Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

Articles

ராஜபக்ஷவின் 'தெருவன் சரணய் – ஞானசாரவின் அப சரணய்'

'சிறிய சம்பவங்களுக்காகக் கூட சிலர் பெரிய ஹர்த்தாலை செய்கின்றனர்' என ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் நடந்த விழாவொன்றின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிண்டலாகக் கூறியிருந்தார்.

அளுத்கமை முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து முஸ்லிம் மக்கள் கடையடைப்பு நடத்தினர். இந்த ஹர்த்தால் நடவடிக்கையை ஏற்பாடு செய்த குற்றத்தின் பேரில் "முஸ்லிம் உரிமைகளை பாதுகாக்கும அமைப்பைச்" சேர்ந்த நான்கு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

அத்தோடு, ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பில் விசாரிப்பதற்கு மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புலனாய்வுப் பிரிவினரால் நான்காம் மாடிக்கு ஜுன் 25ம் திகதி அழைக்கப்பட்டார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டில் தாண்டவமாடிய இனவெறியை சர்வதேச கவனத்திற்கு கொண்டு வந்தமையை சிங்கள ஊடகங்கள் 'நாட்டை காட்டிக் கொடுக்கும் செயல்' என குறிப்பிட்டிருந்தன.

'சிறிய சம்பவங்களுக்குக் கூட பெரிய ஹர்த்தால் செய்கிறார்கள்' என்று ஜனாதிபதி கூறியதின் அர்த்தம் என்ன? 'சிறிய சம்பவம்' என அவர் எதைக் கூறுகிறார்? பொது பல சேனா என்ற சிங்கள பௌத்த கடும்போக்காளர்களின் தூண்டுதல்களால் முஸ்லிம்களில் சிலர் படுகொலை செய்யப்பட்டும், கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டும் அளுத்கம, பேருவளை, தர்கா நகர் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களும், சூறையாடல்களும் இவருக்கு சிறிய சம்பவமா?

இனவெறியர்களால் தூண்டிவிடப்பட்ட சிங்களவர்கள் முஸ்லிம்களின் வீடுகளை கொள்ளையடித்து மனிதர்களை கொல்லும் போது, முஸ்லிம்களின் பக்கத்திலிருந்து பதில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சொல்கிறாரா? சிங்கள இன காடையர்களுக்கு பொலிஸாரினதும், விஷேட அதிரடிப்படையினரினதும் ஒத்துழைப்பு கிடைத்ததற்கான ஆதாரங்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. சிங்கள இனவெறியர்கள் முஸ்லிம்களை தாக்கும் போது பொலிஸார் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இது ஒரு வகையில் '83 கறுப்பு ஜுலை' யை கண்முன்னே கொண்டு வந்ததைப் போலிருந்தது.

இந்த இனவெறித் தாக்குதலை கண்டித்துத்தான் ஹர்த்தால் நடந்தது. ஹர்த்தால் செய்தவர்களுக்கு எதிராக அரச சட்டம் பாய்ந்திருக்கிறது. ஆனால் இனவாத கலவரத்தை தூண்டிய எந்தவொரு சிங்கள இனவெறியனோ, தலைவனோ, இயக்கமோ சட்டத்தின் முன் கொண்டுவரப்படவில்லை. அளுத்கம சம்பவத்திற்கு காரணமான பொது பல சேனா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஞானசார ஆற்றிய உரை "அமைதிக்கு பங்கம்" விளைவிக்கும் உரையாக இருந்தது. 'அதிகமாக துள்ளினால் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு அப சரணய் என்று கூறும் போது அங்கு குழுமியிருந்தவர்கள் ஆரவாரமாக கை தட்டினார்கள். இனவெறியை பகிரங்கமாகவே தூண்டும் இந்தச் செயல் அரசாங்கத்தை பொறுத்தவரையில் குற்றமாகத் தெரியவில்லை.

அளுத்கமை சம்பவமும் அதன் பின் நடந்த அனைத்து சம்பவங்களும் அரசாங்கத்தின் பக்கச் சார்ப்பை படம் பிடித்துக் காட்டுகின்றன.

இன உறவுகள் விடயத்தில் பார்த்தால் இந்நாட்டு அரச இயந்திரத்திற்குள் சிங்கள- பௌத்த இனத்தின் மீதான பக்கச்சார்பு இருக்கிறது. அதன்படி, கலகொட அத்தே ஞானசார அளுத்கமையில் ஆற்றிய உரையில் கூறியது உண்மைதான். 'இந்த நாட்டில் இருப்பது சிங்கள ராணுவமும், சிஙகள பொலிஸும் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று அவர் கூறினார். முஸ்லிம் மக்கள் கொல்லப்படும் போது பொலிஸாரும் ராணுவத்தினரும் கை கட்டி வேடிக்கை பார்த்தது ஏன்? அந்த இனவெறித் தாக்குதல்கள் ஜனாதிபதிக்கு 'சிறு சம்பவங்களாக தெரிந்தது எப்படி? சிங்கள இனவாத காடையர்கள் சட்டத்தின் முன்னால் 'நிரபராதிகளாவதும் முஜிபுர் ரஹ்மான் மட்டும் 4வது மாடிக்கு அழைக்கப்படுவதும் ஏன்? இனவெறியைத் தூண்டும் இனவாத கூட்டங்களை ஏற்பாடு செய்து, அந்த மேடைகளில் முஸ்லிம்களை தூற்றுவதும், இனத்துவேசமாக திட்டுவதும் 'குற்றமாக கருதப்படாமல், ஹர்த்தாலை ஏற்பாடு செய்வது குற்றமாகப்படுவது ஏன்? இலங்கை அரச அமைப்புக்குள் வேரூன்றியிருக்கும் இனப்பாகுபாடுகளுக்கு இது சிறந்த உதாரணமல்லவா.

இந்த இனவெறி தாண்டவத்திற்குப் பிறகு ஜனாதிபதி இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒருதாய் மக்களின் பிள்ளைகளைப் போல் வாழ வேண்டுமென அந்த அறிக்கையில் கூறியிருந்த ஜனாதிபதி இறுதியில் 'ஒப செமட்ட தெவியன் சரணய்' (உங்கள் அனைவருக்கம் மும்மூர்திகள் துணை) என குறிப்பிட்டிருந்தார். பொதுபல சேனா போன்ற சிங்கள நாசிவாத குழுக்களை போஷித்து வளர்ப்பது ராஜபக்ஷ சர்வாதிகாரம் தான் என்பது வெளிப்படை.

சிறுபான்மை இனங்களுக்கு எதிராக குரோதத்தை வளர்த்து வன்செயல்களுக்கு வழிசமைத்துக் கொடுப்பதும் ராஜபக்ஷ சர்வாதிகாரம்தான். இது, சிறுபான்மை மக்களுக்கு எதிராக மிருக வெறியை தூண்டிவிட்டு, அதற்காக வெறிநாய்களை அவிழ்த்து விட்டு, சிங்கள மக்களோடு ஒரு தாய் மக்களாக வாழுமாறு சிறுபான்மை மக்களை கேட்டுக் கொள்ளும் குள்ளநரித்தனமேயன்றி வேறென்ன? முஸ்லிம்களுக்கு 'அப சரணய்' என்று கூறும், முஸ்லிம்களின் இரத்தத்தை உறிஞ்சக் காத்திருக்கும் நாய்களை வீதிகளில் நடமாடவிட்டு, அந்த வெறிநாய்கள் சமூகத்தை அழிக்கும்போது 'உங்கள் அனைவருக்கும் 'மும்மூர்திகள் துணை| என ஜனாதிபதி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. ஞானசாரவின் 'அப சரணய்| என்ற வார்த்தை மற்றும் ராஜபக்ஷவின் 'தெருவன் சரணய்| என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? நாய் தப்பிச் செல்லாதபடி மட்டுமல்ல, நாயின் எஜமான் தப்பிச் செல்லாதபடியும் குரல்வளையை நாம் பிடித்துக் கொள்ள வேண்டும். இதற்காக முற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல் தேவை. அதற்காக நாம் தயாராவோம்.