Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசியல் கைதிகளின் போராட்டத்தை முடக்க முனையும் கூட்டமைப்பு

இனவாதிகள் மட்டுமல்ல தமிழ் மக்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பும், சிறைக்கைதிகளின் போராட்டத்தை முடக்க முனைகின்றது. சிறைக்கைதிகளின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக சமவுரிமை இயக்கம்; கைதிகள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலையில் கரிசனையுடன் செயற்படும் அமைப்புக்கள், அரசியல்வாதிகள் அனைவரையும் ஒருங்கிணைந்த ஒரு போராட்டத்தை கொழுப்பு கோட்டை புகையிர நிலையத்தின் முன்பாக நடத்தியது. இதன் பின்னர் பலதரப்பினரது போராட்டங்கள் பல்வேறு இடங்களில் நடக்கும் நிலையில், சமவுரிமை இயக்கம் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து முன்னெடுக்கவுள்ள அடுத்த கட்டப் போராட்டங்களை முடக்க அரசும்-கூட்டமைப்பும் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.

கடந்த மே மாதம் சமவுரிமை இயக்கம் கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, அரசு-கூட்டமைப்பு தங்களது இரகசிய தேர்தல் உடன்பாட்டின் படி, கூட்டு தேர்தலில் வெற்றி பெறுவதுக்கு ஏற்ப, கைதிகளின் விடுதலை தொடர்பாக பொய்யான வாக்குறுதியை வழங்கியதன் மூலம் கைதிகள் போராட்டம் தொடர்வதைத் தடுத்து நிறுத்தியன.

இந்தப் பின்னணியில் சமவுரிமை இயக்கம் அடுத்த போராட்டத்துக்கான நீண்ட தயாரிப்பைச் செய்து வந்தது. தமிழ் - சிங்கள மொழி பேசும் மக்கள் இணைந்த ஒரு போராட்டத்தை அரசியல் கைதிகளின் விடுதலைக்காக முன்னெடுப்பதும், இதன் மூலம் இனவாதத்துக்கு எதிராக மொழி கடந்து அனைத்து மக்கள் முன் இதை சமூகமயமாக்குவதன் மூலம் தீர்வு காண்பதே சமவுரிமை இயக்கத்தின் அரசியல் முன்னோக்காகும்.

இதைத் தடுத்து நிறுத்தும் ஒரு அங்கமாக, சமவுரிமை இயக்க போஸ்ட்டர்களை யாழ்ப்பாணத்தில் சாணி அடித்துக் கிழிக்கப்பட்டன.

மறுபக்கத்தில் சம்மந்தன் தான் ஜனாதிபதியுடன் பேசியதாகக் கூறி, கைதிகளுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி விடுதலை கோரி நடாத்திய உண்ணாவிரத போராட்டத்தை முடக்கும் வண்ணம், கைதிகளின் ஒரு பகுதியினரின் விடுதலை பற்றிய அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, இவ்வருட இறுதிக்குள் கைதிகள் விடையதுக்கு தீர்வு வரும் என்கின்றார். இப்படி அரசியல் கைதிக்ளின் விடுதலைக்காக கைதிகளும், குடும்பத்தினரும், உறவினர்களும், பல்வேறு மக்கள் அமைப்புக்களும், சமவுரிமை இயக்கமும் ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுத்த இந்தப் போராட்டத்தை முடக்க அரசும் - கூட்டமைப்பும் இணைந்து அறிக்கைகளும், இன்னொரு பக்கத்தில் எச்சரிக்கை - போஸ்டர் கிழிப்பு என்று அரங்கேற்றுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் சாணி அடித்தவர் - அதைக் கிழித்தவர்கள் யாராக இருக்க முடியும்? தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாகவும், தம்மால் மட்டும் தான் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்றும் கூறிக் கொள்கின்றவர்கள் தான். தம்மை மீறி சமவுரிமை இயக்கமா? என்ற இனவாத வக்கிரத்துடன் இதைச் செய்திருக்கின்றனர். முந்தைய மகிந்தா அரசு காலத்தில் கழிவு ஒயிலுக்கு பதில், புதிதாக "யாழ்ப்பாணத்தானின்" சாணி அடிப்பு மூலம் தாங்கள் யார் என்பதை வெளிப்படையாக அம்பலமாக்கி நிற்கின்றனர்.

தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக கூறிக்கொண்டு தேர்தலில் வென்றவர்கள் இன்று கைதிகளையும், கைதிகளின் குடும்பங்களையும், "தீண்டத்தகாதவர்களாக" நடத்துகின்ற விதமும், கைதிகள் விவகாரம் முன்னுக்கு வரும் போது மூக்கை நீட்டி முறியடிப்பதுமே கூட்டமைப்பின் மக்கள் விரோத அரசியலாக இன்று வரை தொடருகின்றது.

சமவுரிமை இயக்கம் தேசிய இனப்பிரச்சனை தொடக்கம் கைதிகள் விவகாரம் வரை, தமிழ்-சிங்கள மொழி பேசும் மக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்வைக்கின்றது. இனவாதம் கடந்து மக்கள் ஒன்றுபட்டு போராடுவதன் மூலம் மக்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறவும் வெற்றி காணவும் முடியும் என்பதை முன்னோக்காகக் கொண்டு இலங்கையிலும், நாடுகடந்து வாழும் இலங்கையர் மத்தியிலும் போராடுகின்றது.

இந்தவகையில் தமிழ்-சிங்கள மொழி பேசும் மக்களும், கைதிகளும் ஒருங்கிணைந்த போராட்டம்; ஆளும் வர்க்கத்துக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் கலக்கத்தைக் கொடுத்து இருக்கின்றது.

அரசு - கூட்டமைப்பு இணைந்து கொள்வதும் - தங்களுக்குள் தீர்வு காண்பதையும் மட்டும் தான் அங்கிகரிக்க முடியும், தமிழ்-சிங்கள் மொழி பேசும் மக்கள் இணைந்து கொள்வதும் தீர்வு காண போராடுவதையும் அங்கீகரிக்க முடியாது என்பதுதான் - இனவாதிகளும் மற்றும் ஆளும் வர்க்கத்தின் அணுகுமுறையாகும். இதனை முறியடிக்க சமவுரிமை இயக்கம் உறுதி பூண்டுள்ளது.