Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

மீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம்

மீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள் வீதியில் இறங்கி இதை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினர். அமைதியான முறையில் சத்தியாகிரக போராட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என ஆரம்பித்த மக்கள் செயற்பாடுகளை உள்ளூர் அரசியல் வாதிகள், அவர்களின் குண்டர்கள், போலீஸ், இராணுவம் என தமது அரசியல் பலத்தை பாவித்து தாக்கினர், அடக்கினர், செயற்பாட்டாளர்களை சிறை வைத்தனர். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் போது பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் பல்வேறு கதைகளை கூறிச்செல்வர். குப்பையை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கொடுக்கப்போகிறோம். ஒப்பந்தம் தயார், குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்போகிறோம், எரிபொருள் உற்பத்தி செய்யப்போகிறோம், டிசம்பருடன் முடிவுக்கு வருகிறது என பல்வேறு கதைகள்.

இன்று நடந்தது என்ன இதுவரை 11 உயிரிகள் காவுகொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை என்று தெரியாது..... மக்களின் வீடுவாசல் என பல லட்சம் பெறுமதியான உடைமைகள்.... அவர்கள் கேட்டது என்ன ? பல கோடி மதிப்புள்ள வாகனமா? இல்லை மாட மாளிகைகளா? தாம் வாழும் குடிசைக்கு சுத்தமான காற்று, இதைக்கூட நிறைவேற்றமுடியாத அரசுகள் எமக்கு தேவை தானா?

யார் இவர்களை தெரிவு செய்தது? நாம் தானே.... இன்னும் சில நொடிப்பொழுதில் ஊடகங்கள் என்று சொல்லி கொள்ளும் சில நிறுவனங்கள் நேரடி செய்திகளை காட்ட ஆரம்பித்துவிடும்.... இன்னும் ஓரிரு கிழமைக்கு அவர்களுக்கு மக்களின் வாழ்வாதாரப்பிரச்சினை சூடான செய்தி மட்டுமே.... சில ஊடங்கள் நிவாரண யாத்திரை என்று சொல்லி மக்களிடம் போய் நின்று நிவாரங்கள் சேகரிப்பு செய்து அதை அந்த மக்களிடம் கொண்டுபோய் கொடுப்பார்கள்... சோறு பார்சல் கொடுப்பார்கள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் கொடுப்பார்கள், யார் முதலில் கொடுப்பது என்பது அவர்களின் கவலை....

ஆனால்... இந்த மக்களின் வாழ்வாதார பிரச்சினை தீரப்போவதில்லை... இன்னும் நாம் பார்த்துக்கொண்டு இருக்கப்போகிறோமா?.... இதை பற்றிய மாற்று கருத்தென்ன?...... மக்களின் பிரச்சினையை மக்கள் தான் தீர்க்கவேண்டும்.... போராட்டம் ஒன்றே ஒரே வழி... தொடர்ச்சியான போராட்டம்.... விட்டுக்கொடுக்காத.... யாருக்கும் அடிபணியாத போராட்டம்.