Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

புலிகளிடத்தில் "ஜனநாயகத்தைக்" கோரியவர்களின் சமூகக் கண்ணோட்டம்

இலங்கையில் தமிழ்ச் சமூகமானது சமூகத்தன்மையற்ற உதிரி வர்க்க லும்பன் சமூகமாக மாறியிருப்பது போல், யுத்தத்தின் முன்னும் பின்னுமான தமிழ் இலக்கியமும் - அரசியலும் கூட சமூகத் தன்மையற்று கிடக்கின்றது.

யுத்தத்திற்கு முன்பும் பின்புமாக, அரசியல் - இலக்கியம் பேசும் இன்றைய தலைமுறையானது, ஒன்றில் இயக்கப் பாசிசத்தை நியாயப்படுத்தியோ அல்லது புலிக்கு எதிரான புலியெதிர்ப்பு ஜனநாயகத்தை முன்வைத்ததே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தியவர்களல்ல. ஒரு நாணயத்தில் இருபக்கம் இருப்பது போல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக எதிர்ப்புரட்சிகர அரசியலின் இருபக்கங்களே இவை.

"ஜனநாயகம்" என்பது ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குவதற்கான தமக்கான அதிகாரமே என்று, ஒடுக்கும் வர்க்கம் கருதுகின்றது. நாம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும், மக்களின்  அதிகாரத்துக்கானதே ஜனநாயகம் என்று கூறுவதுடன், ஜனநாயகம் என்பது சுய தம்பட்டங்களுக்கோ, பிரமுகர்தனங்களுக்கோ, சுயபிழைப்புக்கானதோ அல்ல என்று கூறுகின்றோம். இப்படி இருக்க 1990 க்குப் பிந்தைய, 2009 க்கு முந்தைய புலம்பெயர் இலக்கியம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே பயணித்தது. 2009 பின் ஒடுக்கப்பட்ட மக்களுடன் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. யுத்தத்தின் முன்பும் பின்புமான யாழ் மையவாத இலக்கியமும், அரசியலும், ஒடுக்கப்பட்ட மக்களுடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டதில்லை. மாறாக இலங்கையில் (மலையகம், முஸ்லிம், வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில்) இருந்த மற்றும் தோன்றிய இலக்கியங்களையும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஒருங்கிணைத்திருக்கின்றது.

தமிழ் தேர்தல் அரசியல் கட்சிகள் மக்களுக்காக போராடாது, தன்னெழுச்சியான போராட்டங்களில் புகுந்து சுயவிளம்பரத்திற்கான படத்தை எடுத்து எப்படி பிரச்சாரம் செய்கின்றனரோ, அதேபோல் யாழ் மையவாத இலக்கியமும் அரசியலும் இயங்குகின்றது. எழுத்தாற்றல் மூலம் தங்களை அறிவாளியாகவும், பிரமுகராகவும் முன்னிறுத்த, ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களை தங்கள் படைப்புகளின் ஊறுகாயாகிக் கொள்கின்றனர்.

ஜனநாயகம் என்ன என்பது குறித்த பிரச்சனை. ஜனநாயகம் என்பது கருத்தைச் சொல்வது தானே ஒழிய, அதுவொரு சமூக இயக்கமல்ல என்கின்ற நவதாராளவாத கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் இருப்பை முன்னிறுத்துகின்றனர். கடந்தகால ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வரலாற்று திரிபுகளில் இருந்து, இந்த சிந்தனைமுறையை   உருவாகியுள்ளனர்.

இலக்கியம் பேசும் இந்த தலைமுறையானது, ஜனநாயகத்தை இயக்கங்களிடமும், புலிகளிடமும் கோரிய அடிப்படைகள் முதல் அதன் வரலாறு அனைத்தும் திரிக்கப்பட்ட, காயடிக்கப்பட்ட நவதாராளவாத எழுத்துலகையே, இன்றைய தமிழ் சமூகம் எதிர்கொண்டிருக்கின்றது. எமது தலைமுறைக்குள்ளேயே நடந்ததை திரித்தும், புரட்டியும் விடுகின்றனர். இன்றைய இலக்கியம், தொடங்கி இலக்கிய அரசியல் பேசுவோர் யார்?, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து தங்கள் கருத்துக்களையோ, படைப்புகளையோ யார் முன்வைக்கின்றனர்? இதற்கு ஒவ்வொருவரும் பதிலளித்தாக வேண்டும்.

இன்று நடப்பது என்ன? புலிப் பாசிசத்துடன் சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கிய கலை இலக்கிய சுய தற்பெருமைகளையும், புலிக்கு நிகராக புலிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை "ஜனநாயகத்தின்" பெயரில் தம் பங்கிற்;கு ஒடுக்கிய விதம் குறித்து, பெருமையாக பீற்றுகின்ற இலக்கிய அரசியல் நிகழ்வுகளே, இன்று புலத்திலும் - இலங்கையிலும் அரங்கேறுவதைக் காணமுடிகின்றது.

யுத்தத்தின் பின் ஒடுக்கப்பட்ட மக்களுடன் தங்களை இணைந்துக் கொண்டு போராடுவதன் மூலம், கடந்தகாலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தங்கள் அரசியலை சுயவிமர்சனம் செய்யாது, தங்கள் பன்னாடைத்தனத்தை பெருமையாக பீற்றிக் கொள்வதே இலக்கிய அரசியலாக மாறி இருக்கின்றது. இதை தங்கள் புரட்சிகரமான எழுத்து முறை என்று, அடுத்த தலைமுறைக்கு முன்மொழிய முனைகின்றனர். இதை விரிவாக பார்ப்போம். 

ஜனநாயகத்திற்கான எமது தலைமுறையின் போராட்டம் எங்கு? எப்போது? ஏன்? தோன்றியது.

திரிபுகளையும், புரட்டுகளையும் வரலாறாக்க முனையும் இன்றைய இலக்கிய அரசியல் சூழலில், உண்மை என்பது இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. போராட்டங்களையும,; உயிர்த் தியாகங்களையும் கூட இலக்கிய - அரசியலை உயிருடன் புதைத்து தான், தங்களைத் தாங்கள் முன்னிறுத்துகின்றனர்.

1980களில் தமிழ் தேசிய விடுதலையை முன்வைத்து தோன்றிய இயக்கங்கள், தேர்தல் அரசியலுக்கு பதில் ஆயுதமேந்தியதன் மூலம், தங்கள் உயிரை மக்களுக்காக தியாகம் செய்யும் நடைமுறைகள் மூலம் தம்மை புரட்சிகரமானவர்களாகக் காட்டிக் கொண்டனர். அதேநேரம் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரானவராக, பெண் விடுதலை கோருபவராக,   நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்களுக்கு எதிரானவராக…காட்டிக் கொண்டதுடன், வர்க்க விடுதலை தமது இலக்கு என்றனர். இப்படி தங்கள் இயக்க கொள்கைகளை  பிரகடனப்படுத்திக் கொண்டனர்.

இப்படி இயக்க கொள்கைகள் கொள்கையளவில் இருந்ததே ஒழிய, நடைமுறையில் யாழ்மையவாத வெள்ளாளிய சிந்தனையிலான கூட்டமைப்பின் அரசியலையே தங்கள் நடைமுறையாக்கிக் கொண்டனர். அதேநேரம் பாராளுமன்ற பாதையை நிராகரித்த இளைஞர்கள் இயக்கங்களாகவே அவை இருந்தன. ஆயுதமும், பணமும் தான் போராட்டத்தை தீர்மானிப்பதாக கூறிக் கொண்டு, அவற்றைத் தரும் யாருடரும் கூட்டுச் சேர்வதையே முதன்மையாக்கினர்.

இந்த அரசியல் பின்னணியில் இந்தியாவின் நலன் சார்ந்த கைக்கூலிக் குழுக்களாக இருக்கும் கொள்கையை முன்வைத்ததுடன், ஏகாதிபத்தியங்களின் கூலிப்படையாக இருக்கவும் தாங்கள் தயார் என்பது, இயக்கங்களின் சர்வதேசக் கொள்கையாக்கினர். யார் அதிக ஆயுதமும், பணமும் தந்தனரோ, அவர்களின் கூலிப்படையாகவே மாறினர்.

இப்படி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களில் இருந்து அன்னியமாகி ஒடுக்கும் கூலிப்படை இயக்கங்களாக மாறினர். இயல்பாகவே மக்களை எதிரியாக்கத் தொடங்கினர். ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குவோரைச் சார்ந்து அடக்கியொடுக்கும் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் அதிகார வெறியாக மாறி, ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமின்றி - பரஸ்பரம் சக இயக்கங்கள் மேலான வன்முறையாக மாறியது.

அதேநேரம் தங்கள் இயக்கத்தில் உட்கட்சி ஜனநாயகத்தை மறுத்ததுடன், கேள்வி கேட்கின்ற நபர்களை கொன்று விடுகின்ற அளவுக்கு, இயக்கப் படுகொலை என்பது இயக்கத்தின்  நடைமுறைகளானது.

அதேநேரம் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கிய தமிழரைச் சார்ந்த இயக்கங்களாக,  இயக்கங்கள் தம்மை மக்கள் மத்தியில் இனம்காட்டத் தொடங்கின. இதன் மூலம் ஒடுக்கும் தமிழர்களின் வெள்ளாளிய சிந்தனைமுறையாக இருந்த சாதியம், பால், இனம், பிரதேசம் சார்ந்த ஒடுக்குமுறை கூறுகளை, தமிழ் தேசியத்தின் ஆன்மாவாக முன்னிறுத்தினர்.

இந்தச் சூழலில்தான் ஜனநாயகம், பெண்விடுதலை, வர்க்க விடுதலை, பிற இனங்களின் சுயாதீனம், பிரதேச ரீதியான ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட, அன்றைய தமிழ் தேசியப் புரிதலுக்கு ஊடான  "ஜனநாயகமாக - இடதுசாரியமாக - மார்க்சியமாக" வளர்ச்சியுற்றது. அதுவே ஒடுக்கும் இயக்கங்களுக்கு எதிரான, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலைத் தோன்றுவித்தது.

இப்படி தோற்றம் பெற்ற அரசியலே, மக்கள் சார்ந்த நடைமுறை போராட்டங்களாக மாறியது. இப்படி 1980 களில் இயக்கங்களுக்கு எதிராக தோற்றம் பெற்ற இடது அரசியலும், போராட்டங்களும், 1986 பின்னான புலி;ப்பாசிசத்தின் அதிகார வன்முறையுடன் கூர்மையடைந்து 1987 பின்னான தொடர்ச்சியான தனிநபர் அழித்தொழிப்பு மூலம் 1990 முடிவுக்கு வந்தது.

புலிகள் 1986 இல் தங்கள் பாசிச அதிகாரத்தை நிலைநிறுத்த தொடங்கியே இயக்க அழிப்பு நடந்தேறியது. இப்படி பிற இயக்கங்கள் புலிகளால் அழிக்கப்பட்ட பின், ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் இந்தியாவின் அல்லது இலங்கை அரசின் அல்லது இரண்டினதும் கூலிப்படையாக மாறியது. இலங்கை - இந்திய இராணுவங்கள் எதைச் செய்தனவோ அதை அல்;லது அதை விட மோசமாக தமிழ் மக்களை ஒடுக்கியது. இதன் பின் ஈ.என்.டி.எல்.எவ், ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (பிள்ளையான் - கருணா) அனைவரும் இதைத்தான் செய்தனர்.

1986க்கு பின் இலங்கை - இந்தியக் கூலிப்படையாக மாறியவர்களும், அதற்கு முன் மக்கள் விரோத இயக்கங்களாக செயற்பட்டவர்களும், புலிப் பாசிசத்தை தொழுதவர்களும், புலத்தில் புலியெதிர்ப்பு ஜனநாயகத்தை பேசியவர்களும் தான், இன்று ஒன்றுகூடி - பரஸ்பரம் தங்களைத் தாங்களே மூடிமறைத்துக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஒன்றிணைந்து  செயற்படுவதே, இன்றைய இலக்கிய - அரசியலாக மாறியிருக்கின்றது.

ஜனநாயகத்திற்கான போராட்ட வரலாறு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாறாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளும், அதற்காக போராடும் உரிமையையும் இயங்கங்கள் மறுத்த பொதுப் பின்னணியிலேயே, ஜனநாயகம் கோரப்பட்டது.

பாரம்பரிய இடதுசாரிகளும், இடதுசாரிக் கட்சிகளும் புலிப்பாசிசத்தை எதிர்த்து சுட்டுவிரலைக் கூட நீட்டவில்லை. மாறாக பாசிசத்தை அனுசரித்துக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களை கைவிட்டனர். இந்த சூழலில் இயக்கங்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய இலக்கிய - அரசியல் என்பது, நூற்றுக்கணக்கான உயிர்த் தியாகங்களைக் கொண்ட போராட்டமாக மாறியது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளுடன் தோன்றியது. இதை மறுத்து தான் புலம்பெயர் இலக்கியம் முதல் பாரம்பரிய இடதுசாரி கட்சிகள் வரை இன்று தம்மை முன்னிறுத்துகின்றனர்.

இன்று நடப்பது என்ன? முதலில் புலம்பெயர் இலக்கியம் இலங்கையில் இருந்து வந்த ஜனநாயகக் கோரிக்கைகளையும், அதன் போராட்ட வரலாற்று தொடர்ச்சியையும் மறுத்து நிற்கின்றது. கடந்தகால தியாகத்தையும், போராட்ட மரபையும் இருட்டடிப்பு செய்துள்ளது. இதன் மூலம் நடைமுறையை மறுக்கின்ற சில பிரமுகர்களை புலம்பெயர் இலக்கியம் முன்னிறுத்தியது. நடைமுறைகளை முன்னிறுத்திய இடதுசாரியத்தையும், மார்க்சியத்தையும் மறுத்தது. பதிலாக பின்நவீனத்துவத்தையும், வெள்ளாளிய தலித்துவத்தையும் முன்னிறுத்தினர். இதன் மூலம் நடைமுறையற்ற ஜனநாயகத்தை ஜனநாயகமாக்கி, தாங்கள் சொல்லும் கருத்துக்கு ஏற்ப வாழும் வாழ்வியலையும் கூட மறுத்;தனர். தன் சுய இருப்புக்கு ஏற்ற கலை இலக்கியத்தையும் – அரசியலையுமே, புலம்பெயர் இலக்கியம் வடிகட்டியது.

1980 களில் தமிழ்தேசியம் மூலம் அரசியலுக்கு வந்தவர்கள், தமிழ் தேசியம் மூலம் "மார்க்சியத்தை" உள்வாங்கிக் கொண்டவர்கள், பெண்ணியம், சாதிய விடுதலை, வர்க்க விடுதலை, தேசிய விடுதலையை அரைகுறையாக முன்வைத்தனர். இதற்காக போராடுவது மறுதளிக்கப்பட்ட போது தோன்றியதே ஜனநாயகக் கோரிக்கைகள். இயக்க உட்கட்சி ஜனநாயகத்தை கோரியது தொடங்கி மக்கள் சுதந்திரமாக பேசவும், எழுதவும், போராடவும் ஜனநாயகம் வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராடிய ஜனநாயகத்துக்கானது எமது வரலாறு. இன்று இதை மூடிமறைத்து உருவாகியுள்ள இலக்கிய அரசியல் போக்கை, ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று இனம் கண்டாக வேண்டும்.

முடிவாக

1.1986 பின்பும், 1990 களுடன் படுகொலைகள் மூலம் புலிப் பாசிசமானது சமூகத்தை உறைநிலைக்கு கொண்டு வந்த நிலையில், அதில் தப்பிப் பிழைத்தவர்கள் புலம்பெயர்ந்த போது, ஜனநாயகக் கோரிக்கையை புலத்துக்கு கொண்டுவந்தனர். புலம்பெயர் நாட்டில் வாழ்ந்த சிலர், இதனுடன் ஒட்டிக் கொண்டனர். இப்படி புலிக்கு மாற்றான புலம்பெயர் இலக்கியமும் அரசியலும் இலங்கையில் இருந்து வந்ததே. இதை மறுப்பதே இலக்கிய அரசியல் திரிபாகும்.

2.ஜனநாயகத்துகான போராட்டம் என்பது 1980 களில் ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கு எதிராகத் தோன்றியதே ஒழிய, வெறுமனே புலிக்கு எதிராகத் தோன்றியதல்ல. புலிக்கு எதிராக தோன்றியதான திரிபு, அரசியல் இலக்கியத்தை விபச்சாரத்துக்கு இட்டுச்சென்றது.

3.புலிகள் அல்லாத இயக்கங்கள் புலிகளால் அழிக்கப்பட்ட பின், அவை இந்திய - இலங்கை அரசுகளின் கூலிப்படையாக மாறி, அதுவே மக்களை ஒடுக்கும் அரசியலாக மாறியது. புலியல்லாத இயக்கங்களின் இந்த எதிர்ப்புரட்சிகர கூறை, ஜனநாயகத்துக்கான போராட்டமாக புலம்பெயர் இலக்கிய - அரசியல் "ஜனநாயகவாதிகள்" திரித்தனர். இதன் மூலம் புலிக்கு எதிரான அனைத்தையும் ஜனநாயகமாக்கி, அதை புலம்பெயர் இலக்கியமாக மாற்றினர்.

4.ஜனநாயகக் கோரிக்கை என்பது 1980 களில் மக்கள் மத்தியில் இருந்தும், மக்களின்  தன்னெழுச்சியான நடைமுறைப் போராட்டங்களில் இருந்தும் தோன்றியது. ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதார விடையங்களையும், உரிமைகளையும் முன்வைத்து எழுந்தது. இதில் இருந்தே ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தும் அரசியல் உருவானது. ஜனநாயகம் என்பது வாழ்வியல் சார்ந்த வாழ்வியல் கூறுகளை முன்னிறுத்திய ஒடுக்கப்பட்ட மக்களின் நடைமுறையாக இருந்தது.  இதை மறுத்து எழுந்ததே புலம்பெயர் இலக்கிய திரிபு.