Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்

தமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா?, எப்போது சாதி உருவாக்கப்பட்டது?, ஆதியில் யார் ஆண்ட சாதி?, இராசராச சோழன் எந்தச் சாதி?, சாதியைக் கொண்டு யார் தமிழர் எனக் கண்டுபிடிக்கமுடியுமா? என்பன போன்ற பல கேள்விகள் அண்மைக் காலத்தில் பரவலாக எழுப்பப்படும் கேள்விகளாகக் காணப்படுகின்றன.

அத்தகைய கேள்விகளிற்குப் பதில் காணுமுகமாக தமிழர்களிடம் சாதியின் தோற்றம் பற்றிய ஒரு சுருக்கமான விளக்கமாகவே இக் கட்டுரை அமையும். இதனை முழுமையாகப் பார்ப்பதற்கு தமிழர்களின் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளிலான எழுத்திலுள்ள வரலாற்றினைப் பார்க்கவேண்டும்.

பொதுவாக இலக்கியங்கள் அந்ததந்த காலங்களைப் படம்பிடித்துக் காட்டும் கருவியாகச் சொல்லப்படுவதால், ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் இடைவெளியில் இடம்பெற்ற இரு பாடல்களைக் கொண்டு; இச் சிக்கலினை அணுகுவோம்.

முதலில் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்னர் சங்க காலத்தில் இடம்பெற்ற புறநூனூற்றுப் பாடல் ஒன்றினைப் பார்ப்போம். `அடலருந் துப்பின்…..’ எனத் தொடங்கும் பாடலின் (புறம்335) பின்வரும் வரிகளைப் பாருங்கள்.

‘துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே’

இப் பாடல் வரிகளில் புலவர் மாங்குடி கிழார் `துடியன், பாணன், பறையன், கடம்பன்’ என்ற நான்கு குடிகளே சிறந்த குடிகள் என்கின்றார். {இப் பாடலைக் கொண்டே சிலர் “முன்பு பறையர்கள் தான் ஆண்ட சாதி” என தற்போதைய தாழ்த்தும் சாதிகளிற்குப் போட்டியாக, தமது சொந்தச் சாதிப் பெருமையினைப் பேசிவருகின்றார்கள். இது ஏன் தவறு எனப் பின்னர் பார்ப்போம்}.

இப்போது அப்படியே 2000 ஆண்டுகளைக் கடந்துவந்து இன்னொரு பாடலினைப் பார்ப்போம். அலை ஓசை (1985) என்ற படத்தில் “போராடடா ஒரு வாளேந்தடா, வேங்கைகளும் இனித் தூங்கதடா…” எனத் தொடங்கும் பாடலின் பின்வரும் வரிகளைப் பாருங்கள். {இப் பாடல் அண்மையில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படத்திலும், ஈழத்தில் போர்க் காலங்களிலும் மீள ஒலித்திருந்த ஒரு பாடல்}

‘இன்னும் இங்கு பள்ளு பறையென
சொல்லும் மடமைகள் உள்ளதடா
நித்தம் சிறு சேரி சிறகுகள்
வேள்வி விறகென மாறுதடா’

இப்போது பள்ளு, பறை என்று சொல்வதே கீழானதும், மடமையானதும் என்ற நிலை வந்துவிட்டது. இவ்விரு பாடல் வரிகளையும் மேலோட்டமாகப் பார்த்தால், சங்ககாலத்தில் சாதியடுக்குகளில் மேலேயிருந்த ‘பறையர்’ போன்ற சாதிகள் தற்போது கீழே வந்துவிட்டது என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படலாம் (அவ்வாறு கூறியும் சிலர் அரசியல் செய்கின்றார்கள்).

உண்மை அதுவன்று, உண்மையில் சங்ககாலத்தில் சாதி என்ற சொல்லோ அல்லது அந்தக் கருத்துருவாக்கமோ தமிழர்களிடமில்லை. அவ்வாறாயின் மேற்கூறிய புறநானூற்றுப் பாடல் வரிகள் என்ன? என்ற கேள்வி எழலாம். அப் பாடல் வரியிலேயே அதற்கான பதில் உண்டு. அதுதான் ‘குடி’. சாதி என்பது குடி-குலம் என்பதிலிருந்து வேறுபட்டது. இதனைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தமிழர்களிடம் சாதியின் வரலாறு :

சாதி (Caste) என்பது பிறப்பிலடிப்படையிலான தொழிற் பாகுபாட்டினையும், அக மணமுறையினையும் கெட்டியாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட மக்களின் குழுக்களைக் குறிக்கும். இங்கு பிறப்பிலடிப்படையிலான தொழில், அக மணமுறை, மதப்பின்புலம் என்பன சாதியின் அடிப்படைக் கூறுகளாகும்.

இக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட முதலாவது கேள்வியான “தமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா?” என்ற கேள்விக்கான பதில் சாதி என்ற சொல்லிலேயே உண்டு, அதாவது சாதி என்ற சொல்லே தமிழல்ல. அது ஜாதி என்ற வடசொல்லின் கிரந்தம் நீக்கிய வடிவமே (ஜாதகம்- சாதகம் போன்று).

ஜா என்பது ஜனனம் (பிறத்தல்) என்பதுடன் தொடர்புடையது. ஜாதி/ சாதி என்ற சொல் தமிழல்ல என்பது மட்டுமல்ல, அதற்கு இணையான தமிழ்ச்சொல் வேறு எதுவும் கூட வழக்கில் இல்லை (குலம், குடி போன்ற தமிழ்ச்சொற்களின் பொருளினைப் பின்பு பார்ப்போம்).

இப்போது பலர் `சாதி` என்று சொல்லக் கூச்சப்பட்டு/ அவ்வாறு நடித்து சமூகம், சமுதாயம் (சமன்+ஆயம்) என்ற சொற்ளால் சாதியினைக் குறிக்கின்றார்கள். இது முற்றிலும் தவறு; ஏனெனில் அவ்விரு சொற்களும் சமன் என்ற வேர்ச்சொல்லினை அடியாகக் கொண்ட சொற்களாகையால், அவை சமனற்ற சாதி முறையினைக் குறிக்கமாட்டாது (அதே போன்று ஸமூகம் என்ற வடசொல்லும் ‘ஸங்கமித்தல் = ஒன்றுசேர்தல்’ என்பதனைக் குறிப்பதால் அதுவும் பொருத்தமற்றது). அதனால்தான் சொல்கின்றோம் சாதி என்ற சொல்லிற்கு பொருத்தமான தமிழ்ச்சொல்லே இல்லை, ஏனெனில் சாதி தமிழரின் மரபன்று. {தமிழிலுள்ள சாதி என்ற மற்றொரு சொல்லிற்கு உயர்திணையுடன் அறவே தொடர்பில்லை (சாதிமுத்து, சாதிமல்லி போன்றன)}.

சொல்லின் பொருளைப் பார்த்தோம். இப்போது இலக்கியச் சான்றுகளைப் பார்ப்போம். சாதி என்பது பிறப்பினடிப்படையிலானது என முன்னரே பார்த்தோம். இந்த நிலையில் பின்வரும் குறளினைப் பாருங்கள்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” – (குறள் 972)

இக்குறளானது பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உரக்க உரைத்திற்று.

அடுத்ததாக சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலுள்ள ஒரு பாடலைப் பாருங்கள்.

“யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே”

இப்பாடலானது தமிழர்களிடையே புறமணமுறை காணப்பட்டதனை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. புறமணம் உள்ள ஒரு சமூகத்தில் சாதியமைப்பு இருப்பதற்கான சாத்தியமேயில்லை.

இந்த ஒரு பாடல் மட்டுமன்றி சங்கப் பாடல்களில் பலவற்றிலும் {எ.காட்டு- குறுந்தொகை 167 ‘முளிதயிர் பிசைந்த’ , கலித்தொகை 107 ‘அன்னை நோதக்கதோ இல்லைமன் நின் நெஞ்சம்’,….} ஒரு ஆயத்திலுள்ள தலைவியினை ஆயத்திற்கு வெளியேயிருந்து வரும் ஒரு தலைவனே விரும்புகிறான், அதனால் சங்ககாலத்திலிருந்தது புறமணமுறையே என பேரா .கா.சிவத்தம்பி “சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும்” எனும் நூலில் 85-86 பக்கங்களில் நிறுவுகிறார்.

சங்க காலத்தில் புற மணமுறை காணப்பட்டதனை மேலே பார்த்தோம். அதே போன்று பிறப்பிலடிப்படையிலான தொழிலினை மேற்கொள்ளவில்லை என்பதனையும் ஐங்குறுநூறுவில் இடம்பெறும் பின்வரும் பாடல் காட்டுகின்றது.

‘முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய, மனையோள்
அரிகாற் பெரும் பயறு நிறைக்கும் ஊர!
மாண் இழை ஆயம் அறியும் நின்
பாணன் போலப் பல பொய்த்தல்லே.’ – (ஐங்குறுநூறு 47)

இப் பாடலில் பாட்டுப்பாடும் பாணரே மீன்பிடித்து ஊரில் கொண்டு சென்று, மீனுக்கு நிகர் பயறோ, நெல்லோ கொடுத்துப் பண்டம் மாற்றிக்கொண்ட நிகழ்வினை ஐங்குறுநூறு காட்டும்.

அதே போன்று நக்கீரப்புலவரிற்கோ புலவர் பணி, தந்தைக்கோ கணக்காயர் பணி; புலவரான சீத்தலைச் சாத்தனாரின் தந்தை கூலவாணிகம் தொழில் செய்பவர். இவ்வாறு பல சான்றுகள் சங்ககாலத்தில் பிறப்பிலடிப்படையிலான தொழில் காணப்படவில்லை என்பதனை எடுத்துக்காட்டும்.

மேற்கூறியவற்றை உற்றுப் பார்த்தால் சங்ககாலத்தில் நிலவிய குடி / குலம் என்பதற்கும் இன்றைய சாதி முறைக்குமுள்ள வேறுபாட்டினை அறிந்துகொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால் பழங்கால குடிகளிடம் அகமணமுறையோ / கட்டாய பிறப்பிலடிப்படையிலான தலைமுறைத் தொழில்முறையோ இல்லை.

தமிழர்களிடம் சங்ககாலத்தில் காணப்பட்ட குலக்குழுக்கள் (tribes), குடிகள் என்பவற்றைச் சாதியுடன் போட்டுக்குழம்பத்தேவையில்லை, ஏனெனில் அவை உலகெங்கும் பழங்குடி மக்களிடையே காணப்பட்ட பிரிவுகள் போன்றனவையே. அவற்றில் அகமணம், பிறப்பிலடிப்படையிலான தொழில் கட்டாயம் என்பனவில்லை. இதுவே சாதிக்கும்-குடிக்குமுள்ள வேறுபாடாகும்.


இலக்கியச் சான்றுகளையும் விட முதன்மையானது அகழ்வாய்வுச் சான்றுகளாகும். கீழடி அகழ்வாய்வில் முதல் நான்கு கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட 12,000 -இற்கும் மேற்பட்ட பொருட்களில் எதுவுமே சாதி – மத அடையாளத்தைக் குறிக்காமலிருப்பது, நமது ‘சங்க காலத்தில் சாதி இல்லை’ என்ற கூற்றினை வலுப்படுத்துகின்றது.

சாதி என்ற சொல்லே சங்கமருவிய காலத்திலேயே முதன்முதலில் சிலப்பதிகாரத்தில் வர்ணங்களை குறித்தே வருகின்றது.

“நால்வகை சாதியும், நலம்பெற நோக்கி “-(வேனில் காதை41)

அடுத்ததாக மணிமேகலையில் இடம்பெறுகின்றது.

“நாமம் சாதி..கிரியையின் அறிவது ஆகும்.”- (சமயக்கணக்கர் 23).

சங்கமருவிய காலத்தில் கூட சாதி என்ற சொல் வர்ணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களிடம் வந்து சேர்ந்துவிட்டபோதும், சாதி என்ற கோட்பாடானது, இன்றைய பொருளில், அன்றும் உருவாகவில்லை.

தமிழர்களிடம் எங்கிருந்து சாதி வந்தது ?

பார்ப்பனர்களின் தமிழக வருகையுடனேயை சங்கமருவிய காலத்தில் சாதி வருகின்றது. பார்ப்பனர்களிடமும் முதலில் வர்ணங்களே தோன்றுகின்றன. இதனை ரிக் வேதம் புருச சூத்திரம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

வர்ணங்கள் எவ்வாறு சாதியாக மாறுகின்றது என்பதனை அம்பேத்கார் சிறப்பாக Revolution and Counter-Revolution in Ancient India, Annihilation of Caste எனும் நூல்களில் விளக்கியிருப்பார்.

வர்ணங்கள் மேலும் பிரிவுகளாகப் பிளவுற்ற பின் ஜாதி என்ற சொல் முதன்முதலில் பகவத்கீதையில் (1: 42) “உத்ஸாதயந்தே ஜாதி தர்மா சாஸ்வத” என வருகின்றது. இவ்வாறு வைதீக மதத்தினூடாகவே சாதி தமிழரிடையே புகுத்தப்பட்டது.

இப்போதெல்லாம் மதவாதிகளில் சிலர் பகவத்கீதை கூறும் வர்ணங்கள் ஜாதிகள் என்பன பிறப்பினடிப்படையிலானதல்ல, அவை குணத்தினடிப்படையிலானவை எனப் புதிய விளக்கம் கொடுக்கிறார்கள். இதற்கு இவர்கள் காட்டும் சுலோகம் “குண-கர்ம விபாசக” (4-13) என்பதாகும். இங்குள்ள குண கர்ம என்பது சாதிக்கு விதித்த வேலையின் குணம் என்பதே. இதற்கு உரை எழுதிய ஆதிசங்கரரும் “ பிறப்பால்” என்றே எழுதியுள்ளார்.

கீதையின் 18 இயலின் 44-47 வது பாடல்களில் நாலு வருணங்களின் பெயர் குறிப்பிடப்பட்டு அவற்றிற்கான தொழில்களும் குறிப்பிடப்படுகிறது. கீதையின்படி ஒரு வர்ணத்தை சேர்ந்த ஒருவர் வேறு ஒரு தொழினை சிறப்பாகச் செய்வார் எனினும் தனது குலத்தொழிலினைவிட வேறு தொழில் செய்யக்கூடாது (ஸ்ரோயான் ஸ்வ-தர்மா விகுண. பர தர்மாத் ஸ்வ-அனுஸ்திதா).

மேலும் இன்னொரு சுலோகமானது (வர்ண சங்கரோ நரகாயைவ, பித்ரு லுப்த பிண்டோதம் க்ரியக) கலப்புமணம் செய்தால் பிண்டம் கூட உங்களிற்கு வந்து சேராது, நரகமே செல்வீர்கள் எனக் கூறுகின்றது.

இவற்றின் மூலம் கீதை சொல்வது பிறப்பினடிப்படையிலான, அகமணமுறையினை வலியுறுத்தும் சாதியமைப்பினையே என்பது தெளிவாகின்றது. இத்தகைய வைதீக (இன்றைய இந்து) சிந்தனைகளையே சாதிகளாக தமிழர்களிடம் கொண்டுவரப்பட்டன. இதற்கு தமிழர்களிடம் ஏற்கனவேயிருந்த குடிப் பெயர்களையே, தமது வர்ணக்கோட்பாட்டிற்கமைய சாதிகளாக பார்ப்பனியம் மாற்றிவிட்டது.

குடிகள் சாதிகளாக்கப்பட்ட வரலாறு :

தமிழர்களிடம் தொழில்களை அடிப்படையாகக்கொண்ட குடிகள் இருந்தது போன்றே, திணைகளை அடிப்படையாகக் கொண்ட குடிகளுமிருந்தன. மனிதர்களின் ஆதித்தொழிலான வேட்டையினைச் செய்தவர்கள் வேடர்கள். அந்தவகையில் பார்த்தால் நமது முன்னோர்கள் யாவருமே வேடர்கள்.

முல்லையில் மேய்ச்சல் வாழ்வில் ஆடு மாடுகளை பார்த்துக் கொண்டிருந்ததால் நமக்குப் பெயர் கோனார். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தவர்கள் குறவர்கள். நமது முன்னோர்கள் அத்தனை பெரும் குறவர்களாக இருந்தவர்கள் தான். காட்டிற்கும் மலைக்கும் இடையிலே வாழ்கின்றவர்களிற்கு இடையர்கள் என்று பெயர். மருத நிலத்தில் வேளாண்மை செய்யும் போது அங்கு மேட்டுப் பாங்கான நிலத்தில் குடில்களை அமைத்துக்கொண்டு, பள்ளத்தில் இறங்கி வேலை செய்தோர் பள்ளர்கள். பழந்தமிழ் இலக்கியங்களில் பள்ளு என்றால் உழவு என்ற பொருள் உண்டு. பின்னரே உழவர்கள் வேளாளர்கள் எனப்பட்டனர். பறையோர் என்பது அரசரின் தூதுவர்களையே குறிக்கும்.

இன்றும் ஈழத்தில் பறைதல் என்றால் பேசுதல் என்ற பொருள் உண்டு. அரசரின் ஆணைகளை மக்களிடம் எடுத்துச் செல்லல், தூது செல்லல், போரில் முன்னின்று பறை முழங்கிப் போரினைத் தொடக்கி வைத்தல் எனப் பல சிறப்பான பணிகளை ஆற்றுவோரே ‘பறையர்’ எனப்பட்டார்கள். இத்தகைய சிறப்பான பணிகளை மேற்கொண்டமையாலேயே மேற்கூறிய புறநானூற்றுப் பாடலில் (புறம்335) ‘பறையர் சிறந்த குடி’ எனப் பாடப்படுகின்றது. பறைக்கு பலியிடப்படுவதன் மூலம் தெய்வத்திற்கு நிகராகப் பறை கருதப்பட்டதனை சங்ககால பத்திற்பத்தில் இடம்பெறும் பின்வரும் பாடலில் காணலாம்.

“கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை
ஆடுநர் பெயர்ந்து வந்து அரும்பலி தூஉய்
கடிப்புக் கண் உறூஉம் தொடித்தோள் இயவர்”- (பதி. 17: 6-7)

சங்கமருவிய காலத்தில் கூட சிலப்பதிகாரத்தில் பறையின் பெருமை பேசப்படுகின்றது.

“பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்” – நடுகல் காதை வரி 76-77 {பொருள்- சிலம்பில் இக்கூத்தை ஆடியவன் பறையூரைச் சேர்ந்தவன் என்றும், அவ்வூர் நான்மறையோரைக் கொண்டதென்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது}.

மேற்கூறியவை எல்லாம் குடிகளே தவிர, சாதிகளன்று.

இத்தகைய தமிழ்க் குடிகளினையே, பார்ப்பனியமானது தனது நான்கு வர்ணக் கோட்பாட்டினை அடிப்படையாகக்கொண்டு சாதிகளாக்கியது. இத்தகைய மாற்றம் ஒரே நாளில் இடம்பெறவில்லை. மாறாக பல நூற்றாண்டுகள் கடந்தே இப் படிமுறை மாற்றம் ஏற்பட்டது.


இராச ராச சோழனின் சாதி :

இன்று பல்வேறு சாதிக்காரர்களும் இராச ராச சோழன் தமது சாதி என உரிமை கொண்டாடுகின்றார்கள். உண்மையில் அக் காலத்தில் கூட சாதி முறையானது இறுக்கமடைந்து இன்றைய நிலையினை அடையவில்லை.

சோழர் காலத்தில் சங்ககால நிலமை மாற்றமடைந்து பல ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுவிட்டபோதும், சாதி நிலை இன்று போல மாற்றமடைந்திருக்கவில்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சேரிகள் காணப்படுகின்றன. ஒரு வகையில் தொழிலினை அடிப்படையாகக் கொண்ட குலங்கள் மட்டுமே ஒரிடத்தில் சேர்ந்து இருப்பதனை சேரிகள் காட்டுகின்றன (இது சாதி முறையில் ஒரு கட்ட வளர்ச்சிதான்).

அதே நேரம் பறைச்சேரி புறம்பாகவும், தீண்டத்தகாதோர் சேரி புறம்பாகவும் குறிப்பிடப்படுவதால் ‘யார் அந்த தீண்டத்தகாதோர்?’ என்ற கேள்வி ஏற்படுகின்றது. அங்கிருந்த தீண்டத்தகாதோர் இன்னமும் பொது நீரோட்டத்தில் சேர்ந்திராத வேடுவர்களே என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இராச ராச சோழன் காலத்திலிருந்து காலப்பொறியில் (Time machine) ஏறி 1,500 ஆண்டுகளிற்கு முன் சென்றால் எல்லோருடைய தொழிலாகவுமிருந்த வேட்டை இன்று தீண்டத்தகாத தொழிலாகிவிட்டது. இப்போது காலப்பொறியில் ஏறி சோழன் காலத்திலிருந்து இன்னமும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் பின்னே வந்து, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு வந்தால்; இப்போது வேட்டை என்பது பிரபுக்கள், செல்வந்தர்களின் பொழுதுபோக்கும் மரியாதைக்குரிய பகுதிநேரத் தொழில். இவ்வளவுதான் தீண்டாமை.

மேற்கூறியவாறு சாதி அமைப்பு தனது முழு வடிவத்தினைப் பெறாமையினாலேயே “இராச ராச சோழன் காலத்தில் சாதிகளே இல்லை” என்று புலவர் செந்தலை ந.கவுதமன் கூறுவார். உண்மை அவ்வாறிருக்க இராசராச சோழன் தேவர் சாதியினைச் சேர்ந்தவர் என கல்வெட்டு அறிஞர்(?) நாகசாமி கூறுவது வழமையான அவரது நஞ்சுக்கருத்தே.

உண்மையில் முத்துராமலிங்கத்தேவர் காலத்திற்கு பின்னரே தேவர் என்ற சாதியே தோற்றம் பெறுகின்றது. முக்குலத்தோர் என்பதுகூட ஏற்கனவே கூறிய மூன்று குடிகளை (பின்நாளில் சாதியாக்கப்பட்ட) ஒன்றாக்கி பின்நாட்களில் ஏற்படுத்திய ஒன்றே. சாதியமைப்பானது ஒரளவிற்கு முழுவளர்ச்சியைப் பெற்றது ஏறத்தாழ ஒரு 800 ஆண்டுகளிற்கு முன்னர்தான்.

‘யார் தமிழன்’ என சாதி அடையாளம் காட்டுமா?

தமிழ்த்தேசியம் பேசுவோரில் சிலர் இப்போது தமிழன் யார் எனக் கண்டுபிடிக்கும் ஒரு கருவியாக சாதியினைப் பயன்படுத்த முனையும் போக்கு அண்மைக் காலமாகக் காணப்படுகின்றது.

இது முற்றிலும் நகைப்பிற்கு இடமானது; ஏனெனில் சாதியே தமிழரிற்கு ஒரு வந்தேறிப் பண்பாடாகக் காணப்பட, எவ்வாறு சாதியைக் கொண்டு தமிழரைக் கண்டுபிடிப்பது? வேண்டுமென்றால் ஒன்று உறுதியாகக் கூறலாம்; அதாவது யாரெல்லாம் சாதி பார்க்கின்றார்களோ, அவர்கள் எல்லாம் தூய தமிழர்கள் (ஏன் மனிதர்களே) அல்ல {இதற்கான சான்றுகள் நிறையவே மேலே ஏற்கனவே கூறப்பட்டுள்ளன}.

சாதி ஒழிப்பு :

சாதி அறம் சார்ந்த ஒன்றல்ல, மேலும் அது தமிழர்களின் மரபுமன்று. எனவே சாதி ஒழிக்கப்படவேண்டிய ஒன்றாகும். சாதி முறையினை இன்று தாங்கிப் பிடித்திருக்கும் நான்கு தூண்களாக சொந்தச் சாதிப்பற்று, மத நம்பிக்கை, பிறப்பிலடிப்படையிலான தொழில், அக மணமுறை என்பன காணப்படுகின்றன.

இதில் முதலாவதாக தாழ்த்தும் சாதியினரோ அல்லது தாழ்த்தப்படும் சாதியினரோ தமது சாதிப் பற்றினை விட்டொழிக்கவேண்டும் (அதேவேளை தாழ்த்தப்பட்டோர் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைவது தவறன்று, அதேவேளை தாமும் ஒரு காலத்தில் ஆண்டசாதி எனக் கூறுவது தவறானது).

இரண்டாவதாக சாதிமுறையினை வலியுறுத்தும் எந்த மதக்கோட்பாடும் கேள்விக்கு உள்ளாக்கப்படவேண்டும்.

மூன்றவதாக, பிறப்பிலடிப்படையிலான தொழில் செய்வதனை முடியுமானவரைத் தவிர்த்து, எத் தொழில் விருப்பமானதோ/ எதில் திறமையுள்ளதோ, அதனையே செய்ய வேண்டும்.

இறுதியாக, புறமணமுறை ஊக்குவிக்கப்படவேண்டும். அதாவது சொந்தச் சாதி பார்த்து திருமணங்கள் செய்வதனைத் தவிர்க்கவேண்டும். இப் புறமணமுறையானது ஈழப்போரின் போது, விடுதலைப் புலிப் போராளிகளிடையே பெருமளவிற்கு கடைப்பிடிக்கப்பட்டு, அப்போது சாதியானது போராளிகள் மட்டத்திலாவது பெருமளவிற்கு ஒழிக்கப்பட்டிருந்தது. எனவே புறமணமுறையே சாதி முறைக்கான சாவு மணியாக அமையும்.

வி.இ. குகநாதன்
வினவு