Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஹக்கீம் ஐயா…. மகிந்த விசுவாசி?... அரச எதிர்ப்பாளர்?....முஸ்லிம் மக்கள் காவலன்!

சினிமா நடிகன்போல், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அரசியலில் எத்தனை வேசமும் போடுவார். நீதி அமைச்சராக, மகிந்த விசுவாசியாக, அரச எதிர்ப்பாளராக முஸ்லிம்மக்கள் காவலனாக, தேவைப்பட்டால் "அசல் இனவாதியாகவும்" நடிப்பார். இதை எப்படித்தான் மக்களை விட, இந்த அரசால் ரசிக்க முடிகிறது.

"நாட்டில் முஸ்லிம் விரோத நடவடிக்கை மேலும் கட்டுமீறிச்செல்ல அனுமதித்தால் அது அரசாங்கத்திற்கு நல்லதல்ல. பலமான இந்த அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுவதற்கு நான் விரும்பவில்லை"

"இனவாதத்தை தூண்டுவதன் மூலம் அரசாங்கத்தை பலவீனப்படுத்த எத்தனிக்கும் அத்தகைய சக்திகளுக்கு எந்த வெளிச்சக்திகளிடமிருந்து உதவியும் ஒத்தாசையும் கிடைக்கின்றன என்பதை கண்டுகொள்ள முடியாத ஒரு புலனாய்வு துறையா இங்கு இருக்கிறது!"

"இந்த நாட்டில் கொழுந்து விட்டு எரிகின்ற ஒரு பெரிய பிரச்சினைக்குள் நாங்கள் மாட்டிக்கொண்டிருக்கின்ற நிலையில் இந்த பிரச்சினையை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை எவ்வாறு அணுகப் போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்".

இவ்வாறான சந்தர்ப்பத்தில் உள்வீட்டு சில்லறை பிரச்சினைகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாது முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இன்றுள்ள சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தோடு இருப்பதையே விமர்சனப் பார்வையோடு நோக்குகின்றனர்.

முஸலிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் உரிய தீர்வுகளைக் காண வேண்டும் என்று ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் நாட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் வெளிப்படுத்துகின்ற காலத்தில் தான் நாங்கள் இருக்கிறோம்.

"காணிப் பிரச்சினையை குறிப்பாக வடக்கு கிழக்கில் பூதாகரமாக உருவெடுத்திருக்கின்றது. அதனை நிதானமாக கையாள வேண்டியிருக்கின்றது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த மாதிரி எங்களிடம் இருந்து பிரிந்து சென்ற சிலர் அதனை தங்களுக்கு புள்ளிகளை போட்டுக்கொள்வதற்காக அதனைச் சிக்கலாக்கி இருக்கிறார்கள்".

இத்தால் எம்நாட்டிலுள்ள பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு (விரும்பினால் மக்களுக்கும்) அறியத்தருவது என்னவென்றால், நடைபெறப்போகும் பரீட்

சையில் நீதி அமைச்சரின் மேற்படி கூற்றுக்களை உள்ளடக்கியதொரு கேள்வியைத் தந்தால், இதில் எதை நீங்கள் சரியான விடையாகக் காண்பீர்கள்? சரியான விடையின் கீழ் சிகப்பபு பேனாவால் கீறவும்.

ஹக்கீம் ஐயா…

1. நீதி அமைச்சர்!

2. மகிந்த விசுவாசி!

3. அரச எதிர்ப்பாளர்!

4.முஸ்லிம் மக்கள் காவலன்!

5. தேவைக்கு ஏற்ப இனவாத அரசியல் குத்துக்கரணமும் அடிப்பவர்!