Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒரு பேப்பர் ஆசிரியரின் சில பொய்கள். - நக்கிப் பிழைக்கும் ஒரு வாழ்க்கை

ஒரு பேப்பர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் "நீங்களுமா நுஃமான்" என்ற கட்டுரையை காலச்சுவட்டிலும், "அனேக கவிஞர்கள் அடிமை வியாபாரிகளாக மாறினர்" என்ற கட்டுரையை தனது ஒரு பேப்பர் பத்திரிகையிலும் எழுதுகிறார். இரண்டுமே பேராசிரியர் நுஃமான், காலச்சுவட்டிற்கு எழுதிய புலிகள் மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டு நந்திக்கடலில் குதித்து விட்டனர் என்ற கட்டுரை குறித்த எதிர்வினைகள் தான். காலச்சுவட்டில் அவர் புலிகளைப் பற்றி பின்வரும் விமர்சனங்களை வைக்கிறார்.

1. நம் தேசியத் தலைவர் காலத்தைச் சரிவரக் கணிக்கவில்லையோ எனும் சம்சயம் எனக்குண்டு.

2.அவர் இழைத்த தவறுகளில் மகாத்தவறு என்று யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதைத்தான் கூறுவேன்.

தமிழ்நாட்டு சிற்றிதழிற்கு எழுதும் போது நானும், சரி பிழைகளை கதைப்பவன் தான் என்று எழுதுபவர் தானே ஆசிரியராக இருக்கும் ஓசிப் பேப்பரில் எழுதும் போது ஒரு வரி கூட புலிகளின் பிழைகளை எழுதாமல் நான் ரெளடி இல்லை என்று பம்முவது எதுக்காக?

1.புலி ஆதரவு என்று படம் காட்டி பத்திரிகையை நடத்தும் போது புலியை விமர்சித்தால் வியாபாரம் படுத்து விடும்.

2.மாத்தையாவின் வெளியேற்றத்தின் போது அது பற்றி செய்தி வெளியிட்ட "பாரிஸ் ஈழநாடு" தேசபக்தர்களால் தீக்குழிக்க வைக்கப்பட்டது கறுப்பு வெள்ளையில் பிளாஷ்பாக்காக சுத்திச்சுத்தி ஓடியிருக்கும்.

3.தமிழீழம் என்பது நாடுகடந்த தமிழீழம் என்றாகிப் போனது போல இலங்கையில் நடந்த, நடக்கின்ற கொலைகளும் நாடு கடந்த கொலைகளாக தொடர்வது ஞாபகத்திற்கு வந்து தொலைத்திருக்கலாம்.

இலங்கை முஸ்லிம்களுள் பெரும்பான்மையோர் அடிப்படைவாதிகள் என்பது உறுதிப்பட்டது. அதற்கு நுஃமானும் விதிவிலக்கு அல்ல. இந்த மேற்கோள் தான் இவரின் கட்டுரையின் சாராம்சம். யாழ் முஸ்லீம்களில் சிலர் அரசு உளவாளிகள் என்று காரணம் காட்டி முழு முஸ்லீம் இனத்தையே குற்றவாளிகளாக்கி யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டி அடித்த கும்பலின் ஊதுகுழல்கள் இதை சொல்கிறார்கள். அரச ஆதரவுடன் முஸ்லீம் ஜிகாத் குழுக்கள் கிழக்கு மாகாணத்தில் நடத்திய கொலைகளை நுஃமான் கண்டிக்கவில்லை என்பதனால் மத அடிப்படைவாதி பட்டம் அவரிற்கு கொடுக்கப்படுகிறது. முஸ்லீம் ஜிகாத்திகளின் கொலைவெறியினால் பல தமிழர்கள் கொலையுண்டார்கள். ஜிகாதிக்குழுக்கள் பேரினவாத அரசினாலும், பாகிஸ்தானிய அரபுநாடுகளின் பண உதவியாலும் வளர்க்கப்பட்ட கொலைக்கும்பல்கள். அவற்றை விடுதலை இயக்கம் என்று பகுத்தறிவு கொண்ட எவரும் சொல்லமாட்டார்கள். அவர்கள் செய்தது போலவே கொலைகளை செய்து விட்டு, இனச்சுத்திகரிப்பு செய்து விட்டு நாங்களும் செய்தது விடுதலைப்போராட்டம் என்று ஒரு அமைப்பு சொல்கிறது. ஒரு பத்திரிகை அந்தக் கொலைகளை வழி மொழிகிறது.

ஈரோஸ் இயக்கத்தைக் கலைத்துவிட்டு விடுதலைப் புலிகளுடன் சேருமாறு அழைப்பு வருகிறது. நாக்குளிப் புழுவை (மண்புழு) இரண்டு துண்டாக வெட்டினால் எப்படி இரண்டு துண்டுகளும் இயங்குமோ அவ்வாறு சிங்களப் பிரதேசத்திலிருந்த ஈரோஸ் இயக்கத்தினர் சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து கொள்கின்றனர். தமிழ்ப் பிரதேசத்திலிருந்த ஈரோஸ் இயக்கத்தினர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொள்கின்றனர். இது இன்னுமொரு விஞ்ஞான விளக்கம். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல உண்மை வெளிவருகிறது. புலிகளின் அதிகாரத்தின் கீழ், ஆயுதமுனைகளில் அகப்பட்டவர்கள் புலிகளாக்கப்பட்டார்கள். புலிகள் தடை செய்ததினால் அனைத்தையும் இழந்து பேரினவாத அரசின் அதிகாரத்திற்குள் அகப்பட்டவர்கள் அரசுடன் சேர்ந்தார்கள். ஈரோசினர் பிரதேச அடிப்படையான ஈழத்தை தமது செயல்திட்டமாக முன்வைத்தவர்கள். மொழி அடிப்படையான தமிழீழத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. இடதுசாரிகள். வலதுசாரி பாசிஸ்ட்டுகள் அழைப்பு விடுத்தார்களாம் அவர்கள் ஓடிச் சென்று சேர்ந்தார்களாம். ஆயுதமுனையில் பலவந்தமாக ஈரோசினர் புலிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த பத்திரிகை வெளிவரும் லண்டனில் ஒரு ஈரோஸ் அமைப்பை சேர்ந்தவரையாவது புலி ஆதரவாளர் என்று காட்ட முடியுமா?

எங்கள் போரில், எங்கள் இயக்கத்தில், எங்கள் நெறி முறையில் சிற்சில தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். உங்கள் பார்வையில் மோசமான பயங்கரவாதச் செயலாகவும் அது அமைந்திருக்கலாம். பலஸ்தீன விடுதலைப் போராட்டத்திலும் சிற்சில தவறுகள் நிகழ வாய்ப்புண்டு. இஸ்ரேலின் பார்வையில் அவை மோசமான பயங்கரவாதச் செயல் என வாசிக்கப்படும் தேவையும் உண்டு. இது ஒரு பேப்பர்காரரின் மணிவாசகம். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பிழைகளை, அதிகாரத்திற்கு வந்த பின்பு நடந்த ஊழல்களை மனச்சாட்சியுள்ள, நேர்மையான எவரும் கேட்பார்கள். பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் என்று சொல்லிக் கொள்வதால் ஹமாஸினது மத அடிப்படைவாதத்தை எவரும் விமர்சிக்காமல் விட முடியாது. இஸ்ரேலிய பொதுமக்களின் மீது ஹமாஸ் நடத்துகின்ற தாக்குதல்களினால் பாலஸ்தீன போராட்டத்தை அது பயங்கரவாத போராட்டமாக இஸ்ரேல் பரப்புரை செய்வதற்கே உதவுகிறது என்பதை எடுத்து சொல்லாமல் இருந்து விட முடியாது. பிழைகளை எதிரியும் பெரிதுபடுத்திக் காட்டுவான், போராட்டத்திற்கு எதிராக பயன்படுத்துவான் என்ற நொண்டிச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டு தான் புலிகளது தலைமையின் சர்வாதிகாரத்தை, பாசிசத்தை கொலைகளை கேள்வி கேட்ட எல்லோரையும் கொன்று குவித்தார்கள். புலிகளது பாசிச அரசியலும், பணத்திற்காகவும் பதவிக்காகவும் புலிவால் பிடிப்பவர்களின் அற்பத்தனங்களும் சேர்ந்து சிங்கள பேரினவாதிகளின் கொலைக்களங்களில் தமிழ்மக்கள் பலி கொடுக்கப்பட்டார்கள். இதை எல்லாம் எப்படி நியாயப்படுத்த முடிகிறது.

எங்கள் மத்தியில் இன்னுமோர் கும்பல் எஞ்சியுள்ளது. அவமானத்தை அது சாப்பிடுகின்றது. தலைகுனிந்து நடந்து செல்கின்றது. அவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள். எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும் நக்கும் ஒருவனை எப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம்? ரஷித் ஹுசைன் எழுதி நுஃமான் மொழிபெயர்த்த இப்பாலஸ்தீனக் கவிதை என்று அவர் மேற்கோள் காட்டுகின்ற கவிதை தான் அவர் போன்றவர்களின் வாழ்க்கை. நக்கிப் பிழைக்கும் வாழ்க்கை. தான் எழுதியதை தனது பத்திரிகையிலேயே போட முடியாத பம்மாத்து வாழ்க்கை.