Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இப்படித்தான் இருக்கவேண்டும் பெண்கள் தமிழ் கலாச்சாரக் காவலர்களின் கட்டளை!

யாழ்ப்பாணம் தமிழ்மக்களின் கலாச்சார குவிமையமாம் (வடமராட்சி யாழின் மூளை என்பதுபோல்) எப்படியும் வாழலாம்;;, ஆனால் இப்படித்தான் வாழவேண்டும் என வாழ்ந்து காட்டியவர்கள் யாழ் மக்கள், அதிலும் பெண்கள்! இப்பேர்ப்பட்ட எம் மண் இன்று கலாச்சாரச் சீரழிவின். உச்சகட்டத்தில் உள்ளது என யாழின் ஊடகம் ஒன்று பெரும் கவலையாக செய்தி வெளியிட்டிருந்தது. இதை என்னே என்பது? உதை உயர் இந்து வேளாளத்தின் இறுகிய ஆணாதிக்க கருத்தியல் கொண்ட அலம்பல்களாக கொள்ளலாம்தானே!

 

யாழ்ப்பாணக் கலாச்சாரம் என்பது இடுப்பிற்கு கீழ்ப்பட்டதோ..? என இன்னொரு ஊடகத்தில் அதன் கட்டுரையாளர் ஓர் கேள்வியாக எழுப்பியிருந்தார். உண்மையில் இங்கிருந்துதான் தமிழ் கலாச்சாரம் பற்றிய விவாதத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

அண்மையில் யாழ்-நகரில் ஓர் இளம் பெண் ஓர் இளைஞனிடம் காசு இருக்கா? இருந்தால் றூம் போடுவோமா? எனக் கேட்டாளாம். உடனே அந்த கற்புக்கரசனான இளைஞனுக்கு ஆணாதிக்க கோபம் சட்டென வர அவர் அந்தப்பெண்ணின் கன்னத்தில் அறைந்தது மாத்திரமல்லாமல், வேலியே பயிரை மேயும் யாழின் காவல் நியைத்திலும் முறைப்பாடு செய்தாராம்! இதை ஓர் பரபரப்பான செய்தியாக்கியுள்ளன யாழின் 'தமிழ் கலாச்சாரம் காக்கும்' ஒருசில ஊடகங்கள். உண்மையில் மகிந்தப் பேரினவாத அரசைவிட கலாச்சாரச் சீரழிவிற்கு பெரும் துணை பேர்வது இப்பேர்ப்பட்ட ஊடகங்களும் அதன் எழுத்தாளர்களுமேயாகும்!

ஒரு காலத்தில் தமிழ் பத்திரிகைகளான மித்திரன் தந்தி போன்ற பத்திரிகைகள் எதைச் செய்தனவோ, அi-தவிடக் கேவலமான விதத்தில் செய்திகளை சித்தரிக்கின்றன. ஆணாதிக்க சிந்தனைச் செயற்பாட்டு நோக்கில் இருந்து செய்திகளை வடித்துவிட்டு, பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் அதுவும் கற்புடன் என போதனை செய்கின்றன! இந்த கற்பெனப்படுவதுதான் என்னவோ? ஆணின் எதிர்பார்ப்புக்களை பெண்களுக்குரிய விதிகளாக விதித்துள்ள சமுதாய நடைமுறையில் பெண் ஒடுக்கலுக்கான ஓர் குறியீட்டுக் கண்டுபிடிப்பே கற்பு!

வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் தாய்வழிச் சமூகம் குலைக்கப்பட்டு, தந்தைவழிச் சமுதாயம் தோன்றிய பின்னரே ஒருதாரமுறை தோன்றுகின்றது. இதில் ஆணின் தனிமனித நலனை மட்டுமே கருத்தில்கொண்டு சமூக நலன் எனும் போர்வையில் கட்டமைக்கப்பட்ட விதிகளில் ஒன்றே கற்பு. இதற்குள் கட்டுப்பட்டவள் கற்பாஸ்திரி, கட்டுப்படாதவள் விபச்சாரி. பெண்களை விபச்சாரி எனும் சமூக கட்டமைப்பு பெண்களை விபச்சாரியாக்கும் ஆண்களை ஏன் விபச்சாரகன் எனச் சொல்வதில்லை?. மாறாக மைனர் எனப் பெருமை கொள்கின்றது.

இந்த மைனர்களே தமிழ்ச்;சமுதாய கலாச்சாரத்தின் சம கால காவலர்கள் ஆகியுள்ளார்கள்! தமிழ்மக்களின் கலாச்சார குவிமையமான யாழ்ப்பாணத்தின் மானமே கப்பலேறிவிட்டதென குத்தி முறிகின்றார்கள்! தெரியாமல்தான் கேட்கின்றோம் யாழ்ப்பாணம் என்ன இந்த புராண-இதிகாசங்களின் சித்தரிப்பாக காட்டும் காவிரிப்பூம்பட்டினமா? அல்லது திருக்கைலாய மலையா? தேவர்களின் இந்திரலோகமா? தேவர் தலைவன் இந்திரன், இராமாயணத்தின் இராவணன் சங்கம்-சங்கம் மருவிய கால மன்னர்கள்; முதல் யாழ்ப்பாணத்தின் பெரும் பிரமுகர்கள், சண்டியர்கள் ஈறாக, வடக்கின் வசந்தத்தின் பாலியல் விடுதிப் பொறுப்பாளர் வரை பொம்பிளைப் பொறுக்கியள்தானே?

ஏன் பாரதத்தின் குந்தியின் மகன் கர்னனுக்கும், கற்புக்கரசி கண்ணகியின் பிள்ளைகள் லவன்-குசன் என்ற பிள்ளைகளுக்கும் அப்பன் யார்? ஆணாதிக்க கருத்துமுதல்வாத கற்பனாவாத காரணி களை களைந்தெறிந்தால் விஞ்சிநிற்பது கற்புநெறி தவறி பாலியல் சோரம் போன வரலாறு அல்லவா? இப்படி சோரம்போன வரலாறு யாழப்பாணத்திற்கு இல்லையோ? இதை;தானே கடவுள்கள் பவனி வரும் தேர்களில் சிற்பக்கலையாக வடித்துள்ளோம், வணங்குகின்றோம்!வடக்கின் வசந்தம் தமிழ்கலாச்சாரம் காக்கும் (வெள்ளை வேட்டி நானலுடன்) அசல்த்தமிழன் அதன் தோழரின் பாலிய்ல் விடுதியன் பெயர் சுமங்கலி பாலியல் விடுதிக்கு சுமங்கலி என பெயர்pட்டு வியா பாரம் நடாததும் இவர்களும் அசல் தமிழ் கலாச்சாரக் காப்பாளர்கள்தானே? இவ்விடுதியிலிருந்து கணவனை இழந்த மூன்று பிள்ளைகளின் தாயும் கைது செய்யப்பட்டிருக்கின்றாள்! இவவுக்கு இதுவும் தேவையோ? எனக்கிண்டலடிக்கும் விசம விமர்சனங்களையும் காண்கின்றோம்?

 

யுத்த அழிவின் பின்னான நொந்துபோயுள்ள எம்மினத்தை, குறிப்பாக பெண்களை பெண் போரா¬ளிகளை சமூகப் பொறுப்பற்ற நோக்கிலிருந்து ஆணாதிக்கத் திமிரிலிருந்து, காமப்பசியிலிருந்து விமர்சிப்போரை, சிங்களப் பேரினவாதத்தின் திட்டமிட்ட இனவெறி நடவடிக்கைகளுக்கு துணை போகும் போக்காளர்களாகவே கொள்ளமுடியும். வடகிழக்கில் கிட்டத்தட்ட 50,000-பேர் கண¬வனை இழந்து பிள்ளைகளுடன் விதவைகளாக வாழ்கின்றார்கள். இவர்களின் மறுமணத்தை, வறுமையின் நிமித்தமான பாலியல் தவறுகளை (ஊக்குவிப்பதல்ல) பெரும்பொருளாக சித்தரிக்கும் போக்கை கலாச்சாரக் காப்பகமாக கொள்வது, காட்டுவது சமூக விரோதம் கொண்டது.

 

ஓர் இனத்தின் கலாச்சாரம் என்பது பெண்களை உடலியல் சார்ந்து விமர்சிப்பதும், இப்படித்தான் இருக்கவேண்டும் என கட்டளையிடுவதம் அல்ல! இது ஒற்றைப் பரிமாணம் கொண்ட ஆணாதிக்க சுட்டிக்காட்டல். கலாச்சாரம் என்பது யாருக்கானது? ஆண்-பெண் என்ற இருபாலாருக்குமானது, இந்நோக்கிலிருந்து எழுப்பப்டும் சரியான பெண்ணியக் கருத்துக்கள் உள்வாங்கப்படல் வேண்டும். சகல பிற்போக்கான பழைய--இறுகியவைகள் (பெண்ணடிமை கொள்ளும்) யாவும் மீள்கட்டுமானம் செய்யப்படவேண்டும்! இதை நோக்கி நகர்த்த எம்தாயக மக்களின் தயார்நிலை எப்படியுள்ளது?

தமிழ் மக்கள், சரியான அரசியல் தலைமயற்ற வெற்றிடத்தில், தமிழர் தாயகம் இராணுவச் சிறைச்சாலையில், அதன் அரசியல் பொருளாதார கலை - கலாச்சார - பண்பாட்டுத்தளம் பேரினவாத அரசால் நாளாந்தம் திட்டமிட்டு இல்லாதாக்கும் நிலையில் இராணுவ அதிகாரிதான் வடமா கான ஆளுனர், அவரின் சாரதிதான் பாலியல் விடுதியின் மெங்க்காப்பாளர், இதற்கொத்தாசை புரிந்து (பத்திரிகை விற்பனைக்காக பாலியல் பாணியில்) எழுதுவதுதான் சில ஊடகஙகளின் வேலை,; இதை தடடிக்கேட்டால் கைதுசெய்து நையப்புடைப்பதுதான் யாழ் பொலிசின் வேலை, இதற்குள் கலாச்சாரம் காப்பதுதான் எம்கடமையென சில ஆணாதிக்க ஆண்கள்! எனவே இதற்கு விடை காணுவதுதான் பெரும் வேலை!

ஆகவே இதற்கு முன்னணி வாசகர்களின் பேருதவியும் தேவை!

எழுதுங்கள். தொடர்வோம்!