Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதியம் - தேசியம் இரண்டும் ஏகாதிபத்திய வண்டியை இழுக்கும் மாடுகளே

சாதியம் பற்றிப் பேசத் தயங்குபவர்கள், வெட்கப்படுபவர்கள், கூச்சப்படுபவர்கள், மறுப்பவர்கள் சனநாயக மறுப்பாளர்களே. இவர்கள் ஆளும் மேலாதிக்க வாத சர்வாதிகாரர்களே. இலங்கை அரசின் ஆயுத அடக்குமுறையின் கீழும் சீறிப் பாய்ந்த “தேசியம்” தனது அடித்தளக் கட்டுமானத்தை “சாதி” சூத்திரக் கணக்கின் பிரகாரமே திட்டமிட்டு அமைத்துக் கொண்டது என்பது பகிரங்க உண்மையாகும். அதனால்தான் போராட்ட காலத்தில், ஆயுத அச்சுறுத்தலின் கீழ் “சாதியம்” பதுங்கிங்கியிருந்ததே தவிர அது அழிக்கப்படவில்லை.

போராட்ட காலத்தில் “சாதியம்” இருக்கவில்லை எனவும் அழிந்து போன “சாதியத்தை” மீட்டெடுக்கிறார்கள் எனவும் கூறுபவர்கள் மானிட நேயத்தை, தர்மத்தை உணரும் தன்மை அற்றவர்கள். மக்கள் பற்றி, மக்களை உள்ளடக்கிய சமூகம் பற்றிய கரிசனை இல்லாதவர்கள். இரண்டு லட்சம் மக்களின் உயிர்களைப் பலி கொடுத்த பின்னரும் கூட “மனம் தளராத விக்கிரமாதித்தன்கள்”. மக்களின் மரணங்களில் குளிர் காய்பவர்கள்.

சாதியத்தை வலியுறுத்தும் வேதத்தை உச்சாடனம் செய்து கொண்டு நாட்டில் சாதிக்குச் சாதி தனித் தனி வழிபாட்டுக் கோயில்களை கட்டிக் கும்பிடும் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்பி வைத்துக் கொண்டு “சாதியம்” அழிந்து விட்டது என்று கூறுவது ஆளும் அதிகார மமதையே தவிர அறியாமை அல்ல.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை அதிபர் ஒருவரை பதவி இறக்கி இடமாற்றம் செய்ததும் மறுபடி அவருக்கு அரசு வழங்கிய அதிபர் பதவியை ஏற்றுக் கொள்ள விடாமல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முட்டுக்கட்டை போட்டதும் சாதியத்தின் வெளிப்பாடே.

அண்மையில் வடக்கில் ஒரு பிள்ளையார் கோவில் தேரை இராணுவத்தினர் இழுத்த வரலாறு எமக்கு உணர்த்தும் உண்மை என்ன? விரதம் இருந்து, வேதங்கள் ஓதி, விபூதி பூசி, வேட்டி அணிந்து வெறுங்காலுடன் சமய ஆசாரங்கள் அணுவளவும் பிசகாமல் தேர் வடத்தைப் பிடிக்கும் ஒரு சமூகம் ஆண்டாண்டு காலமாக அதே ஊரில் வாழும் சக குடிமகன் வடத்தைத் தொடுவதால் வரும் "தீட்டு" “இனப் படுகொலை செய்த இராணுவம்” இழுப்பதால் ஏற்படாது என நம்பியதே ஆகும்.

இதே “எண்கணிதம்” தான் “முள்ளிவாய்க்கால்” வரலாற்றையும் நிர்ணயம் செய்தது. அதாவது “இவர்களால் நாம் ஆளப்படுவதை விட சிங்களவர்களின் கீழ் நாம் வாழ்வது மேல்” என இந்த சாதியம் மேட்டுக்குடி மேலாதிக்க வாதிகளுக்கு உணர்த்தியதால் ஏற்பட்ட பின் விளைவுகளே அது.

ஆயுத அமைப்புக்களை சாதிப் பெயர்களால் அழைத்ததும் அமைப்பில் பொறுப்புக்களில் இருந்தவர்களை சாதிப் பெயர் கூறித் திட்டித் திரிந்ததும் குடிமக்கள் யாவரும் நன்கறிந்த விடயங்களே. இதற்கான காரணம் எமது நாட்டின் குடிமக்களுடைய கலாச்சாரங்களில் “சாதியம்” அடிப்படையான - முக்கியமான ஒன்றாகும். அது எமது வாழ்வின் சகல மட்டங்களிலும் மனிதனை வகைப்படுத்தும் ஒரு அளவைக் கருவியாக விளங்கும் சாதனமாகும்.

வடக்கில் 1920களில் தோற்றம் பெற்று 1940 வரையிலும் இலங்கை பூரா வெகு தீவிரமாக இயங்கிய “யாழ்பாண இளைஞர் காங்கிரஸ்” சுதந்திர இலங்கைக்கான அரசியல் யாப்பு இன-மத-சாதி-பால்-பிராந்திய பாகுபாடுகளை இல்லாதொழிக்கின்ற, இலங்கைக் குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமைகளை உத்தரவாதப்படுத்தக் கூடிய ஒரு யாப்பாக வரையப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தியே செயற்பட்டது.

அதனை அன்றைய சாதியக் கட்டுமான சமூகமும் அவர்களின் பிரதிநிதிகளான மேட்டுக்குடி அரசியல் தலைமைகளும் நிராகரித்து ஏகாதிபத்திய அடிமைத் தளையை உறுதிப்படுத்தும் ஒரு யாப்பை ஏற்றுக் கொண்டனர். அதனூடாகத் தமது சாதியக் கட்டமைப்பு உடையாமல் பாதுகாத்துக் கொண்டனர்.

இன்றும் சிறையில் வதைபடுவோர்-கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் போனோரின் உறவுகள்-சொந்த ஊரிலேயே அகதிகளாக உள்ளவர்கள் யாவரதும் பிரச்சனைகள் ஓரங்கட்டப்பட்டு அது தொடர்கதையாவதற்கான காரணம் இந்தப் படுபாதகக் கலாச்சாரமான சாதியம் தெரிவு செய்துள்ள அரசியல்தான்.

அடக்கியொடுக்கி ஆளும் சாதியின் கலாச்சார விழுமியங்களை அடக்கப்பட்டு அடங்கி வாழும் சாதி நிராகரிக்கும் வரை – சாதியத்தை நிலைநிறுத்தும் வேதங்கள் ஓதுவதைக் குடிமக்கள் நிறுத்தும் வரை – சாதியை முன் நிறுத்தி வயிற்றுப் பிழைப்பு நடத்துவோரைக் குடிமக்கள் இனங் காணும் வரை – எமது மக்களின் அழிவுகளுக்கும் அடிமைத்தன வாழ்வுக்கும் சாதிய அரசியலே மூல காரணம் என்பதனை நாம் புரிந்து கொண்டு புதிய அரசியல் செயற்பாட்டில் இயங்கும் வரை நம் நாட்டில் நாம் தொடர்ந்தும் அடிபட்டுச் சாவது தவிர்க்க முடியாதது.