Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான்-பாகம் 2 & 3 )

2. வாழ்வுக்கான போராட்டம்

எம்மக்கள் வாழ்விழந்து நிற்கின்றனர். இதில் இருந்து மீளமுடியாத வண்ணம்,  நாதியற்ற நிலையில் நிற்கின்றனர். எல்லாவற்றையும் இழந்து விட்டனர். வன்னி மக்கள் திறந்தவெளிச் சிறையில் அநாதையாகி விட்டனர். யாழ் மக்கள் நுகர்வுச் சிறையில், தலைகால் தெரியாது வீங்கி வெம்புகின்றனர். கிழக்கு மக்கள் எல்லாவற்றையும் இழந்த நிலையில்,  கேட்பாரின்றி அநாதையாக விடப்பட்டுள்ளனர்.

 

சிங்கள பேரினவாதம் எம்மக்களை பலவாக பிரித்து கையாளுகின்றது. சமூகத்தை சீரற்ற வண்ணம் சிதைக்கின்றது. ஒரு இனமாக ஒன்றிணைக்க முடியாத வண்ணம், அரசியல் அடிப்படைகளைத் தகர்க்கின்றது. ஓரே தளத்தில் ஒன்றுபட முடியாத வண்ணம் முரண்பாடுகளை உருவாக்குகின்றது. இனத்தை பிளக்கும் வண்ணம், வேறுபட்ட ஒடுக்கு முறைகளையும், சலுகைகளையும் கூட மிக நுட்பமாக கையாளுகின்றது.

இந்த நிலையில் புலிகள் அமைப்பு ரீதியாக அழிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தம்மை மீள ஒருங்கிணைப்பதற்குரிய எந்த அரசியல் அடிப்படையும், அவர்களின் அமைப்பிடம் இருந்தது கிடையாது.

அவர்களின் கடந்தகாலத் தவறுகள், அவர்கள் இறுதி வரலாறாகிப் போனது. தாங்கள் மட்டுமே போராடமுடியும் என்ற அவர்களின் நிலை, தாம் அல்லாத அனைத்தையும் ஈவிரக்கமின்றி அழித்துள்ளது.

தன்னையும் தன்னைச் சுற்றியும் கூட, தனிமனித துதியை உருவாக்கியது. இப்படி தனிமனித துதியை முன்னிறுத்தி தன் தலைமையையே அழித்தது. போராட்டத்தை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தி, இனத்தையை அழித்து விட்டனர். இதைப் பயன்படுத்தி சுரண்டியும், சுருட்டியும் வாழ்ந்த புலத்து புலிக்கும்பல், எஞ்சிய புலிச்சொத்தை தானே சுருட்டிய படி, தான் தொடர்ந்து போராடப்போவதாக பாசாங்கு செய்கின்றது.

இதன் விளைவு இன்று பேரினவாதத்தின் நுகத்தடியில் சமூகத்தை முழுமையாக இட்டுச் சென்றுள்ளது. இதை மாற்றி அமைக்க, போராட்டக் காலம் பூராகவும் போராடியவர்கள் சந்தித்த அனுபவத்தில் இது ஒரு துளி. மண்ணில் நாம் நடத்திய போராட்டத்தின் போது, நான் சந்தித்த சில அனுபவத்தை அடிப்படையாக கொண்டது. நடந்து முடிந்த தவறான போராட்டத்தின் வரலாற்றை, மீள் ஆய்வுக்கும் சுயவிமர்சனத்துக்கும் உள்ளாக்க இது உங்களுக்கு உதவும். எந்த மக்கள் அரசியலை அழிக்க புலிகள் முனைந்தனரோ, அந்த அரசியல் உள்ளடங்கிய வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

3. 87ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்..

 

புலிகள் என்னை உரிமை கோராது 28.04.1987 அன்று படுகொலை செய்யவென கடத்திச் சென்றனர். என்னை அழித்து விட, இரகசியமாக நடுவீதி ஒன்றில் வைத்து கடத்தியவர்கள், என்னிடமுள்ள தகவல்களைப் பெற தொடர்ச்சியாக சித்திரவதைகளைச் செய்தனர். தங்கள் சொந்த இரகசிய வதைமுகாமில் வைத்து, தொடர்ச்சியாக சித்திரவதைகளை என் மீது ஏவினர். இதன் மூலம் அவர்கள் மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளையும், போராட்ட வெற்றிகள் அனைத்தையும் காட்டிக் கொடுக்கக் கோரினர். இதற்காக யார் யார் எல்லாம் போராடுகின்றனர் என்ற விபரத்தைக் கக்கக்கோரினர்.

இப்படி இரகசியமாக உரிமை கோராது கடத்தியது முதல், கைது, சித்திரவதை, படுகொலைகள் என அனைத்துமே ஜனநாயக விரோதமானது, சட்டவிரோதமானது. ஒரு போராட்ட இயக்கத்தின், இழிந்து போன அதன் அரசியலைக் காட்டியது. இதுவே பாசிட்டுகளுக்கே உரிய வக்கிரமுமாகும். இதைவிட மாற்று அரசியல் தெரிவு, பாசிட்டுகளுக்கு கிடையாது.

 நானோ ஒரு இயக்கத்தின் உறுப்பினர். பரந்த மக்களின் ஆதரவும், அவர்களின் போராட்டங்களில் பங்குபற்றியதன் மூலம், நெருக்கத்துக்குரிய ஒரு தலைவராகவும் இருந்தவன். பல்கலைக்கழக மாணவர் தலைவர்களில் ஒருவன். மக்களின் ஜனநாயக போராட்டங்கள் பலவற்றில் பங்கு கொண்டதுடன், அதற்கு தலைமை தாங்கியவன். மக்களின் அன்றாட வாழ்வியல் போராட்டங்களில் ஒன்றிணைந்து இருந்த என்னை, அன்று கொன்று விடுவதே புலிகளின் அரசியல் தெரிவாக இருந்தது. பலரை இப்படிக் கொன்றனர்.

புலிகள் என்னைக் கொன்று விடவே, மிக இரகசியமாக கடத்திச் சென்றனர். என்னைக் கொலை செய்யும் நாள் வரை, என்னிடமிருந்த மக்களுடன் நிற்பவர்கள் பற்றிய தகவல்களை கறக்க முனைந்தனர். அவர்களிடம் இருந்த சில தகவல்களைக் கொண்டு, மேலதிகமான புதிய தகவல்களைப் பெற முனைந்தனர். அத்துடன் பொதுவான சித்திரவதையைச் செய்வதன் மூலம், அவர்களுக்கு தெரியாத தகவல்களைப் புதிதாகப் பெற முனைந்தனர்.

இதற்காக அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். நான் இந்த வதைமுகாமில் இருந்து தப்பியதன் மூலம், அங்கு என்ன நடந்தது என்ற வரலாற்று உண்மையை, தகுந்த ஆதாரங்களுடன் இந்த நூல் மூலம் உங்களுக்கு சமர்பிக்கின்றேன்.

புலிப் பாசிசமோ நேர்மையற்ற ஒன்று. ஒன்றுக்கொன்று முரணான பொய் புரட்டுகளின் மூலம், முழு மக்களையும் தனக்கு கீழ் அடிமைப்படுத்தியது. இதற்கு புலிகளின் பாசிசம் கட்டமைத்த தேசிய வரலாற்றில், பல ஆயிரம் உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்றே மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை என்ற எனது இந்தக் குறிப்பு.

(தொடரும்)

மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான் )

பாகம்- 1