Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

அணுமின்பிறப்பாக்கிகளும் அவலங்களும்..

புயல் , மழை, இடி, மின்னல், சுனாமி போன்றவாறான இயற்கைச் சீற்றங்கள் கொண்டு வரும் ஆபத்தை அவற்றின் இயல்புகளை பேரோசை மூலமோ அல்லது அசாதாரணக் காட்சிகள் மூலமோ அவற்றின் ஆற்றலையும் விளையவிருக்கும் ஆபத்தையும் மனிதன் தனது புலனுணர்வுகளால் அவை நடக்கும் கணங்களில் அறிந்து கொள்ள முடியும். அதன் ஆற்றலை சக்தியை மட்டிட்டு தன்னையோ மற்றவர்களையோ அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த முடியும். அவை சூழலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் காரணமாக புலன்களுக்கு புலப்படுபவை.

இச்சீற்றங்களிலிருந்து மனிதனோ உயிரினங்களோ தங்களை காப்பாற்ற அச் சூழலிலிருந்து குழப்பங்கள் தணிந்து போகும் வரைக்குமாவது அவ்விடத்தை விட்டு நகரமுடியும். அதாவது இக்குழப்பங்கள் நிரந்தரமானவையல்ல என்பதால் நீடித்திருப்பவையல்ல. மணித்தியாலங்களுக்குள் அவை தணிந்து நிலமைகள் வழமைக்கு திரும்பிவிடும். அத்தோடு இந்த இயற்கைச் சீற்றங்களின் வீச்சுக்கள் சில மைல்களுக்குட்பட்டவை தான். சுருங்கக் கூறின் பாதிக்கப்படும் பிரதேசம் ஒரு சில மைல் சுற்றளவுக்குள்ளும் ஒரு சில மணித்தியாலங்கள் மட்டும் நீடிக்கக் கூடியவையும் உணர்ந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை கொள்ளக்கூடிய வகையிலும் இருக்கின்றன.


ஆனால் அரூபமானவும் நெடுங்காலம் நீடித்திருப்பதும் அசைவின்றி சப்தமின்றி தேசங்களையும் கடந்து சென்று அழிவுகளை தரும் கதிர்வீச்சின் ஆற்றலை அது எவ்வளவு சக்திகொண்டது என்பதை எந்தப் புலனுணர்வும் நமக்கு உணர்த்தாது. உடற்கலங்களை ஊடுருவி அழிக்கும் வல்லமை பெற்ற அணுக்கதிர்வீச்சு பற்றி வேறெந்த அழிவையும் விட அச்சம் கொள்ளப்படுவதற்கு இதுவே மூலகாரணம். கதிர்வீச்சுத் தாக்கத்துக்குள் ஒரு பிரதேசம் இருக்கின்றதா என்பதை, அதன் வல்லமையை சக்தியை அது ஏற்படுத்தக்கூடிய சேதத்தை அறிய விசேட கருவிகள் இன்றி முடியாதது. சாதாரண சூழல் நிகழ்வுகளுக்கும் அனர்த்தங்களுக்கும் அப்பாற்பட்டு இருப்பதால் அணுக்கதிர்வீச்சு இயல்புகளும் அது தரக்கூடிய பாதிப்புகளும் பற்றிய அறிவு சாதாரணமான மனிதர்களுக்கு அப்பாற்பட்டே இருக்கின்றது. விசேட அறிவும் தொழில்நுட்பமும் இன்றி கையாள முடியாதது. இந்த நிலையே அணுசக்திப் பயன்பாடு பற்றிய மக்களின் அறியாமையை தனக்கு மூலதனமாகப் பயன்படுத்துவதில் மூலதனக்காரர்களுக்கு அனுகூலம் வழங்குகிறது. இயற்கையில் அணுக்கதிரியக்கம் இருக்கிறதா எனின் ஆம் இருக்கிறது. ஆனால் அக்கதிர்வீச்சுகளின் தாக்கம் தவிர்க்க முடியாதது அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மேல் இருப்பின் அக்கதிரியக்கப் பொருளை அல்லது பிரதேசத்தை தவிர்க்க வேண்டியது என்பது நியதி.


ஒரு விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் ஒவ்வொரு தடவையும் விமானப்பயணத்தில் உயரப்பறக்கும் போது தரையில் இருக்கின்ற வேளையிலும் அதிகமானளவு கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்படுகிறார். ஒரு விமானி மற்றும் விமானத்தின் பணிப்பெண்கள் ஒவ்வொரு பறப்பின் போதும் கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்படுகின்றனர். உயரப்பறக்கும் விமானப் பயணம் என்பதில் கதிர்வீச்சு என்பது தவிர்க்க முடியாததாகின்றது. எனவே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அவர்கள் உறிஞ்சும் கதிர்வீச்சு அவர்களுக்கு ஆபத்தானது என்பதால் அவர்களின் ஓய்வு வயதெல்லை குறைக்கப்பட்டுள்ளது. இதே போலவே றேடோன் எனப்படும் ஒரு வாயு கதிரியக்கம் உடையது. இந்த வாயு கூட கண்ணுக்குப் புலப்படாத மணமற்ற ஒரு வாயு. சாதாரண காற்றை விட 9 மடங்கு கனதியானது. ஆனாலும் இந்தவாயு ஒரு அணுக் கட்டமைப்பை உடையதால் ( ஒட்சிசன் பிராணவாயு இரண்டு அணுச் சேர்க்கை கொண்டது) எளிதில் பல்வேறு வகையான தடுப்புக்களையும் தாண்டி கசிந்து பரவக்கூடியது. நிலவடியில் இருக்கும் கிறனைற் பாறைகளிலும் மணல்களிலும் படிமங்களாவிருக்கும் யுரேனியம் மற்றும் ஆழமான கிணறு போன்றவற்றிலிருந்தும் இந்த வாயு யுரேனியத்தின் படிநிலை கொண்ட கதிரியக்கச் சிதைவின் மூலம் உருவாகும் இடைநிலைப் பதார்த்தமான றேடியம் என்ற கதிரியக்க பதார்த்த்திலிருந்து வெளியேறு கிறது.

இவ்வாயுவை காற்றோடு சுவாசிப்பதால் அல்லது குடிநீர் மூலம் உட்கொள்வதால் கதிர்வீச்சு மனித உடலை அடைகிறது. சுவாசிக்கின்ற வேளையில் மிகவும் மென்மையான சுவாசப்பைக் காற்றறைக் கலங்களை சென்றடைந்து கதிர்வீச்சு வெளிவிடப்படுவதால் சுவாசப்பைக் கலங்களின் மூலக்கூற்று கட்டமைப்பில் இக்கதிர்வீச்சு ஏற்படுத்தும் மாற்றத்தினால் புற்றுநோய்க்கான காரணிகளில் இவ்வாயுவே இரண்டாவது மிகப்பிரதான காரணியாகின்றது. சுரங்கங்களிலும் கட்டிடங்கள் நிர்மாணிக்கும் வேலை களிலும் ஈடுபடும் தொழிலாளர்கள் சுவாசிக்கின்ற காற்றில் நிலவடியின் கீழ் இருக்கும் பாறைப்படிமங்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் என்பனவற்றிலிருந்து கசிவதன் மூலம் செறிந்து காணப்படுகின்ற இந்த வாயுத் தாக்கத்துக்கு அவர்கள் உட்பட்டே ஆகிறார்கள். இந்த வாயு மேலும் அணுக்கதிர்வீச்சை உழிழ்வதன் மூலம் உருவாக்கப்படும் றேடோன் டோட்டர்ஸ் எனப்படும் திண்ம நிலையான உப பதார்த்தங்கள் காற்றில் உள்ள தூசுகளில் படிகின்றன. இத் தூசிக்காற்றை சுவாசிக்கின்றபோது அவை சுவாசப்பையை சென்றடைந்து சுவாசப்பை புற்றுநோய்க்கு காரணியாகின்றன.

கட்டிடச் சுவர்களுக்கிடையில் காணப்படும் வெடிப்புகள் நீக்கல்களுக்கூடாக கசிந்து மேலெழுந்து பொதுவாக நிலக்கீழ் மாடிகளிலுள்ள வசிப்பறைகளில் காற்றைவிட பலடமடங்கு பாரமானதால் தேங்கிவிடும் இந்த வாயுவை போதுமானளவு காற்றோட்டத்தை திறந்து காற்றோட்டச் சுழற்சியை உருவாக்குவதன் மூலமோ அல்லது சுவர்களில் துளையிட்டு காற்றாடிகளை பொருத்தி உட்காற்றை வெளியேற்றுவதன் மூலமாகவோ இவ்வாயுவின் செறிவை குறைத்து, சுவாசப்பைகளை கதிர்வீச்சுக்கு உட்படுத்துவதை முடிந்த மட்டுக்கு குறைத்துக் கொள்ளலாம். மேற்கத்தைய மற்றும் மலைப்பிரதேச வீடமைப்பிலும் இந்தப் பொறி முறைகள் கைக்கொள்ளப்படுகின்றன. மேற்கத்தைய நாடுகளில் சூழலிலிருந்தான இன்னுமொரு கதிர்வீச்சுத் தாக்கம் தோல் புற்றுநோய்க்கும் அதன் காரணமாக மரணத்துக்கும் காரணமாகின்றது. அது எதுவெனில் ஊதாக் கடந்த கதிர்வீச்சு. சூரிய ஒளியில் கண்ணுக்குப் புலப்படக் கூடிய ஏழுநிறங்களையும் கடந்து ஊதா நிறத்திற்கு அப்பாலிருக்கும் கட்புலனுக்கு அப்பாற்பட்ட கதிர்வீச்சு, மாநிறமுடைய மேற்கத்தைய மனிதர்களின் தோல்களை இலகுவில் ஊடுருவுகின்றது.


இக்கதிர்வீச்சு சூரியக் குளியல் செய்கின்றபோது தோல்களை ஊடுவியும் கண்களுக்குள் சென்றும் மனிதர்களுக்கு ஊறு விளைவிக்கின்றது. சூரியக் கதிர்களின் தாக்கம் தோல்களின் கலங்களினூடாக விட்டமின் டி சத்தினை உடலுக்கு தந்து எலும்பு வளர்ச்சிக்கு நன்மையளிக்கும் அதேவேளை அதிக ஊதாக் கடந்த கதிர்வீச்சின் உறிஞ்சுதலால் தீமையும் விளைகின்றது. இந்த ஊதாக் கடந்த கதிர்வீச்சு தோலை ஊடுவிச் செல்லுமளவுக்கு சக்தி கொண்டது.


இந்தக் கதிர்வீச்சின் செறிவு வளிமண்டலத்துள் புக முன்னரே வடிகட்டப்படுகின்றது எனினும் இவ்வடிகட்டலையும் தாண்டி அது பூமிப்பரப்புக்குள் புகும் அளவு மேற்கத்தைய புவிக்கோளத்தின் தட்ப வெட்ப சூழல் காரணமாக மற்றைய தட்ப வலயப் பிரதேசங்களை விட அதிகளவானது. அத்தோடு இக்கதிர்வீச்சின் தாக்கத்தை தடுக்கும் நிறப்புள்ளிகள் இல்லாத தோல் கொண்ட மேற்கத்தைய மனிதர்களின் தோல்களை எரித்தும் விடுகின்றது. ஆனாலும் சாய்ந்த கோணத்தில் வலம்வரும் குரியனிலிருந்து தரைக்கு செங்குத்தாகவன்றி சமாந்தரமாக கண்ணுக்கு நேரான நிலையிலேயே சூரியக்கதிர்கள் பெரும்பாலான நேரங்களில் பூமியின் துருவங்களை அண்டிய நாடு களில் இருப்பதால் கண்களையும் இந்த நேர்பார்வையிலிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது. எனவே தான் இக்கதிர்களை வடிகட்டும் விசேட கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை விட மருத்துவத் துறையில் எக்ஸ் ரே, சி.ரி எனப்படும் கம்யூட்டர் ரேமோகிறாபி, அல்ரா சொனிக் மற்றும் கான்சர் கலங்களை மட்டுப்படுத்தப்பட்ட கதிர்வீச்சுக்குட்படுத்தி அழிக்கும் மருத்துவ சிகிச்சை போன்றவற்றின் ஊடாகவும் தவிர்க்கவியலாதவாறு கதிர்வீச்சுக்கு மனிதர்கள் உடபடுத்தப்படுகிறார்கள். இயற்கையிலிருந்தும் மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்காகவும் கதிர்வீச்சுக்குள்ளாக்கப்படும் மனிதர்கள் அதன் பக்கவிளைவுகளை ஏற்படக்கூடிய உயிரிழப்;புகளுடனும் நோயிலிருந்து மீள்வதனுடனும் சீர்தூக்கிப் பார்த்தே ஏற்றுக் கொள்கிறோம். உபயோகத்திலிருக்கும் கதிர்வீச்சின் மருத்துவப் பயன்பாடென்பது பல துறைசார் மருத்துவர்கள் அறிஞர்களாலும் அரசுகளாலும் மருத்துவச் சட்ட சரத்துக்களால் வரையறுக்கப்பட்டிருக்கின்றது.


மருத்துவப்பயன்பாட்டுக்கென கதிர்வீச்சை உருவாக்கும் கருவிகள் அவற்றின் நிர்மாணங்கள், அவற்றால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் மற்றும் சிகிச்சையின் போது தேவைப்படும் கதிர்வீச்சின் அளவு மீறிவிடாத படியான கணிப்பீடுகள், இயக்கும் தொழில்நுட்ப அறிவுகள் என்பன அத்துறையில் பயிற்றப்பட்டவர்களுக்கு கட்டாயமாக வழங்கப்படுமாறு சட்டச் சரத்துக்களும் திருப்தியான சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. இவ்வாறெல்லாம் இயற்கையிலும் மருத்துவத் துறையிலும் தவிர்க்கவொணாதபடி கதிர்வீச்சுக்கு மனிதர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள். எலும்பையும் ஊடுருவிச் செல்லும் எக்ஸ்ரே எனப்படும் கதிர்வீ;ச்சின் இயல்பினால் தான் அக்கதிர்வீச்சு எலும்புத் தொகுதிகளை படமாக்குதற்கு மருத்துவ துறையில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் இந்தக் கதிர்வீச்சு தான் ஊடுருவிச் செல்லும் பாதையிலுள்ள அணுக்களை அதிர்வடையச் செய்து அணுக்கட்டமைப்பிலுள்ள இலத்திரன்களை மோதி அகற்றிவிடுவதால் அணுவை மின்னேற்றம் கொண்டதாக மாற்றவல்லது. இப்படியான கதிர்வீச்சினை அயனாக்கும் கதிர்வீச்சு என்பார்கள். அயனாக்கமடையாத முறையில் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் படமெடுக்கும் கருவிகளுக்கு உதாரணமாக அதிவலு கொண்ட காந்தப்புலத்தின் உதவியுடன் உருவாக்கப்பட். எம்.ஆர் எனப்படும் கருவியின் பயன்பாட்டைக் கூறலாம். ஆராய்ச்சிகள் இன்று எவ்வாறு இந்த அயனாக்கும் கதிர்வீச்சின் அளவைக் குறைத்து ஆனால் தெளிவான படங்களைப் பெறுவது மற்றும் அயனாக்கமடையாத முறைகளை மேலும் விருத்தியாக்குவது போன்றவற்றில் கவனம் குவித்துள்ளன.

இவ்வாறு கதிர்வீச்சின் ஆபத்து அதன் பயன்பாட்டை மீறியும் உணரப்பட்டு அதனை எவ்வாறு மேலும் மேலும் குறைப்பது என்பதை நோக்கிப் பயணிக்கின்ற மனித முயற்சிகளுக்கிடையில் செயற்கையான அணுவுலைகளையும், அணுகுண்டுகளையும் தயாரிப்பதில் மனிதவிரோத நடவடிக்கைள் நடந்தவண்ணமேயுள்ளது. இந்தச் செயற்கையான அணுச்சக்தி அடிப்படையிலான கதிர்வீச்சு அழிவு களை உருவாக்குவது அன்று மட்டுமல்ல அது நின்று பல சந்ததி சந்ததிகளுக்கும் கோரமான விளைவுகளைத் தருவது என்பது போர்களின் போது வீசப்பட்ட அணுக்குண்டால் ஏற்பட்ட கோரங்களிலிருந்தும் அணுஉலை விபத்துகளின் போது நடந்த கோரங்களிலிருந்தும் மனிதகுலம் கற்றுக்கொண்டவை.

இத்தனை கோரங்களையும் மக்கள் மேல் திணித்து அணுசக்தியுலைகளை உருவாக்கும் முதலாளித்துவம் தனது இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இவ்வாறான அணுவுலை நிர்மாணங்களை முதலாளித்துவம் கூறும் எவ்வித காரணத்தையும் மறுத்து அதற்கெதிராகப் போராடியே தான் தீரவேண்டும். 1945 இலிருந்து 1981 வரையான காலப்பகுதியில் 461 அணுக்குண்டு வெடிப்புப் பரிசோதனை கள் நிகழ்த்தப்பட்டன. இந்த வெடிக்கவைக்கப்பட்ட 461 அணுக்குண்டுகள் எல்லாமாக 550 மெகா தொன் ரிஎன்ரி வலிமையுடையவை. ஜப்பானில் இரண்டாவது உலகப் போரின் போது கிரோசிமா, நாகசாகி நகரங்களில் வீசப்பட்ட அணுக்குண்டுகள் முறையே 15, 20 தொன் ரிஎன்ரி வலிமையுடையவை. இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட இந்த அணுகுண்டுகளின் விளைவால் ஏற்படுத்தப்பட்ட உடனடி நாசமும் பேரழிவும் எத்தனையோ வருடங்கள் தாண்டியும் இன்னமும் முற்றுப்பெறாத அதன் கோரங்களும் நாங்கள் கண்டுகொண்டவை. அதன் கதிர்வீச்சு இன்றும் கொல்கிறது. மனிதர்களை வதைக்கிறது பாதிக்கிறது எனில் அதைவிட பல மடங்கு சக்தி கொண்ட மேற்கண்ட அணுகுண்டுப் பரிசோதனைகளை நடாத்திவரும் இந்த ஏகாதிபத்தியங்கள் கதிர்வீச்சுப் பாதிப்புகளைப் பற்றி சற்றேனும் அலட்டிக்கொள்ள மாட்டா என்பதே நிஜம்.


முதலாவது அணுக்குண்டுப் பரிசோதனை வெடிப்பு (Trinity) நியூ மெச்சிகோவிலுள்ள அல்மாகொர்டா என்னுமிடத்தில் யூலை 1945 இல் நடாத்தப்பட்டது. இதன் பின்னர் இரண்டாவது, மூன்றாவது அணுகுண்டுகள் தான் யப்பானில் கிரோசிமாவிலும் நாகசாகியிலும் போடப்பட்டன. அதன் பின்னர் அமெரிக்கா, சோவியத், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா 1900 க்கும் அதிகமான அணுக்குண்டுப் பரிசோதனை களை நடாத்தி முடித்திருக்கின்றன. சோவியத் கிழக்கு கசாக்கிஸ்தானிலும் நோவாயா சேம்ல்யா என்ற தீவிலும் தனது இந்தப் பரீட்சார்த்த அணுக்குண்டு வெடிப்புகளை நடாத்தி வந்தது. 1945 ம் ஆண்டு முதல் அமெரிக்காவால் பசுபிக் சமுத்திரத்திலுள்ள பிக்கினித் தீவில் வெடிக்கவைக்கப்பட்ட பரிசோதனை அணுக்குண்டுகள் ஏற்படுத்திய தாக்கத்தினால் இன்று வரையும் மனிதர்கள் வசிக்கமுடியாத கதிர்வீச்சுப் பிரதேசமாக அத்தீவு இருக்கின்றது. அங்கு இந்தக் கதிரியக்கப் படிமங்கள் இன்றும் தாவரங்களிலும் பயிரினங்களிலும் காவப்படுகின்றன என்பதும் இன்று வரை அம்மண்ணில் விளைவிக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வரும் பயிர்கள் பற்றி அவை உண்ணத்தகுந்தவையல்ல எனவும் நிபுணர்களால் கூறப்படுகிறது. இந்தப் பரிசோதனையை செய்வதற்கான அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் 3 வருடங்களின் பின்னர் அங்கு சென்று வாழ அனுமதிக்கப்பட்டவர்கள் பத்துவருடங்களுக்கு பின்னால் அவ்விடத்திலிருந்து மீண்டும் அப்புறப்படுத்தப்பட்டார்கள். அவர்களில் பலபேர்களுக்கு படிநிலை விளைவான சீசியம் (137- அரைவாழ்வுக்காலம் 30 வருடங்கள்) என்ற பதார்த்தத்திலிருந்து கதிர்வீச்சு தைரொயிட் சுரப்பியில் கான்சர் நோயை உருவாக்கியிருப்பது கண்டறியப்பட்டது.


1954 ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட இன்னுமொரு ஜதரசன் குண்டு (15 ரிஎன்ரி வலிமை கொண்டது) இத் தீவை அண்டிய கடற்பகுதியில் வெடிக்கவைக்கப்பட்ட போது எவரும் எச்சரிக்கப்பட்டிருக்கவில்லை. இந்தக் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து 130 கிலோ மீற்றருக்கப்பால் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகொன்றிலிருந்த 23 யப்பானிய மீனவர்களில் 11 பேர் 2 தொடக்கம் ஆறுவரையான சீவட் அலகுகள் கதிர்வீச்சுக்கும், உடை, உணவு போன்றவற்றில் படிந்து உட்கொள்ளப்பட்ட கதிரியக்கமுடைய பதார்த்தங்களின் தாக்கத்திற்கும் உட்பட்டு குறுகிய காலத்துள் மரணமடைந்தார்கள்.


நீர் நிலகைள் மற்றும், பயிரினங்கள் , அவற்றை உட்கொள்ளும் கால்நடைகள், அந்த பயிரினங்களையோ அல்லது அவற்றை உண்ட கால்நடைகளின் இறைச்சியையோ உணவாக்கும் மனிதர்கள் என கதிரியக்க பதார்த்தங்களிலிருந்து எமது உணவு கூட கதிரியக்கமுடையதாகின்றது. உயிரினங்களும் தாவரங்களும் குறோமோசோம் மாற்றத்துக்குட்பட்டு மரபணுப் பிறழ்வுகளுக்குள்ளாவதால் உயிர்க்கலங்கள் பிறழ்வடைந்து கலப்பிரிவடைவதால் அவை அவை கான்சர் என்னும் கோரமான நோய்களை உருவாக்கி சந்ததி சந்ததியாக கோரம் விளைவிக்கின்றது.


இவற்றை விட இன்று அணுமின்னுலைகள் நிர்மாணிப்பதில் பாதுகாப்பான தொழில் நுட்பம் முன்னேறிவிட்டதாக கூறி அணுமின் உலைகளை மக்களின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்திசெய்யவெனக் கூறிக்கொண்டு தனது இலாபநோக்குகளையும் மற்றைய ஆபத்துக்களையும் மறைத்துக் கொண்டு ஏகாதிபத்தியங்கள் நிர்மாணித்து வருகின்றன. அணுமின்னுலைகளால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் அனர்த்தங்கள் சேதங்கள் என்பன இருட்டடிப்பு செய்யப்பட்டும் மறக்கடிக்கப்பட்டும் இந்த அணுமின்னுலைகளுக்கெதிரான விழிப்பும் மக்களின் எதிர்ப்பும் முடக்கப்படுகின்றன. 1986 ம் ஆண்டு ஏப்ரல் 26 ம் திகதி ஏற்பட்ட செர்னோபில் அணுமின்னுலை விபத்தின் பாதிப்புக்கள் சுற்றியுள்ள ஸ்கன்டிநேவியா நாடுகள் வரை ஏற்படுத்திய விளைவுகள் இன்றும் முற்றுப்பெறவில்லை. 2000 மீட்டர் உயரத்துக்கும் மேலாக வளிமண்டலத்தை சென்றடைந்த அணுக்கதிரியக்கத் தூசுகள் மழை மற்றும் காற்றினால் காவப்பட்டு சுவீடன், நோர்வே நாடுகளுக்கு காவப்பட்டன. டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்சு, இங்கிலாந்து போன்ற நாடுகள் காற்றின் திசை வழி இல்லாதுபோனதால் தப்பின. ஆனால் ரோமேனியா, பல்கேரியா, ஹெலாஸ் செக்கோசிலாவாக்கியா போன்றன பாதிப்புக்குள்ளாகின. உக்கிரேய்ன் பெலாருஸ், ருசியா வின் பெரும்பகுதியில் கதிரியக்கப்பதார்த்தமான சீசியம் அச்சூழலை பெருமளவில் அணுக்கதிரியக்க மாசடைவுக்கு உள்ளாக்கியது. உடனடியாக 130000 பேர்கள் அப்;புறப்படுத்தப்பட்டனர். 15 கிலோமீற்றர் சுற்றளவுக்குட்பட்டவர்கள் அதீதமான கதிர்வீச்சுக்குள்ளாக்கப்பட்டனர். சுமார் 24 000 பேர்கள் மட்டில் 450 மில்லி சீவர்ட் அலகு கதிர்வீச்சுக்குள்ளானார்கள்.


அணுமின்னுலை விபத்தினால் ஏற்படுத்தப்படும் நேரடியான விளைவுகள் இவை என்றபோதும், அணுக்கதிர் வீச்சும் விபத்துக்களின் பாரதூரமும் மக்களிடத்தில் மனோவியல் ரீதியாக கடும் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியதுமாகும். புரிவதற்கு சிக்கலான இந்தக் கதிர்வீச்சுப்பற்றிய நுண்ணிய விபரங்கள் இன்னும் பொதுஅறிவாகவில்லையாதலால் மர்மமான இந்தக் கதிரியக்கத்தோடு இணைத்து அவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இங்கிலாந்தின் செல்லாபீல்ட் எனுமிடத்தில் நடந்த அணுமின்னுலை விபத்து மேய்ச்ச்ல கால்நடைகளின் குறிப்பாக பசுப்பாலில் கதிரியக்கப்ப பதார்த்த்தமான 1-131 இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. ஹரிஸ்பேர்க் பென்சில்வேனியாவுக்கு அண்மையிலுள்ள திறீ மைல் ஜலண்ட் 1979 ம் ஆண்டு 28 ம் திகதி நடந்த அணுமின்னுலை விபத்தில் வெப்பத்தை அகற்றுவதற்கு அல்லது குளிர்மைப்படுத்துவதற்கென பாவிக்கப்படும் நீர்ச்சுழற்சியில் ஏற்பட்ட பழுதினால் அதிகரித்துச் சென்ற வெப்பம் காரணமாய் இந்த அணுமின்னுலையின் பகுதிகள் உருகத் தொடங்கியது. ஆறு அல்லது ஏழு மணித்தியாலங்களுக்குப் பின்னரே நீரில் மின்னணுஉலை குளிர்மை பெற்றது. கதிர்வீச்சு ஏற்படாதபடி பாதுகாப்புக் கலசத்துக்குள் இருந்தபோதும் கதிர்வீச்சு கசியவே செய்தது.


மிக அண்மையில் 2011 ம் ஆண்டு மார்ச் 11ம் திகதி ஜப்பானில் புக்குசிமாவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அணுமின்னுலையில் பூகம்பமும் அதனால் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகள் உட்புகுந்ததனாலும் அணுமின்னுலையின் குளிரூட்டும் பதார்த்தமாக தண்ணீரை செலுத்தும் பம்புகளின் இயக்கங்கள் நின்று போனதால் விபத்து ஏற்பட்டதென்கிறார்கள். 20 கிலோமீற்றர் தூரத்துக்குட்பட்ட இடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.


ஒரு மணித்தியாலத்துக்குள் இங்கு மின்னுற்பத்தியாக்கும் மூன்று அணுமின்னுலைகளும் உருகிப் போய்விட்டன. இவற்றை குளிர்மைப்படுத்திக் கொண்டிருந்த போதே ஜதரசன் வாயு வெடிப்புக்குள்ளானது. கதிர்வீச்சுப் பரவுவதை தடுக்க முடியாது போய்விட்டது. பயிரினங்களில் கதிரியக்கப் பதார்த்தமான சீசியம் இருப்பது அறியப்பட்டு இந்தப் பகுதியில் விளைச்சலான காய்கறிகளின் விற்பனை நிறுத்தப்பட்டது. இன்னும் பல பத்தாண்டுகள் இந்தப் பகுதி பயிர்ச்செய்கைக்குதவாத நிலமாக மாறிவிட்டது. இவ்வாறு செர்னோபில் அணுமின்னுலையை விட பத்துமடங்கு குறைவான தாக்கத்தை விளைவித்தது என இவ்விபத்து அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டாலும் இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன் நடந்த அதே விபத்து மாதிரியான இந்த விபத்தை தொழில் நுட்பத்தால் தடுக்க முடியாது போய்விட்டது.

பூதத்தைப் பிடித்து போத்தலுக்குள் அடைத்துவிட்டோம் அச்சப்படத் தேவையில்லை என்கின்றனர் அணுமின்னுலை நிர்மாணிப்போர். பூதம் வெளியில் வருகிறபோது இறந்து போவது யார் என்பது பற்றி அவர்களுக்கு அக்கறையிருப்பதாக எண்ணிக்கொள்வது நமது மடமை.


- சிறி