செய்யப்பட்டு அதனடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களின் கீழ்-பெண் என்பவள் ஆணுக்குப் பணிந்து நடக்கப் பிறந்தவள் என்பதைப் பெரும்பான்மையான பெண்களே பரிபூரணமாக நம்பி வாழும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் கொந்தளிப்புகளும்-ஆர்ப்பாட்டங்களும்-அணிவகுப்புக்களும்-அறிக்கைகளும் பெண்களுக்கு எதுவித பலனையும் தரப்போவதுமில்லை. தரவும் முடியாது.

பெண்களுக்கெதிரான வன்முறைகளில் மிகவும் சிறிய விகிதாசாரமே வெளியே தெரியவருகிறது. அதிலும் மிகச் சிறிய அளவே சட்டநடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறது. அதிலும் விரல்விட்ட எண்ணிக்கைக்குத்தான் தண்டனை கிடைக்கிறது. அவற்றில் பாலியல் வன்முறைகள் 95 சதவீதமானவை பலவிதமான சமூக அசைவுகளின் கட்டுப்பாடு காரணமாக மூடிமறைக்கப்படுகின்றன. அதனைத் தாண்டி வருபவைகள் தண்டனை வரைக்கும் செல்ல முடியாமல் சட்டமும்-சமூகமும் தடைகளாகி விடுகின்றன.

நிலத்தைப் பண்படுத்தாமல் நல்ல பயிரை விளைச்சல் செய்யமுடியாது. சிந்தனையை மாற்றாமல் செயலை மாற்றமுடியாது. எமது சமூகத்தின் கற்பித்தல் முறையின் அடித்தளம் தலைகீழாக மாற்றியமைக்கப்பட்டால் ஒழிய இந்த அநியாயங்களை நிறுத்தமுடியாது. பெண்ணுக்கு பொட்டும் பூவும் சூடி பூப்புனித நீராட்டு நடாத்துவதை ஏற்றுக் கொள்ளும் பெண் சமூகம் அவர்களுக்கெதிரான வன்முறையை தடுத்து நிறுத்தும் தகைமையை-வலிமையை-துணிச்சலை அடையமுடியாது.

அரிச்சுவடியிலிருந்தே நாம் எமது சமூக மதிப்பீடுகளையும் நீதி நியாங்களையும் பற்றிய சரியான கற்பித்தலை ஆரம்பிக்கவேண்டும். எமது கல்வித் திட்டங்களில் புதிய விஞ்ஞான ரீதியிலான முறைகள் புகுத்தப்படல் வேண்டும். பெண்களும் மனிதர்கள்தான்-எல்லோரையும் போல் வாழப் பிறந்தவர்கள்தான் என்ற நம்பிக்கை பெண்கள் சிந்தனையில் விதைக்கப்படல் வேண்டும். தலை குனிந்து தாலியை ஏற்றுக் கொண்டு நின்று அது பெண்களின் வேலி என்று ஆர்ப்பாட்டம் செய்வதில் அர்த்தம் இல்லை. அநியாயங்களுக்கான அத்திவாரத்தை நாமே நமக்குள்ளேயே மிகவும் இறுக்கமாகக் கட்டிவைத்துக் கொண்டு அதற்கான காரணங்களை அடுத்தவர் மேல் சுமத்தும் எமது வழமையான-பாரம்பரிய-தமிழ் புத்திசாலித்தன சுபாவம் மாற்றப்படவேண்டும்.

பெண்கள் தாங்களும் மனிதர்கள்தான் என்ற உணர்வுடனும்-நாம் யார்க்கும் அடிமையல்லோம் என்ற பற்றுறுதியுடனும் காலாவதியாகிப் போன-மனிதநேயமற்ற-சுயநல சட்டதிட்டங்களையும் அடிப்படை மனித உரிமைகளை மதிக்காத சம்பிரதாயங்களையும் தகர்த்தெறிந்து வெளியேறி வந்து நாட்டின் குடிமக்களுடன் இணைந்து மக்களோடு மக்களாக அவர்களின் புதிய அரச கட்டமைப்பு மாற்றத்திற்கான போராட்ட பாதையில் பங்காளிகளாக ஆவதன் மூலமே தங்களுக்கான பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உருவாக்கிக் கொள்ளமுடியும்.

பெண்களை சக மனிதராக கருத்தாமல் ஆண்-பெண் என்ற பாகுபாட்டின் அடிப்படையில் வரையப்பட்ட அரசியல் சட்ட வரைவும் அதன் மேல் கட்டியெழுப்பப் பட்டுள்ள அரசுக் கட்டுமானமும் பெண்களுக்கு விடிவைத் தராது. நீதி நியாயத்தை வைத்து சாதாரண பாமர-பாட்டாளி மக்களால் உருவாக்கப்படும் புதிய அரச கட்டமைப்பு ஒன்றுதான் பெண்களையும் மனிதர்களாக இந்த மண்ணில் அச்சமின்றி வாழ வழி சமைக்கும்.