Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்கள் எழுச்சியை நசுக்கும் மேலைத்தேய மூலதன உரிமை

மேற்கத்திய நகரங்களை ஆக்கிரமிக்கும் மக்கள் போராட்டம் தற்போது நெருக்கடியைச் சந்திக்கின்றது. போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இருந்த போதிலும், அரசு அடக்குமுறை வடிவங்கள் காரணமாக பின்னடைவை எதிர்நோக்குகின்றது. மேற்கத்திய நாடுகளில், மிகவும் நுணுக்கமாக அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதுண்டு. எதிர்காலத்தில் புரட்சி ஏற்படுவதை தடுப்பதற்காக, சிலநேரம் அரசே இடதுசாரித் தன்மை கொண்டதாக காட்டிக் கொள்ளும். அமெரிக்காவில் அந்த அதிசயம் நடந்தது. அமெரிக்க கோடீஸ்வரர்கள், தாங்கள் வரி கட்டப்போவதாக ஒபாமாவுக்கு கடிதம் எழுதிக் கேட்கின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதியுடனான தொலைக்காட்சி உரையாடலில் கலந்து கொண்டு, எம்மிடம் அதிக வரி அறவிடுங்கள் என்று கெஞ்சுகின்றனர். முதன் முறையாக அமெரிக்க பணக்காரர்கள், தாங்கள் வரி கட்டுவதில்லை என்ற உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொள்கின்றனர். அமெரிக்காவில் இதுவரை காலமும் இடதுசாரிகளின் வெறுப்புப் பிரச்சாரமாக கருதப்பட்ட விடயம், இவ்வாறு மக்கள் அரங்கில் நிரூபிக்கப்பட்டதாக நினைவில்லை. இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன?

நியுயோர்க் நகரில் முளைத்து, வெகுவிரைவில் அமெரிக்க நகரங்கள் எங்கினும் கிளை விட்ட OCCUPY எனும் இயக்கம் தான் காரணம். ஆக்கிரமித்தல் எனும் பொருள்படும் OCCUPY இயக்கம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது?

உலகிற்கே ஜனநாயகத்தை போதித்த நாடு என்று, அமெரிக்கா பீற்றிக்கொண்டாலும், அங்கே ஜனநாயகத்திற்கும் எல்லை வகுக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து விட்டு, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னே அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். அத்துடன் அவர்களது ஜனநாயகக் கடமை முடிந்து விடுகின்றது. OCCUPY இயக்கம் அதற்கு மாறாக, மக்களே நேரடியாக பங்கேற்கும் ஜனநாயகத்தை கோரி நிற்கின்றது. இதுவரை காலமும், பலவீனமாகவிருந்த இடதுசாரி சக்திகளுக்கு, மக்களை அணிதிரட்டுவது ஒரு சவாலாக இருந்தது. மேற்கத்திய அரசுகளும், இடதுசாரிகளின் கோரிக்கைகளை அறிவிக்காமலே நடைமுறைப்படுத்தி வந்தது. வாழ்க்கை வசதிகள் உயர்ந்திருந்த காலத்தில், மக்களுக்கும் சோசலிசத்தின் பால் ஈடுபாடு ஏற்படவில்லை. உண்மையிலேயே அரசு மக்களுக்காக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததா, அல்லது இடதுசாரி சக்திகளை அமுக்குவதற்கான தந்திரமா என்பது வேறு விடயம்.

என்ன இருந்தாலும், இன்றுள்ள மக்கள் பெருமளவு இடதுசாரிக் கருத்துகளால் ஈர்க்கப்படுவதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். தொண்ணூறுகளின் மத்தியில், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்திருந்தது. ஆனால், மேற்கத்திய நாடுகள் அந்த நெருக்கடியில் இருந்து தம்மை தற்காத்துக் கொண்டன. வளர்ச்சி அடைந்து வந்த தூர கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரமே அதிகளவு பாதிக்கப்பட்டது. அதற்கு மாறாக, 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, மேலைத்தேய நாடுகளை கடுமையாக பாதித்தது. உலகில் எந்த மூலையில் நெருக்கடி ஏற்பட்டாலும், சர்வதேச மூலதனமானது தனது தாயகத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டது. இம்முறை, வங்கிகள் இந்த நெருக்கடியை தோற்றுவித்தன. வங்கிகளை காப்பாற்றுவதற்காக, அரசு மக்களின் வரிப்பணத்தை எடுத்து செலவிட்டது. இதனால், வேலையிழப்புகள் ஏற்பட்டது மட்டுமல்ல, மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும் குறைக்கப்பட்டன.

இதுவே ஒரு மூன்றாம் உலக நாடாக இருந்திருந்தால், கடவுள் மேல் பழியைப் போட்டு விட்டு அரசு தப்பியிருக்கும். மக்களின் மதநம்பிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகளில், மக்களும் பொருளாதார நலன்கள் குறித்து சிந்திக்கப் பழகி விட்டனர். அதனால், நெருக்கடிக்கு காரணமான அரசையும், முதலாளித்துவத்தையும் நேரடியாகவே விமர்சிக்கின்றனர். மக்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், நகரங்களை ஆக்கிரமிக்கும் இடதுசாரிகளுக்கு ஆதரவை பெருக்க காரணமாக அமைந்தது.

பசித்த மனிதன் கோபமாக இருப்பான் என்ற பழமொழிக்கேற்ப, மக்கள் உணவுக்காக வீதிக்கு வந்தும் போராடத் தயாராக இருப்பார்கள். அதனால் தான், அரசு உணவுப் பொருட்களுக்கு மானியங்களை அள்ளி வழங்கி வருகின்றது. மூன்றாம் உலக நாடுகளில், மத உணர்வு, இன உணர்வு என்பன, மக்களின் கவனத்தை திசைதிருப்ப பயன்படுத்தப்படுகின்றன. மக்களின் கருத்தாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் மத்தியதர வர்க்கமும், தன்னை சிறந்த மத-இன உணர்வாளர்களாக காட்டிக்கொள்ளும். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், மேற்கத்திய நாடுகளில் இது போன்ற கருத்துக்கள் அடக்கப்பட்டன. தேசியவாதத்தின் பெயரால் ஹிட்லர் நடத்திய இனப்படுகொலையும், அதைத் தொடர்ந்து கோடிக்கணக்கான மக்களைக் காவுகொண்ட யுத்தமும், மக்கள் மனதை விட்டு அகலவில்லை. அதனால், இன உணர்வு என்றால் தள்ளிச் செல்லும் மேலைத்தேய மக்களிடம், அது போன்ற கருத்துக்கள் எடுபடப்போவதில்லை.

இருப்பினும், OCCUPY இயக்கத்தின் மீதான அரச அடக்குமுறையானது, எதிர்காலத்தில் இரண்டு வகையான அரசியல் சக்திகளை பலப்படுத்தும். மக்களுக்கு உணவு மட்டும் முக்கியமில்லை. மதம், இன உணர்வு என்பனவும் முக்கியம். என்று கூறி வரும் தீவிர வலதுசாரி பாஸிச சக்திகளை, சில நேரம் அரசே ஊக்குவிக்கலாம். அதற்கு எதிராக, தீவிர இடதுசாரிகளும் நடவடிக்கைகளை எடுக்கலாம். ஆனால், OCCUPY இயக்கத்தை தோற்றுவித்த இடதுசாரிகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால், பாராளுமன்ற தேர்தல் அரசியலுக்குள் இறங்கி சீரழியலாம். ஏனெனில், மக்கள் போராடுவார்கள், மக்கள் தீர்மானிப்பார்கள் என்று அரசியல் மயப்படுத்தப்படாத மக்கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர். முதலாளித்துவ அரசும், ஊடகங்களும் இருக்கும் வரையில் மக்களைச் சிந்திக்க விடமாட்டார்கள்.

OCCUPY இயக்கத்தை ஒடுக்கியதில் ஊடகங்களின் பங்கு குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல. ஆரம்பத்தில், மேற்கத்திய நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டங்கள் ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டன. நாட்கள், வாரங்களாகியும், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலைந்து செல்லாததால், மக்களின் ஆதரவும் பெருகியதால், வேறு வழியின்றி ஊடகங்கள் கவனத்தை திருப்பியிருந்தன. அப்போதும், அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை, பொலிஸ் வன்முறை கொண்டு ஒடுக்கியதை அறிவிக்கவில்லை.

பங்குச்சந்தை தரகர்களும், பெருநிறுவனங்களின் முதலாளிகளும், மனிதஉரிமைகளை மதிப்பதாக பாசாங்கு செய்வதற்காக எதிர்ப்பாளர்களை பொறுத்துக் கொண்டார்கள். நாள் செல்லச் செல்ல அவர்களது பொறுமையும் எல்லை கடந்து விட்டது. அடக்குமுறை பிரயோகித்து போராட்டத்தை முறியடிக்குமாறு அரசை கேட்டுக் கொண்டனர். கவனிக்கவும், இதே முதலாளிகள் தான், தங்களிடம் அதிக வரி அறவிடுமாறு ஒபாமாவிடம் வேண்டுகோள் விடுத்தனர். முதலாளிகள் மனம் திருநத் வில்லை. நேரத்திற்கு ஏறற்வாறு நெகிழ்ச்சிப் போக்கை கடைப்பிடிக்கின்றனர்.

அமெரிக்காவில், எதிர்காலத்தில் இது போன்ற போராட்டங்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக, நடவடிக்கைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய அரசுசாரா அமைப்பிற்கு, பெரும் தனவந்தர்கள் புரவலர்களாக இருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. அதேபோன்று, இலாப நோக்கை குறிக்கோளாக கொண்டு நடத்தப்படும் ஊடகங்களும், OCCUPY இயக்கத்தை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எப்போதும் சாமானியரின் உணர்வுகளோடு விளையாடும் ஊடகங்கள், இம்முறையும் எதிர்மறையான செய்திகளை பரப்பின. இந்தச் செய்திகள், OCCUPY ஆதரவாளர்கள் மனதில் கிலியை ஏற்படுத்தி, அவர்களை வீட்டுக்குள்ளே முடங்க வைத்தன. நகர மத்தியில், OCCUPY போராட்டம் நடைபெற்ற இடங்களில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன போராட்டக்காரர்கள் தங்குவதற்காக.

நண்பர்களுடன் அரசியல் விவாதங்கள் நடத்தும் நோக்குடன் அமைக்கப்பட்ட கூடாரங்கள். கறையான் புற்றெடுக்க பாம்பு நுழைந்தது போல, பல சமூக விரோதிகளும் கூடாரங்களுக்குள் தங்குவதாக செய்தி பரப்பப்பட்டது. அந்த இடத்தில், குடிகாரர்களும், திருடர்களும் நடமாடுவதாகவும், பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் தமது பாதுகாப்பு கருதி பல பெண்கள், போராட்டக்களத்தில் இருந்து பின்வாங்கினார்கள். இதை விட, வீடற்றவர்கள், உல்லாசப்பிரயாணிகள் போன்ற போராட்டத்திற்கு சம்பந்தமற்ற நபர்களும், இலவசமாக கிடைக்கும் வசதியை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நகரின் மத்தியில் இலவசமாக தங்குமிடமும், இலவச உணவும் கிடைக்கிறது. எல்லாம் OCCUPY இயக்கத்தின் புண்ணியத்தால் கிடைக்கின்றன. சுருங்கக் கூறின், OCCUPY ஆர்வலர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும், ஆனால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறுவதை மட்டுமே எதிர்ப்பதாகவும் ஊடகங்கள் நீலிக் கண்ணீர் வடித்தன. எகிப்தில், லிபியாவில், சிரியாவில் OCCUPY இயக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போதெல்லாம், ஊடகங்கள் இதுபோன்ற தகவல்களை பரப்பவில்லை. அதற்கும் முதல் பெல்கிரேட்(செர்பியா), கியெவ் (உக்ரைன்), திபிலிசி(ஜோர்ஜியா) போன்ற நகரங்களிலும் இதே மாதிரி கூடாரங்கள் அமைத்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு, சோரோஸ் பவுண்டேன் போன்ற அமெரிக்க கோடீஸ்வரர்களின் அமைப்புகள் நிதி வழங்கின. அந்த ஆர்ப்பாட்டங்களை எல்லாம், நீதிக்கான மக்கள் எழுச்சி, ஜனநாயகப் புரட்சி என்று வர்ணித்தார்கள். இந்த நகரங்களில் நடந்த போராட்டங்கள், சமூகவிரோதிகளின் கூடாரங்களாக மாறிவிட்டிருந்ததாக, எப்போதாவது கேள்விப்பட்டிருப்போமா? ஊடகங்களில் அவ்வாறான செய்தி வந்திருக்குமா? எமது அரசியல் நண்பர்கள் செய்வதெல்லாம் புரட்சி, எமது அரசியல் எதிரிகள் செய்வதெல்லாம் சமூகவிரோதச் செயல். என்பது தான் மேற்கத்திய ஊடகங்களின் தாரக மந்திரமாக இருந்து வருகின்றது.

- கலையரசன்.

இதழ்-04 (கார்த்திகை-2011 - தை 2012)