Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

சாம்பல் பூத்த மேட்டில் இருந்து.....

நீர் கொழும்பின் கரையோரப் பகுதி. தென்னை மரங்களும், செம்மஞ்சள் மணலும், நீல கடலையும் கொண்ட, சர்வதேச புகழ் பெற்ற கடற்கரைகளில் ஒன்று. ஜே.ஆர்(J.R) ஆட்சியில் சர்வதேச நிதி மூலம் நீர்கொழும்பின் கரையோர பகுதி உல்லாசப்பயணிகளின் சொர்க்க புரியாக்கப்பட்டது.

வறுமை மிகுந்த மீன்பிடி கிராம மக்கள் தம் நிலங்களை, சர்வதேச உல்லாசப் பயண நிறுவனங்களுக்கு தாரை வார்த்ததுக் கொடுத்து விட்டு, நீர்கொழும்பின் உட் பிரதேசங்களில் குடி ஏறினர். கடற்தொழிலைத் தவிர வேறொன்றும் தெரியாத இம் மக்கள் பலர் உல்லாச விடுதிகளில் கூலித் தொழிளார்காளாக அமர்த்தப்பட்டனர். ஆசியா அபிவிருத்தி வங்கி மூலம், அந்நியமொழி கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இளம் பெண்களும், ஆண்களும் விடுதிகளில் நாளாந்த பணி செய்யும் சேவையாளர்களாக ஆக்கப்பட்டனர்.

குறிப்பாக இளம்பெண்கள் பலரும் பயிற்றுவிக்கப்பட்ட எஸ்கார்ட் (Escort) பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனர். எஸ்கார்ட் பணி என்பது, விபச்சாரத்தை மூடி மறைக்க பாவிக்கப்படும் நாகாரிகமான வார்த்தை.

83 ஜூலைக் கலவரம் தமிழர்களின் வாழ்வை மட்டும் அழிக்கவில்லை. கலவரத்தின் பின்னான காலப்பகுதியில் உல்லாசப் பயணத்துறை பெரும் பாதிப்பிற்குள்ளானது. சீவியத்தை கொண்டிழுக்க ஆண்கள் ராணுவத்திலும், கடற்படையிலும் இணைந்தனர். பெண்கள் சுதந்திர வர்த்தக வலயத்தில் நாட்கூலிகள் ஆக்கப்பட்டனர்.

இன்று யுத்தம் முடிந்த நிலையில் பழையபடி, உல்லாசப் பயணத்துறை களைகட்டத் தொடக்கியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தின் புதிய பரம்பரைப் பெண்களும், சிறுவரும், சிறுமியரும் பழையபடி பலி ஆடுகளாய்……

கொழும்பில் பெண்களுக்கான உதவி நிறுவனம் ஒன்றில் இரு சமுக ஆர்வலர்கள், 17 வயதான சிறுமி நில்மினியை சந்தித்தனர். நில்மினியுடனான உரையாடலின், செறிவு இது.

இவ் உரையாடல், விபச்சாரத்தை தொழில் என வர்ணித்து பெண்கள் சந்திப்பு மலர் வெளியிடும் மேல்தட்டு வர்க்கப் பெருமாட்டிகளுக்கும், யுத்தத்தால் தமிழன் மட்டும்தான் எல்லாம் இழந்தார் என கதறும் குறும் தேசியவாதிகளுக்கு, சிந்தனை மாற்றம் வேண்டி எழுதப்படுகிறது. இது….. வெறும் கதையல்ல ……

எது கஸ்டமான விடயம்?

இதில் இலகுவானது என்று ஒண்டும் இல்லை …..எல்லாமே கஸ்ரம் தான்.

…ஆனால்…. நாங்கள் அனுராதபுரத்திலும், ஹபறனயிலைலும், கூடுதலான கஸ்ரப்பபட வேணும். அங்கு ஆயிரம் சம்பாரிக்க, பலரை சமாளிக்க வேணும். அதவிட, பல அசிங்கமான விடயங்கள் எல்லாம் செய்ய வேணும். மிருகங்களாக அவர்கள் நடந்து கொள்வார்கள்.

அனுராதபுரத்திலும், ஹபறனயிலைலும் எந்த மாதிரியான மனிதர்களை நீங்கள் சந்திக்கிறீர்கள்?

அங்கு வரும் எல்லோருமே குறுகியகால விடுமுறையில், வீட்டுக்கு செல்ல நேரம் இல்லாத இராணுவத்தினரும், கடற்படையினரும் தான். பொதுமக்கள் அப்பிரதேசங்களில் பிரவேசிப்பது கஸ்டமான விடயம். நாங்கள் படையினரை சந்திக்கும் இடங்கள், அவர்கள் விடுமுறையை கழிப்பதற்காக பிரத்தியகமாக அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேசங்கள். அங்கு செல்லும் எல்லா பெண்களும், நான் உட்பட பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

அப்படியானால் இது அரசினால் ஒழுக்கு செய்யப்பட்ட செயற்பாடு தானே?…..இல்லையா ….. இது இலங்கை சட்டப்படி தடை செய்யப்பட்ட ஒன்று …….!

அதெல்லாம் எனக்குத் தெரியாது. எங்களை தரகர்களே அங்கு கூட்டி செல்வார்கள். எங்கள் வருமானத்தில் பத்து வீதம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஒரு தடவையில் இரண்டு நாட்களே நாம் அங்கு தங்க அனுமதிக்கப்படுவோம். அதனால் நாம் எவ்வளவு எண்ணிக்கையானவர்களை சமாளிக்க முடியுமோ, அந்த அளவுக்கு சம்பாரிக்க முடியும். எங்களில் பலர் பிள்ளைகளையும்; குடும்பத்தையும் வேறு ஒருவரின் பாதுகாப்பில் விட்டு விட்டே அங்கு போகிறோம். அதனால் ஒரே தடவையில் குறைத்து ஒரு மாதத்திற்கு தேவையான பணம் சம்பாரிக்க முயற்சிப்போம்.

நீங்கள் ஒரு தடவையில், அனுராதபுரத்திலும், ஹபறனயிலைலும், எவ்வளவு பணம் பெறுவீர்கள் ?

எனது தரகரே அதை தீர்மானிக்கிறார். நான் சிறு பெண்ணாக இருப்பதால் பலர் என்னை தெரிவு செய்ய விரும்புவார்கள் … முன்நூறில் இருந்து ஆயிரம் வரை கிடைக்கும். இரு நாட்களில், தரகர் எனக்கு இருபது, சிலநேரங்களில் இருபத்தையாயிரம் தருவார். என்னுடன் வரும் சிலர் அம்பதாயிரம் வரை கூட பெறுவார்கள். என்னால் அந்த அளவுக்கு முடியாது. இருபத்தையாயிரம் பெறவே சாகிற அளவு கஸ்ரபட வேணும். அம்பதாயிரம் என்றால் செத்தே போயிருவன் ……. ஒரு தடவை அங்கு சென்றுவந்தால், ஒரு மாதத்திற்கு ஒழுங்காக சாப்பிடவோ அல்லது உடம்பை இயல்பாக அசைக்கவோ முடியாதபடி வலியிருக்கும்.

கடைசியாக எப்ப அந்த பகுதிக்குப் போனனீங்கள்?

மார்கழி மாதம் சென்றுவந்தேன். இப்போது அங்கு பணம் சம்பாதிப்பது கஸ்டம். யுத்த காலத்தில் அதிகப்படியான படையினர் அங்கு வந்தனர். அத்துடன் அக்காலத்தில் நல்ல சம்பளம் அரசினால் அவங்களுக்கு வழங்கப்பட்டது. இப்போது குறைவானவர்களே அங்கு வருகிறார்கள். வைகாசி மாத சண்டைக்குப் பின் சம்பளம் குறைக்கப்பட்டதால்; அவர்களிடம் பணம் இல்லை. அதனால்தான் எங்களில் பலர் இப்போது உல்லாசவிடுதிகளிலும், கசினோ, இரவுநேர ஆடல் அரங்கங்களிலும், பணம் சம்பாரிக்க முயல்கிறோம்.

இந்த உல்லாச விடுதிகளில்; ராணுவ விடுமுறை பிரதேசங்கள் போல் கஸ்டப்படத் தேவையில்லை. மாதத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் கஸ்டப்பட்டாலே போதும். ஒரு மாத தேவைக்கான பணம் சேர்க்கலாம்.

இந்த உல்லாச விடுதிகளில் எந்த வகையான நபர்களை சந்திக்கிறீர்கள்?

இப்போது இங்கு வருபவர்கள் பலர் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்த்த உல்லாசப்பயணிகள். அவர்களும், பணக்கார இலங்கையர்களுமே எமது வாடிக்கயாளர்கள்…..

நீங்கள் ஏன் இந்த நிலைக்கு வந்தனீங்கள் ….?

எனக்கு மூன்று சகோதரர்கள். நான் குடும்பதில் மூத்தவள். எனது குடும்பத்தை நான்தான் பராமரிக்க வேண்டும். அம்மாவால் முடியாது.

ஏன் அப்பா இல்லையா ….?

எனது அப்பா கடற்படையில் இருந்தார். தை 2006 இல் அவர் கடலில் நடந்த சண்டையில் காணமல் போனதாக எமக்கு அரசினால் அறிவிக்கப்பட்டது. இப்போது அவரின் பென்சென் வருகிறது. ஆனால் அது எமது குடும்பத்தின் 10 நாள் தேவையே பூர்த்தி செய்யும். அத்துடன் அம்மாவுக்கு மன அழுத்தம். அவரின் மருதுவச் செலவு, சகோதரங்களின் படிப்பு செலவு, வீட்டு வாடகை, என பல சுமைகள். எனது அயலவர் தான் என்னை இதில் ஈடுபட உதவினார். அவரும் ஒரு இறந்துபோன ஆர்மிகாரரின் மனைவி. அவரும் தம் குழந்தைகளுக்காக இதில் ஈடுபடுகிறார்.

உமது எதிர்காலம் பற்றி ,…………..?

எனக்கு தெரியாது …. ஆனால் இந்த ஈனமான முறையில் பணம் ஈட்டி சீவிப்பதை என்னால் தொடர முடியாது ……

இலங்கையில் விபச்சாரம் சில தகவல்கள்:

* கொழும்பில்10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . இவர்களில் 95 % சிங்கள சமுகத்தை சேர்த்தவர்கள்.

* கொழும்பில் மட்டும் ஐம்பதினயிரதுக்கும் அதிகமான பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

*1998 இல் வெளியிடப்பட்ட ஆய்வின்படி முப்பதினாயிரம் வரையிலான (ஆண் ) சிறுவர்கள், மேற்கத்தைய உல்லாசபயனிகளால் பாலியல் வதைக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.

* கடந்த 10 வருடங்களாக இலங்கை அரசு விபச்சாரம், சிருவர்மீதான பாலியல்வதை போன்ற குற்றங்களை ஆய்வு செய்வதை மறைமுகமாக தடை செய்துள்ளது. காரணம் இவ் ஆய்வுகள் புலிகளின் சிறுவர் மீதான உரிமைமீறல் குற்றம்களை, ஒப்பிட்டளவில் பாதிப்பு குறைந்ததாக சர்வதேசம் கருதலாம் என்பதால்.

*புலிகள் தமது இருப்பை கொழும்பில் பாதுகாக்க, தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் விபசார விடுதிகளை பினாமிகள் மூலம் மறைமுகமாக நடத்தினர்.

-மா.நீனா

முன்னணி (இதழ் -3)