Fri09302022

Last updateSun, 19 Apr 2020 8am

சிதம்பரம் அமைத்துள்ள கூலிப் படை சட்டவிரோதம்: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மாவோயிஸ்டுகளுக்கு எதிராகப் போரிட ஆட்காட்டிகள், எட்டப்பர்கள், உள்ளூர் தரகர்கள்,  அடங்கிய கூலிப்படையை சட்டப் பூர்வமாக அமைத்து, இந்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியுடன் சத்தீஸ்கர் மாநில அரசு அமைத்து செயல்படுத்தி வந்தது தெரிந்ததே. உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று. இப்படி அமைக்கப்படும் கூலிப் படைகள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், அதை உடனடியாகக் கலைத்து விடும்படியும் உச்ச நீதிமன்றம் இந்த மாதம் ஆணையிட்டுள்ளது. தேசவிடுதலை இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்களின செயல்பாட்டில் ஆர்வம கொண்டோர் அனைவரும் அறிய வேண்டிய இந்தத் தீர்ப்பும் அதன் சுருக்கமும் இங்கே தரப்படுகிறது.

 

 

சல்வாஜூடும் பயங்கரவாதிகள்

 

கூலிப்படைகளைப் பயன்படுத்தி புரட்சிகர இயக்கங்கள், தேசவிடுதலை இயக்கங்களை ஒடுக்குவது ஒரு காலனிய கால நடைமுறை. இந்தியாவில் காஷ்மீர், திரிபுர, மணிப்பூர், அஸ்ஸாம், வங்காளம் என்று பல மாநிலங்களில் இப்படிப்பட்ட படைகளை அமைத்து இந்திய அரசு கடந்த காலத்தில் போரிட்டுள்ளது, அதே நடைமுறையை விடுதலைப் போராளிகளுக்கு  எதிரான (IPKF) தமது போரில் இந்திய ராணுவம் இலங்கைக்கும் ஏற்றுமதி செய்திருந்தது தமிழ் மக்கள் அறிந்ததே.

சிதம்பரத்தின் பங்கு

குறிப்பாக பஞ்சாபில் மட்டும், சீக்கிய விடுதலை போராட்ட இயக்கத்தை ஐந்துலட்சம் பேருக்கும் அதிகமான,  இளைஞர்களைக் கொன்று இந்திய அரசு ஒடுக்கி வெற்றிபெற்றது. அப்போதும் இதே சிதம்பரம் கூலிப்படைகளை அமைக்க ராஜீவ் அரசுக்கு எடுபிடியாகவும் உதவியாகவும் இருந்து துணை அமைச்சராக பனி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திர இந்தியாவில் இவ்வளவு அதிகம் பேர்களைக் குறுகிய காலத்தில் பலியிட்ட இயக்கம் பஞ்சாப் விடுதலை இயக்கம் மட்டுமே. இந்தப் பேரிழப்பை உருவாக்கியதில் கூலிப்படைகளுக்கு மிகப் பெரும் பங்கு உண்டு.  ஊர்தோறும் ஆள்காட்டிகள் ஆயுதம் வழங்கப்பட்டு ஒரு நிரந்தரப் படியாகவே அமைக்கப் பட்டார்கள். அதேயே, முன் மாதிரியாகக் கொண்டு சத்திஸ்கர் மாநிலத்தில் பழங்குடிகளுக்கு எதிராக பல ஆயிரம் பேர் கொண்ட படையை இந்திய அரசும், அந்த மாநில அரசும் அமைத்துள்ளது. இந்தப் படைகலுக்கு நிதி வழங்கி செயல்படுத்துவதில் முன் நிற்பவர் சிதம்பரம்.

 

டெல்லியைச் சேர்ந்த பேராசிரியர் நந்தினி சுந்தரம், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, முன்னாள் அரசு அதிகாரியும் ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்தி வருபவருமான ஈ.எ.எஸ்.சர்மா ஆகிய மூவரும் ‘சல்வா ஜூடும் (Salwa Judum)’ என்று அழைக்கப்படும்  இந்தக் கூலிப்படையைத் தடை செய்யுமாறு 2007 ம் ஆண்டு இந்திய அரசு மீதும்,

சத்தீஸ்கர் அரசு மீதும் வழக்குத் தொடுத்திருந்தார்கள். ‘பொய் சொல்வது’, ‘சொன்னதை மாற்றி அப்படிச் சொல்லவே இல்லையே !!’ என்பது போன்ற பல ‘சிறப்புக் குணங்களை’ வாய்க்கப் பெற்ற ‘பொய்யின் மொழி’ சிதம்பரத்தின் உள்நாட்டு அமைச்சகம் சொன்னதை பொய் என்று வருணனை செய்துள்ளது. அரசின் வாதத்தை நீதிமன்றம் சிறிதளவும் ஏற்றுக்கொள்ளாமல் அந்தப் படைகளை உடனடியாகக் கலைத்து விடும்படி ஆணையிட்டுள்ளது.

இந்த உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு பல வகையில் மிகவும் முக்கியமானது. நீதியரசர் சுதர்சன் ரெட்டி, சுரீந்தர் சிங் நிஜ்ஜர் ஆகிய இருவர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதன் சுருக்கம் இங்கே மொழிபெயர்த்து வழங்கப்படுகிறது:

மாத்வி முகேஷ் என்ற இந்த "தீவிரவாதி"க்கு வயது: 2 மட்டுமே விரலை வெட்டியவர்கள் "சல்வா ஜூடும்" தேசபக்தி இயக்கத்தினர்!

 

தீர்ப்பின் சுருக்கம்

§          இந்த வழக்கில் விவரிக்கப்படும் சத்திஸ்கர் மாநிலப் பகுதிகளில் அரசு செய்து வரும் படுகொலைகள், நடத்திவரும் சண்டைகள், ஏறக்குறைய கடந்த நூற்றாண்டில்,  ‘ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டுக் காடுகளில் ஐரோப்பியக் காலனியவதிகள் கூட்டம் கூட்டமாக மக்களைக் கொன்று, அவர்களின் விலைமதிப்பில்லாத வளங்களைக் கொள்ளையிட்டது போன்ற ஒரு காட்டு மிராண்டித்தனததிற்கு ஒப்பானதாக இருக்கிறது. ஜோசப் கொன்ராட் (Joseph Conrad) எழுதிய நெஞ்சை உருக்கும் நாவலான ‘ இருளின் இதயம்’ “Heart of Darkness”என்ற நாவலில் வரும் வருனனைகளுக்கு ஒப்பான வகையில் இந்திய அரசு நடந்து வருகிறது. அந்த நாவலில் விவரிக்கப்பட்டபடி மனிதகுலமே வெறுத்து அருவருக்கத்தக்க, அதே கொடூரம் மிக்க, திகிலூட்டும் காட்சிகள், இங்கே சத்திஸ்காரில் நடந்து கொண்டிருக்கின்றன.

§          இந்த வழக்கினை தொடுத்திருந்த நியாயமுள்ள, மனச் சாட்சியுள்ள இந்திய அறிவுஜீவிகளையும், ஆசிரியர்களையும், ஊழல் எதிர்ப்பாளர்களையும்  இந்திய அரசு வேண்டும் என்றே மாவோயிஸ்டுகள் என்றும், மாவோயிச ஆதரவாளர்கள் என்றும் பலவாறான  கட்டுக்கதைகளையும், பொய்களையும் பரப்பி நீதிமன்றத்திற்குத் தவறான தகவல்களை தந்து திசை திருப்பியுள்ளது.

§          இந்தியாவின் திட்டக் கமிசன் (Indian Planning commission) அறிவித்தபடி இந்தப் போர் பழங்குடியின் மக்களின் நிலத்தைப் பிடுங்கி உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களைச் சுரங்கம் தோண்ட அனுமதிக்கும் ஆக்கிரமிப்புப் போர் என்பதில் சந்தேகம் இல்லை. திட்டக் கமிசன் தெரிவித்த எந்த கருத்தையும் இந்திய அரசு ஏற்றுக் கொள்ளாமல் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அரசு நடந்து வருகிறது. இதில் வளர்ச்சி என்பதற்கு எதுவும் இல்லை.

§          இப்படிப்பட்ட வளர்ச்சியை கொண்டுவர இந்திய அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை. மாறாக அனைவருக்கும் உகந்த ஒரு வளர்ச்சியைத்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எதிர்பார்க்கிறது. இந்திய அரசு அதீதமான வளர்ச்சி என்ற பெயரில் மாஃபியாக் கும்பல்கள் போல, அநியாயமான முறையில் மக்கள் சொத்துகளைச் சூறையாடி, நாட்டில் குழப்பத்தையும் ஏற்றத் தாழ்வுகளையும்  விதைத்து வருகிறது.  இதில் பெருமைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை.

§          கோடீஸ்வரர்களுக்கு வரிச் சலுகையும்  வறுமையில் வாழும் மக்களைப் பிரித்து சண்டையிட்டு மடிய ஆயுதங்களையும் இந்திய அரசு வழங்கி வருகிறது. கூலிப்படைகளை அமைத்துச் சண்டையிடச் செய்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு குழப்பத்தை  ஏதோ நாட்டின் தற்காப்புப் பிரச்சனை என்ற பெயரில் பொய்யாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தச் செயல்பாடு இந்திய அரசியல் சாசனம் விதித்தபடி இந்தியா ஒரு இறையாண்மையுள்ள, மதசார்பற்ற, சமதர்ம ஜனநாயகக் குடியரசு என்ற உயர்ந்த நோக்கங்களுக்கு நேரெதிராகவும் மாறாகவும் உள்ளது. எனவே, இந்திய அரசின் கொள்கைகளை வகுப்பவர்கள் இந்திய அரசியல் சாசனத்தை மதித்து நடக்கிறார்களா? என்ற ஒரு கேள்வியும் இந்த நீதிமன்றத்திற்கு  எழுகிறது.

§          இப்படிப்பட்ட ஒரு அநியாயமான பொருளாதார வளர்ச்சி முறையை முன்னிறுத்தும் ‘அரசியல்வாதிகளும் அமைச்சர்களும்’ (Policy makers) இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.

§          இவர்கள் இந்த நீதிமன்றத்திற்குத் தொடர்ந்து தவறான தகவல்களைத் தந்ததுடன், நீதிமன்றம் அறிவுறுத்தியபடி எந்த உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதயும் இந்த நீதிமன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

§          கூலிப்படிகளுக்கு கண்டபடி ஆயுதங்களை வழங்கிச் சண்டையிட்டுக் கொள்ளச் செய்வது மக்களைப் பிளவுபடுத்தி, நாட்டைச் சிதைக்கும் தற்கொலைக்கு ஒப்பானது.

§          நமது அரசியல் சாசனம் ஏதோ ‘நாட்டின் தற்கொலைக்கான கூட்டு ஒப்பந்தம் அல்ல.

§          அரசின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்தின் உயர்ந்த நோக்கத்தை மதிக்கவும் அதனைச் செயல்படுத்தவும் விதித்துள்ள எங்களை (நீதிபதிகளை) மூச்சுத்திணற வைக்கிறது. சுருங்கச் சொன்னால் அரசின் செயல்பாடு மிகப் பெருங் கொடுமை!! கொடுமை!!

§          அரசு இந்த நீதிமன்றத்திற்குத் தொடர்ந்து பொய்த்தகவல்களை அளித்து வந்துள்ளது. முதலில் 3000 பேர்கள் இந்தப் படைகளில் உள்ளதாகச் சொன்னார்கள் பிறகு அது 6500 பேர்களாக உயர்ந்தது. இதே போலவே, பள்ளிகள், மாணவர் விடுதிகளைப் படையினர் காலி செய்துவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால், இன்றும் அப்படியேதான் படைகளை நிறுத்திவைத்து இருக்கிறர்கள். அரசு இந்த நீதிமன்றத்தில் நடந்து கொண்ட விதம் எங்களை மிகவும் சங்கடத்திற்கும் சதேகத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

§          இந்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவை மேல் எழுந்தவாரியாகப் பார்த்தாலே தெரியும்: எவ்வளவு போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தெரியும். அரசியல் சாசனத்திற்கு உரிய எந்த மரியாதையும் இந்த அரசு தரவில்லை என்பது கண்கூடு.

§          குறைந்த கூலி கொடுத்து வேலைக்கு வைக்கப்படும் இந்தப்படைகள் எங்களுக்குக் காட்டுவது என்னவென்றால்: ‘தனியர்மயப் பாதையை தேர்ந்து எடுத்துக் கொண்டபின் இந்த அரசு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வலுவைக் கூட இழந்து விட்டுள்ளது’ என்பதுதான். வெறும் மூவாயிரம் ரூபாய் சம்பளம் தரும் இந்த ஆள்காட்டி வேலையை அரசு ஏதோ ஒரு வேலை வாய்ப்புத் தரும் உயர்ந்த நோக்கமுள்ள திட்டமாகப் பசப்புவது இன்னமும் வேடிக்கை. இந்தச் சல்லிக் காசில் இவர்கள் தங்களுக்குள் போரிட்டு மடியும் வண்ணம் திட்டம் தீட்டியிருப்பது அதைவிடக் கொடுமை. கொடுமையிலும் கொடுமை.

§          இப்படிச் சட்ட விரோதமாக அமைக்கப்படும் படைகள் எவ்வளவு ஆயுதங்களைத் தங்கள் வசம் வைத்துள்ளார்கள் என்று இதுவரை நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட அனமதேயக் கும்பல்கள் கடந்த காலங்களில் கட்டுப்படுத்த முடியாத அராஜகக் கும்பல்களாக மாறி நாட்டின் பதுகாப்பினையே கேளிக்குள்ளாக்கி இருப்பதை இந்திய அரசு இன்னமும் அறிந்து கொள்ளவில்லை.

§          இந்தக் கூலிப்படைகள் சத்திஸ்கரில் நூற்றுக்கணக்கான முதியவர்கள், பெண்கள், குழந்தைகளைக் ஈவு இறக்கம் இன்றிக் கொன்றிருப்பதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission -NHRC) உறுதிப்படுத்தயுள்ளது. எனவே, இந்தக் கூலிப்படையினர் எந்தவகையிலும் அரசுக்கு உதவியாக இருப்பார்கள் என்பது நம்ப முடியாத ஒரு விஷயம்.

§          இந்திய அரசியல் சாசனத்தின் வரைமுறைக்கு ஒப்பவே எந்த நிறுவனமும் செயல்படமுடியும். அரசு அமைத்துள்ள இந்தப் படைகள் அப்படிப்பட்டது அல்ல. எனவே, அரசியல் சாசனப் பிரிவு 14 மற்றும் 21 மூலம் இந்தச் செயல்பாடு சட்டவிரோதம் என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

§          திறம்பட வேலையினை முடிப்பதில் இந்தக் கூலிப்படைகள் உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும் அது அரசியல் சாசனத்த்திற்கு விரோதம் என்பதால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

§          மாவோயிஸ்டுகளுக்கு எதிரானது என்று அழைக்கப்படும் இந்தப் போர் ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சனை இல்லை. இந்தப் போர் எல்லா நெறிமுறைகளுக்கும் எதிரான சட்ட விரோத, மக்கள் விரோதப் போர். பீரங்கிகள் முழங்கும்போது சட்டம் உறங்கிவிடுவதில்லை.

 

எனவே,

§          சல்வா ஜூடும என்று அழைக்கப்படும் இந்தப் படை உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்;

§          இந்தப் படைக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி எதுவும் செய்யக் கூடாது;

§          அவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகள், பிஸ்டல்கள், ரொக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிக் குண்டுகள் உள்ளிட்ட சகலவிதமான குண்டுகளையும் ஆயுதங்களையும், தளவாடங்களையும் அரசு உடனடியாகக் கையகப் படுத்த வேண்டும்;

§          இது போன்ற பிற படைகள் வேறு ஏதேனும் பெயரில் இருந்தால் அதையும் கலைத்து விடவேண்டும்;

§          கூலிப்படைகளை உருவாக்க உதவும் சத்திஸ்கார் போலீஸ் சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரண்பாடானது. எனவே, அது செல்லுபடியாகாது

§          இத்துடன், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் போலிசும் கூலிப்படைகளும் கூட்டாக இணைந்து மூன்று கிராமங்களை எரித்து பலரை கொன்ற வழக்கை இனிமேல் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்.

 

 

பின்குறிப்பு

 

இந்த சல்வா ஜூடும் வழக்கில் வெளியான இன்னொரு விபரம் இதோ. இந்த ஆண்டு 2011, மார்ச் மாத நிலவரப்படி, மத்திய அரசின் சம்பளம் பெரும் கூலிப்படைகள் உள்ளவர்கள் மட்டும் 70,046 பேர். மத்திய அரசு உதவி பெறாத வகையில் மாநில அரசுகள் சார்பாக உள்ளவர்கள் எத்தனை என்று இன்னமும் தெரியவில்லை. இதுதவிர, மேற்கு வாங்க மாநிலம் சி.பி.எம் கட்சி, சத்திஸ்கார்  மாநில பி.ஜே.பி, மற்றும் ஆர.எஸ்.எஸ் அமைப்பினர் அமைத்துள்ள படைகள் உள்ளூர் போலீஸ் நிதியிலிருந்தும் ஆயுதக் குவியல்களில் இருந்தும் உதவி பெரும் கூலிப்படைகள் எத்தனை என்பது தெரிவிக்கப் படவில்லை.

வழக்கின் சிறப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த தீர்ப்பில் ‘பொய்யின் மொழி’ சிதம்பரமும் அவரது அல்லக்கை  என்று பெயர் பெற்றவருமான உள்துறைச் செயலர் கொடூரன் கோபால் பிள்ளையும் நேரடியாகவே விமர்சிக்கப் பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தவர்களையும் விமர்சித்தவர்களையும் மாவோயிஸ்டுகள் என்று சொல்லிக் கேலி செய்த சிதம்பரம் இந்த நீதிபதிகளையும் அப்படிச் சொன்னாலும் வியப்படைய வேண்டியதில்லை.

வழக்கம்போலவே, இந்திய டி.வி நிறுவங்களும், செய்தித்தாள்களும் இந்தத் தீர்ப்பை  கண்டுகொள்ளவே இல்லை. உடனடியாக இந்தத் தீர்ப்பை கண்டனம் செய்தவர்கள் ஆர.எஸ்.எஸ், அமைப்பும் அதன் சிஷ்ய கேடிகளான அருண் ஜைட்லே (Arun Jaitley) போன்ற பாசிஸ்டுகள் மட்டுமே.

-பவானி

14/07/2011