Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழரின் தாகமும் அவர்களைத் தண்ணீர் படுத்தும் பாடும்.

"யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" தனது 6வது மாநாட்டை 1930 ஏப்ரல் 22 - 23ந் திகதிகளில் திருநெல்வேலி இந்து பயிற்சிக் கல்லூரியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தது. அதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீவிரமான எதிர்ப் பிரச்சாரங்களும் வீதித் தடை- கல்லெறி வீச்சுப் போன்ற வன்முறைகளும் இடம்பெற்றன. அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளில் இருந்த நீர் அள்ளும் வழிவகைகள் இரவோடிரவாக அகற்றப்பட்டன. கல்லூரி வளவுக்குள் இருந்த கிணற்றுக்குள் அழுக்குப் பொருட்கள் வீசப்பட்டன. முதலாவது நாள் மாநாடு கூச்சல்கள் குழப்பங்கள் கல் வீச்சுக்கள் மத்தியிலும் தொடர்ந்து இடம்பெற்றது. இந்த வன்முறைகள் காரணமாக இரண்டாவது நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் 'றிஜ்வே" மண்டபத்திற்கு மாற்றப்பட்ட போதும் அன்றிரவு கல்லுரி மண்டபத்திற்கு தீ வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கான காரணம் "கண்ட நிண்டதுகள் எல்லாம் கல்லூரிக்குள் நுழைவதையும் - கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடிப்பதனையும்" ஆறுமுகநாவலரின் வழித்தோன்றல்களும் - வாரிசுகளும் ஏற்றுக் கொள்ள மறுத்தமையே. "இளைஞர் காங்கிரஸ்" சமத்துவத்தையும் - சமூக நீதியையும் "அடிப்படையாகக் கொண்டே இலங்கையின் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து "இனவாத அரசியல்" போக்குகளை நிராகரித்து செயற்பட்டுக் கொண்டிருந்தது. இதே காலகட்டத்தில்தான் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளில் "மாணவர்களுக்குச் சரியாசன முறை" என்ற அரச ஆணையை அமுல்படுத்தும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பாடசாலைகள் எரியூட்டப்பட்டுக் கொண்டிருந்தன. "இளைஞர் காங்கிரஸ்" சரியாசன முறையை வரவேற்று அதற்கு ஆதரவாக பிரச்சாரங்களையும் முன்னெடுத்திருந்தது.

இவைகள் நடைபெற்று 85 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் கிணறுகளில் நீர் அள்ளுவது மறுக்கப்படுவதும் - கிணறுகளில் அசுத்தங்கள் வீசப்படுவதும் - பாடசாலைக் குடிநீர் தொட்டிகளில் நஞ்சு கலப்பதும் - பாடசாலைப் பதவிகளுக்கு பிறப்பிடம் பார்த்து நியமனம் செய்வதும் யாழ்ப்பாணத்தில் நிறுத்தப்படவில்லை. மாறாக இன்னமும் ஆறுமுகநாவலரைக் காவிக் கொண்டு போய் கிழக்கில் வைத்து அவருக்கு விழா எடுத்து "தமிழ் அழிந்தால் சைவம் அழிந்துவிடும்" என மந்திர உச்சாடனம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்.

1950கள் தொடக்கம் குடாநாட்டின் நிலத்தடி நீர் விவசாய நடைமுறைகளால் உவர் நீராக மாறி வரும் ஆபத்து குறித்து காலத்திற்கு காலம் தொழிற்துறை சார்ந்த அறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. அதனை தமிழ் அரசியல் அலட்சியம் செய்ததால் இன்று போத்தல் தண்ணீரில் மக்கள் சீவியம் நடாத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அண்மைக் காலங்களில் சுன்னாகம் மின் உற்பத்தி நிலைய எண்ணெய்க் கழிவுகளால் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிணற்று நீர் மாசடைந்து விவசாயத்திற்குக் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தும் அது பற்றி ஒரு திட்டவட்டமான நடவடிக்கை எடுக்கப்படாமல் தொடர்ந்தும் மக்களின் உயிர்களுடன் விiளாயாடும் சூழல் நிலவுகிறது.

குடாநாட்டைச் சூழவுள்ள தீவுகளில் தண்ணீர் தேடி மக்கள் அலயும் அவலம் தொடர்கிறது. இரணைமடுக் குளத் தண்ணீர் வருடா வருடம் விவசாயிகளின் வாழ்வாதாரங்களுடன் பேரம் பேசப்பட்டு ஒரு சிலரால் கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கும் கருவியாக ஆக்கப்பட்டுள்ளது. மேலும் இலவசமாக இயற்கை பொழியும் மழை நீரைக் கடலில் ஓட விட்டுக் கொண்டு கடல் நீரை நன்னீராக்கிக் காசுக்கு விற்கும் திட்டங்கள் முன் மொழியப்படுகின்றன.

மகாவலி கங்கை நீரை வடக்கு வரை பாய வைக்கும் திட்டம் குருட்டுத்தனமான - வரட்டுத்தனமான - தூர நோக்கற்ற - சுயநல அரசியல் போக்குகளால் நடைமுறைப்படுத்த முடியாது முடக்கப்பட்டு வருகிறது.

1960கள் தொடக்கம் இலங்கையின் வட பகுதியில் நாம் வாழ்ந்த ஊர்களில் நன்னீர்க் கிணறுகள் இருந்தும் அள்ளிக் குடிக்க (அடிப்படை) உரிமையற்ற நிலையில் இராணுவ-கடற்படையினரின் கருணையால் அவர்களின் தண்ணீர் தாங்கிகளில் இருந்து குடிநீர் பெற்று உயிர் பிழைத்த கிராமங்கள் பல உண்டு.

தமிழரசுப் பாசறையில் பயின்றவர்கள் - தமிழீழ சோசலிசக் குடியரசு கோரியவர்கள் - தமிழீழம் வேண்டிப் போராடியவர்கள் - வட மாகாணசபை ஆட்சியை வென்றெடுத்தவர்கள் எவரும் எமது தண்ணீர் தாகத்தை இன்றுவரை கணக்கில் எடுக்கவில்லை.

காரணம் "மூக்குப் பேணியை"க் கண்டு பிடித்து தீட்டுப்படுவதைத் தவிர்த்த புத்தசாலிப் பரம்பரையினர் நாம். தண்ணீர் தர மறுக்கும் எமது மனப்பான்மையே தமிழர்களின் சம உரிமைகளை வென்றெடுக்க முடியாமைக்கான அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. இந்தத் தண்ணீர் பருகும் அடிப்படை உரிமையின் மறுப்பு பல்லாயிரம் மக்கள் கொல்லப்படுவதற்கும் மூல காரணமாக அமைந்திருந்தது என்பது எமது நாட்டின் கடந்த கால வரலாறாகும்.

எனவே தமிழர்களாகிய நாம் இந்தத் தண்ணீர்ப் பிரச்சனைக்கு சமூக நீதி அடங்கிய ஒரு தீர்வு கண்டுபிடிக்காத வரை தமிழர்களின் தாகம் தீர்க்கப்பட முடியாததாகவே இருக்கும்.