Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தேர்தல் அரசியல் யாருக்கானது!

தேர்தல் அரசியலானது "அபிவிருத்தி" பற்றியும், "உரிமைகள் குறித்தும்" பேசுகின்றது. நவதாராளவாத முதலாளித்துவத்தை அரசியலாகக் கொண்ட தேர்தல் கட்சிகள் முன்வைக்கும் அபிவிருத்தி மற்றும் உரிமைகள் குறித்த எந்தக் கொள்கைகளும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதாக ஒருநாளும் இருக்க முடியாது. மாறாக ஒடுக்கும் தரப்பாக இருக்கும் நவதாராளவாத முதலாளித்துவத்தையே முன்னெடுக்க முடியும். இதைத் தான் தேர்தல் அரசியலால் செய்ய முடியும். தேர்தல் மூலம் நடக்கும் ஆட்சிமாற்றங்கள் என்பது, வெறும் முகமாற்ற ஆட்சியாக மட்டும் தான் இருக்க முடியும். இது தான் எதார்த்தம். இந்த உண்மையை மூடிமறைக்கின்ற, இதன் அடிப்படையில் தேர்தல் அரசியலை ஆராயாத எல்லா அரசியல் கருத்துகளும், தொடர்ந்தும் மக்களை ஏமாற்றுகின்ற பித்தலாட்டமாகும்.

நவதாராளவாத அபிவிருத்தி அரசியலின் உள்ளடக்கம் என்ன? 

நவதாராளவாத "அபிவிருத்திகள்" மூலம் நாட்டை வளப்படுத்துவதாக கூறுவதே, தேர்தல் அரசியலாகிவிட்டது. இந்த "அபிவிருத்தியைச்" செய்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை மக்களுக்கு பெற்றுத்தரப்போவதாக கூறுகின்றனர். இதற்காகவே தங்களை தேர்ந்தெடுக்குமாறும், தமக்கான அரசு அதிகாரத்தையும்; கோருகின்றனர். இந்த அரசியல் பின்னணியில் இருந்தே தன் இனத்திற்காக, தன் மதத்திற்காக, தன் பிரதேசத்திற்காக.. உழைக்கப்போவதாகவும், "உரிமைகளைப்" பெற்றுதரப்போவதாகவும் கூறி, மக்களை கூறு போட்டு வாக்குக் கேட்கின்றனர். ஜனாதிபதித் தேர்தல் தொடங்கி உள்ளூராட்ச்சி தேர்தல் வரையான, அனைத்து தேர்தல் கட்சிகளும் முன்வைக்கும் கொள்கைகள் இவைதான்.

இந்த "அபிவிருத்தி" அரசியல் என்பது தனியார் முதலீட்டை கொண்டு வருவதும், வட்டிக் கடன் மூலம் அடிக்கட்டுமானங்களை உருவாக்குவதுமாகும். அதாவது உலகமயமாதல் முன்வைக்கும் இந்த நவதாராளவாதக் கொள்கைகளே, தேர்தல் கட்சிகளின் இன்றைய கொள்கையாகும்.

அரச முதலீட்;டை மறுதளிக்கும் நவதாராளவாத முதலாளித்துவம், தனியார் முதலீட்டை மட்டும் தான் அனுமதிக்கின்றது. அதேநேரம் உலகளாவில் குவிந்துவிட்ட நிதிமூலதனத்தைப் பெருக்க, "அபிவிருத்தி" அரசியலின் பெயரில் நிதிமூலதனத்தை வட்டிக்கு விடுகின்றது. இது தான் உலகளவிலான அரசுகளின் கொள்கையாக, இதுவே தேர்தல் கட்சிகளின் கொள்கையாக மாறி இருக்கின்றது. இதை முன்னெடுக்கின்ற வடிவத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளும், வன்முறைகளும்… முகமாற்ற ஆட்சிகளை உருவாக்குகின்ற தேர்தல் ஜனநாயகமாக மாறி இருக்கின்றது.

 

இவை அனைத்தும் மக்களுக்கு எதிரானது. மூலதனத்தைக் குவிக்கின்ற நவதாராளவாத முதலாளித்துவத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டது.

இந்த வகையில் தேர்தல் அரசியல் முன்வைக்கும் "அபிவிருத்தி" அரசியல், சுயபொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டதல்ல. இதன் பொருள் நாட்டினதும், மக்களினதும் சுயத்தைக் கட்டியெழுப்புவதற்கல்ல. மக்களின் வாழ்வில் அபிவிருத்தியைக் கொண்டு வருவதில்லை. மக்களின் அடிப்படை உரிமைகள் பெற்றுக்கொடுப்பதில்லை. மாறாக உலக மூலதனத்தைக் கட்டியெழுப்புவதாகும். மக்களை சுயமற்றவராக்கி, அவர்களிடமிருப்பதை பறித்தெடுக்கும் நடைமுறைகள் மூலம், மூலதனத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெருக்க உதவுவதாகும். இதை முன்னெடுக்க மக்களின் உரிமைகளை பறித்தெடுக்கும் அதேநேரம், அதை மூடிமறைக்க மக்களைப் பிரித்து மோதவைக்கின்றனர். 

மக்களின் மேலான வரிகள் மூலமாக திரட்டும் தேசிய வருமானத்தில் இருந்து, அபிவிருத்தியை முன்னெடுப்;பதை நவதாராளவாத முதலாளித்துவம் அனுமதிப்பதில்லை. அதாவது அரசு மூலதனத்தைக் கொண்டு தொழிலையோ, அபிவிருத்தியையோ செய்யும் தகமை, நவதாராளவாத அரசுக் கட்டமைப்புக்கு இன்று கிடையாது. நவதாராளவாத முதலாளித்துவத்தை மீறி, தேர்தல் கட்சிகளால் சுயமாக செயற்பட முடியாது. எந்தத் தொழிலாக இருந்தாலும், எந்த அபிவிருத்தியாக இருந்தாலும் தனியார் மூலமே செய்யவேண்டும்;. இதன் பொருள் தனியார் அதில் லாபம் ஈட்டும் வண்ணம், அனைத்தும் சந்தைப் பொருளாக இருக்க வேண்டும். இதற்குள் தான் தேர்தல் அரசியல் கட்சிகளும், அரசுகளும் செயற்பட முடியும்.

இங்கு அரசநிதி மூலமாக நடக்கும் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அபிவிருத்தி என்பது, தேசிய மூலதனத்தில் இருந்து செய்ய முடியாது. மாறாக வட்டிக்கு வாங்கும் உலக  மூலதனத்தைக் கொண்டு தான், "அபிவிருத்தியைச்" செய்ய முடியும். இதற்கான வட்டியையும், முதலையும் தேசிய வருமானத்தில் இருந்து செலுத்த வேண்டும். நவதாராளவாத அரசியல் கொள்கையும், நடைமுறையும் இதுதான்.

அதேநேரம் வட்டிக்கு வாங்கும் மூலதனத்தைக் கொண்டு, மக்களின் வாழ்வியலுடன் கூடிய தன்னிறைவான சமூகப் பொருளாதார அபிவிருத்தியைச் செய்யக் கூடாது. மாறாக மக்களினதும், தேசத்தினதும் தன்னிறைவை அழிக்கவும், தன்னிறைவை அடைய முடியாத துறைகளிலேயே முதலிட வேண்டும். உதாரணமாக வீதிகள், கட்டுமானங்கள், பன்னாட்டு முதலீட்டுக்கான வட்டியற்ற கடன்கள், பன்னாட்டு முதலீட்டை நடத்த தேவையான அடிக்கட்டுமான வசதிகள், நீரைத் தனியார் மயமாக்கும் திட்டங்கள்.. இப்படி இதற்குள்ளேயே முதலிட வேண்டும்;. இதைத்தான் தேர்தல் கட்சிகள், தங்களதும் "அபிவிருத்தி" அரசியல் கொள்கை என்கின்றனர்.

இதற்குப் பயன்படும் நிதியை மக்களிடம் அறவிட்டு, அதற்கு வட்டியைச் சேர்த்துக் கொடுக்கும் தரகு வேலையையே அரசும், தேர்தல் கட்சிகளும் செய்கின்றன. இன்று வரவு செலவு திட்டத்தில் பெரும்பகுதி வாங்கிய நிதிமூலதனத்தைத் திருப்பி கொடுக்கவும், அதற்கான வட்டியைக் கொடுப்பதற்குமே பயன்படுத்தப்படுகின்றது. மிகுதி இந்த நவதாராளவாத முதலாளித்துவ அமைப்புமுறையைப் பாதுகாக்கும் கட்டமைப்புக்கு  (அரசு, பொலிஸ்-இராணுவம், நீதி..) துறைக்கு ஒதுக்கப்படுகின்றது. தேர்தல் கட்சிகளின் கொள்கைகள் அனைத்தும் இதைத்தான் முன்வைக்கின்றது. கல்வி, மருத்துவத்துக்கு .. ஒதுக்கும் சிறிய தொகை நிதியைக் கூட இல்லாதாக்க, அதை தனியார்மயமாக்குகின்றது. தேர்தல் அரசியல் இதைத்தான் முன்வைக்கின்றது.

மக்கள் நலன் சாராத, நவதாராளவாத முதலாளித்துவ "அபிவிருத்தி" அரசியலை மூடிமறைக்கும் அரசியல்  பித்தலாட்டங்களே, தன் இனத்தையும் - தன் மதத்;;தையும் – தன் பிரதேசத்தையும் .. முன்னேற்றுவதாக கூறுவதாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் சூறையாடும், தங்களது முதலாளித்துவ நவதாராளவாத அரசியலைப் பாதுகாக்க முனைகின்றனர்.

தங்கள் பிரதேசத்திலுள்ள வீதிகளையும், கட்டுமானங்களையும், தனியார் தொழில் முயற்சியையும் காட்டி, மக்களுக்கான தமது சொந்தப் பங்களிப்பு என்று கூறும், போலியான பொய் விம்பத்தை உருவாக்கி, நவதாராளவாத மூலதனத்தை கொழுக்க வைக்கின்றனர். மறுபக்கத்தில் நவதாராளவாத நிதிப் பயன்பாடு, பயனற்றுத் திரும்புவது குறித்து எதிர்நிலை தர்க்க  அரசியல் கட்டமைக்கப்படுகின்றது. உதாரணமாக வடக்கு நிதி திரும்புவது குறித்தும், கிழக்கு நிதி பயன்படுத்துவது பற்றியும் கட்டமைக்கும் அரசியல் கூட, போலியானதும் புரட்டுத்தனமானதுமாகும்.

அபிவிருத்தி செய்யாமல் நிதி திரும்புவது குறித்து, முன்வைக்கும் அரசியல் பித்தலாட்டம்

செயலற்ற வடக்கு மாகாணசபையின் நிதி திரும்புவதாகவும், கிழக்கில் அப்படியல்ல என்ற தர்க்கவாதங்களும் - உண்மைகளும், போலியான புரட்டுத்தனமான நவதாராளவாத அரசியலையே கட்டமைக்கின்றது. கிழக்குடன் வடக்கை ஒப்பிட்டால், வடக்கில் முன்னெடுத்த நவதாராளவாத அபிவிருத்தி என்பது பல மடங்காகும். கிழக்கில் வீதிகள், பாலங்கள், துறைமுகங்கள், கட்டிடங்கள், பாடசாலை நிர்மாணங்கள்.. என்பவற்றுக்கு நிதி பயன்படுத்தப்பட்டதாகவும், "அபிவிருத்தி" அரசியலை மாகாணசபை ஊடாக செய்ததான படம் ஒன்று உருவாக்கப்பட்டு காட்டப்படுகின்றது. அப்படியானால் வடக்கில் இது எதுவும் நடக்கவில்லையா?

வடக்கில் வீதி அபிவிருத்தி, கட்டுமானங்கள், துறைமுகங்கள், பாலங்கள், பாடசாலை நிர்மாணங்கள்.. என எடுத்தால், கிழக்கை விட பிரமாண்டமான அளவில் நடந்து இருக்கின்றது. கிழக்குடன் ஒப்பிடும் போது, மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டைக் காணமுடியும்;.

இங்கு கிழக்கு போல் "அபிவிருத்தி" நடக்கவில்லை என்பது, பொய்யான அரசியல் பிரச்சாரம். நவதாராளவாத முதலாளித்துவ மூலதனமானது வடக்கை விட்டுவைக்கவில்லை.

நவதாராளவாத முதலாளித்துவம் அனுமதிக்கும் போலியான "அபிவிருத்தி" திட்டங்கள் வடக்கில் கணிசமான அளவுக்கு பூரணமான நிலையிலேயே பணம் திரும்புகின்றது.  கிழக்கில் அது பூரணமாகாத நிலையில் நிதி பயன்படுத்தப்படுகின்றது. நவதாராளவாத முதலாளித்துவத்தை முன்னெடுப்பதே தேர்தல் அரசியலான பின், ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்து வடக்கிலோ, கிழக்கிலோ.. தேர்தல் கட்சிகள் செயற்படுவதில்லை என்பதே உண்மையாகும். நவதாராளவாத போலி "அபிவிருத்தியை" முன்னெடுக்கும் "தரகு" அரசியலைதான், அங்குமிங்குமாக போட்டுப் புரட்டிக் காட்டுவதைத் தாண்டி வேறு எதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து கொண்டிருப்பதில்லை. தேர்தல் அரசியலுக்கு வெளியில் தான், ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான அபிவிருத்தியையும், உரிமைகளையும் பெற்றுவிட முடியும் என்பதே எதார்த்தமாக இருக்கின்றது. தேர்தல் மூலமல்ல, போராட்டங்கள் மூலம் தான், ஒடுக்கப்பட்ட மக்கள் எதையும் வென்று அடைய முடியும் என்பதே உண்மை.  அண்மையில் இலங்கை மக்களின் போராட்டங்களும், வெற்றிகளும் இதை நடைமுறையில் எடுத்துக்காட்டுகின்றன.