Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

நாட்டின் "இருண்ட காலம்" குறித்து "நல்லாட்சி" அரசு

நாட்டின் "இருண்ட காலம்" குறித்த புதிய விளக்கத்தை 2016 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்வைத்திருக்கின்றது. முன்பு இருண்டகாலமாக, மகிந்த அரசின் ஜனநாயக விரோத ஆட்சிக்காலத்தையும், அதன் ஊழல்களையும் காட்டியே முகமாற்ற ஆட்சியைக் கோரியது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு இருண்டகாலம் பற்றி காட்டியதற்கு முரணாக, நாட்டின் கடந்தகால பொருளாதாரக் கொள்கையை இருண்டகாலமாக இன்று அறிவித்திருக்கின்றது. அதே நாட்டின் பொருளாதாரத்தை தீவிரமான தூய தனியார்மயமாக்கல் மூலம் ஒளியேற்றப் போவதாக அறிவித்திருக்கின்றது.

மக்களின் வாக்கைப் பெறுவதற்காக தேர்தலின் போது இருண்ட பொருளாதாரம் என்ன என்பதை மூடிமறைத்து முகத்தை இருட்டாகக் காட்டியவர்கள், முகமாற்றத்தையே நல்லாட்சியாக காட்டியவர்கள். மக்களை ஏமாற்றி வாக்குப் பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று 1948 முதல் "சோசலிசவாத நலன்புரி பொருளாதார" தனியார் கொள்கையை இருண்டதாகக் காட்டுகின்றனர். தனியார்மயத்தில் "சோசலிசவாத நலன்புரி" கூறுகளை அகற்றுவதை ஒளியாகக் காட்டி, 1916 வரவு செலவுத் திட்டத்தில் அதை அகற்றுவதற்கான வழிமுறைகளை முன்வைத்திருக்கின்றது. தூய "தனியார்" பொருளாதாரக் கொள்கையை "நல்லாட்சி" என்று, தங்கள் வரவு செலவு திட்டம் மூலம் புதிதாக அறிவித்து இருக்கின்றனர்.

அரசின் இந்த அரசியல் மோசடிகள் பின்னணியில், பொது மக்களின் பொது உளவியலோ மகிந்த முகத்தையே இருண்டதாகக் காணும் போக்கே காணப்படுகின்றது. இதற்குள் மக்களை தொடர்ந்து மயக்கி வைத்திருக்கும் வண்ணம் ஊடகங்கள் செயற்படுகின்றன. மகிந்தவின் காலைச் சுற்றி நெளிகின்ற பாம்புகளை மையப்படுத்தி, தொடர்ந்து இருட்டைக் காட்டுவதும், அதை பரப்பரப்பு செய்திகளாக்கி மக்களை ஏமாற்றுவது நடந்து வருகின்றது. மைத்திரி-ரணில் புதிய இருட்டை முன்னிறுத்தும் போது அதை மகிந்தவாக புரிந்து கொள்வதுமாக இருக்கின்றது.

"நல்லாட்சி" அரசாங்;கம் மக்கள் இதற்குள் சிந்திப்பதையே, அதற்குள் மக்கள் மூழ்கி விடுவதையும் விரும்புகின்றனர். அரசின் "நல்லாட்சி" கொள்கை இது பற்றியதல்ல. அதன் நடைமுறை என்பது "சோசலிசவாத நலன்புரி" கூறுகளை அகற்றி தூய தனியார்மயமாக்கலை தீவிரமாக்குவதை நடைமுறைப்படுத்தத் தொடங்கி இருக்கின்றது.

"சோசலிசவாத நலன்புரி" தனியார் பொருளாதாரம் என்பது என்ன?

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கில் கூர்மையடைந்த தொழிலாளர் வர்க்க போராட்டங்கள், 1917 இல் ருசியப் புரட்சிக்கு வித்திட்டது. அங்கு தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சியை உருவாக்கியதுடன், 8 மணி நேர வேலை, 8 மணி ஓய்வு, 8 மணி உறக்கம் என்ற தொழிலாளர் நலன் கொள்கையை அமுல் செய்தது. அனைவருக்கும் வேலை என்ற கொள்கை (உழைத்தால் உணவு) நடைமுறைப்படுத்தப்பட்டது. கடின வேலைக்கு அதிக ஓய்வு, ஆண் பெண் சமவுரிமை, பெண்ணின் வேலைப்பளுவைக் குறைக்க குழந்தைக் காப்பகங்கள், வயோதிபர் பராமரிப்பு இல்லங்கள் என்று மனித தேவைகளை முன்னிறுத்தியது. ஓய்வைப் போக்க ஓய்வு மையங்கள், அனைவருக்கும் இலவசக் கல்வி - வீடு - மருத்துவம் உறுதி செய்யப்பட்டது. தொழிலாளராக இருப்பதே சமூகத் தகுதி என்று புதிய பண்பாடும், தொழிலாளர் நலன் முதன்மை பெற்றது. தனியார்துறையை இல்லாததாக்கி, பொதுத்துறை உற்பத்தி முறையாகியதுடன், அதை தொழிலாளர் வர்க்கம் கட்டுப்படுத்தியது.

இந்த பின்னணியில் உலகத் தொழிலாளி வர்க்கம் சோவியத் தொழிலாளர்களின் உரிமைகளை முன்னிறுத்தி தத்தம் நாடுகளில் போராடத் தொடங்கினர். முதலாளித்துவம் தனது தனிவுடமையிலான வர்க்க ஆட்சியைத் தக்கவைக்க, "சோசலிசவாத நலன்புரி" பொருளாதாரக் கூறுகளைத் தனிவுடமைக்குள் கொண்டு வந்தது. இந்த வகையில் கட்சிகள், கட்சிக் கொள்கைகளும் உருவானது.

தொழிலாளர் வர்க்கப் புரட்சியைத் தடுக்க "சோசலிசவாத நலன்புரி" கொள்கைகளை முன்வைத்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசியல் கட்சிகளின் கொள்கைகள் என்பது, சோவியத் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் சிலவற்றை தன் தொழிலாளிக்கு கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டதன் வெளிப்பாடாகும்;.

இன்று உலகில் தொழிலாளி வர்க்க ஆட்சிகளற்ற (சோசலிச நாடுகளற்ற) சூழலில், முன்னர் வழங்கிய "சோசலிசவாத நலன்புரி" திட்டங்களை அகற்றுகின்ற கொள்கை, அனைத்து முதலாளித்துவ கட்சிகளின் கொள்கையாக மாறி இருக்கின்றது. உலகெங்கும் "சோசலிசவாத நலன்புரி" அமுலாகிய பின்னணி இன்று இல்லாமையால் இலங்கை பொருளாதாரத்திலும் இதை இல்லாதாக்குவதை "நல்லாட்சியாக" இந்த அரசு முன்வைக்கின்றது.

அனைவருக்கும் இலவசக் கவ்வி, மருத்துவம், இருப்பிடம் என்ற கொள்கையை இல்லாதாக்குவதும். 8 மணி நேர உழைப்பு என்ற கொள்கைக்குப் பதில் சுதந்திரமாக சுரண்டுவதும், குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை இல்லாதாக்கி விரும்பியவாறு சுரண்டவும், அரசு துறைகளை இல்லாதாக்குவதும், தொழிலாளர் நலச் சட்டங்களை இல்லாதாக்குவதும் இன்று உலகமயமாகி வருகின்றது. இந்தப் பின்னணியில் இதை "சோசலிசவாத நலன்புரி" பொருளாதாரத்தை இருண்டதாக அறிவித்திருக்கின்றது. மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உரிமைகள் மீது கையை வைத்திருக்கின்றது, இந்த "நல்லாட்சி".

கட்டுப்பாடற்ற சுதந்திரமான தூய தனியார்மயம்

உழைப்பைப் பெறுவதில் எந்தக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது. உழைப்பை எப்படி சுரண்டுவது என்பதில் அரசு தலையிடக் கூடாது. வரைமுறையின்றி சுரண்டுவதற்கு உள்ள சட்டரீதியான தடைகளை அகற்றல். இதைத்தான் தனியார் கொள்கை கோருவதுடன் அரசு 2016 வரவு செலவு திட்டம் மூலம் முன்வைத்திருகின்றது.

இந்த பின்னணியில் இலங்கையின் தனிவுடமையின் வரலாறு குறித்து சுய விளக்கத்தை அரசு தருகின்றது. இலங்கை ".. “உறுதிப்பாடு, சமாதானம் மற்றும் அமைதிக்கான ஒரு பூஞ்சோலை” என்று வர்ணிக்குமளவுக்கு எமது நாடு அமைதியான ஒரு நாடாக ..... 1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரத்தினைப் பெற்றுக் கொண்டமையானது ஒரு மிருதுவான மாற்றமாக காணப்பட்டது" என அரசு பெருமையாக முன்வைக்கின்;றது. 1948 நடந்த ஆட்சி மாற்றம், வெள்ளைத் தேர்தலுக்குப் பதில் கறுப்புத் தோல் கொண்ட சுதேசிகளிடம் கைமாறியதை, "மிருதுவான மாற்றமாக" முன்வைக்கின்றது. தங்கள் காலனிய விசுவாசத்தை பெருமைப்படுத்தி தங்கள் வரலாற்றுப் பெருமை மூலம், மூலதனத்தின் "உறுதிப்பாடு, சமாதானம் மற்றும் அமைதிக்கான ஒரு பூஞ்சோலை"யாக இலங்கை இருந்ததாக கூறி, நவதாராளமயத்திற்கு அமைவான நவகாலனியத்தை உருவாக்குவதைப் பற்றி பேசுகின்றது. 1948 முதல் "மிருதுவான மாற்றம்" மூலம் தொடர்ந்து ஒரே பாதையில் பயணிப்பதையும், அதை இன்று வீரியமடைய வைக்க வேண்டிய அவசியம் குறித்து அரசு பேசுகின்றது.

தனியார் பொருளாதார சுரண்டல் முறையில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான மாற்றம் அவசியமானது என்று கூறும் அரசு "சுதந்திரத்திலிருந்து அமைந்திருந்த ஆட்சி அதிகாரங்களால் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளினை மீளாய்வு செய்வது ஆரோக்கியமானதாக அமையலாம்." என்று கூறுகின்றது. புதிய பொருளாதாரக் கொள்கை - அதாவது தனியார் செவ்வத்தைக் குவிக்கும் கொள்கை.

அது என்ன என்பதை அரசு தெளிவுபடுத்துகின்றது. "1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை முதலாளித்துவவாத, சோசலிசவாத நலன்புரி பொருளாதாரப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின்; ஊடாக நாம் மாறி மாறி பயணம் செய்திருக்கின்றோம்;." இதை இனித் தொடர முடியாது.

இங்கு அரசின் "நல்லாட்சி" என்பது உழைக்கும் மக்கள் சார்ந்து இருந்த சட்டரீதியான உரி;மைகளை இல்லாதாக்கிவிடுவதுதான். அரசு இதில் தலையிடும் பாத்திரத்தை ஒழிப்பது.

1948 முதல் தொடரும் "முதலாளித்துவாத" தனியார் பொருளாதார சமூக அமைப்புக்கள் - "சோசலிசவாத நலன்புரி பொருளாதார"த்தால் இருட்டாக இருப்பதை இந்த அரசு எடுத்துக் காட்டுகின்றது. இதை அகற்ற வேண்டும்;. அதாவது மக்கள் சார்ந்த நலன்புரித் திட்டங்களை வெட்டவும் அல்லது இல்லாதாக்கவும், அரசு சார்ந்த தேசிய பொருளாதாரக் கொள்கைகளை கைவிடவும் கோருகின்றது

அரசு தனது நல்லாட்சின் நோக்கம் குறித்து "இலங்கையின் வர்த்தகச் சமூகத்தின் மீது மோசமான முறையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த கடந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட மரபு முறைகளிலிருந்து வெளியே வருவதற்கும் இச்சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்." என்கின்றது. வர்த்தக் சமூகத்தின் நலனை முன்னிறுத்தி மக்களை சூறையாடவும், மக்கள் சார்ந்த "மரபு முறைகளிலிருந்து வெளியே வருவதற்கும்" அழைக்கின்றது.

அரசு தொடர்ந்து தனது பொருளாதார வரவுசெலவு ஒதுக்கீட்டில் "இவ்வாறான சீர்திருத்தங்களின் ஊடாக உள்நாட்டுப் போட்டித் தன்மை, சர்வதேச வர்த்தகம், முதலீடுகள், திறன்கள் மற்றும் எமது நாட்டு மக்களின் உற்பத்தித் திறனை விருத்தி செய்வதன் மூலம் சர்வதேச பொருளாதாரத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும். மேலும், எமது அறிவை மையமாகக் கொண்ட சமூக சந்தைப் பொருளாதாரமானது சமூக நீதிக்கோட்பாடுகளின் மீது நிர்மாணிக்கப்படல் வேண்டும்." என்கின்றது.

அத்துடன் இது" பொருளாதாரத் துறையில் மாத்திரமின்றி அரசியல், சமூக, கல்வி, மற்றும் சுகாதாரம் போன்ற ஏனைய பலதுறைகளையும், பலப்படுத்துவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றினை ஸ்தாபிப்பதும் எமது திட்டமாகும்." என்று வெளிப்படையாக மக்களின் வாழ்க்கைக்கு எதிரான யுத்தத்தை அரசு அறிவித்திருக்கின்றது. இதை முன்னெடுக்க 172 பொலிஸ் நிலையங்களை புதிதாக அமைக்க அரசு நிதி ஒதுக்கி இருக்கின்றது.

தொடர்புடைய ஏனைய ஆக்கங்கள்

1. "ஒளிமயமான" நாட்டைப் பற்றி "நல்லாட்சி" அரசு

2. 2016க்குள் 172 புதிய பொலிஸ் நிலையங்கள் - முகமாற்றம் தருகின்ற "நல்லாட்சியின்" தரிசனங்கள்

3. எம் பச்சை வயல்களை பறிக்க வரும் கொள்ளையர்கள்

4. கூட்டுக்கொள்ளைக்கு கொழும்பில் திட்டம்