Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

கார்த்திகேசனின் நூற்றாண்டு

ஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019

தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி, 2010 ஆம் ஆண்டு அவரது 33வது நினைவுதினத்தின் போது தோழர் சண்முகம் சுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்டு, 02.09.2010 இல் தினகரனில் வெளிவந்த கட்டுரை நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.

வடக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வேரூன்ற வைத்தவர்
‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்’ என இலங்கையின் வடபுலத்து மக்களாலும், ‘காத்தார்’ என யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர் சமூகத்தாலும் அன்புடனும், அர்த்தத்துடனும் அழைக்கப்பட்டு வந்த முருகுப்பிள்ளை கார்த்திகேசன் (மு.கா) அமரத்துவமடைந்து, இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் 10ம் திகதியுடன் 33 வருடங்கள் உருண்டோடிவிட்டன.

இந்த 33 வருடங்களில் அவர் பெரிதும் நேசித்து வந்த தமிழ் மக்களின் வாழ்விலும், உலக அரங்கிலும் எவ்வளவோ பிரமாண்டமான மாற்றங்கள் நிகழ்ந்தேறிவிட்டன.

இந்த மாற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம், அவை பற்றி, கார்த்திகேசன் உயிருடனிருந்திருந்தால், என்ன கருத்துகளைக் கூறியிருப்பார், அவற்றுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருப்பார், என்னென்ன நகைச்சுவைகளை அவிழ்த்திருப்பார் என, அவருடன் பழகிய பல்வகை மனிதர்களும் நிச்சயமாக ஊகங்களை வெளியிட்டிருப்பர்.

எமது மதிப்புக்குரிய ஆசானும், தோழருமான கார்த்திகேசன் 1919ம் ஆண்டு இப்பூமியில் அவதரித்து, 1977ல் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவர் இப்பூவுலகில் வாழ்ந்தது மொத்தம் 58 ஆண்டுகள் மட்டுமே. சுமார் அரை நூற்றாண்டுகால இவ்வாழ்க்கையில், அவர் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றிலும், தமிழ் மக்கள் வாழ்விலும் பதித்து விட்டுச் சென்ற சுவடுகள் என்றும் காலத்தால் அழியாதவை.

உலக வரலாற்றில் சொற்ப காலம் வாழ்ந்தாலும், மனித சமுதாயத்துக்காக என்றென்றைக்குமாக தமது வாழ்வை அர்ப்பணித்துவிட்டுச் சென்ற, லெனின், சேகுவேரா, ஜூலியஸ் பூசிக், பகத்சிங், சுப்பிரமணிய பாரதி போன்றோரின் வரிசையில், எமது தேசத்தின் அழியாத சொத்தாக கார்த்திகேசனும் இருக்கிறார் என்பதை நாம் எவ்வித தயக்கமும் இன்றி பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.

கார்த்திகேசன் தனது கல்லூரிப் படிப்பை மலேசியாவில் முடித்த பின்னர், தாயகம் திரும்பி இலங்கை பல்கலைக்கழக கல்லூரியில் ஒரு மாணவராகச் சேர்ந்து பட்டதாரியானார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்திலேயே அவர், ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளாலும், மார்க்சிய கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக வளர்த்துக் கொண்டார்.

அந்தக் காலத்தில் அவர் பல்கலைக்கழக கல்லூரியிலிருந்து வெளிவந்த ‘மாணவர் செய்தி’ ( Student News) என்ற ஏட்டுக்கு ஆசிரியராக இருந்து எழுதிய கட்டுரைகளும் செய்திகளும் மாணவ சமுகத்தை மட்டுமின்றி, இலங்கையின் எதிர்கால அரசியல் தலைவர்களையே ஈர்ப்பனவாக இருந்தன.

அதன் காரணமாக பிற்காலத்தில் இலங்கையின் சக்திவாய்ந்த அரசியல்வாதியாக மாறிய ஜே.ஆர். ஜெயவர்தனாவே, ஒரு சந்தர்ப்பத்தில் தனது செய்தியொன்றை அந்தப் பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக கார்த்திகேசனை நாடிச் சென்ற சம்பவமும் நிகழ்ந்தது.

பல்கலைக்கழகப் படிப்பை மிகவும் சிறப்பாக முடித்த கார்த்திகேசன், விரும்பியிருந்தால் இலங்கையின் மிகச் சிறந்த சிவில் நிர்வாக உத்தி யோகத்தர்களில் ஒருவராக வந்திருக்க முடியும். அல்லது முதலாளித்துவ அரசியல் கட்சியொன்றில் இணைந்திருந்தால் ஒரு அமைச்சராகக் கூட சில வேளைகளில் வந்திருக்கக் கூடும்.

ஆனால் அவர் அதற்கு மாறாக, கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர் என்ற கடுமையான, ஆனால் மக்களுக்கு உவகையுடன் சேவையாற்றக் கூடிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். கட்சிக்கு கிடைக்கும் மிகச் சொற்ப வருமானத்தில், தனது இளம் மனை வியுடன், கொழும்பு கொட்டா வீதியிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்தில், வேறு பல தோழர்களுடன் இணைந்து கிடைப்பதைக் கொண்டு வாழும் “கம்யூன் வாழ்க்கை”யை வாழ்ந்தார்.

அவர் கொழும்பில் கட்சியின் முழு நேர ஊழியராக வேலை செய்த காலத்தில் கட்சியின் புகழ்மிக்க ஆங்கில வார ஏடான ‘போர்வாட்’ (Forward) பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமை யாற்றினார். இன்றைய பத்திரிகை ஆசிரியர்கள் போல், குளிரூட்டிய அறையிலோ அல்லது சுழலும் மின் விசிறிக்கு கீழோ அவர் அமர்ந்திருந்து பணி புரியவில்லை. பத்திரிகைக்கு அச்சுக் கோர்ப்பதிலிருந்து, அச்சிட்ட பத்திரிகைகளை மடித்து எடுத்துச் சென்று, வீதிகளில் கூவி விற்பது வரை, அவர் மிகக் கடினமாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார்.

அந்த சூழ்நிலையில் தான், இலங்கையின் வடபுலத்தில் கட்சிக் கிளையொன்றை ஸ்தாபிக்கும் பொருட்டு, கம்யூனிஸ்ட் கட்சி அவரை யாழ்ப்பாணம் அனுப்பியது. அங்கு 1944ல் தன் மனைவி சகிதம் சென்ற அவர், கட்சிக்கு பொருளாதார ரீதியில் ஒரு சுமையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், யாழ். இந்துக்கல்லூரியில் சாதாரண ஆசிரியத் தொழில் ஒன்றைப் பெற்று, அங்கு கல்வி கற்பித்தபடியே, கட்சி அமைப்பு வேலைகளிலும் ஈடுபட்டார்.

அவரது ஆசிரியத் தொழில், அவரது கட்சிப் பணிகளுக்கு மிகவும் வாய்ப்பான ஒரு தொழிலாக அமைந்து கொண்டது. அவர் தன்னிடம் கல்வி கற்ற மாண வர்களுக்கு முற்போக்கான கருத்துகளை ஊட்டவும், அவர்களது பெற் றோர்களான யாழ். தமிழ் சமூகத்துடன் உறவு கொள்ளவும், கல்வித்துறையின் ஏனைய சகாக்களுடன் உறவு பூணவும் அத்தொழில் பெரும் வாய்ப்பைத் திறந்துவிட்டது.

அவர் யாழ். இந்துக் கல்லூரியில் சுமார் 30 வருடங்கள் ஆசிரியராகவும், பின்னர் சிறிது காலம் பதில் அதிபராகவும் கடமையாற்றினார். அதன் பின்னர் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி என்பனவற்றின் அதிபராக இருந்து ஓய்வு பெற்றார்.

தோழர் கார்த்திகேசன் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு கொழும்பிலிருந்து தனியொரு கம்யூனிஸ்ட்டாகச் சென்றாலும், ஏற்கெனவே மார்க்கியக் கருத்துக்களால் ஆகர்சிக்கப்பட்டிருந்த சிலரை இனங்கண்டு, அவர்களையும் இணைத்துக் கொண்டு கட்சி அமைப்புப் பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்தார். அவர்களில் ஆரம்ப காலத்தில் அவருடன் கட்சிப் பணி களில் இணைந்து கொண்டவர்களில் தோழர்கள் இராமசாமி ஐயர், எம்.சி.சுப்பிரமணியம், டாக்டர். சு.வே. சீனிவாசகம், மகாலிங்கம் மாஸ்டர், ஆர்.ஆர். பூபாலசிங்கம், எஸ்.கே. கந்தையா, வீ. ஏ. கந்தசாமி, அரசடி இராசையா ஆகியோர் முக்கியமானவர்களாவர். பிற்காலத்தில் அ.வைத்திலிங்கம், ஐ.ஆர்.அரியரத்தினம், பொன். கந்தையா, காதர் போன்ற பலர் கார்த்திகேசனுடன் இணைந்து கட்சிப் பணிகளை முன்னெடுத்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி ஏழை எளிய மக்களுக்காக முன்வைத்த விமோசன வேலைத் திட்டங்கள் மட்டுமின்றி, முழுத் தமிழ் மக்களுக்காகவும் முன்வைத்த, ‘வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பிரதேச சுயாட்சி’ என்ற யதார்த்தபூர்வமான தீர்வு, 1956ல் பண்டாரநாயக்க அரசாங்கம் கொண்டு வந்த சிங்களம் மட்டும் சட்டத்தை பாராளுமன்றத்திலும், வெளியிலும் உறுதியாக எதிர்த்து நின்ற நிலைப்பாடு என்பனவும், தமிழ் மக்கள் மத்தியில் கட்சிக்கு பெரும் செல்வாக்கை பெற்றுத்தந்தன. கட்சி எடுத்த இந்த ஆக்கபூர்வமான, காலத்தால் அழியாத தீர்மானங்களில் கார்த்திகேசனின் பங்களிப்பு, மிகவும் உயர்வானதும், தீர்க்கமானதுமாகும். அதன் பிரதிபலிப்பு வட பகுதியில் நடைபெற்ற தேர்தல்களிலும் எதிரொலித்தது.

1956 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பருத் தித்துறை தொகுதியில் போட்டியிட்ட தோழர் பொன். கந்தையா அமோக வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட தோழர் அ.வைத்திலிங்கம், அத்தொகுதியில் வெற்றிபெற்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர் அ.அமிர்தலிங்கத்திடம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியுற்றார். அதேபோல கட்சி சார்பில் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட தோழர் கார்த்திகேசன் கணிசமான வாக்குகள் பெற்று கட்டுப் பணத்தைப் பெற்றார். அங்கு சமசமாஜகட்சி தனது வேட்பாளரை போட்டிக்கு நிறுத்தாது விட்டிருந்தால், சில வேளைகளில் காத்திகேசன் யாழ்ப்பாணத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கலாம் என்பதை, வேட்பாளர்களுக்கு போடப்பட்ட வாக்குகள் காட்டி நிற்கின்றன.

இருந்த போதிலும், யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் வண்ணார்பண்ணை வட்டாரத்தில் கட்சி சார்பாகப் போட்டியிட்ட கார்த்திகேசன், அங்கு போட்டியிட்ட மிகவும் செல்வாக்கு மிக்க, பிற்காலத்தில் மாநகர சபை முதல்வராக வந்த, தமிழ் காங்கிரசின் வேட்பாளரான துரைராசாவைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியமை, அந்தக் காலத்தில் கட்சியின் செல்வாக்கை நன்கு புலப்படுத்துகிறது. அதுமாத்திரமல்ல, அவர் மாநகர சபை உறுப்பினராக இருந்த காலத்தில் தான், அவர் ஒருவர் தன்னந்தனியனாக நின்று, தமிழரசு – காங்கிரஸ் கட்சிகளுக்கிடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தின் சனத்தொகையில் மிகச் சிறு தொகையினரான முஸ்லிம்களின் பிரதிநிதியாகத் தெரிவான சுல்தான் என்பவரை யாழ். மாநகர சபையின் முதல்வராக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது அந்தப் பங்களிப்பை முஸ்லிம் மக்கள் இன்றுவரை நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு கார்த்திகேசனின் வாழ்வையும் பணியையும் கூறுவதானால், அது அவரதும் தமிழ் மக்களினதும், இலங்கை இடதுசாரி இயக்கத்தினதும் பெரும் வரலாற்று நூலாகி விடும். இன்று நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில், இடதுசாரி இயக்கங்கள் விட்ட தவறுகளாலும், தமிழ்- சிங்கள தேசிய வெறிப் போக்குகள் விளைவித்த நாசத்தாலும், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகள் பலவீனங்களாலும், பொதுவாக இலங்கையிலும், குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும், இடதுசாரி இயக்கம் மிகவும் பலவீனமான ஒரு நிலையில் இருப்பதையே காண முடிகிறது. ஆனால் இது நிரந்தரமானதல்ல.

தோழர் கார்த்திகேசன் அவர்கள் அமரத்துவமடைந்த 33வது வருடத்தை நினைவு கூருகின்ற இவ்வேளையில், வெல்லப்பட முடியாத மார்க்சிசம்- லெனினிசம் என்ற ஆயுதத்தைக் கொண்டு, மீண்டும் இலங்கையில் ஒரு சக்தி வாய்ந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டியெழுப்புவதே, அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும்.

தோழர் கார்த்திகேசன் அவர்களின் 32வது நினைவுதினத்தின் போது 27.09.2009 ஞாயிறு அன்று கொழும்பு 06ல் 58, தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடலில் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மறைந்த திரு சிவா சுப்பிரமணியம் ஆற்றிய உரையின் சில பகுதிகள்

“வடக்கில் கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்த ஆரம்பகர்த்தாக்களில் கார்த்திகேசன் மாஸ்டர் முக்கியமானவர். அரசியலில் முழு ஈடுபாடு கொண்ட போதும் ஆசிரியராக இருந்த அவர் தனது ஆசிரியர் பணிக்கு தொய்வு ஏற்படாதவாறு கல்விப் பணியைத் தொடர்ந்தார்”

“அவரிடம் கல்வி பெற்ற ஒரு சிலர் பின்னாட்களில் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத போதும் அவரில் பெரு மதிப்பு வைத்திருந்தனர். வார்த்தை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிலம்பாட்டங்கள் இன்றி நாசூக்கான சிந்தனைகள் ஊடாக அரசியலை மக்களிடம் கொண்டு சென்றார்”

“எளிமையான சொற்களும், நகைச்சுவை நயமும் சேர்ந்திருப்பதால் அவரது கருத்துக்கள் சுலபமாக விளங்கப்பட்டன. இன்று தமிழ் அரசியலில் உள்ள பலரும் அவரூடாகவே வந்தவர்களாகும்”

“சொந்த வாழ்வுக்கும் அரசியலுக்குமிடையே எந்த வித்தியாசமும் காட்டாதவர் அவர். போஸ்டர் ஒட்டுவதாயின் தொண்டர்களுடன் களம் இறங்கிவிடுவார். ராமசாமி ஐயர், பூபாலசிங்கம், M.C.சுப்பிரமணியம் ஆகியோரும் இணைந்து செல்வதுண்டு”

“எனது வீட்டுப் படலையில்தான் முதல் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்பாராம். ஒரு முறை அவ்வாறு நோட்டீஸ் ஒட்டும்போது பொலிஸ் பிடித்துக் கொண்டு போய்விட்டது. பொலிஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வந்து விடயத்தை அறிந்தபோது இது சிறிய குற்றம் விட்டு விடுங்கள் என்றாராம். கார்த்திகேசு மாஸ்டர் கதிரையை விட்டு அசையவில்லை. நாங்கள் குற்றம் அற்றவர்கள். எங்கு பிடித்தீர்களோ அங்கு கொண்டு போய் விட்டு விடும்படி சொன்னார்”

“தமிழ் ஈழம் பற்றி முதல் முதலில் பேச்சு வந்தபோது, ஈழம் ஈழம் என்று சொன்னால் சிங்களம் நீளம் நீளமாக வளரும் என அன்றே சொன்னார் கார்த்திகேசன் மாஸ்டர்”

“SLAS பரீட்சைக்கு தோற்றும் பலருக்கு ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவதற்கு பழக்கியிருக்கிறார்”

“பல துறைகளிலும் கார்த்திகேசு மாஸ்டருக்கு திறமை இருந்த போதும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகவே வாழ்ந்தார் தனது கடைசி மூச்சு வரை அவ்வாறே உறுதியாக வாழ்ந்த பெருமைக்கு உரியவர்”

கனடாவில் வாழும் கிரிதரன் நவரத்தினம் (Giritharan Navaratnam) அவர்களின் முகநூலிலிருந்து:

“யாழ் இந்துக்கல்லூரி அதிபர்களில் இலங்கைச் சமூக, அரசியல் மற்றும் கலை, இலக்கியத் தளங்களில் நன்கு அறியப்பட்டவர் இவர். மார்க்சியச் சிந்தனையின் வளர்ச்சிக்குப் பின்னால் நிற்பவர்களில் இவரும் முக்கியமானவர்களிலொருவர். நான் யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் இணைந்த காலகட்டத்தில் யாழ் இந்துக்கல்லூரியின் அதிபராக இவர் சிறிது காலம் கடமையாற்றினார். இவரிடம் நான் படித்ததில்லை. இவர் பாடசாலைக்கு அதிபராகப்பதவியேற்ற சில நாள்களே ஆகியிருந்த நிலையில் எதற்கோ , எங்கோ ஓடிக்கொண்டிருந்த என்னை இடை நிறுத்திச் சிறிது நேரம் உரையாடினார். அந்தச் சிறிது நேரத்துச் சந்திப்பை இன்னும் என் மனத்தின் ஆழத்தில் பத்திரமாக வைத்துள்ளேன். எப்பொழுதும் இதழ்க்கோடியில் கசிந்துகொண்டிருந்த அந்தப்புன்னகை இன்னுமென் நெஞ்சில் பசுமையாகப்படிந்துபோயுள்ளது.

யாழ் இந்துக்கல்லூரியில் குறுகிய காலம் அதிபராகவிருந்த இவர்தான் தனது சமூக, அரசியற் செயற்பாடுகளால் பல்துறைகளிலும் நன்கு அறியப்பட்டவராக விளங்கினார்; விளங்குகின்றார். அவ்வகையில் யாழ் இந்துக் கல்லூரியின் புகழ்பெற்ற அதிபர்களிலொருவராக இவர் விளங்குகின்றார். அப்பொழுது இவர் யாழ் இந்துக்கல்லூரியின் அதிபர் என்பதைத்தவிர இவரைப்பற்றிய வேறெந்த விடயத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. பின்னரே கலை, இலக்கிய மற்றும் அரசியற் பிரமுகர்கள் மூலம் இவரைப்பற்றி நன்கு அறிந்துகொண்டேன். இன்றும் இவரைப்பற்றி இவரது மாணவர்களிலொருவர் அல்லது வழி நடத்தப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் எங்கோ ஒரு மூலையிலிருந்து எழுதிக்கொண்டுதானிருக்கின்றார்.

இவர்தான் யாழ் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் கார்த்திகேசன் மாஸ்டர் ஆவார். இவரது நூறாவது பிறந்ததினம் 25.06.2019. இதனையொட்டி இவரது புத்திரிகளில் ஒருவரான ஜானகி பாலகிருஷ்ணன் அவர்கள் ஓவியர் டி.செளந்தர் வரைந்த் ஓவியமொன்றினைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனையும் நான் இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்”