Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

முள்ளிவாய்க்கால் எப்படி அரங்கேறியதோ அப்படி கமென்வெல்த் மாநாட்டை நடத்த முனைகின்றனர்

முள்ளிவாய்க்காலில் வெளியுலகில் இருந்து மூடிமறைத்து எப்படி படுகொலை செய்தனரோ, அதே பாணியில் காமென்வெல்த் மாநாட்டை மூடிமறைத்து தங்கள் பாசிசக் கூத்துக்களைக் காட்ட முனைகின்றனர். பிரிட்டிஸ் காலனிய விசுவாசிகளின் வாரிசுகளல்லவா இவர்கள் அனைவரும். யாரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல்ல. உலகமயமாதலில் தமக்குள் இடம்மாறி நிற்கின்றவர்கள் நடத்துகின்ற சதுரங்க ஆட்டத்தில், மனிதவுரிமைகள் சூதாட்டப் பொருளாகியுள்ளது.

மனிதவுரிமைக்காக இலங்கை மக்கள் போராடக் கூடாது என்பதே, காமன்வெல்த் மாநாட்டு தலைவர்களின் கொள்கை. தாங்கள் தமக்குள் இதைத் தீர்த்துக் கொள்ளும் விடையமாக்கி, மக்களை தமது வாலாக்கி இருக்கின்றனர்.

மனிதவுரிமையைக் கூட குறுக்கிக் கேலிக்குரியதாக்கி விடுகின்றனர். அனைவருக்குமான இலவசக்கல்வி, மருத்துவம், சுத்தமான நீர் முதல் வாழ்விடம், உணவு என்று அனைத்தையும் இலங்கை மக்கள் இன்று இழந்து வருகின்றனர். இவை மக்களுக்குரிய அடிப்படை மனிதவுரிமையல்ல என்பதே, கமென்வெல்த் நாடுகளின் பொதுக்கொள்கை. மனிதவுரிமை என்பதை இதில் இருந்து குறுக்கி, யுத்தம் சார்ந்த ஒன்றாக முடக்கி முன்னிறுத்துகின்றனர். அடிப்படையான மனிதத் தேவைகளை மறுக்கும் தமது சொந்த மனிதவுரிமை மீறலுக்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கையையே, மனிதவுரிமையாகப் பேசுகின்றனர்.

இப்படி இருக்க கமென்வெல்த் மாநாடு பற்றிய குறுகிய கோசங்கள், மக்களை ஏகாதிபத்தியத்தின் பின் செயலற்றதாக்குகின்ற அரசியல் சாரத்தைக் கொண்டது. கமென்வெல்த் மாநாட்டு நோக்கம் என்பது, சந்தையை பங்கிட்டுக்கொள்கின்ற நாடுகளின் சதுரங்க ஆடுகளமே. இங்கு மனிதவுரிமைகள் சில ஆடுகளத்தின் காய்களாகி இருக்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பான போராட்டங்களை பலி கேட்கின்றது. தங்கள் ஏகாதிபத்திய நலனுக்கு கீழ் போராடுவதன் மூலமே வெல்ல முடியும் என்று ஏமாற்றி, போராட்டங்களை அழித்தொழிக்கும் முயற்சிகள் நடந்தேறுகின்றது.

தாங்கள் மட்டும் தனித்துப் போராடி வரும் நிலையில், அன்னியர்களை நம்பி அவர்களிடம் தீர்வு காணக் கோருவதன் மூலம், மாற்று வழியில் போராடுவதை தடுத்து நிறுத்துகின்றனர்.

தமிழ் மக்களை அரசியல் அனாதையாக்கிவிட்ட தேசியவாத, இனவாத அரசியல் வெற்றிடத்தில், தன்னெழுச்சியான போராட்டங்கள் மக்களை அரசியலில் அரசியல் மயப்படுத்துவதற்கு பதில், அன்னிய சக்திகளின் தேவைக்குள் முடங்கிப்போகும் வண்ணம் குறுக்கப்படுகின்றது. சிங்கள மக்களில் இருந்து தமிழ்மக்கள் அன்னியமாகும் வண்ணம், போராட்டங்களைக் குறுக்கி முடக்கிப் போடப்படுகின்றது. சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக போராடக் கூடாது என்பதே, தமிழ் இனவாதிகளினதும் ஏகாதிபத்திய மனிதவுரிமைவாதிகளினதும் கொள்கையாகும்.

முள்ளிவாய்க்காலில் அன்னியர்கள் இறங்கி மீட்பார்கள் என்று காட்டிக் கொடுத்து, கொன்று குவித்த அதே கேலிக்கூத்துகளை போராடும் மக்களுக்கு எதிராக மீண்டும் அரங்கேற்றுகின்றனர்.

புலம்பெயர் நாட்டில் இனவாத பிழைப்புவாதம் மேற்கு ஏகாதிபத்தியம் சார்ந்தும், தமிழ்நாட்டில் இனவுணர்வு மூலம் தூண்டப்படும் இனவாதம் இந்திய மேலாதிக்க நலன் சார்ந்தும் நிற்கின்றது. இந்திய அரசு மூலம் தீர்வு என்ற மகுடியை கொண்டு, மகிந்தா காட்ட முனையும் கமென்வெல்த் பாசிசக் கூத்தையே காட்ட முனைகின்றனர்.

இவை எவையும் மக்களின் சொந்தக் கால்களில் நின்று போராடுவதைக் கோரவில்லை. அனைத்தும், மக்கள் சார்ந்த போராட்டத்தை மறுதளிக்கின்ற ஒன்றாகவே முன்தள்ளப்படுகின்றது. மக்கள் தமக்காக தாம் போராடுவது இலங்கையில் சாத்தியமில்லை என்ற அடிப்படையில் இலங்கை மக்கள் மேல் திணிக்கப்படுகின்றது. அன்னிய சக்திகளின் தயவில் ஏதாவது கிடைக்கும் என்ற, கைக்கூலித்தனத்தை முன்வைத்து கோசங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

மறுதலையாக மக்கள் தமக்காக தாம் தன்னியல்பாகப் போராடுகின்றனர். இதைத் தடுப்பதன் மூலம், அன்னியரிடம் முறையிட்டு வெல்லமுடியும் என்று மாமா வேலையைத்தான் இலங்கையில் உள்ள இந்திய-மேற்கு கைக்கூலிகள் செய்கின்றனர்.

இந்தியா அல்லது மேற்கு அல்லது இரண்டும் சார்ந்த கூட்டமைப்பின் இனவாத அரசியல், மக்களின் தன்னியல்பான போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து சரணடைய வைக்கின்றது. காலாகாலமாக செய்த அதே இனவாத அரசியல் துரோகம் மூலம், மக்களை ஏமாற்றி படுகுழியில் தள்ளுகின்ற வேலையையே தொடர்ந்தும் செய்கின்றனர்.

முரண்பட்ட ஏகாதிபத்தியங்கள் சார்ந்து அரசுக்கு எதிராக திசைமாறி எழும் போராட்டத்தை முடக்கும் வண்ணம், பாசிச கேலிக்கூத்தை அரசு அரங்கேற்றுகின்றது. இராணுவ மற்றும் கைக் கூலிகளைக்கொண்டு, போட்டி ஏகாதிபத்தியங்களின் சுயாதீனமான செயற்பாட்டை இலங்கையில் முடக்க முனைகின்றது.

கமென்வெல்த்தில் தனது பாசிசக்கூத்தைக் காட்ட முனையும் அதேநேரம், முழு சமூகத்தையும் மூடிக் கட்டிவிட முனைகின்றது. போராடும் மாணவர்களைத் தடுக்க பல்கலைக்கழகத்தையே மூடுகின்றது. காணாமல் போனவர்களைத் தேடி கொழும்பு வருபவர்களை வரவிடாமல் வீதியை மூடுகின்றது. வடக்குக்கான விமானப் பறப்பை நிறுத்தி, வடக்கு விமான நிலையத்தை மூடிவிடுகின்றது. ரயில் மூலம் ஊடகவியலாளர்கள் வடக்கு செல்வதை தடுக்க, ரயில் பாதையை கைக்கூலிகளைக் கொண்டு மூடுகின்றனர்.

இப்படி உண்மைகளை சுயாதீனமாக தெரிந்து கொள்வதை மூடிவிடுவதன் மூலம், வெல்ல முடியும் என்று நம்புகின்றது அரசு. அதற்கு பதிலாக வாருங்கள், மக்களின் பணத்தில் எங்களுடன் தின்று புரண்டு தங்கள் பாசிசக் கூத்துகளை கண்டு கழியுங்கள், மக்களை தொடர்ந்து கொள்கை அடிக்கும் முதலீடுகள் பற்றியும் முழு மனிதவுரிமைகளையும் பறிக்கும் சதித்திட்டம் பற்றியும் பேசுங்கள் என்கின்றது. உங்கள் சந்தைக்கான சண்டையை எங்கள் பாசிசக் கூத்துக்குள் ஆடாதீர்கள் என்பது அரசின் கொள்கை.

இதைப் பகிஸ்கரிப்பது, கலந்து கொள்வதுக்குள் அரசியலை முடக்கி, கலந்து கொள்பவருக்கு ஆட்டம் பாட்டம் காட்டுவது போல் போராடிக்காட்டுகின்ற அரசியல் மக்கள் அரசியலல்ல. மக்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த கடந்தகால அதே மக்கள் விரோத அரசியலே தொடர்ந்து அரங்கேறுவதை இனங்கண்டு கொண்டு போராடுவதே மக்கள் சார்ந்த அரசியலாகும்.

பி.இரயாகரன்

14.11.2013