Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

உலகச் சண்டியனின் யாழ் வருகையும் மகிந்தா அடிவருடிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும்.

 

தமிழ் மக்கள் தங்களின் விடுதலைக்காக கடந்த பல சகாப்தங்களாக போராடிய போதெல்லாம் எந்த விதமான நேரடியான அக்கறையும் அற்று இருந்த அமெரிக்காவும் மேற்குலகமும்; இன்று விசேட அக்கறையுடன் தமிழ் மக்களின் பிரச்சினையினை தமது கைகளில் எடுத்து மகிந்த அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதாகவும் நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் பல அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.

 

 

உண்மையில் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களில் அமெரிக்காவிற்கு பெரும் பங்குண்டு. இறுதி யுத்தம் தொடங்கப்படுவதற்கு முன்னர் வவுனியா ராணுவத் தலைமையகத்தில் அமெரிக்கா உட்பட பல நாடுகளின் தளபதிகள் அழைக்கப்பட்டு இறுதி யுத்தம் பற்றி நன்கு விவாதிக்கப்பட்டு அவர்களின் ஒப்புதலுடன் தான் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. யுத்தத்தின் ஒவ்வொரு நிலையும் ஒப்புதல் அளித்த நாடுகளிற்கு தெரிவிக்கப்பட்டு வந்ததுடன் ஒப்புதல் அளித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் செய்மதிகள் மூலம் யுத்தத்தின் ஒவ்வொரு கட்ட நகர்வினை அவதானித்துக் கொண்டும் இருந்தன.

 

இன்று போர்குற்றம் நிகழ்ந்துள்ளது என ஓலமிடும் அமெரிக்கா அன்று இந்த 21ம் நூற்றாண்டின் பாரிய மனிதப் படுகொலையினை செய்மதியில் கண்டு உடனடியாக நிறுத்தக் கூடிய வல்லமையிருந்தும் கண்களை மூடிக் கொண்டு இதனால் தான் அடையக் போகும் பொருளாதார நலன்களைப் பற்றிய கனவில் மிதந்து கொண்டிருந்தது.

 

யுத்தம் முடிந்த பின் அமெரிக்கா கண்ட கனவிற்கு சீனாவின் வடிவில் வில்லங்கம் வந்து விட்டது. சீனா இறுதி யுத்தத்தில் புரிந்த பாரிய ராணுவ உதவி காரணமாகவும் அதன் பின்னர் நிபந்தனைகள் அற்று வழங்கிய பொருளாதாரம் (முக்கியமாக பல பில்லயன்கள் பெறுமதியான பணம்) காரணமாகவும் மகிந்த அரசினை தனது பிடிக்குள் இறுக்கி அமெரிக்கா கண்ட கனவான பொருளாதார நலன்கள் மற்றும் ராணுவ கேந்திர முக்கியத்துவம் போன்றவற்றிற்கு இடையுராக இன்று நிற்கின்றது.

 

தமது சொந்த பொருளாதார, ராணுவ நலன்களை கருத்தில் கொண்டே இன்று அமெரிக்கா தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக நாடகமாடுகின்றது. இது போன்று தான் இந்தியாவும் 1983களில் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்கள் போல் செயற்ப்பட்டு 1987இல் தமது பொருளாதார, பிராந்திய ராணுவ நலன்களிற்கு ஜே. ஆர். வளைந்து கொடுத்ததும்; தமிழ் மக்களின் விருப்பின்றி தமிழ் மக்களின் பிரச்சனைக்கு எந்தவிதமான தீர்வினையும் வழங்காத ஒரு ஒப்பந்தத்தினை ஜே. ஆருடன் செய்து கொண்ட இந்திய ஆளும் முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதி ராஜீவ் அதனை தமிழ் மக்களின் தலையில் கட்டிவிட்டான்.

 

அது போன்ற ஒரு காலகட்டத்தில் தான் தமிழர்களாகிய நாம் மீண்டும் இன்று நின்று கொணடடிருக்கின்றோம். இன்று அமெரிக்கா நேரடியாகவே மேற்குலகில் இருக்கின்ற புலிகளின் எல்லா அமைப்புக்களுடன்  தொடர்பில் இருப்பதுடன் அவர்களை தமது கட்டுப்பாட்டின் கீழும் வைத்திருக்கின்றது.


இலங்கையில் இருக்கின்ற பெரும்பாலான தமிழ்க் கட்சிகளையும், இந்தியாவில் இருக்கின்ற சில தமிழ் ஆயுதக் குழுக்களையும் இந்தியாவின் மூலம் ஒருங்கிணைக்கும் வேலையினையும் முன்னெடுத்து வருகின்றது. இவர்களை ஒன்றிணைத்து தமது பொருளாதார நோக்கங்களிற்கும், சீனாவை இலங்கையினை விட்டு அகல வைப்பதற்கும் மகிந்தா அரசின் மீது உள்நாட்டில் அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கின்றது. மறுபுறத்தில் மனித உரிமைகள் சபை, ஜ.நா ஊடாக போர்குற்ற விசாரணை என மிரட்டும் வழியிலும் அமெரிக்கா இறங்கியுள்ளது.

 

இன்று ரொபர்ட் ஓ பிளேக்கின் யாழ் விஜயமும், கூட்டமைப்புடனான சந்திப்பும்  தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்னும் அடைப்படையிலானது என இன்னமும் நாம் நம்புவோமாகின் கடந்த பல பத்தாண்டுகளாக எம்மை சுற்றி நடந்த அரசியல் விளையாட்டுக்களை புரிந்திருக்காத பூச்சியங்கள் தான் தமிழர்களாகிய நாம்.


ரொபர்ட் ஓ பிளேக்கின் வருகையினை கண்டித்து மகிந்த அடிவருடி டக்லஸ்சின் ஈ.பி.டி.பி ஆதரவில் யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது.

 

ரொபர்ட் ஓ பிளேக்கின் வருகையின் நோக்கத்தினை கண்டித்து தமிழ் மக்களின் அரசியல் நலன்களின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படடிருப்பின் நிச்சயமாக பாராட்டப்பபட வேண்டியதும், ஆதரவளிக்கப்பட வேண்டியதும் அவசியமானது.

 

இங்கு நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் தமிழ் மக்களின் அரசியல் நலன்களிற்க்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தினை அம்பலப்படுத்தி நடத்தப்பட்ட ஒன்றல்ல. இது தமிழ் மக்களை படுகொலை புரிந்த பாசிச மகிந்தா குடும்பத்தினை போர்க்குற்றச் சாட்டிலிருந்து காப்பாற்ற அரச எடுபிடிகள் பொதுமக்களை மிரட்டி பங்கு பற்ற வைத்து நடத்திய ஆர்ப்பாட்டமே.

ஆக மொத்தத்தில் அமெரிக்கா சீனா ரஸ்யா ஜரோப்பிய ஏகாதியத்தியங்களின் பொருளாதார மற்றும் ராணுவ நலன்களிற்க்காக போட்டியில் மீண்டும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை சிக்குண்டு போகும் அபாயத் தன்மையே மேலோங்கி காணப்படுகின்றது. இதனை ஏகாதியத்தியங்களிடமிருந்தும் அவற்றின் உள்நாட்டு வெளிநாட்டு அடிவருடிகளிடமிருந்தும்   மற்றும் அரச அடிவருடிகளிடமிருந்தம் மீட்டெடுத்து சரியான திசைவழியில் முன்னெடுத்து செல்வதே மக்களின் நலன்களை பேணுபவர்கள் மத்தியில் உள்ள இன்றைய பிரதான பணியாகும்.

ஜெகதீசன்

14/09/2011