Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஈரோ நாணய நாடுகளின் நெருக்கடி முதல் தொடரும் எகிப்திய நெருக்கடி வரை




இதை நாம் தெரிந்து கொள்வது, புரிந்துகொள்வது அவசியம். இதை ஏதோ நெருக்கடி, போராட்டம் என்று மட்டும் புரிந்துகொள்வது அறிவல்ல. என்னைப்போல், உன்னைப்போல் உள்ள மக்கள், அங்கு எதற்காக போராடுகின்றனர்? நாளை இதேபோல், உனக்காக நீ போராடும் சூழல் கூட ஏற்படலாம். இந்த உலகில் என்னதான் நடக்கின்றது? போராடும் மக்கள் வெற்றி பெறுகின்றனரா? வெற்றி பெற முடியவில்லை என்றால், என்னதான் காரணம்? சக மனிதனுக்கு நடப்பதை தெரிந்துகொண்டு, அவனுக்காக நாம் எம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.



இன்று உலகில் மக்கள் ஒரு பக்கமாக அணிதிரள, ஆளும் வர்க்கங்கள் மறுதரப்பாக நிற்கின்றனர். ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான உள்ளார்ந்த நெருக்கடிகள், ஆளும் வர்க்கத்துக்கும் மக்களுக்குமானதாக மாறுகின்றது. இன்று இது உலகம் தளுவியதாக மாறி இருக்கின்றது. அலை அலையாக, ஒன்று மாறி ஒன்றாக அங்குமிங்குமாக வெளிப்படுகின்றது.

இந்த வகையில் முதலில் நாம் கிறிஸ் நெருக்கடி என்ன என்பதைப் தெரிந்து கொள்வோம். கடனை மீள திருப்பிக் கொடுக்கும் தவணை உட்பட கடனுக்கான வட்டியை கொடுக்க முடியாது போயுள்ள நிலைதான் கிறிஸ் நெருக்கடி. அதாவது இதை தொடர்ந்து கொடுப்பதற்காக, புதிய கடனை வாங்க முடியாது போய் இருக்கின்றது. இதுதான் நெருக்கடி. அப்படியாயின் யாருக்கு நெருக்கடி? வட்டிக்குப் பணம் கொடுத்தவனுக்கு நெருக்கடி, இந்த நெருக்கடியை உருவாக்கிய உலக நிதிமூலதனத்துக்கு தான் நெருக்கடி. வட்டிகாரனுக்கு தொடர்ந்து வட்டியை கொடுக்க, மக்களை சூறையாடுவதைத்தான் உலக ஆளும் வர்க்கங்கள் தேர்ந்தெடுக்கின்றது. இதனால் மக்கள் போராடுகின்றனர். அமெரிக்கா உட்பட உலகமயமாக்கலை நடைமுறைப்படுத்தும் எல்லா நாடுகளும் கடன் மற்றும் வட்டி கொடுப்பனவை அடிப்படையாக கொண்ட, வரவு செலவு திட்டத்தைத்தான் தயாரிக்கின்றன. நிதிமூலதனத்துக்கு வட்டி கொடுக்கும் வண்ணம், உலகெங்கும் திணித்த பொருளாதார கொள்கை தான் உலகமயமாக்கலின் ஒரு அங்கம். அதாவது எந்த உழைப்பிலும் ஈடுபடாத நிதிமூலதனத்துக்கு வட்டி மூலம் கொழுக்க வைக்கும் தேசிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுதான் உலகமே இன்று இயங்குகின்றது. நாட்டின் வரவில் பெரும்பகுதி, கடன் மற்றும் வட்டி கொடுப்பனவாக கொடுப்பதே தேசிய கொள்கையாக மாறிவிட்டது. தேசிய வரவில் கடன் வாங்குவது, செலவில் அதைவிட கூறுதலாக கொடுப்பதும் உலகெங்கும் இன்று அமுல்படுத்தப்படுகின்றது. இது உலகமயமாக்கல்கள் மூலம், உலகம் தளுவியளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதாவது ஒவ்வொரு நாடும் கட்டாயம் கடன் வாங்கவும், அதை செலவு செய்யவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இதன் மூலம் கடனுக்கு வட்டி அறவீடும் கொள்கை அமுல்படுத்தப்பட்டது.
1980களின் பின்னான உலகில், பெருமளவில் நிதிமூலதனம் மக்கள் மீது சுமத்தியது கொடுமையாகும். வட்டி அறவிடுவதை மையப்படுத்திய நிதிக்கொள்கைகள் உலக நாடுகள் மேல் திணிக்கப்பட்டது. இன்று அநேக நாடுகள் தம் வரவில், 50 சதவீதத்தை கடன் மற்றும் வட்டிக்காக கொடுக்கின்றனர். இதுதான் இன்றைய உலகம். நாடுகளின் தேசிய பொருளாதாரக் கொள்கை என்பது, மக்களிடம் பறித்து அதை வட்டியாக கொடுப்பதுதான். இன்று இதை கொடுக்க முடியாத அரசுகள், தேசிய சொத்துகளை விற்கின்றனர். அரசு ஊழியர்களை வேலையை விட்டு நீக்குகின்றனர். அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைக்கின்றனர். மக்களின் உழைப்பை, அவர்களுக்கு மீளப்பகிர்ந்து வழங்க கொடுக்கும் சமூகநிதிகளை (மருத்துவம், ஓய்வூதியம், வேலை இழப்பு நிதியம் என்று பல) அந்த மக்களிடம் மீளக் கொடுப்பதை படிப்படியாக குறைத்து அதை வட்டிக்காரனுக்கு கொடுக்கின்றனர். புதிய வரிகளை புகுத்துகின்றனர். இப்படி பல. இப்படி திரட்டப்படும் பணம், கடன் மற்றும் வட்டி கொடுப்பனவாக கொடுக்கப்படுகின்றது. இப்படி கொடுக்கும் வரை, அதை நெருக்கடியாக கூறுவது கிடையாது. இதை கொடுக்க முடியாத போது நெருக்கடியாகின்றது. இதுதான் நெருக்கடியின் சாரம்சம். மக்கள் தமக்காக வழமைபோல் உழைக்கின்ற கூலியில் இருந்து புடுங்கி, அதை தனக்காக, அதாவது வட்டிக்காரனுக்கு கொடுப்பதைத்தான் நெருக்கடியின் மீட்சியாக முன்வைக்கின்றது இந்த உலகை ஆளும் வர்க்கம். இங்கு வட்டிக்காரனும் ஆளும் வர்க்கமும் வேறு அல்ல.
இப்படி வரவில் இருந்து பெரும் பகுதியை கடன் மற்றும் வட்டியாக கொடுப்பது தொடர முடியாது. அரசு என்பது அடக்கியொடுக்கும் இயந்திரமாக குறுகி வருகின்றது. அதாவது வருமானம் தரக்கூடிய அனைத்து துறைகளையும், வட்டியை கொடுக்கும் வண்ணம் ஒவ்வொன்றாக விற்றுத் தீர்த்த பின் எஞ்சுவது அடக்குமுறை இயந்திரம் மட்டும் தான். தொடர்ந்து விற்று கொடுப்பதற்கும், வருமானம் மூலம் கொடுப்பதற்கு என எதுவும் மிஞ்சி இருக்காது. வரி மூலமான வரவு குறையும் அதேநேரம், உற்பத்தி மூலம் சுரண்டும் மூலதனம் மேலும் அதிகமாகச் சுரண்ட மலிவான கூலியை நோக்கி ஓட, வட்டிக் கொடுப்பனவு தொடர் நெருக்கடியாகி முற்றுகின்றது. இன்று கடன் மற்றும் வட்டி கொடுக்க முடியாது போக, உலகமயமாக்கலில் வெடிப்பு ஏற்படுகின்றது. அது நிதிமூலதனத்தின் நெருக்கடியாக மாறுகின்றது. மறுதளத்தில் இதன் சுமையை மக்கள் தொடர்ந்து தங்கள் இழப்புகள் மூலம் ஈடுகட்ட முடியாது போக, அரசுக்கும் மூலதனத்துக்கும் எதிரான மக்கள் போராட்டமாக மாறுகின்றது.
இதன் அரசியல் சாரம் என்ன? கடன் மற்றும் வட்டி கொடுப்பனவை நிறுத்தும் வரை, அதை நோக்கி மக்கள் விழிப்படைந்து போராடுவது கூர்மையாகி இருக்கின்றது. இதற்கான தீர்வு என்ன? மக்கள் தம் உழைப்பை தமதாக்கும் போராட்டமாகும். இது இன்று படிப்படியாக அதை நோக்கி வளர்ச்சியடைகின்றது. இன்று இதை வழி நடத்தக் கூடிய பாட்டாளிவர்க்க கட்சியை மக்கள் தோன்றுவிக்காத இன்றைய நிலையில், இன்று வௌ;வேறு பரிணாமம் பெற்று வெளிப்படுகின்றது. அதன் தோல்விகள் இதற்குள் தான் அரங்கேறுகின்றது. தோல்விகளிலிருந்து கற்றுக்கொண்டு மீளப் போராடுவதும், அரசியல் மயமாவதும் மிக வேகமாக நடக்கின்றது.
இதே எல்லைக்குள் தான் எகிப்திய போராட்டம் கூட. மீண்டும் எகிப்திய போராட்டம் என்பது சர்வாதிகார ஆட்சி வடிவத்தை நீக்குவதாக வெளிப்பட்டாலும், சாராம்சத்தில் இந்த அமைப்புக்கு எதிரான போராட்டம் தான். ஆனால் அதை தெளிவுபடுத்தி வழிநடத்தக் கூடிய பாட்டாளி வர்க்கக் கட்சி இல்லை என்ற உண்மைதான், மக்களை இலக்கின்றி எதிரி பற்றிய தெளிவின்றி குண்டுச் சட்டிக்குள் போராட வைக்கின்றது. உலகில் ஆளும் வடிவங்கள் அனைத்தும் வர்க்க சர்வாதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அவை முதலாளித்துவ ஜனநாயக பாராளுமன்ற வடிவங்கள் மூலம் அல்லது இராணுவ ஆட்சி ஊடாக சுரண்டும் வர்க்க சர்வாதிகாரத்தையே அடிப்படையாகக் கொண்டது. மக்களை இதற்குள் சிறை வைத்துப் பாதுகாக்கும் வடிவங்கள் பண்பு ரீதியான வேறுபாட்டைக் கொண்ட போதும் அதன் நோக்கம் ஒன்று தான். மூலதனத்தின் நலன் தான் தேர்தல் ஜனநாயகம் முதல் இராணுவ ஆட்சி வரையான அதன் பொதுக் குணாம்சம். இதை அமுல்படுத்தம் பொதுநடைமுறைக்குள் உள்ள கொள்கைரீதியான பண்புரீதியான முரண்பாடுகள், இதற்குள் மக்களை பிரித்து போராடவிடுவதன் மூலம் மக்களை சுரண்டும் மூலதன ஆட்சியை தொடர்ந்து வேறு வடிவில் திணிக்கின்றனர்.
அரபுலக எழுச்சிக்கு முன், தேர்தல் ஜனநாயகத்தை கொண்டிராத அங்கிருந்த அனைத்து ஆட்சியையும் மேற்கு ஆதரித்து அதைத் தாங்கி நின்றன. இன்னும் தேர்தல் ஜனநாயகத்தை முன்னெடுக்காத நாடுகளை, அது தொடர்ந்து பாதுகாக்கின்றது. இந்த உண்மையின் பின்னணியில், அரசு எழுச்சியை தனதாக்கிய உண்மையையும் காணவேணடும். மக்கள் எழுச்சியை வெறும் தேர்தல் ஜனநாயகமாக மாற்றியதன் மூலம், மீண்டும் மேற்கு தன்னை அங்கு தக்கவைத்துக் கொண்டது. இந்த நாடுகள் மேற்கின் நிதி மற்றும் உற்பத்தி மூலதனத்தை பெருக்கி வளப்படுத்துபவனாக தொடர்ந்து உள்ளது. இதில் மாற்றம் நிகழவில்லை. இந்த நாடுகள் மேல் திணிக்கப்பட்ட கடன் மற்றும் வட்டி அறவீடு என்று, உலகமயமாக்கலின் மூலமான ஆட்சி வடிவங்கள் தொடர வெறும் வடிவ மாற்றங்கள் தான் நிகழ்ந்தன.
இப்படி தேர்தல் ஜனநாயகம் மூலமாக போராட்டத்தை தற்காலிமாக வடிய வைக்க முடிகின்றது. மக்களின் போராட்டம் இதில் இருந்து உருவானதல்ல. இதனால் மீண்டும் போராட எழுவதை தேர்தல் ஜனநாயகத்தால் தடுக்க முடியாது. உலகமயமாதல் கட்டமைப்பில் ஏற்படும் தொடர் வெடிப்புகளை அடைப்பதன் மூலம், மக்களின் போராட்டத்தின் பின்னுள்ள அரசியல் பொருளாதார காரணங்களை இல்லாதாக்க முடியாது. மூலதனத்தின் நெருக்கடியை தொடர்ந்தும் மக்கள் மேல் சுமத்துவதால், மக்கள் அதற்கு எதிராக போராட வைக்கின்றது. மூலதனத்தையும் அதன் விரிவாக்கக் கொள்கையையும் பேணும் இந்த சமூக பொருளாதார அமைப்பு திவாலாகிவிட்டது. அதைப் பூசிமெழுகமுனையும் ஆளும் வர்க்கங்களின் வார்த்தைகளைக் கடந்து, மக்கள் தம்மை தாமே இதற்கு எதிராக தன்னியல்பாக அணிதிரட்டுகின்றனர். இது தன்னைத் தான் ஆளும் அதிகாரத்தை நோக்கிய போராட்டமாக அரசியல்மயமாகும் போது, அதை தடுத்து நிறுத்த எந்தச் சக்தியாலும் முடியாது.