Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஹக்கீம், தொண்டமான் அரசிலிருந்து வெளியேற்றம்?

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இந்திய வெளிவிகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இடையே யான சந்திப்பின் போது, அவர் கூட்டமைப்பினரை நோக்கி நீங்கள், ஏன் வடக்கு கிழக்கு தமிழர்களிடையே மட்டுமே வேலை செய்கின்றீர்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் இலங்கையில் உள்ள தமிழ் மொழி பேசுகின்ற அனைத்து மக்களிடையேயும் வேலைகளை முடுக்கி விடவேண்டும் என கேட்டுக் கொண்டதுடன், மலையகத் தமிழ் மக்களிடையேயும் தமிழ் மொழி பேசும் முஸ்லீம் மக்களிடையேயும் செயற்பாடுகளை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களின் நலன்களில் இருந்து என்றுமே எதையுமே இந்த கூட்டமைப்பினர் செய்தது கிடையாது. மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை ஒழுங்கு செய்யும் போது அங்கு சென்று முகத்தை காட்டி ஏதோ இவர்கள் தான் போராட்டத்தை நடாத்திவர்கள் போன்று அடுத்த நாள் தினசரிகளிலும் இணையங்களிலும் பில்டப் காட்டும் இந்த கூத்தமைப்பு இந்திய எஜமானர்களின் கட்டளையினை சிரம் தாழ்த்தி ஏற்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடனும் முஸ்லீம் கொங்கிரசுடனும் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பேச்சு வார்த்தையில் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அதாவது அரசாங்கத்தினது சிறுபான்மை இன மக்கள் மீதான அடக்கு முறைகளுக்க எதிராக ஒன்றிணைந்து செயற்படுவது. அடுத்த உடன்பாடாக, வர இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலை பாவித்து தமது செல்வாக்கின் மூலமாக மகிந்தாவை இனப்பிரச்சனைக்கான தீர்வினை முன்வைக்கக் கோரியோ அன்றி அது பற்றிய பேச்சு வார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பது. இது நடக்காத பட்சத்தில் முற்று முழுதாக அரசிலிருந்து வெளியேறுவது.

நம்பகமான செய்தி தகவலின் அடிப்படையில் ரவுப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசிலிருந்த வெளியேறுவது பற்றிய ஆலோசனையில் ஒரு புள்ளியினை எட்டியுள்ளதாக அறிய முடிகின்றது.

மேலும் அனைத்து கட்சிகளும் ஒரு பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதா அல்லது தங்கள் கட்சி வேட்பாளர் முன் நிறுத்துவதா என்பதை பற்றி சிந்தித்து வருகின்றன என்று கூறப்படுகிறது.

இவை அனைத்தும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன்களின் அடிப்படையில் மேற்க்கொள்ளப்படாமல் இந்திய எஜமானர்களினதும். மகிந்தாவின் இரத்தம் படிந்த கையுடன் கைகுலுக்கிக் கொள்ள விரும்பாத மேற்குலக எஜமானர்களினதும் நலன்களில் இருந்துமே மேற்க்கொள்ளப்படுகின்றன. வடக்கு மாகாண சபையில் தேர்தலில் வெற்றி பெற இந்தியா அள்ளிக் கொடுத்த பெருந்தொகை பணம் பற்றி அண்மையில் பத்திரிக்கைகளில் செய்தி வநதது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த தரகு வேலைக்கு பெரும் தொகை பணம் சம்பந்தப்பட்ட கட்சிகளிற்கு நிச்சயம் அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கும்.

இலங்கையில் அரசியல் மாற்றம் ஒன்றினூடாகவே தேசிய இனப்பிரச்சனை முதல் பொருளாதார பிச்சனை வரை தீர்வு காண முடியும். ஆண்டகைகளை மாற்றுவதால் மக்களின் வாழ்வில் எந்த மாற்றமும் கிடைக்கப் போவதில்லை எனபதே உண்மை.