Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

நவதாராளவாத சுரண்டல்களை துணிவாக எதிர்கொண்ட தொழிற்சங்கவாதி

காலனித்துவத்தை விட நவகொலனித்துவ ஆட்சியின் கீழான நவதாராளவாத பொருளாதார கொள்கைகளும் நடைமுறைகளும் உழைக்கும் மக்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் பாரிய சவாலாக இருப்பதை கண்டு செயலிழக்காது தனித்துவமாக அவற்றை எதிர்கொண்ட தொழிற்சங்கவாதி பாலாதம்புவின் மறைவு தொழிற்சங்க இயக்கத்திற்கு பாரிய இழப்பாகும்.

அவர் பொதுவாக தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்தது மட்டுமன்றி அவரது தொழிற்சங்கத்தை வளமுடையதாக்குவதிலும் அவரது தொழிற்சங்க அங்கத்தவர்களை வலுப்படுத்துவதிலும் கூடிய பங்களிப்பை செய்துள்ளார்.

இவ்வாறு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா இலங்கை வர்த்தக, கைத்தொழில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி பாலாதம்புவின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் துணிவாக இருந்திருந்தாலும் இன்றைய நவகாலனித்துவ ஆட்சிகாலத்தில் நவதாராள பொருளாதார சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாது, அவற்றுடன் சமரசம் செய்து தொழிலாளர்களின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலேயே செயற்படுகின்றன. குறிப்பாக அவர் செயற்பட்ட தொழிற் துறைகளில் கூட்டு ஒப்பந்தம் என்ற பொறிமுறையை பயன்படுத்தி பேரப்பேச்சின் மூலம் தொழிலாளர்களுக்கு அதிக உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள பயன்படுத்திய விதம் தோட்டத் தொழிலாளர்களாலும் அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்களாலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

சட்டப் புத்தகங்களில் இருக்கும் தொழிலாளர் உரிமைகள் பல நடைமுறையில் சூக்குமமாக மறுக்கப்படுகின்றன. அத்துடன் அரச அடக்குமுறைகள் அச்சுறுத்தல்கள் என்பவற்றினால் வெளிவெளியாக தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நீதிமன்ற நடைமுறைகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

இவ்வாறன சூழ்நிலையில் நீண்டகால வரலாறுடைய தொழிற்சங்கமொன்றை பாதுகாத்து சமகால தொழிற்சங்க இயக்கத்தில் தனித்துவமான இடத்தை பாலா தப்பு வகித்தார். அவர் சமகாலத்தில் நடைபெற்ற ஏனைய தொழிற்துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்கி முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார்.

தொழிற்சங்க இயக்கத்தில் அவர் மேற்கொண்ட சுயேட்சையான நடவடிக்கைகள், முயற்சிகள் எவ்வாறான விளைவுகளை தரும் என்பதை எதிர்காலத்தில் அவதானிக்க முடியும்.

நன்றி

இப்படிக்கு,

சட்டத்தரணி இ.தம்பையா

பொதுச் செயலாளர்

மக்கள் தொழிலாளர் சங்கம்