Sun09262021

Last updateSun, 19 Apr 2020 8am

வெள்ளாளச் சிந்தனையிலான மயானங்களும் - முதலமைச்சரின் வெள்ளாளிய சிந்தனையும்

மயானங்கள் என்பது, பிணங்களை எரிக்கும் இடமென்றால், மயானப் பிரச்சனை வெறுமனே சுற்றுச்சூழல் பிரச்சனையாக இருக்கும். யாழ்ப்பாணத்து மயானங்களின் பாரம்பரியம் குறித்து பேசுவதும், நிலவுடமை குறித்து மூன்றாம் தரப்பு அக்கறைப்படுவதும், மயானப்புனரமைப்பு பெயரில் சங்கங்கள் அமைப்பதும்.. வெள்ளாளியச் சிந்தனையிலான சாதிய மயான அமைப்பு முறையை எடுத்துக் காட்டுகின்றது.

வெள்ளாளிய சிந்தனையிலான, வாழ்வியல் முறையிலான சாதிய மயானங்களை அகற்றக் கோரிய போராட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் புத்தூர் கலைமதிக் கிராமத்திற்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனை வரவழைத்தது. அங்கு அவர் ஒடுக்கும் சாதியின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிரான மக்கள் விரோத கருத்துக்களை முன்வைத்திருந்தார். வாக்களித்த மக்களை  பிரதிநிதித்துவப்படுத்தாது, வெள்ளாளிய சிந்தனையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், ஒடுக்கும் சாதியப் பிரதிநிதியாகவும் நடந்து கொண்டார். தனது சாதிய நடத்தைகளைக் கொண்டு தன்னை வேறுபடுத்தியதுடன், சாதியக் கண்ணோட்டத்திலான 'தமிழ் தேசிய' உரையை ஆற்றியிருந்தார். அவரின் சாதியக் கண்ணோட்டமானது

 

1.புத்தூர் வெள்ளாளிய மயானப்பிரச்சனை என்பது, "உங்கள்" சாதிக்குள் நடக்கும் உள்விவகாரமென திரித்துக் கூறியதன் மூலம், திசைதிருப்ப முனைந்தார். தமிழ்மக்கள், இந்துக்கள் என்ற எந்தப் பொது சமுதாய அடையாளத்தையும் முன்னிறுத்திப் பார்க்காததுடன், சாதியக் கண்ணோட்டத்தில் தன்னை வேறு சாதியாக முன்னிறுத்திக் கொண்டு, மயானம் தொடர்ந்து அதில் இருப்பதையே நியாயப்படுத்த முனைந்தார்.

2.மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தைக் கொண்டவர்கள். சட்டத்தை இயற்றுவதன் மூலம், சட்டங்களை நீதிமன்றங்கள் பின்பற்ற முடியும். அரசியல்வாதிக்குரியதும், மக்களுக்காக சட்டத்தை இயற்றும் தனது பொறுப்பையும் நிராகரித்து, நிலத்தின் மீதான சட்டரீதியான உரிமை பற்றியும், நீதிமன்றத்தில் இவ்விவகாரம் உள்ளது என்றும் கூறி, வெள்ளாளிய சிந்தனையிலான மயானங்களைக் காப்பாற்றும் வெட்கம் கெட்டதனமான இழி முயற்சியில் ஈடுபட்டார்.

3.மயானம் முதலில் இருந்தது, குடியிருப்பு பின்னால் வந்தது என்று சாதிய அருள் வாக்கு மூலம், சாதிய மயானங்களை காப்பற்றுவதற்கு குரல் கொடுத்தார். தமிழன் முன்னால் கட்டிய பாரம்பரிய கோவணத்துக்குப் பதில், பின்னால் வந்த வேட்டியுடன் நின்று உபதேசம் செய்தார்.

4.மக்கள் தலைவர்கள் எழுந்து நின்று பேச, அவர் சாதிய அதிகார முறைப்படி அமர்ந்திருந்தபடி பேசியதன் மூலம், நிலத்தில் அமர்ந்திருந்த மக்களையும் மக்கள்  தலைவர்களையும் சாதியத் திமிர் மூலம் அவமதித்தார். இதைத்தான் அவர் வெள்ளாளர்களுக்கு கீழ் அடக்கவொடுக்கமாக நடந்து கொள்ளும் மக்களின் நடத்தையாக மெய்ச்சிப் போற்றினார்.

இப்படி வெள்ளாளிய சிந்தனையிலான சாதிய சமூகப் பிரதிநிதியாக நடந்து கொண்டாரே ஒழிய, சாதி கடந்த தமிழ் தேசியத்தையோ ஆகக்குறைந்தது இந்துமதத்தையேனும் முன்வைக்க முடியவில்லை. இது தான் தமிழ் தேசியத்தின் வெட்டு முகம். தமிழ்மக்களுக்கு உள்ளான அக ஒடுக்குமுறைகளை ஒழிக்காத தமிழ் தேசியம் என்பது, சாதிய அடிப்படையிலானது. இதை தான் மாகாண சபையில் அவைத்தலைவர், எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சர் முதல் கூட்டமைப்பு வரை முன்வைக்கின்றது.

விக்னேஸ்வரனின் இந்த வெள்ளாளிய சிந்தனையிலான சாதிய அணுகுமுறைக்கு முரணாக, அடுத்த நாள் நீதிபதி இளஞ்செழியன் அரசியல்வாதியாக மாறினார். மக்களைக் கூட்டித் தீர்ப்பெழுதியதன் மூலம், அரசியல்வாதியாக நடந்து கொண்டார். இதன் மூலம் புத்தூர் கலைமதிக் கிராம மக்களின் போராட்டம், முதல் வெற்றியைச் சந்தித்துள்ளது.

சாதிக்குள்ளான பிரச்சனையா புத்தூர் மயானப் பிரச்சனை?

மயான அருவிருத்திக் குழு என்ற பெயரில் சாதி மயானங்களைத் தக்கவைக்க முனையும் குழு, ஒடுக்கும் சாதியின் தலைமையில் இயங்குகின்றது. இந்த உண்மை ஒருபுறம் இருக்க, ஒடுக்கும் சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களில் ஒரு சிலரைப் பயன்படுத்தியே, தங்கள் சாதிய ஒடுக்குமுறையைக் கையாள்வது என்பது தொன்றுதொட்டு இன்று வரையுமான சாதிய வரலாறு. இதனை வைத்து ஒரே சாதிக்குள்ளான பிரச்சனையே புத்தூர் மயானப் பிரச்சனை என்று காட்ட முற்படுகின்றனர். இப்படி வெள்ளாளிய சிந்தனையால் மட்டும் தான் புரட்டிப்போட முடியும். இதைத்தான் விக்கினேஸ்வரன் அப்பட்டமாக செய்கின்றார். ஒரே சாதிக்குள்ளான முரண்பாடாக காட்டுவதென்பது, வெள்ளாளிய சிந்தனையிலான பிரித்தாளும் ஆதிக்க சாதிகளின் அன்றும் இன்றுமான தந்திரமாகும்.              

வெள்ளாளிய சாதி சிந்தனையிலான ஒடுக்குமுறையை வெள்ளாளச் சாதியில் பிறந்த ஒருவர் எதிர்த்து எப்;படி போராட முடியுமோ, அதேபோல் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒருவர் வெள்ளாளிய சிந்தனைக்குள் ஆள்பட்டு ஒடுக்குமுறையாளன் பக்கம் சார்பு கொள்ள முடியும். ஒடுக்கப்பட்ட சாதிகள் புதிதுபுதிதாக கட்டும் கோயில்கள், வெள்ளாளிய சிந்தனையிலான சாதி பூசை முறைக்கு உள்ளாவது போன்றது தான் இதுவும்.

சாதிய அடிப்படையிலான வெள்ளாளிய மயானங்கள் என்பதும், வெள்ளாளர் என்ற சாதியத்தைக் குறிப்பதல்ல. மாறாக சாதியப் படிநிலையிலுள்ள எல்லாச் சாதிகளும், வெள்ளாளிய சிந்தனையிலான வாழ்வியல் முறையிலான சாதியக் கட்டமைப்பிலும், அதன் சிந்தனை முறையிலும் இயங்குகின்றவர்களே. உதாரணமாக கறுப்பு அடிமைகளைக் கொண்டு இருந்த வெள்ளையின நிறவெறி சமூகத்தில், அடிமை முறையை ஏற்றுக் கொண்டு வாழும் கறுப்பு அடிமைகள், வெள்ளை இனவெறி சிந்தனைமுறையைக் கொண்டிருந்தனர். வெள்ளை இனநிற ஒடுக்குமுறையை வெள்ளையின நபர்தான் கையாள வேண்டும் என்பதல்ல. கறுப்பு அடிமையே கறுப்பனை ஒடுக்கும் அடிமைமுறையிலான சிந்தனையையும், வாழ்க்கை முறையையும் கொண்டது தான் அடிமை முறைமை. பேரினவாத ஒடுக்குமுறைக்கு தமிழர்கள் சிலரை துணைக்கு வைத்திருப்பது போல் தான் இதுவும். இன்று முஸ்லீம் ஆளும் வர்க்கத்தைக் கொண்டு, தமிழர்களை ஒடுக்குவது இதே அடிப்படையிலேயே.

வெள்ளாளிய மயானங்களே, மயானப் பிரச்சனைக்கு காரணம்

மயானப் பிரச்சனைகள் தொடங்கியது முதல், மயானங்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் உண்டு. மயானத்தைப் பாதுகாக்கும் அனைத்தும், பாரம்பரிய சாதிய உரிமையைக் கோருவதாக இருக்கின்றது. ஒடுக்கும் சாதியக் கண்ணோட்டத்தில் இருந்து கோரப்படுகின்றது.

ஊருக்குள் வெள்ளாளிய சிந்தனையிலான சாதியக் கோயில்களை புதிதுபுதிதாக கட்டும் எவரும், தங்கள் ஊருக்குள் மயானத்தை உருவாக்குவதில்லை. மயானமென்பது சாதிய கண்ணோட்டத்தில் தீட்டுக்குரியதால், சாதிய தீட்டுக்குரிய மக்களின் வாழ்விடங்களிலேயே மயானங்கள் இருக்கின்றது. சாதி ரீதியாக தீட்டுக்குரிய மக்கள் ஊருக்குள் நிலத்தை வாங்க முடியாது.

யாழ்  மயானங்கள் என்பது, வெள்ளாளியச் சிந்தனை மற்றும் வாழ்க்கை முறைக்கு உட்பட்டது. மரணச் சடங்குகள், சம்பிரதாயங்கள் தொடங்கி அதை எரிக்கும் இடம் முதல் எரியூட்டும் வடிவம் வரை, அனைத்தும் சாதிய சமூக கட்டமைப்பைக் கொண்டது.

இதனால் தான் விக்கினேஸ்வரன் காணியின் சட்ட உரிமை பற்றியும், மயானங்களின் பாரம்பரியம் பற்றியும், மயானத்துக்குப் பக்கத்தில் வீட்டைக் கட்டியதைப் பற்றியும் பேசுகின்றார். ஒடுக்கும் தங்கள் சாதிய பாரம்பரிய மயானங்களை மீறிய செயலாக, காட்டவும் கட்டமைக்கவும் முனைகின்றார்.

ஒடுக்கும் சாதிகள் வாழ மறுத்த நிலத்திலேயே, ஒடுக்கப்பட்ட சாதிகள் எப்போதும் எங்கும் வாழ்கின்றனர் என்பதும், அதில் மயானத்துக்கு அருகிலான குடியிருப்புகளும் அடங்கும். மயானத்துக்கு அருகில் வாழ்வது என்பது, சாதிய சமூக அமைப்பு ஏற்படுத்திய சாதிய வாழ்வியல் முறையாகும். ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மயானத்துக்கு அருகில் வாழ்வது புதிய விடையமல்ல. விக்கினேஸ்வரனின் சாதியப் புளிப்புக் குணம் தான், மயானம் அருகில் புதிதாக வீடுகட்டியதே மயானப் பிரச்சனை என்று கூறி, திரிக்கின்ற பிதற்றலாகும்.

ஊருக்கு வெளியில் உள்ள புறம்போக்கு நிலங்கள் மீதான சட்டரீதியான உரிமை என்பது, சாதிய ஆதிக்க அரசியல் மூலமும், அதிகாரங்கள் மூலமும், கள்ள உறுதிகள் மூலமும் பெறப்பட்டவை. அதேநேரம் நிலத்தை சொந்தமாக வைத்திருக்க முடியாத வகையில், ஒடுக்கப்பட்ட சாதிகள் மேலான ஒடுக்குமுறையும், அடிமைமுறையும் காணப்பட்டது. இதன் மூலம்  ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பைச் சுரண்டி, ஒடுக்கும் சாதிகளுக்கு நிலங்கள் உடைமையானது.

இந்த சாதியக் கட்டமைப்பை நியாயப்படுத்தவே விக்கினேஸ்வரன் நில உரிமை மீது முக்கி முனகுகின்றார். தன்னைக் கடவுளின் அவதாரம் என்று கூறும் பொறுக்கிகள், பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொன்றவர்களை இந்திய நீதிமன்றம் குற்றவாளியாக்கி சிறையில் அடைத்திருக்கின்றது. நீதிமன்ற தீர்ப்பு ஒருபுறம் இருக்க, அதில் தலையிட்டு அவர்களைக் குற்றமற்றவராக தீர்ப்பெழுதி அவர்களை விடுவிக்க கோரி, இந்தியப் பிரதமர் மோடியின் பாதத்தைத் தொழுத சாதி வெறி கும்பலுக்குத் தலைமை தாங்கும் விக்கினேஸ்வரன், வெள்ளாளிய சிந்தனையிலான தமிழ்தேசியமே பேசுகின்றனர் என்பதே உண்மை.