Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிழ்ச்சிக்காக தெரிவு செய்யும் மணவாழ்க்கை..

இரு மனங்களைப் பிளக்கும் சாதியையும், பெண்ணை வதைக்கும் தாலியையும், மனித உணர்வைக் கெடுக்கும் சாத்திரங்களையும், மனித இரத்தத்தையே கறக்கும் சீதனத்தையும் கடந்து, தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது சமூகத்தை நேரெதிராக எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. சமூகம் இதை மீறுவதைக் குற்றமாகக் காண்கின்றது. தங்களுக்கு ஏற்பட்ட அவமானமாக இழிவாக காண்கின்றது. தங்கள் வாழ்க்கைத் துணையை எந்தக் கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாகவே தேர்ந்தெடுப்பது என்பது, போராட்டமின்றி சாத்தியமில்லை. வாழ்க்கை சுமையாக்கப்பட்டு மகிழ்ச்சியே காவு கேட்கப்படுகின்றது.

பொதுவாக காதலில் உள்ள மகிழ்ச்சியும், திருமணத்தில் உள்ள மகிழ்ச்;சியும், தொடர்ந்த வாழ்க்கையில் இல்லாமல் போகின்றது. தங்கள் மகிழ்சிக்காகவே, தனக்கான துணையையும் மணவாழ்க்கையையும் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த எளிமையான உண்மை, எளிமையான வாழ்க்கையாகும் போது மட்டும் தான் மகிழ்ச்சி. இல்லாத போது மணவாழ்க்கை என்பது சுமையாக மாறுகின்றது. எளிமையான வாழ்க்கையை மறுக்கும் வரை, மகிழ்ச்சிக்கான போராட்டமாக வாழ்க்கை மாறிவிடுகின்றது.

எளிமை மறுப்பவையாக இருப்பது சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆடம்பரங்கள், நுகர்வுப் பண்பாடு, தற்பெருமைத்தனம், பகட்டுத்தனம், சுயநலம், உரிமை மறுப்புகள் என்று பற்பல. எமது சமூகம் சடங்கு சம்பிரதாயங்களுக்கு ஊடாக, கடந்த காலத்தின் ஒழுக்கங்களையும், காலாவதியாகிப் போன மதிப்பீடுகளையும் சுமந்து கொண்டிருக்கின்றது. அதை மற்றவர் மீது திணிக்கின்றது. இதை மறுதளித்து சமூகத்தில் புதிய விழுமியங்களை நிலைநாட்டப் போராடுவதும், அதையே வாழ்க்கையாக்கிக் கொள்ளப் போராடுவதும் தவிர்க்க முடியாததாகி விடும் போது, இவை வேடிக்கையான விடையங்கள் அல்ல. புதிய விழுமியங்கள் கூட, தவிர்க்க முடியாது பகுத்தறிவு பூர்வமானதாக இருக்க வேண்டும். அவை அர்த்தமற்ற இன்னுமொரு வேடிக்கையாக, மற்றொரு சடங்காக மாறிவிடக் கூடாது. காலாவதியாகிப்போன ஒழுக்கங்களையும், மதிப்பீடுகளையும் மறுக்கும் போது, புதிய மதிப்பீடுகளுக்கு பகுத்தறிவு பூர்வமாக விளக்கம் கொடுக்கும் தார்மீக கடமையையும் ஏற்படுத்தி விடுகின்றது. உணர்ச்சிபூர்வமான முடிவுகளைக் கடந்து, உணர்வுபூர்வமான தெரிவுகளை முன்வைக்கத் தூண்டுகின்றது.

மாற்றுத் திருமணம் என்பது திருமணத்தை மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றுவதற்கு தான். இன்றைய திருமணங்களின் சடங்குககளில் தொடங்கி திருமணக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுவது கூட, சடங்குத்தனமாக மாறிவிடுகின்றது. திருமணம் வெறும் சடங்காக, திருமணங்கள் கொண்டாடப்படுவதில்லை. இங்கு மகிழ்ச்சியாக பிரதிபலிப்பது எதுவெனில், தங்கள் ஆடை அணிகலன்களை மற்றவர்களுக்கு காட்டிக் கொள்ளும் தற்பெருமைதான் குரூரமான மகிழ்ச்சியாக வெளிப்படுகின்றது. தங்களை தற்பெருமைப்படுத்திக் கொள்ளும் சுய இன்பத்தையே மகிழ்ச்சியாக பீற்றிக் கொள்ளுகின்றனர். மகிழ்ச்சியை எளிமையான திருமணத்தில் காணமுடியும். திருமணங்கள் கூட்டு உணர்வுடன் கொண்டாடப்படும் போதுதான், கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியைக் காணமுடியும்.

இதை விடுத்து சாதி பார்த்து, அந்தஸ்து பார்த்து,.. பெற்றோரின் தெரிவுக்குத் தலையாட்டி, மற்றொருவன் புரியாத மொழியில் மந்திரங்களை உச்சரிக்க, குறித்த நேரத்தில் தாலியைக் கட்டிவிட்டால் அதைத்தான் இன்று திருமணம் என்கின்றனர். இதுவா திருமணம்!? இதுதான் வாழ்க்கையா!? இந்தப் பின்புலத்தில் உப்புச் சப்பற்ற திருமண சடங்குகளும் சம்பிரதாயங்களும் கூட வியாபாரமாகிவிட்டன. நுகர்வுக் கலாச்சாரம் ஆடம்பரமாகி திருமணமாக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது. சீதனத்தை வாங்குவதும் கொடுப்பதுவும், திருமணத்துக்கு வருபவரிடம் பணம் கறக்கப்படுவதுமே திருமணம் சார்ந்த மனித உறவுகளாக்கப்படுகின்றது. தின்னாமல் குடியாமல் உழைத்து உழைத்து சேமித்த பணத்தை, அர்த்தமற்ற போலித் தற்பெருமைக்குள் அழித்துவிடுகின்ற, வித்தியாசமான கூத்துக்கள் இன்று திருமண விழாவாக்கப்படுகின்றது. மற்றவருடனான போட்டியும், சுய கௌரவமும், தற்பெருமையும், வரட்டுவாதமும் மனித எண்ணமாக மாறுகின்றது. மனித உறவுகள், மனிதப் பண்பாடுகள் எல்லாம் காணாமல் போகின்றது.

உண்பதில், உடுப்பதில், அழகுபடுத்துவதில் ஏற்படும் அன்றாட மகிழ்ச்சி கூட, எளிமையைக் கடந்து நுகர்வாகவும், விளம்பரமாகவும் மாறிவிடும் போதும் அதில் இருக்கக் கூடிய மகிழ்ச்சி கூட இன்று இழக்கப்படுகின்றது. நுகர்வையம், விளம்பரத்தையும் கொண்ட மனிதப் பண்பாடு மட்டுமே, மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிற விடையமாகும் போது, வாழ்க்கையே விளம்பரமாகி சுய நடிப்பாகி விடுகின்றது. விளம்பரத்திலும், சினிமாவிலும் நடிக்கும் அதே கற்பனைக் காட்சிகளை, எமது வாழ்க்கையாக்கி நடிக்க முனைவதே திருமணமாகிவிட்ட பின்னால் வாழ்க்கையே நடிப்;பாகி விடுகின்றது. இதை ஊக்குவிக்கும் வியாபாரிகள், திருமணத்தைச் சுற்றி சடங்குளையும் சம்பிரதாயங்களையும் காப்பாற்றும் நிறுவனங்கள் ஆகிவிட்டனர்.

தனித்தனி மனித உலகமாக, தனிமனித சிந்தனையை வாழ்க்கையாக மாற்றக் கோருவதே இன்றைய விளம்பர வியாபார உலகம். நுகர்பொருளையும், தன்னையும் முதன்மையாக்கும் உலகில், இருவர் சுதந்திரமாக சேர்ந்து வாழ முற்படும் போது அதற்குள் விளம்பரமும் வியாபாரமும் திணிக்கப்படுகின்றது. இங்கு போலித்தனமும், புல்லுருவித்தனமும் இணைந்து விடுகின்றது.

சாதியமும், மதவாதமும்;, இனவாதமும், நிறவாதமும், ஆணாதிக்கமும், சுயநலமும், பிழைப்புவாதமும்... மனித உறவுகளை சிதைக்கும் அச்சாணியாக இருக்கின்றது. இதற்குதான் சகுனம், சாத்திரம், மூடநம்பிக்;கை, சடங்குகள், சம்பிரதாயங்கள், சாதி, அந்தஸ்து என்று எத்தனையோ கோட்பாடுகளும், நம்பிக்கைகளும்;. இதைத் தாண்டி திருமணங்கள் நடப்பது என்பது இன்று சாத்தியமற்றதாக இருக்கின்றது. சுதந்திரமான, ஜனநாயகபூர்வமான மணத் தேர்வை கொண்ட மணவாழ்க்;கைகள் நடப்பதில்லை. ஏனோ தானோ என்று திருமணத்தின் பின் வாழ்வது நடக்கின்றது. ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண் அல்;லது பெண் மேலாதிக்கம் கொண்ட குடும்பங்களாகவே இருக்கின்றனவே ஒழிய, இணையான குடும்பங்களாக இருப்பதில்லை.

தனிமனித பலவீனங்கள், அற்ப ஆசைகள், தனிப்பட்ட பழக்கங்கள், சுயநலம் ஆகியன சமூக மதிப்பீடுகளுக்கு முரணானது. இந்த முரண்பாடுகளுக்கு எதிரான ஆற்றல் தான் மகிழ்ச்சியாக மாறுகின்றது.

தன் பிள்ளைக்காகப் பட்டினி கிடப்பதை ஒரு தாய் துன்பமாகக் கருதுவதில்லை. இயற்கை சார்ந்தும், குடும்பம் என்ற சமூகக்கூறு வாழ்க்கை மகிழ்ச்சியாக மாற்றுகின்றது. இதே சமூக அடிப்படைதான், சமூகம் சார்ந்த ஒன்றாக மனித வாழ்க்கை மாறும் போது முழுமையான மகிழ்ச்சியை அடைய முடியும்;.

மணத் துணையைத் தேர்ந்தெடுத்தல்

பெற்றோரின் சுயவிருப்புக்கும் சுயநலனுக்கும் ஏற்ப தலையாட்டுவதற்கு பதில், தனது துணையை தேர்ந்தெடுக்கவே போராட வேண்டி இருக்கின்றது. இப்படித்தான் காதலும், வாழ்க்கையும் தொடங்கப்படுகின்றது. புதிய தங்கள் வாழ்க்கைக்கான போராட்டம் புதிய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கின்றது. எதையும் எடுத்தெறிந்துவிட முடியாத, வெறும் தர்க்கமாக்க முடியாத, தார்மீகப் பொறுப்பையும் கடமையையும் ஏற்படுத்தி விடுகின்றது.

எமது சமூகத்தில் ஏன் எதற்கு என்ற பகுத்தறிவு இன்றிய வாழ்க்கைமுறை தான், பகுத்தறிவற்ற திருமண சடங்குகள், சம்பிரதாயங்களைச் செய்ய வைக்கின்றது. இதை மறுத்து நிற்கும் போது தமக்குள் உடன்படுவதில் இருந்து, பெற்றோரை உடன்பட வைப்பது என்று பல விடையங்களை கடந்து நடக்கும் திருமணங்கள் புதிய தலைமுறைக்கு முன்மாதிரியான திருமணமாக மாறிவிடுகின்றது. இந்த வகையில் புதிய தலைமுறையுடன் உரையாடலை உருவாக்குகின்றது. பெற்றோருடன் உரையாடலை தொடர்வதற்கான அடிப்படையாகின்றது.

இன்று சாதி முதல் சமூக அந்தஸ்தைக் கடந்து காதலிப்பது கூட போராட்டமாகத்தான் இருக்கின்றது. தாலி மறுப்பு, சடங்குகள் மறுப்பு, சம்பிரதாய மறுப்புகள் என்று வாழ்க்கை தொடங்குவது வாழ்க்கைக்கான பொதுப் போராட்டமாகின்றது. குடும்பம், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், சமூகம் என்ற எத்தனையோ பேரின் கேள்விக்கு, வாழ்க்கை பூராவும் பதில் சொல்ல வேண்டி இருக்கின்றது. மகிழ்சிக்கென தெரிவு செய்யும் மணவாழ்க்கை, மகிழ்சியை காவு கொள்ளும் படி, பகுத்தறிவற்ற சடங்குக்கு பின்னால் நிற்கும் சமூகம் கோருகின்றது. பெற்றோரும் உற்றாரும் ஆதிக்கம் செய்யும் நிலையில், திருமணங்கள் கூட சுமையாக்கப்படுகின்றது.

மகிழ்ச்சிக்காகத் தெரிவு செய்த மணவாழ்க்கை தொடங்கும் போது, சமுதாயத்தின் அர்த்தமற்ற சடங்குகள் சம்பிரதாயங்களுடன் போராட்டம் ஆரம்பிக்கின்றது. மண வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது தங்கள் சுயத்தையும், தெரிவையும் நிலைநாட்ட வேண்டி இருக்கின்றது. பகுத்தறிவு பூர்வமாக மணவாழ்க்கையை அமைத்துக் கொள்ள முனையும் போது, பலவற்றை கற்றுக்கொள்ள வைக்கின்றது. இந்தச் சந்தர்ப்பம் இன்று பலருக்கு கிடைப்பதில்லை. பொம்மை போல் தலையாட்டாது எப்படி வாழ வேண்டும் என்ற சுய தெரிவு, தன் துணையைத் தேர்ந்தெடுப்பபதில் மட்டுமல்ல, அனைத்திலும் பகுத்தறிவு பூர்வமாக அணுகுவதையும் கூட வாழ்க்கையாக்குகின்றது. வழமையாகத் தலையாட்டும் மரபில் இருந்து மாறுபட்ட திருமணங்கள், பலருக்கு முன்னுதாரணமிக்கதாக இருக்கும் அதேநேரம், முன்னுதாரணமிக்க திருமணம் மேலும் பல படி கடந்து சிந்திக்குமாறு தூண்டுகின்றது.

இன்று எமது சமுதாயத்தில் மணவாழ்க்கைக்கான தன் துணையைத் தேர்ந்து எடுக்க சுதந்திரத்துக்காகவே போராட வேண்டியிருக்கின்றது. தானே சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும் காலாவதியான மதிப்பீடுகளையும், ஒழுக்கங்களையும், தூக்கியெறிய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சுமையை, மற்றவர் மீதும் சுமத்திவிட முனைகின்றனர். அதைச் செய்ய முடியாமல் போகும் போது, வருந்தி வரவழைக்கும் வருத்தமும் துன்பமும் கூட அவர்களுக்கு சுமையாகி விடுகின்றது. இதைத்தான் தங்கள் குழந்தைகளுக்கு எதிராக இன்று பல பெற்றோர்கள் செய்கின்றனர்.

மகிழ்ச்சிக்காக தாங்களாக இணைந்து அமைத்த மண வாழ்க்கையை, பல பெற்றோர்கள் மறுத்துவிடுகின்றனர். பொருளையும், ஆடம்பரத்தையும், அந்தஸ்தையும், போட்டியையும், தற்பெருமையையும்.... தங்கள் மகிழ்ச்சியாக மாற்றிக் கொண்டு, போலியாக வாழ்வதை பெருமையாக்குகின்றனர். அதைப் பற்றி பெருமை அடித்துக் கொள்கின்றனர். இதை அடைவதற்காக வாழ்க்;கையில் அடையும் தங்கள் துன்பத்தையே, மகிழச்;சியாக காட்டிக் கொண்டு நடிக்கின்றனர்.

இரு வேறுபட்ட மனிதர்கள் ஒன்றுபட்டு இணைந்து வாழ்தல் என்பது, போராட்டம் இன்றி சாத்தியமில்லை. இருவர் இணையும் போது "விட்டுக் கொடுத்து வாழக் கோரி" வாழ்த்தும் எமது திருமணங்கள், அங்கு இணையான கூட்டு மணவாழ்க்கையை மறுத்துவிடுக்கின்றனர். அவர்களுக்கு இடையில் ஜனநாயகத்துக்கான கூறுகளை இல்லாதாக்கி விடுகின்றனர். தனிமனித மேலாண்மைக்கு "விட்டுக் கொடுக்க" கோருகின்றனர். "விட்டுக் கொடுத்து வாழ்தலுக்கு" பதில், பகுத்தறிந்து வாழ்வதன் மூலம், இணைந்து வாழ்வதே மகிழ்சிக்கான அடிப்படை.

மகிழ்ச்சி என்பது எளிமையான ஆர்ப்பாட்டம் இல்லாத வாழ்க்கையில் இருந்து தொடங்குகின்றது. எவ்வளவுக்கு எளிமையாக வாழ்க்கையை மாற்றுகின்றோமோ, அங்கு மகிழ்ச்சி இயல்பாகத் தொடங்குகின்றது. தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாக இருக்காது, சமூகத்தின் இன்ப துன்பங்களுடன் இணையும் போது, மகிழ்ச்சியே பொது வாழ்வாகி விடுகின்றது.

தன்னை மையப்படுத்தி விடும் போது துன்பம் தொடங்குகின்றது. அது ஆடம்பரமான வாழ்வாக மாறும் போது துன்பம் அதிகரிக்கின்றது. மகிழ்சிக்குப் பதில் துன்பமே வாழ்வாக தொடங்கிவிடுகின்றது. இருவர் தங்கள் வாழ்க்கையை எளிமையாக, ஜனநாயகப்பூர்வமாக அமைத்துக் கொள்வதில் தொடக்கவேண்டும். தங்கள் வாழ்க்கையைக் கடந்து, பொது நலனை மையப்படுத்தும் போது தான், சுயநலம் கடந்த மனிதத்தன்மையை அது வழங்குகின்றது. சுயநலமற்ற வாழக்;கை தான் மகிழ்ச்சிகான ஆரம்பப்புள்ளி. வாழ்வில் சமத்துவமும், மகிழ்ச்சியும் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆண் எப்படிப்பட்டவனாகவும் இருக்கலாம் என்ற மதிப்பீடும், பெண் அடிமைத்தனத்தை எதிர்ப்பவளாய், சுயமாகச் சிந்திப்பவளாய் இருக்கக்கூடாது என்ற இன்றைய மனித அறங்களும், குடும்பத்தின் இலட்சணமாகக் கொண்டதே இன்றைய குடும்பங்கள். இதைக் கடந்த இரு வேறுபட்ட ஆளுமைகளைக் கொண்டவர்கள் பரஸ்பரம் அங்கீகரித்து, இணைந்து இணையாக உருமாறி வாழ்வது என்பதே மகிழ்சிக்குரிய முதல் வித்தாகின்றது. இப்படி தமக்குரிய போராட்டத்தில் மலரும் புதிய உறவுகள் தான், சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்க முடியும்.

ஆணாதிக்க சமூக அமைப்பில் பெண்ணின் உரிமையை அங்கீகரிக்கும் ஜனநாயகத்தில் இருந்து வாழத் தொடங்க வேண்டும். ஆணும் பெண்ணும் இணைந்து, பகுத்தறிவு மூலம் இணைந்து வாழ முற்பட வேண்டும். ஆணாதிக்க சிந்தனை முறையில், ஆண் அல்லது பெண் மேலாதிக்கம் செய்யும் குடும்பங்களில் மகிழ்ச்சி இருப்பதில்லை. மனிதன் சுதந்திரமானவனாக இருக்க, சுயநலமற்றவனாக சமூகப் பொறுப்புணர்வு கொண்டவனாக இருப்பது அவசியம்;. ஒரு தவறை சுட்டிக் காட்டும் பொழுது தவறு என தெரிந்தால் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பது தான் தவறு. தவறு என்று தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பது, வீம்பாக நின்றுகொண்டு நியாயப்படுத்தி வாதம் செய்வது மனித (குடும்ப) உறவுகள் சிதைவதற்கு அடிப்படையாக மாறுகின்றது.

மகிழ்ச்சி என்பது எது? கண நேர பாலியல் நுகர்வல்ல. நுகர்பொருளை நுகர்வதல்ல. பொருளை அடைவதல்ல வாழ்க்கை. ஆடம்பரமாக வாழ்வதல்ல வாழ்க்கை. சுயநலமாக இருத்தல் அல்ல வாழ்க்கை. இதுவல்லாத வாழ்க்கை முறைதான் மகிழ்சியைத் தரும்.

காதல் என்பது இயற்கையின் தேர்வு. இயற்கையான மனித உணர்வு என்பது கூட்டு வாழ்கை முறை. அன்பாக, பகுத்தறிவாக, பரஸ்பரம் உணர்வினை மதித்து உரிமைக்கு இடமளித்து வாழ்வை தேர்ந்தெடுப்பதை வாழ்க்கையாக்குவோம். உறுதியான நேர்மையுடனும், நியாயத்துடன், பகுத்தறிவு பூர்வமான தர்க்கத்துடன் கூடி மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகின்றோம்.

பி.இரயாகரன்

15.08.2013

பின்குறிப்பு : எமது தோழரின் மகளின் திருமணத்தில் தாலி மறுப்பு, சடங்குகள் மறுப்பு, சம்பிரதாய மறுப்பு ஒட்டி எழுதிய கட்டுரை. இதற்கு மாற்று மற்றொரு சடங்குமல்ல, எம்மைச் சுற்றிய திருமணங்களில் கோலோசிக் கிடக்கும் நுகர்வுப் பண்பாடுமல்ல. மாறாக எளிமையான, சம்பிரதயமான சடங்குத் தனமான கொண்டாட்டத்துக்கு பதில் கூட்டு உணர்வுட்டும் வண்ணம் கொண்டாடப்பட வேண்டும்.