Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சுயநிர்ணய உரிமையும் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைப் போராட்டமும்!

இலங்கை சுதந்திரம் அடையுமுன்பே நாம் கேட்டது (பாரராளுமன்றத்தில்) சம அந்தஸ்து. சுதந்திரம் கிடைத்ததும் நாம் கேட்டது கூட்டாட்சி. பின்னர் நாம் மாவட்ட ஆட்சி கேட்டோம். இவைகள் கிடைக்காத போது தனி அரசு அமைப்பதற்காகப் போராடினோம். இன்று நாம் மாகாண ஆட்சி வேண்டும் என வரிந்து கட்டிக்கொண்டு நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் நமக்குள்ளேயே கட்டிப் புரண்டு அடிபட்டுக் கொண்டு நிற்கிறோம். அத்துடன் ஆளுக்கு ஆள் தலைமை வகித்தபடி இந்தியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் மண்டியிடுவதில் நான் முந்தி நீ முந்தியென முண்டியடித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.

மக்கள் என்னும் பெயரால் எம்மை மந்தைகளாகக் கருதிக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த அரசியல் அநியாயத்தை இனிமேலும் நாம் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. இந்தப் பிரச்சனையை மக்களாகிய நாம் கையில் எடுக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. அதற்கான அவசியத்தையும் அதன் தாற்பரியத்தையும் பற்றி நாம் ஆராய்வோம்.

சுயநிர்ணய உரிமை என்பது ஒரு மனிதனுடைய உரிமையில் இருந்தே பிறக்கிறது. அந்த மனிதன் கூட்டமாக சேர்ந்து வாழும்போது அந்த தனிமனித உரிமை அந்த மக்கள் கூட்டத்தின் சுயநிர்ணய உரிமையாக பரிணாமம் பெறுகிறது. எனவே சுயநிர்ணய உரிமை கோரும் ஒரு மக்கள் கூட்டத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் கிடைக்கிறது. தான் உயிர் வாழ்வதற்கும் அதற்குத் தேவையான உடைமைகளைத் தேடி உழைப்பதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் அவனுக்கு பூரண சுதந்திரம் உண்டு. இது மறுக்கப்படும் போது அந்த மனிதன் தனது உயிர் வாழ்வதற்கான சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிப் போராடவேண்டிய அவசியத்திற்கு-நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறான். அவனுடன் அவனைப் போன்ற ஏனைய மனிதர்களும் ஒன்றுசேரும் போது அது ஒரு மாபெரும் மக்கள் சக்தியாக மாறி அவர்கள் தங்கள் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வார்கள். இது ஒரு விஞ்ஞான இயங்கியல் நியதி. வரலாறு காட்டி நிற்கும் உண்மை.

இந்த உண்மையை இலங்கைக் குடிமக்கள் அதாவது தமிழ்-சிங்கள-முஸ்லீம்-மலையக மக்கள் உணர்ந்து கொள்ளாதபடி-புரிந்துகொள்ள முடியாதபடி எமது நாட்டின் அரசியல் விற்பன்னர்கள்-ஞானிகள்-தலைவர்கள் தங்கள் காரியங்களை மிகவும் கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை அரசின் கீழ் எமக்கு மறுக்கப்படும் உரிமைகள் சாதாரண சிங்கள-முஸ்லீம்-மலையக மக்களுக்கும் மறுக்கப்படுகிறது. அவர்களும் தங்களுடைய உயிர் வாழ்தலுக்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எந்தக் காலத்திலும் சிங்கள மக்கள் மற்றப் பிரிவு மக்களின் உரிமையை மறுத்தது கிடையாது. அப்படி சிங்கள மக்கள் மறுத்திருந்தால் இன்று தென்னிலங்கையில் அவர்களைத் தவிர வேறு எவரும் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. இந்த யதார்த்தத்தை-கள நிலைமையை-பச்சை உண்மையை நாம் புரிந்து கொண்டு செயற்படுவதன் மூலமே இலங்கையின் இனப் பிரச்சனை என்ற நீண்ட கால அரசியல் கையாடலை-ஏமாற்றுத்தனத்தை-சூழ்ச்சியை முறியடித்து நாம் நமது மண்ணில் சுதந்திரமாக வாழமுடியும்.

கடந்த கால எமது உரிமைக்கான போராட்டம் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கின்ற போராட்டமாக இருந்திருந்தால் எமது எதிரியாக சிங்களப் பேரினவாத அரசும் அதன் அங்கங்களும் அவற்றுக்கு காலம் காலமாக முண்டுகொடுத்துக் காப்பாற்றும் வெளி சக்திகளுமே இனங்காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நாம் எமக்குப் பிடிக்காதவர்கள்-எம்முடன் ஒத்துவராதவர்கள்-நடுநிலையாளர்கள் அனைவரையுமே எதிரிகளாக்கினோம்.

நாம் நண்பர்களைத் தேடாமல் புதிய எதிரிகளை உருவாக்கினோம். எமக்கு ஒரு நாடு எனக் கூறி எமக்குள்ளேயே எமது உரிமைகளை மறுதலித்தோம். மக்களை ஒன்றுபடுத்துவதற்றுப் பதில் நாளும் பொழுதும் மக்களைப் பிளவுபடுத்தினோம். நடந்து முடிந்த இன விடுதலை யுத்தம் (மக்கள் விடுதலைப் போராட்டம் அல்ல) இலங்கையின் அனைத்து குடிமக்களையும் பல் வேறு வடிவங்களில்-வித்தியாசமான விகிதாசாரத்தில்-வேறுபட்ட பரிமாணங்களில் பாதித்துள்ளது. இந்தப் பாதிப்புக்களில் இருந்து நாம் விடுபட்டு சாதாரண வாழ்வுக்குத் திரும்புவதற்கான வழிவகைகளை அடைவதற்கு எமது பட்டறிவு பயன்படுத்தப்படல் வேண்டும்.

"நீ உன்னையும் உனது எதிரியையும் அறிந்து கொண்டிருப்பாயேயானால் நூறு யுத்தங்களானாலும் தோற்கமாட்டாய்

நீ உன்னை அறியாமல் உனது எதிரியை மட்டும் அறிந்திருந்தால் ஒரு யுத்தத்தில் தோற்று இன்னொரு யுத்தத்தில் வெல்வாய்.

நீ உன்னையும் அறியாது உனது எதிரியையும் அறியாதபோது ஒவ்வொரு யுத்தத்திலும் தோற்கடிக்கப்படுவாய்."

"போர் கலை" பற்றிய நூலில் சுன் சூ