Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நவீனமாகிவிட்ட சாதியம் குறித்து!

நவீன நவதாராளவாத சாதியத்தை, அதன் சமூகப் பொருளாதார உள்ளடக்கத்தில் இருந்து விளங்கிக் கொண்டு போராடாத வரை, சாதியம் குறித்த சரியான போராட்டத்தை நடத்த முடியாது. குறிப்பாக 1960 களில் நிலவிய சமூகப்பொருளாதார உள்ளடக்கத்திலான அன்றைய சாதிய அடிப்படைகளைக் கொண்டு, இன்றைய சாதியை விளங்கிக் கொள்ள முடியாது. அதாவது கடந்தகாலத்தில் பருப்பொருள் வடிவிலான சாதியத்தையும், அதன் சிந்தனை முறைமையைக் கொண்டு நவீன சாதியத்தை விளக்கவோ போராட்டத்தை நடத்தவோ முடியாது. 

இன்று சாதியம் குறித்து அறிவுபூர்வமாக இருப்பதெல்லாம் பழைய சாதிய வடிவமே ஒழிய. நவீன சாதிய வடிவம் குறித்த அறிவியல் அல்ல. இந்த சிந்தனைமுறை பழைய சாதிய வடிவ எச்சங்களை மட்டும் முன்னிறுத்தி, சாதிக்கு எதிராக குறுகிய அரசியலை பேசுவதுடன், சாதி குறித்த அறிவும் போராட்டமும் முடிந்து போகின்றது.

1960 களில் பொது இடங்களைப் பயன்படுத்த முடியாத தீண்டாமை அடிப்படையிலான சாதிய முறைமையை அடிப்படையாகக் கொண்டு, சாதி விளங்கிக் கொள்ளப்பட்டது. தீண்டாமையிலான அன்றைய சாதிய சமூகக் கொடுமை மீதான அன்றைய போராட்டங்களானது, அந்த முறைமையைக் கிட்டத்தட்ட இல்லாதாக்கியது. இன்று அவற்றையும் அதன் எச்சசொச்சங்களைக் கொண்டு சாதியை விளங்கிக் கொள்ள முனைவதும் எதிர்ப்பதுமே, குறைந்தபட்ச சாதி குறித்த பொதுப்புரிதலாக காணப்படுகின்றது.   

கடந்த இந்த சாதிய வரலாற்றுப் பின்னணியும் - சிந்தனை முறையும் தான், "நான் சாதி பார்ப்பதில்லை - எங்கே சாதி பார்க்கின்றார்கள்" என்று கூறுவதற்கும் - கேட்பதற்கும், அதையே "முற்போக்கான" அரசியல் அடையாளமாக முன்வைக்க காரணமாகவும் - தூண்டுதலாகவும் இருக்கின்றது. இதேபோன்று "இன்று எங்கே சாதி இருக்கின்றது" என்று இயல்பாகக் கேட்பது, இன்று பொதுப்புத்தியாக மாறி இருக்கின்றது. இப்படி ஒப்பீட்டுரீதியான பொதுப்புத்தியும் கடந்தகால எச்சங்களை முன்னிறுத்தியுமே சாதி குறித்த புரிதல் காணப்படுகின்றது. 

ஒடுக்கும் சாதிய சமூக அமைப்பில் சாதிச் சமூக உறுப்பினராக வாழ்ந்தபடி, சாதி குறித்து இப்படித்தான் விளங்கிக் கொள்கின்றனர். மறுபக்கம் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த சாதியச் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறக்கின்றவர்கள் ஒடுக்கும் சாதிய வாழ்க்கை முறையிலான வாழ்க்கை முறைக்குள் வாழுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கின்றனர். அதேநேரம் சாதி ரீதியாக ஒடுக்கப்படும் சாதிய உள்ளடக்கத்தை உணர்பவர்களால், சாதியத்தின் உள்ளடக்கத்தை (பருப்பொருளை) இனம் காட்ட முடியாதவராக இருக்கின்றனர். 

எங்கே? எப்படி? எந்த வடிவில்? சாதி இயங்குகின்றது என்பதை, உள்ளடக்க ரீதியாக விளக்கவும், விளங்கிக் கொள்ளவும் முடிவதில்லை. சாதிய ஒடுக்குமுறையை முன்வைத்து அணிதிரளும் வண்ணம், பௌதிகப் பொருளை இனம்காட்ட முடிவதில்லை. குறிப்பாக திருமணங்களில் சாதியம் நிலவுவதை அவரவர் தனிப்பட்ட உரிமையாகவே முன்னிறுத்துகின்றனர். 

மறுபக்கத்தில் 1960 களில் சாதிக்கு எதிராக போராடியவர்கள், சாதி ஒழிப்பின் அடிப்படையில் கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கவில்லை. இதற்கான அவர்களின் அன்றைய காரணகாரிய அடிப்படைகளைக் கடந்து, சாதியை எதிர்கொள்ள முடியாதவராக இருக்கின்றனர்.    

சாதியம் குறித்த பழைய இடதுசாரி உள்ளடக்கத்தில் தொங்கிக் கொண்டு நிற்பவர்கள் முதல் சாதி ஒடுக்குமுறையை முன்னிறுத்தி தலித்தியத்தை முன்வைப்பவர்கள் வரை, கடந்தகால அடிப்படைகளில் தான் சாதியத்தை விளங்கிக் கொண்டு, அதையே சாதியமாகக் காட்ட முனைகின்றனர். 

1960களுக்கு பின்பாக 60 வருடங்கள் கடந்துவிட்ட இன்றைய நிலையில், உலகப்  பொருளாதாரம் முதல் இலங்கை சமூகப் பொருளாதாரம் வரையான அனைத்தும் பாரிய மாற்றத்துக்கு உள்ளாகிவிட்டது. வாழ்க்கைமுறைகளும், வாழ்வு குறித்த கண்ணோட்டமும்   மாறிவிட்டது. 

இப்படி 60 வருடங்களில் மாறிவிட்ட இந்தச் சமூகப் பொருளாதார மாற்றங்களுடன், சாதியம் எப்படி இயங்குகின்றது என்ற அடிப்படைக் கேள்விகள் மூலம், சாதியம் குறித்த அறிவும் - புரிதலும் இன்றி நவீன சாதியத்தை விளங்கிக் கொள்ள முடியாது. 

1960 களில் இருந்த சாதிய அடிப்படைக்கான சமூகப் பொருளாதார (பொருள்முதல்வாத) உள்ளடக்கத்தை, நவதாராளவாத சமூகப் பொருளாதாரம் தகர்த்து விட்டது. இன்று பண்பாட்டு கலாச்சார வடிவில் புரிந்து கொள்ளும் சாதியமானது, நவதாராளவாத சமூகப் பொருளாதார உள்ளடக்கத்துடன் எப்படி எந்த வடிவில் இயங்குகின்றது?

இன்றைய நவதாராளவாதமாகவுள்ள நவீன சாதியத்தை, வெறும் பண்பாட்டுக் கலாச்சார வடிவிலானதாக குறுக்கிவிட முடியுமா? இந்துமத சாதியச்சடங்குளாகவும், சம்பிரதாயமாகவும் சாதியை விளக்கிவிட முடியுமா? சாதியை வெறுமனே சிந்தனை மற்றும் பண்பாட்டு மட்டத்தில் நிலவுவதாக குறுக்கிவிட  முடியுமா? சாதியத்தை அறிவுசார்ந்த ஒன்றாக வரையறுத்துவிட முடியுமா?

1960களில் சாதிக்கு எதிரான போராட்டத்தின் 50 ஆண்டு நினைவை முன்னின்று  நடத்துகின்றவர்கள், இன்றைய சாதி குறித்த கண்ணோட்டமாக எதை முன்வைக்கின்றனர்? அன்று சாதிக்கு எதிராக  போராடிய கிராமங்களிலோ-போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முன்னிறுத்தியோ, இந்த நிகழ்வுகள் நடத்தப்படுவதில்லை ஏன்? சாதிப் போராட்டம் நடந்த கிராமங்கள் தொடர்ந்தும் சாதியக் கிராமங்களாகவே தொடரும் பின்னணியில் இருந்து, 50 ஆண்டு நினைவுகளும் - கருத்துகளும் முன்னெடுக்கப்படுவதில்லையே ஏன்? 

ஆக சாதியை புத்திஜீவிகளின் அறிவு சார்ந்த ஒன்றாகக்குறுக்கி,  அதையே நவீன சாதியம் குறித்த புரிதலாக மாற்றிவிடுவதைக் காணமுடிகின்றது.

இன்றைய சமூகப் பொருளாதார உள்ளடக்கத்தை (பொருளை முதன்மையாகக்) அடிப்படையாகக் கொண்டு சாதியை பகுத்தாராய்வதன் மூலமே, யாழ் மையவாத வெள்ளாளிய சாதியத்தின் இன்றைய பரிணாமத்தை விளங்கிக் கொள்ள முடியும். அதேநேரம் இந்த யாழ் மையவாத வெள்ளாளிய சாதியமே தமிழ் தேசியமாகவும் - நவதாராளவாத ஏகாதிபத்திய பொருளாதார உள்ளடக்கமாகவும் கூட இயங்குகின்றது. இப்படி பிரிக்க முடியாத வண்ணம் ஒன்றையொன்று சார்ந்து ஒரே அச்சில் இயங்கும் அதேநேரம், இதைப் பிரித்து அணுகுவதன் மூலமே இதைத் தகர்த்தெறிய முடியும்.

இந்த வகையில் நவீன யாழ் மையவாத வெள்ளாளிய சாதியமானது, நவதாராளவாதமாக ஒருங்கிணைந்து நிற்கின்றது. எப்படி காலனிய காலத்தில், காலனிய சமூகப் பொருளாதாரத்துடன் ஒன்றுபட்டு சாதியம் இயங்கியதோ, அப்படித்தான் இன்றும் தன்னை நவீனமாக ஒருங்கிணைத்து நிற்கின்றது. 

முன்பு நிலப்பிரபுத்துவ - அரை நிலப்பிரபுத்துவம் சமூகப் பொருளாதார உள்ளடக்கத்துடன் இணைந்த, முதலாளித்துவ – தரகு முதலாளித்துவ அடிப்படையிலான காலனிய - அரைகாலனிய தனியுடமையிலான சமூகப் பொருளாதரரக் கட்டமைப்பில், சாதிய சமூக பிளவுகளை முன்னிறுத்தி உற்பத்தி - உழைப்பு பிரிவினையைக் கொண்டும், சாதியக் கூலி முறைமையைக் கொண்டும் சாதி இயங்கியது. இதன் மூலம் சாதியை பிரிந்து கையாளவும் - இயங்கவும் முடிந்தது.

இன்று இலங்கை நவதாராளவாத சமூகப் பொருளாதாரமாகிய நிலையில், பழைய சாதிய உற்பத்தி முறைமைகளும் - உழைப்புக் கூறுகளும் - சாதி வடிவிலான கூலி முறைமைகளை ஒட்டுமொத்தமாக இல்லாதாக்கியது. அதாவது உலகமயமாகிவிட்ட நவதாராளவாதமானது – குறுகிய கண்ணோட்டங்களை அடிப்படையாக கொண்ட சந்தைப் பொருளாதார சமூக வாழ்க்கை முறைமைகளை ஒழித்துக்கட்டி விடுகின்றது. மாறாக ஒற்றை நுகர்வுப் பண்பாட்டைக் கொண்ட மனித சமூகத்தையே, உலக சந்தை உருவாக்குகின்றது. இங்கு சாதியப் பாகுபாடுகள் கொண்ட சமூகப் பிளவுகள், உலக சந்தைக்கு ஏற்ப இருக்கவும் - நீடிக்கவும் முடியாது போகின்றது.

அதேநேரம் ஜனநாயகம் குறித்தும் - மனித உரிமைகள் குறித்துமான சமூகங்களின் பொது விழிப்புணர்வும், போராட்டங்களும், சமூகப் பிளவிலான முந்தைய சாதிய வடிவங்களை தொடர முடியாதாக்கி விட்டது. 

சாதியின் வெளிப்படையான அடையாளங்களும், வாழ்க்கை முறைகளும் அழிந்துவிட, தனிமனிதனின் அகக் கூறாக சாதி ஒடுங்கியது. அதாவது சாதி எங்கிருந்து, ஏன் தோன்றியதோ -அதன் மூல வடிவத்துக்குள் மீள தன்னை தகவமைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது. 

மனித உழைப்பைச் சுரண்டும் தென்னாசிய வடிவமே, சாதியத்தின் வரலாறு. இந்த வகையில் இந்தியாவின் தனியுடமைக் கண்ணோட்டமாகவே சாதியம் தோன்றியது. அதாவது தனிமனிதச் சொத்துடமை என்ற தனியுடமைக்கோட்பாட்டை, பிறப்பிலான ஒரு சமூகப் பிரிவுக்கான சொத்துடமையிலான உரிமையாக வரையறுத்துக் கொண்ட போது, அது சாதியமானது. உலகெங்கும் பரம்பரை பரம்பரையாக நீடித்து வந்த தொழில் சார்ந்த வாழ்க்கை முறைமை– அதாவது வர்ணமுறைமை தனியுடைமையாகிய போது சாதி தோன்றியது. தொழிலை பிறப்பிலான பரம்பரை ரீதியான தனியுடமையாக வரையறுத்துக் கொண்ட போது, சாதியம் தோன்றியது. இதுவே சமூகத்தின் பொது சாதிய சட்டதிட்டமாக மாறியதுடன், இதை நியாயப்படுத்தும் கோட்பாடுகள் முதல் மதம் வரையான அனைத்து, வெளிப்படையான பண்பாட்டு கலாச்சார சாதிய வடிவங்களாகவும், தீண்டாமை முதல் பல்வேறுவிதமான சாதிய பரிணாமங்களுக்கு வித்திட்டது. 

தனிச்சொத்துடமையே சாதியின் மையமாக இருக்க, அதைச் சுற்றி இயங்கிய கடந்தகால சாதிய வேறுபாடுகளும் - முரண்பாடுகளும் , நவதாராளவாதத்தின் வருகையுடன் முடிவுக்கு வந்திருக்கின்றது. 

சாதியம் தன் மூல வடிமான தனியுடமை வடிவத்துக்குள் ஒடுங்கிக் கொண்டு இயங்குகின்றது. சாதியத்தை தனிமனித உரிமையாகவும், தனிமனித தேர்வாகவும் முன்னிறுத்திக் கொண்டு, தன்னை நவீனமாக்கியுள்ளது. தனிமனித சொத்துடமை போல், சாதியத்தை தனிமனித வாழ்க்கை நெறியாக முன்வைக்கின்றது. சாதியத்தை தனிமனித உரிமையாக முன்வைக்கின்றது. தனியுடமைச் சமூக அமைப்பில் சொத்துடமையானது "ஜனநாயகம் - சுதந்திரத்தின்" தனிமனித தேர்வாகவும் -உரிமையாகவும் முன்னிறுத்துகின்ற அதே பொருளில், சாதியமும் தனிமனித தேர்வாக – உரிமையாக தகவமைத்து இயங்குகின்றது. 

சமூக பொருளாதார கட்டமைப்பு முற்றுமுழுதாக நவதாராளவாத சமூகப் பொருளாதாரமாக மாறிவிட்ட சாதிய சமூக அமைப்பில், தனியுடமைக் கண்ணோட்டத்திலேயே சாதியம் இயங்க முடிகின்றது. உதாரணமாக ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட இரண்டு சாதிப்பிரிவுகளும், தங்கள் தனியுடமை சார்ந்து சாதி அடிப்படையிலான கோயில்களைக் கட்டுவதும் - சாதி அடிப்படையில் பூசை செய்வதும், இந்த நவதாராளவாத தனியுடமை கண்ணோட்டத்தின் பின்னணியில்தான்.  

இந்த வகையில் சாதியப் போராட்டமானது நவதாராளவாத சமூக பொருளாதாரத்துக்கு எதிரானதாகவும், மறுபக்கத்தில் சாதிய அடிப்படையிலான தனிமனித உரிமை - தெரிவு - வாழ்க்கைமுறைக்கு எதிரானதாக நடத்தப்பட வேண்டும். இந்த தனியுடமையிலான (சாதிக்) கோயில்கள் முதல் சாதிக் கிராமங்கள் வரை இயங்குவதும், சடங்கு சம்பிரதாயங்கள் என்று எங்கும் தனிமனித சாதியத்தெரிவிலான உரிமையில் தலையிட முடியாது என்ற தனியுடமை கண்ணோட்டம் மூலமே, சாதியம் இயங்குவதை இனம் காணவேண்டும். 

பொதுவான சமூக கண்ணோட்டத்தை மறுக்கும் தனிமனித சாதிய கண்ணோட்டத்திலான சமூக பொருளாதார இயங்குதளம், பொதுவுடைமைக்குப் பதில் தனியுடமை என்ற அடித்தளத்தில் இயங்குவதைக் காணமுடியும். தனிமனித உரிமையில் சமூகம் தலையிட முடியாது என்ற தனியுடமைக் கண்ணோட்டத்தில், யாழ் வெள்ளாளியச் சாதியம் இன்று இயங்குவதைக் இனம் கண்டு கொள்வதன் மூலமே, சாதியப் போராட்டத்தை நடத்த முடியும்.