Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இனங்களை ஐக்கியப்படுத்தும் நடைமுறைக்கான தடைகளை இனங்காணல்

சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 09

இந்தச் சமூக அமைப்பிலான தீர்வுகளை, பாட்டாளி வர்க்கம் சார்ந்து இருப்பதில்லை. இதற்கு பதில் தன் வர்க்கம் சார்ந்த தன் வர்க்க தீர்வுகளை முன்வைக்கின்றது. இந்த வகையில் உடனடித் திட்டம் நீண்ட காலத்திட்டம் என குறைந்தபட்சம் இரண்டை அடிப்படையாகக் கொண்டது தான் பாட்டாளி வர்க்கத் திட்டம். இதில் ஒன்றை நிராகரித்தாலும் பாட்டாளி வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வரமுடியாது. இன்று பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தயார் செய்வதில் உள்ள தடையும் இதுதான். இலங்கையின் பிரதான முரண்பாடான இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண, உடனடித் திட்டம் மற்றும் நீண்டகாலத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி அரசியல் நடைமுறைகளை முன்னெடுக்காத வரை, பாட்டாளிவர்க்கம் இதன் மேல் அரசியல் செல்வாக்கு செலுத்த முடியாது.

இலங்கையில் பேரினவாதம் ஆளுமை செலுத்துகின்றது. இதன் விளைவால் பிரிவினைவாதம் செல்வாக்கு செலுத்துகின்றது. இதை தகர்க்காமல், புரட்சிக்குப் பின் மக்களை அணிதிரட்டமுடியாது. சிங்கள - தமிழ் பாட்டாளி வர்க்கம் புரட்சிக்குப் பிந்தைய தங்கள் இலட்சியங்களில் ஓன்றிணைந்து இருப்பது போல், புரட்சிக்கு முன் ஒன்றிணைய வேண்டும்;. இதற்கான தடையென்ன? இன முரண்பாடு தான், அதற்கான தீர்வும் தான் இதற்கு இன்று தடையாக இருக்கின்றது.

பேரினவாத ஒடுக்குமுறையும், பிரிவினைவாதமும் மக்களை இன்று பிளந்து வைத்து இருக்கின்றது. இதுதான் பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைவதைத் தடுக்கின்றது. தமிழ் பாட்டாளி வர்க்கம் பிரிவினைவாதத்துடன் சேர்ந்து அரசியல் நடத்துவது எப்படித் தவறோ, அப்படி சிங்களப் பாட்டாளி வர்க்கம் பேரினவாதத்துடன் சேர்ந்து அரசியல் நடத்துவது தவறானது. பேரினவாதம் பிரிவினைவாதத்தையும் அதன் அரசியல் விளைவையும் காட்டி பேரினவாதத்தை வளர்க்கின்றது. பிரிவினைவாதம் பேரினவாதத்தையும், அதன் வன்முறையையும் காட்டி பிரிவினைவாதத்தையும் வளர்க்கின்றது. இந்த வகையில் மக்கள் இரண்டு அணியாக நேர் எதிராக அரசியல் ரீதியாக அணி திரட்டப்பட்டு இருக்கின்றனர்.

இரண்டு இன பாட்டாளி வர்க்க சக்திகளும், இதன் மேலான தொடர்ச்சியான அரசியல் எதிர் செயல்பாடு இன்றி தனிமைப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மக்களை அணிதிரட்டி இருக்கும் இன சிந்தாந்த செல்வாக்குச் சார்ந்து பயணிப்பதா அல்லது அதை எதிர்த்து பயணிப்பதா என்ற கேள்வி இங்கு எம்முன் எழுகின்றது. இனம் சார்ந்த சித்தாந்த செல்வாக்கு சார்ந்து, புரட்சிக்கு பயணிப்பது தான் புரட்சிகர பாதை என்று நம்புகின்ற புரட்சியாளர்களின் சிந்தாந்த குளறுடிதான், இன்று மக்களை இன முரண்பாட்டுக்குள் பிரித்து வைத்திருக்கின்றது.

இனம் சார்ந்த சித்தாந்தத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இதை தமிழ் பாட்டாளி வர்க்கமாகிய நாங்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றோம் என்றால் இதன் அர்த்தம் பிரிவினை வாதத்தை எதிர்த்துப் போராடுகின்N;றாம் என்பதுதான். இதன் மூலம் பெரும்பான்மை சிங்கள மக்களை பேரினவாதத்தில் இருந்து விடுவித்து, எம்முடன் ஐக்கியப்படுத்தி அணிதிரட்ட முனைகின்றோம். மறுதளத்தில் சிங்களப் பாட்டாளி வர்க்கம் பேரினவாதத்தை எதிர்த்துப் போராடுகின்றதா? இதன் மூலம் தமிழ் மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக பிரிந்து செல்லும்; உரிமையை (பிரிவினையை அல்ல) அங்கீகரித்து அவர்களை தம்முடன் ஐக்கியப்படுத்த முனைகின்றதா?

பேரினவாத ஒடுக்குமுறையையும், பிரிவினைவாதத்தையும் அடிப்படையாக கொண்ட இனம் சார்ந்த பிரிவையும் பிளவையும் தனிமைப்படுத்தும் வண்ணம், எதிர் இன பாட்டாளி வர்க்கம் இந்த இன கோரிக்கைகளின் பின்னுள்ள நியாயமாக கோரிக்கைகளை முரணற்ற ஜனநாயக கோரிக்கை மூலம் தனதாக்க வேண்டும்.

இதைத்தான் தெளிவாக லெனினின் சுயநிர்ணயம் எமக்கு வழிகாட்டுகின்றது. இது பிரிவினையை எதிர்க்கின்றது. பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்கின்றது. பலாத்காரமான ஐக்கியத்தையும் ஐக்கியப்படுத்துவதையும் எதிர்க்கின்றது. இணங்கி வாழும் ஐக்கியத்தை முன்வைக்கின்றது. இந்த வகையில் பாட்டாளி வர்க்கத்தின் கடமை மிகத்தெளிவானது. இதை புரிந்து கொள்வதன் மூலம், இதை நடைமுறையாக கொள்வதன் மூலம், இரு இன பாட்டாளி வர்க்கம் ஒரு திசையில் உடனடி மற்றும் நீண்டகால கட்சித் திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஒன்றாக ஒருங்கிணைந்து செயலாற்ற முடியும்.

பி.இரயாகரன்

04.06.2012

1.இனவொடுக்கு முறையையும், பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 01

2.தமிழ் - சிங்கள முன்னேறிய சக்திகள் ஒன்றிணைவதற்கான அரசியல் எது?- சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 02

3.அரச பாசிசத்தை புரிந்துகொள்ள புலிப் பாசிசத்தை புரிந்து கொள்ளல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 03

4.புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு புரட்சிக்கு முந்தைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 04

5.இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி ஏன் உருவாகவில்லை? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 05

6.புரட்சியின் ஏற்றத்தாழ்வான பல கட்டங்களை மறுத்தல் பற்றி - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 06

7."கோத்தாவின் யுத்தம்" ஒரு நல்வரவு - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 07

8. கட்சிக்கு ஆள் பிடிக்கும் அரசியல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 08