Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஊடக அறிக்கை – மத்திய மாகாண சபை தேர்தல்

மக்கள் விரோத அரசியல் நிலையை உணர்ந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும் மலையக மக்களும் தமது அரசியல் பாதையை தெரிவு செய்ய வேண்டும்.

25 வருடங்களின் பின் வடக்கு மாகாண சபை தேர்தல் இடம்பெறுகிறது. மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் 2009ம் ஆண்டு இடம்பெற்று 5 வருடங்கள் பூர்த்தியாகும் முன்னமே சபைகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. இவ்வாறு தேர்தல்களை முன்கூட்டியே வைப்பதன் மூலம் மக்களுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு “ஜனநாயக உரிமை” வழங்கப்படுவதாக அரசாங்கம் கூறிவருகிறது. எனினும் வட மாகாண சபையில் அரசாங்கத்துக்கு ஏற்படப்போகும் தேர்தலை ஈடுகட்டவே ஏனைய இரு மாகாணங்களுக்குமான தேர்தலையும் நடத்துகிறது என்பதே உண்மை. ஒட்டு மொத்தமாக தொழிலாளர்களும்; அனைத்து உழைக்கும் மக்களும் மிகவும் மோசமான பொருளாதார சுமைக்கு ஆளாக்கப்பட்ட சூழ்நிலையிலேயே இந்த மூன்று மாகாணங்களுக்கான தேர்தல்கள் இடம்பெற உள்ளன. இந்த பாதிப்பிற்கு மலையக மக்கள் வெகுவாக முகம் கொடுத்து வருகின்ற நிலையிலேயே மலையக மக்களில் 60 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாழும் மத்திய மாகாணத்தில் மாகாண சபை தேர்தல் இடம்பெறுகிறது.

மத்திய மாகாண சபை தேர்தலில் மலையக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஆளும் கட்சியுடன், எதிர் கட்சியுடன், சுயேட்சையாக என மலையக மக்களின் வாக்குகளை பெற அணித்திரண்டுள்ளனர். ஆளும் ஐ.ம.சு.மு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இ.தொ.கா. மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் என்பன அரசாங்கத்துடன் இணைந்து நுவரெலியாக மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக மக்கள் முன்னணிய, பிரஜைகள் முன்னணி என்பன சில தொழிற் சங்கங்களுடன் இணைந்து தேர்தல் கூட்டை அமைத்து போட்டியிடுகின்றன. ஜனநாயக மக்கள் முன்னணி ஐ.தே.க இணைந்து போட்டியிடுகிறது. இ.தொ.கா. கண்டி, மாத்தளை மாவட்டத்தில் தனித்து போட்டியிடுகிறது.

மலையக மக்களுக்கு வழங்கிய பல்வேறு உறுதி மொழிகளை நிறைவேற்ற ஆளும் ஐ.ம.சு.மு அரசாங்கம் தவறியுள்ளது. அதில் அங்கம் வகித்த மலையக அரசியல் தலைமைகளும் மலையகத்துக்கு அபிவிருத்தி என்று சொல்லி வருகின்ற போதும் அது கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இல்லை. அரசாங்கத்துக்கு வெளியில் போட்டியிடும் தேர்தல் கால கூட்டணிகள் வாக்குகளை சேர்பதற்கான தற்காலிக கூட்டுகளாக இருக்கின்றனவே தவிர மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளையும் பொருளாதார அரசியல் பிரச்சினைகளையும் மையப்படுத்திய ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டவைகள் அல்ல. ஐ.தே.க. மலையக மக்களுக்கு வரலாற்று ரீதியாக இழைத்த அநீதி ஒருபுறமிருக்க தோட்டத் தொழிளார்களுக்கான குறைவான சம்பள உயர்வை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. ஐ.தே.க. தேர்தல் கூட்டணியில் உள்ள கட்சிகளும் தற்போதுள்ள மலையக தலைமைகளுக்கு மாற்றாக தங்களை பிரசாரம் செய்கின்ற போதும் அதற்கான மாற்றுக் கொள்கை அடிப்படையிலான வேலைத்திட்டத்தினை மக்களிடம் முன்வைக்கவில்லை. அதனை மக்கள் எதிர்பார்க்கவும் முடியாது.

எனவே, ஒருபுறம் மலையகத்தில் தற்போது அரசியல் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் தொழிற்சங்க அமைப்புகள் அரசாங்கத்துடன் முழுமையாக சரணடைந்திருக்கின்றன. மறுபுறம் தங்களை மாற்று அரசியல் அமைப்புகள் என்று கூறும் அமைப்புகள் தங்களை தற்போதைய தலைமைகளுக்கு மாற்றீடாக மக்களிடம் வழியுறுத்தும் போதும் மாற்று வேலைத்திட்டம் அற்றவர்களாகவே காணப்படுகிறன. இந்நிலையில் கட்சிதாவுதல்கள் இடம்பெற்று வருவதோடு ஆளும் கட்சியில் உள்ள மலையக கட்சிகளிடையே ஆதிக்க அரசியலுக்கான வன்முறை அரசியல் மக்கள் மீது எவப்பட்டும் உள்ளது.

இவ்வாறான பின்னணியில் மலையக மக்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தங்களின் அரசியல் அபிலாசைகளை உறுதிப்படுத்தக்கூடிய வேலைத்திட்டத்துடன் அரசியல் சக்திகள் எதுவும் இல்லை என்றே எமது தொழிற்சங்கம் கருதுகிறது. மலையகத்தில் தொழிற்சங்கங்கள் என்பது தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் நிலைமைகள் மாறி உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபை, பாராளுமன்றம் என்ற அரசியல் நிறுவனங்களுக்கு செல்வதற்கான நுழைவாயிலாகவே பயன்படுத்தப்படுகின்றன. பெருந்தோட்டத்துறையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பங்கு மறுக்கப்படுவதோடு அவர்கள் இன்றும் நாட்கூலிகளாக பல்வேறு வகையில் உழைப்புச் சுரண்டலுக்கு மோசடிகளுக்கும் ஆளாக்கப்படுகிறனர். மலையக இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புகளில் ஓரங்கட்டப்படுகின்றனர். பெருந்தோட்டக் காணிகள் பகிர்ந்தளிப்பில் மலையக இளைஞர்களுக்கு இடமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக வீடு, காணி, முகவரிக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட மலையக மக்கள் வாழ்ந்து வரும் அவலம் தொடர்கிறது. இந்த அவலங்களை மூடி மறைப்பதும் இந்த அவலத்தை மூலதனமாக்கி தொடர்ந்து அரசியல் செய்யவும் முயற்சிக்கப்படுகிறது. அத்தோடு மலையகத்தில் ஏற்பட்டிருக்கும் சிறிய மாற்றங்களை காட்டி மலையகமே மாறி விட்டது அபிவிருத்தி அடைகிறது என்று கூச்சலிடும் நிலையும் இன்று காணப்படுகிறது.

இவ்வாறான மக்கள் விரோத அரசியல் நிலையை உணர்ந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும் மலையக மக்களும் செயற்படும் போதே மலையக அரசியல் சரியான பாதையில் செல்லும் என்பதே மக்கள் தொழிலாளர் சங்கத்தின் கருத்தாகும். மத்திய மாகாண சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இதுவே நாம் மலையக மக்களுக்கு வழங்கக்கூடிய அரசியல் செய்தியுமாகும்.

ஆர். இராஜேந்திரன்

தலைவர்