Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மன்மோகன்சிங்கு வராது. ஆனால் அசோக் லேலான்ட் வரும், பஜாஜ் வரும்

உலகம் ஒரு நாடகமேடை, அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்றான் சேக்ஸ்பியர். தமிழ் இனவெறி அரசியலோ தமிழ்படம் மாதிரி. பயங்கர திருப்பங்களுடன் முழம், முழமாக உங்கள் காதில் பூ வைப்பார்கள். மன்மோகன்சிங் பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்ளாதது குறித்தும் இப்படியான கதைகளைத் தான் தமிழ் இனவெறி கும்பல்கள் அவிழ்த்து விடுகின்றன. மன்மோகன்சிங் போகாததால் இலங்கைக்கு பெரிய அவமானம் என்றும், இந்தியாவில் தேர்தல் வர இருப்பதால் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் போழிப்புரை எழுதுகிறார்கள்.

வன்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் செத்துக் கொண்டிருந்த இறுதி நாட்களின் போதும் இந்தியாவில் தேர்தல் காலம்தான். தமிழ்நாட்டில் மாணவர்களும், இனப்பற்றாளர்களும், முற்போக்குசக்திகளும் கொலைகார காங்கிரசை எதிர்த்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். தமிழ்நாட்டு மக்கள் தம் ஈழத்தமிழ் சகோதரர்களின் மீதான படுகொலைகளைக் கண்டு கொதித்துப் போயிருந்தனர். ஆனால் காங்கிரஸ் அரசு பயந்ததா?, பணிந்ததா?. இல்லை. காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுடன் சேர்ந்து இனப்படுகொலையை இறுதிவரை நடத்தியது.

அப்போதும் இந்த பைத்தியக்காரக்கும்பல்கள் பாரதீய ஜனதாக்கட்சி பதவிக்கு வந்தால் இலங்கைத்தமிழ் மக்களைக் காப்பாற்றுவார்கள் என்று ஊளையிட்டன. சோ, நரேந்திரமோடி போன்ற பயங்கரவாதிகள் இருக்கும் பாரதிய ஜனதாக்கட்சி தமிழர்கள் மேல் பரிதாபப்படுமாம். குஜராத்தில் மதப்படுகொலை செய்தவர்கள் இலங்கையின் இனப்படுகொலையை தடுப்பார்களாம். "மாவீரன்" நெடுமாறன், "செந்தமிழன்" சீமான் போன்றவர்கள் இதை விட முற்றிய நிலையில் ஜெயலலிதாவின் இலை இன்னும் விரியவில்லை. இலை மலர உடனே ஈழம் மலரும் என்றார்கள். "போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்று இலங்கைத் தமிழ்மக்கள் மடிந்து கொண்டு இருக்கும் போது அவள் ஊளையிட்ட ஓசை அடங்கு முன்பே "ஈழத்தாய்" என்று அவள் காலில் விழுந்தார்கள்.

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. மன்மோகன்சிங் இலங்கை போனால் அது தமிழர்களிற்கு செய்யும் துரோகம் என்று முதல்நாள் ஜெயலலிதாவினால் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இவர்களிற்கு ஊழல் பணத்தை எண்ணி முடித்த பிறகு எஞ்சியிருக்கும் நேரத்தில் இப்படியான அறிக்கைகளை விடுவது பொழுதுபோக்கு என்பதைக் கூட தெரியாதவர்கள் போல "அம்மா சட்டசபையிலேயே மன்மோகன்சிங் போகக் கூடாது" என்று தீர்மானம் கொண்டு வந்து விட்டார்" என்று காவடி எடுத்து திரிந்தார்கள். அடுத்தநாளே முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் தஞ்சாவூரில் ஜெயலலிதாவினால் இடிக்கப்பட்டது. ஜெயலலிதா என்ற மக்கள் விரோதிக்கு தன்னை தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்கள் மீதே காட்டாட்சி செய்பவரிற்கு கடல் தாண்டி இலங்கைத்தமிழ் மக்கள் மீது கருணை பொங்குதாம்.

மன்மோகன்சிங்கு இலங்கை வராததால் மகிந்து வாழ்க்கை வெறுத்துப் போய் காவி உடை தரித்து, திருவோடு ஏந்தி புத்த பிக்குவாக போய் விடவில்லை. சிங்குவே வரவில்லை சிங்குவின் கடை எதற்கு என்று இந்தியாவில் இருந்து வரும் இறக்குமதிகளை நிற்பாட்டவில்லை. அதே மாதிரி சிங்குவும் "இவ்வளவு கொடுமைக்காரனாய் இருக்கிறாய் என்று தான் நான் வரவில்லை. அதேமாதிரி என்னுடைய பாசக்காரபயல்களான டாட்டா, பஜாஜ், மகீந்திராவும் சந்தைக்கு வரமாட்டார்கள் என்று சொல்லவில்லை. சிங்கு வந்து தான் இனப்படுகொலைக்கு உதவி செய்ததா? சிங்கு வரா விட்டால் ராம்கோ சீமெந்து விலைப்படாதா? எது விற்க வேண்டுமோ அது நன்றாகவே விற்கிறது.

மற்றப்படி சிங்குவிற்கு இந்தியாவிலேயே வேலை ஒன்றும் பெரிதாக கிடையாது. கருணாநிதி போற்றும் "சொக்கத்தங்கம் சோனியாவிற்கும்", சொக்கத்தங்கத்தின் உத்தமபுத்திரன் ராகுல்காந்திக்கும் மண்டையை ஆட்டுவதை விட வேறு வேலை இல்லை. பாராளுமன்றத்தில் குறட்டை விடுவது தான் பாதிநாள் வேலை. இலங்கை போனாலும் அதை தான் செய்ய வேண்டும். அங்கே போய் விடுகிற குறட்டையை இங்கேயே விட்டு விடலாம் என்று தான் வரவில்லை போலே. மேலும் உடல், பொருள், ஆவி அத்தனையும் தமிழ்மக்களிற்கு அர்ப்பணித்த விக்கினேஸ்வரன், சித்தார்த்தன் போன்றவர்கள் வடமாகாணசபையின் முதல்நாள் கூட்டத்திலேயே விட்ட குறட்டையை கண்டு இத்தனை பேர் இருக்கும் போது நானும் போய் குறட்டை விட வேண்டுமா என்று வராமல் நின்றிருக்கலாம்.