Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

Articles

ஜனாதிபதி தேர்தல் பற்றிய இடதுசாரிய முன்னணியின் நிலைப்பாட்டினை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு!

முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் சுருக்கம்.

மருதானை டீன்ஸ் வீதியிலுள்ள சமூக ஐக்கிய நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற இடதுசாரிய முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாட்டினை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்கள்.

முன்னணி சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலர் தோழர் புபுது ஜயகொட.

நாட்டில் தோற்றம் பெற்றுள்ள அரசியல் நிலமை தொடர்பாக நீண்டகாலமாக இடதுசாரி கட்சிகள் பல ஒன்றுகூடி கலந்துரையாடியதன் பிரதிபலனாக உடன்பாடு கண்ட விடயம் தான் இடதுசாரிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவாகும். தற்போது சமூகத்தில் பிரதான பேச்சாகக் காணப்படுவது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியுமா என்ற பிரச்சனையும் மற்றும் ஜனாதிபதி பொது வேட்பாளர் யார் என்ற பிரச்சனைகளுமாகும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ போட்டியிடுகிறார். அரசதரப்பின் பிரதான பிரச்சாரமாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி வகிக்கிறது. உலகவங்கி, சர்வதேச நாணயநிதியம் போன்றவற்றிடம் பெருந்தொகை நிதியைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை அமெரிக்கா, சீனா, யப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் ஏகாதிபத்திய பொருளாதாரத்தினை அமுல்படுத்திக் கொண்டும், நாட்டின் பெரும் பெறுமதிமிக்க நிலங்களை பல்தேசியக் கொம்பனிகளுக்கு தாரை வார்த்து வரும் இந்த அரசாங்கத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது சுத்த ஏமாற்றுத்தனம் என்பது வெளிப்படையானது.

1994 இலிலிருந்து பதினொரு வருடங்களாக ஆட்சிபுரிந்த ஜனாதிபதி சந்திரிகாவின் அரசாங்கத்தில் ஊழல் மோசடிக் குற்றம் சாட்டப்பட்டவர்களை, உயர் பதவிகளில் அமர்த்தியிருந்தமை ஊரறிந்த விடயமாகும். இன்று சந்திரிகா அம்மையார் நல்லாட்சி தொடர்பாக நீலிக் கண்ணீர் வடிக்கிறார். மகிந்தவுக்கு எதிராக பொது வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து ஊடகங்களும் பெருமளவு ஊடகத் திருவிழாவை நடாத்துகின்றன. பெரும் முதலாளிகள் பல்தேசியப் கொம்பனிகள் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடத் தயாராகி இருக்கிறார்கள். மகிந்தவைப் பொறுத்தவரையில் ஊழல் தொடர்பான பைல்களை கையில் வைத்துக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் அச்சுறுத்தி வருகின்றார்.

மைத்திரிபால ஊடகங்கள் முன்னிலையில் கண்ணீர் வடிப்பது, கட்டுநாயக்கா சுதந்திரவர்த்தக தொழிலாளர்கள் தமது உரிமைக்காகப் போராடியபோது பொலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்த அப்பாவித் தொழிலாளர்களுக்காகவோ, அல்லது ரத்துபஸ் பிரதேசத்தில் சுத்தமான குடிநீருக்காகப் போராடியபோது இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானோர் பரிதாபம் தொடர்பாகவோ, அல்லது நீர்கொழும்பில் எண்ணை மானியம் கோரிப் போராடிய மீனவர்களின் போராட்டத்தின் போது பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி உயிரிழந்த மீனவர்களுக்காகவோ, அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக வேலை தேடிச் செல்லும் சகோதரிகளின் துன்ப துயரங்களுக்காகவோ அல்ல. அவர் ஊடகங்களுக்கு முன்னால் நீலிக்கண்ணீர் வடிப்பது அவர் எதிர்பார்த்த மந்திரிப்பதவி கிடைக்காததினாலும், கிடைத்த மந்திரிப்பதவியின் சுகபோகங்களை சுதந்திரமாக அனுபவிக்க முடியவில்லை என்ற வேதனையிலுமே.

சந்திரிகா ஊடகங்களுக்கு முன்னால் நீலிக்கண்ணீர் வடிப்பது, சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்குள் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முடியாமல் போய்விட்ட கவலையினாலேயாகும். இந்த ஜனாதிபதித் தேர்தல், ஊடக முதலாளிகள் பல்தேசியக் கம்பனி கும்பல்கள் உள்நாட்டு வெளிநாட்டு பெரும் முதலாளிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் சூழ்ச்சிகரமானதாகும். இவ்வாறான நெருக்கடிகளின் மத்தியில் ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அக்கறை செலுத்தவேண்டிய கடப்பாடு இடதுசாரிகளுக்கே உரித்தானதாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான பிரச்சனைகளை இனங்கண்டு அம் மக்களின் நல்வாழ்வுக்காக தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இடதுசாரிகளுக்கே உரித்ததாகும்.

நவ சமசமாசக் கட்சி தலைவர் – லீனஸ் ஜயதிலக

இடதுசாரிகள் என்ற வகையில் நாம் ஒன்றிணைந்து தீர்மானித்தது, பாட்டாளி வர்க்கத்தின் குரலாக சர்வாதிகாரம் நிறைந்த இந்த அரசாங்கத்தை, மகிந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதாகும். நிறைவேற்று அதிகாரத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய வேளையில் அன்றைய இடதுசாரித் தலைவராக விக்கிரமபாகு கருணாரத்ன, வாசுதேவ நாணயக்கார போன்ற முக்கிய இடதுசாரித் தலைவர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட பதினேழாவது திருத்தத்தை நீக்கி, பதினெட்டாவது திருத்தத்தை அறிமுகப்படுத்திய சிங்கள பவுத்த இன மதவாத அரசாங்கத்தை கட்டாயம் தோற்கடித்தேயாக வேண்டும். இந்த நாட்டில் இனவொற்றுமையைக் கட்டியெழுப்பி சமாதான நாடாக மாற்றுவதற்கு ஏற்புடையதான சட்ட ஏற்பாடுகளுடனான அரசியல் யாப்பொன்றைத் தயாரிக்க வேண்டும்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் தவறினால், மக்களை வீதிக்கிறக்கிப் போராட இடதுசாரித் தலைவர்கள் தயாராக இருக்க வேண்டும். இந்தப் பாரிய பணிக்காக சிதறிக்கிடக்கும் இடதுசாரி சக்திகளை அணிசேர்க்கும் பணியை தீவிரமாக்கி நாட்டில் இடதுசாரியத்தைப் பலப்படுத்த வேண்டும். நாசகார நவலிபரல்வாத முதலாளித்துவ அரசியல் பொருளாதார முறைமையை முழுமையாகத் தோற்கடிக்க வேண்டும். எனவே ஒடுக்கப்பட்ட மக்கள் இடதுசாரிய முன்னணியுடன் கைகோர்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும். இந்த ஜனாதிபதி தேர்தலில் முக்கியமான பல விடயங்கள் எழுச்சி பெற்றுள்ளது. மாறி மாறி வரும் அரசியலுக்குப்பதிலாக ஒரு குடும்பம் இரண்டாகப் பிளவு கண்டுள்ளது. முப்பது வருட யுத்தம் முடிவுக்கு வந்தபோதும் அரசாங்கம் மீண்டும் யுத்தம் ஒன்றுக்கான சூழலை உருவாக்குகின்றது. இந்த அரசியலுக்குப் பின்னால் பாரிய மோசடி ஒன்று காணப்படுகின்றது. இந்த முறைமைக்கு விலை கொடுக்காமல் பெற்றுக்கொள்ளக் கூடியது எதுவுமேயில்லை. குறிப்பாக கல்வி சுகாதாரம் கூட இன்று விற்பனைப் பண்டங்களாகி விட்டன. இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது மகிந்த மற்றும் மைத்திரி கூட்டால் ஆகக் கூடிய காரியமல்ல. மாற்றீடாக இடதுசாரிய முன்னணியைப் பலப்படுத்தியே ஆக வேண்டும்.

மகிந்த தேவப்பிரிய

மகிந்த பதினெட்டாவது திருத்தத்தை அமுல்படுத்தி ஜனநாயகத்தைக் கொலைசெய்து நீதிமன்ற சுதந்திரத்தைப் பறித்து இரண்டாவது தடவையாகவும் போட்டியிடுவதற்காக நீதியரசர்களை தனது மாளிகைக்கு அழைத்து தனது அபிலாசைக்கேற்றவாறான ஆலோசனையைப் பெற்றுள்ளார்.     அதாவது தனது வாழ்நாள் முழுவதும் பதவியிலிருப்பதற்கான ஏற்பாடுகளில் முனைப்புக் காட்டி வருகிறார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது தனிப்பட்ட அபிலாசையான பிரதமர் பதவி தொடர்பான பிரச்சனையில் முரண்பட்டுக் கொண்டு மகிந்தவுக்கு எதிராக களமிறங்கியுள்ளார். நாட்டில் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக அவருக்கு எதுவிதமான அக்கறையும் கிடையாது. 2014 நவம்பர் மாதம் 20 ம் திகதி பன்னிரெண்டு மணிவரையில் கட்டுநாயக்க தொழிலாளர் பிரச்சனை, ரத்துபஸ் தண்ணீர்ப் பிரச்சனை, நீர்கொழும்பு மீனவர் எண்ணெய் மானியப் பிரச்சனை, அரசியலமைப்பின் பதினெட்டாவது திருத்தச் சட்டம் போன்ற அனைத்துப் பிரச்சனைகளிலும் மகிந்தவுடன் ஒன்றிணைந்து செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி பற்றி ஒப்பாரி வைப்பது முழுமையான ஏமாற்றாகும்.

இவ்விருவரினதும் வெற்றிக்காக குடு முதலாளிகள், எதனோல் வர்த்தகர்கள், விபச்சார விடுதி உரிமையாளர்கள், கசினோ முதலாளிகள் பணத்தை வாரியிறைக்கத் தயாராகியுள்ளனர். எனவே நவலிபரல்வாத முதலாளித்துவ அரசியற் பொருளாதார முறைமையைத் தோற்கடித்து தேசியப் பிரச்சனைக்கு சமவுரிமை அடிப்படையில் தீர்வு கண்டு, சமாதானத் தீர்வை காணவும், தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் நல்லாட்சிக்கான அம்சங்களுடன் அரசியல் அமைப்பொன்றை உருவாக்க இடதுசாரிய முன்னணி மக்களை அணிசேர்த்துக் கொள்ள தயாராக வேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவ

ஒன்றிணைந்த இடதுசாரிக் கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக நான் தெரிவுசெய்யப்பட்டுள்ளேன்.

மறுபுறமாக இரண்டு முகாம்கள் போட்டியிடுகின்றன. இரண்டும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே. தற்போது மகிந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசப்பற்று ஆகிய சுலோகங்களைக் கையிலெடுத்துக் கொண்டுள்ளார். சீனாவுடனான உறவை முன்வைத்தே இந்தச் சுலோகங்களுக்கு உயிரூட்டம் கொடுக்க முனைகின்றார். 2008 ம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட பிரதிபலன்களே உலகளாவிய மாற்றங்களாகும். மைத்திரிபால சுதந்திரம் பற்றி பேசுவது அவர் எதிர்பார்த்த அமைச்சுப்பதவி கிடைக்காததினாலும், கிடைத்த அமைச்சுப்பதவியிலும் சுதந்திரமாகச் செயற்பட முடியவில்லை என்றே அவர் சுதந்திரத்துக்காகவென்று கூறி கண்ணீர் விடுவதற்கான காரணமாகும்.  இன்று நாட்டில் காணப்படும் பிரதான பிரச்சனைகள் பொருளாதார சமமின்மை, வேலையின்மை, குடியிருப்பு, போன்றவை பிரதானமானவையாகும். இவற்றுக்கான பிரதான காரணி பொருளாதார சமமின்மையே காரணமாகும். இதுவே இலஞ்சம் ஊழல் போன்ற பாரிய பிரச்சனைகளின் பெருக்கத்துக்கு காரணமாக அமைகின்றது.

இன்று அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றி பெரியளவில் பேசப்படுகின்றது. ஆனால் இவைகள் மக்கள் சார்பானதாகவும் மக்களின் கருத்தியலுக்கு செவிமடுத்தும் அவர்களது சம்மதத்துடனும் (சர்வஜன வாக்கெடுப்பு) மேற்கொள்ளக்கூடியதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. தற்போது நடைமுறையில் இருக்கும் 1977 அரசியல் அமைப்பும் அதன் பின்னரான அரசியல் அமைப்புத் திருத்தங்களும் மக்களின் கருத்து அறிந்தோ மக்களின் சம்மதத்துடனோ (சர்வஜன வாக்கெடுப்பு) தயாரிக்கபட்பட்டவையல்ல. இவை அனைத்தும் முற்றுமுழுதாக உலகமயமாக்கலினை அமுல்படுத்தலுக்கு ஏற்புடையதாகவும் நவலிபரல்வாத அரசியல் பொருளாதாரக் கொள்கைகளின் அமுலாக்கலுக்கு ஏற்புடையதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர மக்கள் பற்றி குறிப்பாக ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் பற்றி கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளப்படாதவையாகும்.

எதிர்காலத்திலும் இவர்களால் கூறப்படும் அரசியல் அமைப்பு சீர்திருத்தங்களும் அரசியலமைப்பு மாற்றங்களும் இவ்வாறாகவே மேற்கொள்ளப்படும். இந்த நிலைமையானது பிரச்சனைகளை நாளுக்கு நாள் உக்கிரமடையச் செய்யுமே தவிர நல்லாட்சிக்கான கதவுகளை ஒருபோதும் திறந்து விடப் போவதில்லை. இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அனைத்துத் துறைகளையும் வர்த்தக நிறுவனங்களாக மாற்றி, உதாரணமாக கல்வி, சுகாதாரம், நீர், போன்ற பொதுநல சேவைகள் இலாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட நவலிபரல் முதலாளித்துவ அரசியல் பொருளாதார முறைமையை மேலும் விரிவுபடுத்தி பாதுகாக்கக் கூடிய ஒரு முறைமையாக இருக்குமே தவிர ஒருபோதும் நல்லாட்சிக்கான ஒரு அரசியல் அமைப்பு மாற்றங்களை செய்யப் போவதில்லை. இது கடந்தகால அனுபவங்களில் கண்டுகொண்டவைகள். எனவே இந்த நிலைமைகளை மாற்றியமைக்க மக்கள் அணிதிரண்டு வீதிக்கிறங்கிப் போராட தயாராக வேண்டும்.